கேள்வி பதில் பகுதி 3 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்
கேள்வி: ஐயா சித்தாந்தம், வேதாந்தம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
குரு: சித்தம் என்றால் அறிவு என்று அர்த்தம். சித்தாந்தம் என்பது ஆன்மீக. அறிவு சார்ந்தது. உன் அறிவினால் உனக்குள் இருக்கும் உனது ஆற்றல் உனது ஆன்மா ஆகியவற்றை அறிவதே சித்தாந்தம்.
வேதாந்தம் என்பது வெளி உலகம் சம்பந்தப்பட்டது புத்தகத்தை சார்ந்தது.வேதாந்தம் என்பது வெளி உலகத்தைப் பார்ப்பது, படிப்பது கடவுளைப் பற்றிப் படிப்பது அறிந்து கொள்வது பக்தி செய்வது வேதாந்தம் எனப்படும்.
கேள்வி: குரு செத்தால் மோட்சம் என்று சொல்லப்படுகிறது. அதன் அர்த்தம் என்ன ஐயா?
குரு: அன்பே சிவம் மனமே குரு என்று கூறுகிறோம். உனக்கு குரு என்பது வேறு யாரும் இல்லை. நீதான் உனக்குக் குரு. உன் மனம்தான் உனக்குக் குரு. ஐம்புலன்கள் வழியாக வெளியில் அலைந்து திரியும் உன் மனம் எப்போது அழியுதோ அப்போதுதான் உனக்கு மோட்சம். ஒரு மனிதனை அவன் பிறப்பில் இருந்து அவனது இறப்புவரை வழி நடத்துவது அவனது மனம்தான். வேறு எவராலும் அவனை வழி நடத்த முடியாது. எனவே ஒருவனுடைய மனம் என்ன சொல்கிறதோ அவ்வாறே அவனது செயல் அமையும். அப்போ இந்த மனமானது அழியும்போதுதான் அதாவது மனம் அடங்கும்போது அவனுக்கு மோட்சம் கிடைக்கிறது. மனம் இருக்கும்போது அவன் பாவ புண்ணியத்தில் ஈடுபடும்போது அவனுக்கு மோட்சம் கிடையாது. அதனால்த்தான் குரு செத்தால் மோட்சம் என்று சொல்லப்படுகிறது.
கேள்வி: தியானம் என்றால் என்ன ஐயா?
குரு: தியானம் என்பது நீ உன்னை மறப்பது. உன் சிந்தையில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் அமர்ந்திருப்பதே தியானம். தியானம் செய்யும்போது கடவுளை எண்ணுவதோ, மந்திரம் செபிப்பதோ தியானம் ஆகாது. அதுமட்டுமல்லாது கண்ணை மூடிக் கொண்டிருப்பது தியானமாகாது. தியானம் என்பது நீ உட்காரும்போது மட்டும் தான் உனக்குத் தெரியவேண்டும். அப்புறம் நீ உன்னை மறந்திடவேண்டும். மனதில் எந்தச் சிந்தனையும் இல்லாமல் உன்னை மறந்து இருக்க வேண்டும். அதுவே தியானமாகும்.
அதாவது உடலின் இயக்கங்கள் நின்றுவிட்டால் நீ இருக்க மாட்டாய். ஆனால் உன் உடல் இயக்கங்கள் அனைத்தும் நின்ற மாதிரி நீ பாவனை பண்ணிக்கணும். உன்னை நீ மறந்திடனும்.
உணர்வற்று, உடலற்று, சிந்தனையற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று, பிரம்மத்திடம் மனமும், புத்தியும் லயித்துப் போகவேண்டும். அதுவே தியானமாகும்.
கேள்வி: எமது வாழ்க்கையில் வரும் துன்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் என்ன சுவாமி?
குரு: ஒருவனது எண்ணங்களே அவனது பிரச்சினைகளுக்குக் காரணமாகும். அந்த எண்ணங்கள்தான் நன்மைக்கும் தீமைக்கும் வழி வகுத்துக் கொடுக்கிறது. ஏனெனில் எண்ணங்கள்தான் செயலாக மாறுகிறது. அதனால் ஒவ்வொருவரும் அவர்களது அடிப்படை எண்ணங்களைச் சீராக அமைத்துக் கொள்ளவேண்டும். நான் இப்படித்தான் வாழ்வேன். என்னுடைய வாழ்க்கை இதுதான். எனது கலாச்சாரம் இதுதான். எனது முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள். நானும் இப்படித்தான் வாழ்வேன். என்று ஒரு கட்டுக் கோப்புடன் வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். அதை விடுத்து முன்னோர்கள் புத்தியில்லாமல் வாழ்ந்தார்கள் நான் புதுக்கலாச்சாரம் என்று வாழ முற்பட்டால் சீரழிந்து போய்விடுவாய். அது உன்னையும் பாதிக்கும். உன்னைச் சேர்ந்தவர்களது வாழ்க்கையையும் பாதித்துவிடும். எனவே நல்ல எண்ணங்களோடு உறுதியான மனதோடு கட்டுக்கோப்புடன் வாழப்பழகு அதுதான் வாழ்க்கை.
கேள்வி: எண்ணங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது சுவாமி?
குரு: நீ உன்னையே யோசிப்பாயாக இருந்தால் உன் மனம் உனக்குள் கட்டுப்படும். எண்ணம் உனக்குள் அடங்கும். நீ ஊரைப்பற்றியே யோசித்துக் கொண்டிருந்தால் மனம் அலைபாயும். உனது கட்டுப்பாட்டில் இராது. அதாவது உனது கண்களை மூடி வைத்திருந்தால் ஒன்றுமே தெரியாது. ஆனால் கண்களைத் திறந்து வைத்திருந்தால் உனக்கு தேவையான, தேவையற்ற காட்சிகளெல்லாம் தெரியவரும். அப்போ ஆசை வளரும். ஆசை வளர தேவையற்ற பிரச்சினைகளும் ஆபத்துக்களும் கூடவே வரும். அதனால உன் மனதை மூடி வச்சிருக்கணும். அப்பதான் அது தேவையற்ற சிந்தனைகள் அற்று அலைபாயாமல் உனது கட்டுப்பாட்டில் இருக்கும்.
கேள்வி: வழிபாடு தியானம் செய்வதால் எமது துன்பங்களை நீக்கிக் கொள்ள முடியுமா சாமி?
குரு: முடியாது. வழிபாடும் தியானமும் உன் மன அமைதிக்காகச் செய்யப்படுவது. அது உன் துன்பத்தை நீக்காது. துன்பமும் இன்பமும் உன் மனசில் இருந்து தான் வருகிறது. அது வெளியில் இருந்து வரவில்லை. மன அமைதி வேண்டும் என்பதற்காகத்தான் தியானம், வழிபாடு என்பன செய்யப்படுகிறது. அதனால துன்பத்தை நீக்க முடியும் என்றால் இந்த உலகத்தில யாருமே துன்பப்பட மாட்டார்கள் எல்லோருமே அந்த வழிபாடும், தியானமும் செய்து தமது துன்பங்களை நீக்கிவிடுவார்கள். எனவே துன்பத்தை நீக்குவதற்கு உன் அறிவைப் பயன்படுத்தி இந்தத் துன்பம் எதனால் வந்தது என்று அதான் மூல காரணத்தைக் கண்டு கொண்டு அதனை எப்படித் தீர்க்கலாம் என்று சிந்தித்து அதனைத் தீர்க்க முயற்சி செய்.
கேள்வி: மனதுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன ஐயா?
குரு: ஒரு உடலில் ஆன்மா இருக்கும். ஆன்மாவுக்கு ஐம்புலன்கள் மூலமாக எண்ணங்கள் சேரும்போது மனம் உருவாகும். மனமே ஒருவனை இயக்கும். மனம் இருந்தால்த்தான் ஒருவனால் செயல்புரிய முடியும். மனம் இயங்காவிட்டால் அவன் பிணம்போல் ஆகிவிடுவான். ஆனால் அது இறப்பல்ல. தூக்கத்தில் ஒருவனுக்கு மனம் இயங்குவதில்லை ஆனால் அவ்வுடலில் ஆன்மா இருக்கும். அதுபோல மயக்க நிலையில் ஒருவனுக்கு மனம் இயங்குவதில்லை. ஆனால் அந்த உடலில் ஆன்மா இருக்கும்.
இங்குதான் ஒரு ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் இடையில் விதித்தியாசம் வருகிறது. அதாவது மனம் இல்லாவிட்டால் ஒரு அஞ்ஞானி பிணம்போல ஆகிவிடுவான். ஆனால் ஞானியோ மனம் இல்லாதபோது இறைவனோடு கலந்து விடுவான். ஆனால் இங்கு ஞானிக்கும், அஞ்ஞானிக்கும் ஆன்மா இருக்கும் ஆனால் மனம் இல்லாதபோது அவர்களது நிலை வேறுபட்டதாக இருக்கும்.
அதாவது ஞானியானவன் தனது யோகப் பயிற்சி மூலமாக இந்த மனமானது எங்கிருந்து வந்ததோ அங்கேயே அந்த மனதைக் கொண்டுபோய் இணைத்து விடுகிறான். அதனால் அவன் மனம் இல்லாத நிலைக்குப் போய்விடுகிறான். அப்போது அவனுக்குத் துன்பம், இன்பம் இல்லை. இரவு, பகல் இல்லை. ஆரம்பம், முடிவு இல்லை. ஆனால் இந்த மனம் இருக்கும் அஞ்ஞானிக்கு இவை அத்தனையும் இருக்கும். இதுதான் மனதுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஆகும். ஞானிக்கும், அஞ்ஞானிக்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஆகும்.
கேள்வி: ஒருவர் செய்யும் புண்ணியத்தால் இன்னொருவர் பயன் பெற முடியுமா சாமி. அதாவது நான் செய்யும் புண்ணியம் உங்களை வாழவைக்கும் என்று சொல்கிறார்களே அது சாத்தியமா சாமி?
குரு: நான் சாப்பிட்டு உன் பசியைப் போக்க முடியுமென்றால் அதுவும் சாத்தியமாகும் அதாவது நீ உணவருந்த என் வயிறு நிரம்பு மென்றால் கண்டிப்பாக நீ செய்யும் புண்ணியத்தால் எனக்குப் பலன் கிடைக்கும். இல்லையென்றால் அதுவும் சாத்தியமற்றது. அதாவது அவர் அவர் செய்யும் புண்ணியம் அவர்களுக்கு மட்டுமே பலன் கொடுக்கும். மற்றவர்களுக்குப் போய்ச் சேராது. பாவமோ, புண்ணியமோ தான் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்குக் கொடுக்க முடியாது.
பாவமும், புண்ணியமும் இந்த உலகத்திலேயே செய்யப்படுகிறது. இந்த உலகத்தில் செய்யும் பாவத்தையும் புண்ணியத்தினையும் இந்த உலகத்திலேயே நீ தீர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவர் செய்யும் பாவமும் புண்ணியமும் வேறு யாருக்கும் சேர்க்கவும் முடியாது, கொடுக்கவும் முடியாது. அவர் அவர்தான் இந்த உலகத்தில்த்தான் அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
கேள்வி: ஐயா தானத்துக்கும் தர்மத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன?
குரு: தானம் வேறு தர்மம் வேறு. தானம் என்பது நீ கொடுத்ததை ஞாபகம் வைத்திருப்பது. தர்மம் என்பது நீ கொடுத்ததை மறந்திடுவது. அதனால் தானத்தை விட தர்மமே மேலானது. தானம் என்பது ஒருவர் கேட்டுக் கொடுப்பது. தர்மம் என்பது ஒருவரது தேவை அறிந்து அவர்கள் கேளாமல் அவர்களுக்கு உதவிசெய்வது.
கேள்வி: ஐயா சித்தர்கள் மனித குலத்துக்கு எடுத்துரைப்பது என்ன?
குரு: பிறப்பைத் தவிர்த்து விடுங்கள் இறைவனை அடைந்து விடுங்கள் என்பதுதான்.
கேள்வி: ஐயா சிற்ரறிவு மற்றும் பேரறிவு என்றால் என்ன?
குரு: சிற்ரறிவு, பேரறிவு என அறிவு இரண்டு வகைப்படும். சிற்ரறிவு மனதோடு இருப்பது அதனாலதான் அதற்கு அந்தக்கரணம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது மனம், சித்தி, புத்தி, அகங்காரம் என இந்த உலகத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அதனால் மனம் மாயையில் சிக்கி இந்த உலக சிற்றின்பத்தில் உளல காரணமாக அமைகிறது.
ஆன்மா பேரறிவு. ஆனால் ஆன்மாவின் இயக்கம் இந்த உலகத்துக்கு உதவாது. மனதின் அதாவது சிற்ரறிவின் இயக்கம் தான் இந்த உலகத்தில் வாழ உதவும். பேரறிவாகிய ஆன்மாவின் இயக்கம் பேரின்பமாகிய இறைவனுடன் கலக்க உதவும்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —