யோகம் – யோகப் பயிற்சி

0 0
Read Time:23 Minute, 12 Second
ராஜ யோகம்

பொதுவாக எமது மனதில் தோன்றும் கேள்விகளான யோகம் அல்லது யோகக் கலை என்றால் என்ன? ஞானம் என்றால் என்ன? வாசி யோகம் என்றால் என்ன? குண்டலினி யோகம் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்குரிய நான் அறிந்து கொண்ட விளக்கங்களைப் பார்க்கலாம்

மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளை இந்து மதத்திலே சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு பிரிவுகளாக வகுக்கப் பட்டிருக்கிறது. இவை நாற்பாதங்கள் அல்லது நன்னெறிகள் என அழைக்கப்படுகிறது.

சரியை

சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். தூய தெய்வ பக்தியோடு உடலால் செய்யப்படும் தொண்டுகள், இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும்.

ஆலயங்களில் இறைவனை வழிபடல், திருக்கோயிலைச் சுத்தம் செய்தல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூப் பறித்தல், பூமாலை தொடுத்தல், பஜனை பாடுதல், சிவனடியார்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், கோயில்களை புணருத்தானம் செய்தல், புராணக் கதை படித்தல், சுவாமி காவுதல்ஆகியவை சரியையில் அடங்கும்.

சரியை நெறியை இன்னும் ஆழமாகப் பார்க்கும்போது தூய மனதோடு சரியை நெறியைப் பின்பற்றி முக்தியடையும் வழிமுறைகளாக சரியையை நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவையாவன

  • சரியையிற் சரியை – சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான கோவில் தொண்டுகள் அடங்கும்.
  • சரியையிற் கிரியை – ஒரு கடவுளை (ஒருமூர்த்தியை) வழிபடல். (உதாரணமாக முருகனை மட்டும் வழிபடுபவர்கள், விநாயகரை மட்டும் வழிபடுபவர்கள், அம்பாளை மட்டும் வழிபடுபவர்கள் , சிவனை மட்டும் வழிபடுபவர்கள் எனப் பிரிக்கப் படுகிறார்கள்)
  • சரியையில் யோகம் – தாம் அன்பு வைத்த கடவுள் மீது எந் நேரமும் வழிபட்டவாறு அக்கடவுள் நினைவுடனேயே தியானத்தில்   ஆழ்ந்திருத்தல்
  • சரியையில் ஞானம் – அதீத பக்தியின்  முலமாக தன்னுள் கடவுளை உணர்ந்து அந்த ஜோதியுடன் ஒன்றறக் கலத்தல்

திருநாவுக்கரசர் சரியை நெறி நின்று முக்கியமாக உழவாரப்பணி செய்து சிவனை வழிபட்டு முக்தியடைந்தார்.

கிரியை

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும்.

தூய தெய்வ பக்தியோடு உடலால் செய்யப்படும் சரியைத் தொண்டுகள் உட்பட பஜனை பாடுவது, தேவாரம் பாடுவது, குரு மூலமாக அறிந்து மந்திரங்களை ஓதி இறைவனை வழிபடுவது, பிரசங்கம் மூலமாக இறைபக்தி பற்றிய அறியாமையைப் போக்கி மக்களுக்கு இறை உணர்வை ஏற்படுத்துவது போன்ற இறை தொண்டாகும். சதா காலமும் இறை சிந்தனையோடு இருப்பதாகும். இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.

கிரியை நெறியை இன்னும் ஆழமாகப் பார்ப்போமாக இருந்தால் தூய மனதோடு கிரியை நெறியைப் பின்பற்றி முக்தியடையும் வழிமுறைகளாக கிரியையை நான்காகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • கிரியையிற் சரியை. – கிரியையிற் சரியை. – சரியை நெறியில் திருக்கோயிலில் தனது உடலால் செய்யப்படும் கோவில் தொண்டுகள் அடங்கும்.
  • கிரியையிற் கிரியை – புறத்தில் பூசித்தல். மந்திரம் ஓதி பூசைசெய்தல், பக்தி பிரசங்கம் செய்தல் போன்ற தொண்டுகள் அடங்கும் 
  • கிரியையில் யோகம் – தான் கற்ர மந்திரங்களை தேவார திருவாசங்களை நினைவு கூர்ந்து தியானித்தல் இது ஒரு அக வழிபாடாகும்.
  • கிரியையில் ஞானம் – அகவழிபாட்டின் மூலமாக சித்தி அல்லது ஞானம் கிடைத்தல்.  இறை அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபட்டு முக்தியடைந்தார்.

பக்தியின் மூலம் வெளிப்புறமாகத் தேடி இறைவனைக் கண்டு கொள்ள முடியாதபோது அந்த இறைவனே ஒரு பாலமாக அமைந்து உள்முகத் தேடலுக்கு வித்திடுகிறார் என்பதே உண்மையாகும்.

சரியையும் கிரியையும் பக்தி மார்க்கத்தில் அடங்கும். அதாவது வெளிப்புறமாக இறைவனை வழிபட்டு முத்தியடையும் வழிமுறையாகும். ஒருவன் மனிதனாக வாழ பக்தி மார்க்கம் வழி சொல்கிறது.

பக்தி மார்க்கம் என்பது இறைவன்மேல் அன்புவைத்து எம் எண்ணங்களை வெளிமுகமாகச் செலுத்தி அவரவர் சார்ந்துள்ள மதக்கோட்பாடுகளுக்கு ஏற்ரவாறு சிலை வழிபாட்டை மத வழிபாட்டை, மதக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளுவது. இதுவே பிரார்த்தனை என்று அழைக்கப்படும். சித்தர்கள் பார்வையில் இது புறவழிபாடு என அழைக்கப்படுகிறது. அதாவது ஐம்புலன்களின் துணையோடு நாம் வெளிப்புறமாக இறைவனைத் தேடும் முயற்சியாகும். இது அவரவர் சார்ந்துள்ள கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்த ஒரு மதவழிபாடாகும். இம் மதவழிபாட்டை மேற்கொள்பவர்கள் பக்தர்கள் என அழைக்கப்படுவார்கள்.

யோகமும், ஞானமும் ஆன்மீக மார்க்கத்தில் அடங்கும். அதாவது அகத்தே, தன்னுள்ளே இறைவனைத் தேடி கண்டு முக்தியடையும் மார்க்கமாகும்.

உள்ளமுகத் தேடலே ஞான மார்க்கமாகும். “ஞானம்” அடைவதற்கான வழிமுறையே “யோகம்” ஆகும்.

பக்தி மார்கத்திற்கும் (புறவழிபாடு), ஆன்மீக மார்க்கத்துக்கும் (அக வழிபாடு) உள்ள வேறுபாட்டினை திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

திருமந்திரம் இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்த உண்மை

“தளியறி வாளர்க்குத் தண்ணிதாய்த் தோன்றும்
குளியறி வாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளியறி வாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளியறி வாளர்தஞ் சிந்தையு ளானே”. 

விளக்கம்: கோயில் சென்று வணங்கி அக்கோயிலின் தீர்த்தக் குளத்தில் நீராடினால் தமது பாவங்கள் நீங்கும் என்று எண்ணுவது ஒருபோதும் நடைபெறாது. (அதாவது பக்தி மார்க்கம் அதாவது புறவழிபாடு) அதை விடுத்து இறைவனை மூச்சினை அடக்கி (பிராணாயாமம் – யோகப்பயிற்சி) தன்னுள்ளே தேடினால் அந்த குளிர்ச்சி பொருந்திய இறைவன் அகத்தினிலே தென்படுவான். தனது சிந்தையில் தீர்த்தம் உணர்ந்து – (மூலாதாரத்தினில் அக்கினிiயாக இருக்கும் குண்டனி சக்தியானது சாதனையின்போது சிரசை அடையும்போது அது குளிர்ச்சி அடைந்து அமுதம் சுரக்கும்) அண்ணாக்கினில் அமுதம் அருந்தும் போது சிந்தையில் எப்போதும் இறைவன் வீற்றிருப்பதாய் உணரமுடியும்.

ஆன்மீகம் என்பது தன்னுள் மறைந்திருக்கும் இறைவனை தனக்குள்ளே தேடிக் கண்டுகொள்ளும் அகவழிபாடாகும். ஆன்மீகத் தேடல் என்பது இனம், மத, மொழிகளைத் தாண்டியது. இதுவே ஞான மார்க்கமாகும். இதுவே ஆன்மீக மார்க்கம் எனவும் அழைக்கப்படும். ஆன்மீக மார்க்கத்தினை மேற்கொள்பவர்கள் “ஆன்மீகவாதிகள்” அல்லது “யோகிகள்” என அழைக்கப்படுவர். தன்னை அறிந்து, தன் முன் பிறவிகளை அறிந்து, (முற்பிறப்பு ரகசியங்களை, தாம் செய்த பாவங்களை, பிறப்புக்கு முன் உள்ளதை அறிந்து) தனக்குள் இறைவனைக் கண்டறிந்து அவன்மூலம் தான் செய்த பாவங்களைப் போக்கி அந்த இறைவனுடன் சங்கமமாவதே “ஞானம்” அல்லது “முக்தி” எனப்படும். ஞானம் அடைவதற்குரிய வழிமுறையே “யோகம்” அதாவது யோகப் பயிற்சியாகும்.

எமது குருவாகிய “பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்” ராஜயோகப் பயிற்சி கற்றுக் கொடுக்கிறார்.

தன்னை அறிந்து, இறைவனைக் கண்டு முக்தி அடைந்தவர்கள் “முனிவர்கள்” ஆவார்கள். இவர்களையே சித்தம் தெளிந்ததால் “சித்தர்கள்” எனவும், புத்தி தெளிந்ததால் புத்தன் எனவும் ஞானம் எய்தியதால் “ஞானிகள்” எனவும் அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் தம்மை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. முற்றும் திறந்தவனிடம் எவ்விதமான அடையாளமும் இருக்காது. அவர்கள் உலகப் பற்றிலிருந்து விடுபட்டவர்கள். எவ்விதமான விருப்பு வெறுப்பும் இல்லாதவர்கள். உலக மக்களை துன்பங்களில் இருந்து விடுவிக்க முயல்பவர்கள்.

யோகம்

கடவுளை தன்னுள்ளே தேடும் வழிமுறையே அதாவது பயிற்சியே யோகம் எனப்படும் இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும்.

அதாவது வாசியை (மூச்சைக்) கட்டுப்படுத்தி மூலாதாரத்தில் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியை கிளர்ந்தெழ வைத்து சுழுமுனை வழியாக உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து துரியத்தை நோக்கிக் கொண்டுவரும் பயிற்சியே யோகப் பயிற்சி எனப்படும். குண்டலினி சக்தி துரியத்தை எட்டும்போது சகலவித சித்திகளும் கிட்டும். குண்டலினி சக்தி சித்தத்தில் சிவனுடன் அந்த யோதியுடன் கலப்பதே ஐக்கியமாவதே ஞானம் அடைதல் அல்லது முக்தியடைதல் அல்லது மோட்சம் அடைதல் என அழைக்கப்படுகிறது.

ஞானம்

இறுதியில் கடவுளுடன் கலப்பது முத்தியாகும். அதுவே ஞானம் எனப்படும்

அதாவது ஓன்று சேர்ப்பது யோகம் ஓன்று சேர்ந்தால் ஞானம். இன்னும் விழக்கமாகப் பாக்கும்போது வெளிப்புறமாக ஐம்புலன்கள் மூலமாக அலைந்து திரியும் மனதை, புலன்களைக் கட்டுப்படுத்தி அவற்றை ஓன்று சேர்த்து மனதை உட்புறமாக செலுத்தும் பயிற்சியே யோகமாகும். புலன்கள் அடங்கி மனம் உள்முகமாக அடங்கி தன்னுள் இறைவனைக் கண்டு கொண்டால் அதுவே ஞானம் எனப்படும். இதுவே முத்தியாகும்.

கர்ம வினையினைக் கடக்க பிறவிப் பிணியை நீக்க யோகக்கலை வழிவகுக்கிறது.

யோகம் அதாவது யோகக்கலை எனப்படுவது சித்தர்களும் யோகிகளும் தவமிருந்து சிவனிடமிருந்து அறிந்துகொண்ட யோகப்பயிற்சி இரகசியங்களாகும். இக்கலையானது குருகுல முறைப்படி காலம் காலமாக, வழிமுறை வழிமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. யோகக்கலையை, அதன் நுட்பங்களை, அதனைப் பின்பற்றவேண்டிய முறைகளை அகத்திய முனிவர், திருமூலர், பதஞ்சலி முனிவர், சிவவாக்கியர் போன்ற பல மகான்கள் உரைத்திருக்கிறார்கள்.

தன்னில் இருந்து தோன்றும் ஆன்மாக்கள் மீண்டும் தன்னை வந்து அடையும் பொருட்டு யோகக் கலையை எமக்கு அருளியவர் ஆதியும் அந்தமும் இல்லா சிவனேயாகும். இக்கலையானது சிவனினால் கைலாச மலையில் வைத்து அவரது முதன் மாணாக்கராகிய நந்திதேவருக்கு உபதேசிக்கப் பட்டதாகவும், நந்திதேவர் தமது மாணாக்கர்களாகிய திருமூலர் மற்றும் பதஞ்சலி முனிவர் உட்பட எட்டு மாணாக்கர்களுக்குப் போதித்ததாகவும் அவர்களே இப்பூவுலகுக்கு யோகத்தைக் கற்றுக் கொடுத்ததாகவும் புராண இதிகாச நூல்கள் கூறுகின்றன.

பதஞ்சலி முனிவர் எழுதிய யோக நூல் “யோக சூத்திரம்” என அழைக்கப்படும். இந்நூல் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது.

யோகப் பயிற்சி முறைகளிலும் பலவிதங்கள் உண்டு அவற்றில் முக்கியமாக பக்தி யோகம், ஹடயோகம், கர்மயோகம், அட்டாங்க யோகம் ஆகியவை அடங்கும்.

(1) பக்தி யோகம் – இறைவனிடம் பக்தி செய்து முக்தி அடைதல். சரியையும் கிரியையும் இதில் அடங்கும்.

(2) ஹடயோகம்– பல ஆசனங்கள், பலவித பிராணாயாமப் பயிற்சிகள் செய்து, பந்தம், முத்திரை, ஆகிய முறைகளைப் பின்பற்றி முத்தி அடைதல்.

(3) கர்ம யோகம்– நமது கடமைகளை விறுப்பு வெறுப்பு இல்லாமல் இறைவனுக்கு அர்பணித்து அதாவது செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணத்துடன் செய்தல். அதன் மூலம் முத்தி அடைதல்.

(4) அட்டாங்க வாசி யோகம் – இதனை அட்டாங்க யோகம், குண்டலினி யோகம், கிரியா யோகம், ராஜ யோகம், ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. அட்டாங்க யோகத்தை எமக்கு அருளியவர் திருமூலராவார்.

திருமூலர் தமிழில் எழுதிய யோகநூல் “திருமந்திரம்” ஆகும். யோகப் பயிற்சிப் படிமுறைகளை திருமூலர் தமிழில் விளக்கியுள்ளார். திருமந்திரத்தில் 3000க்கும் மேற்பட்ட பாடல்கள் அடங்கியுள்ளன. யோகப் பயிற்சி முறைகளை திருமூலர் எட்டுப் படிமுறைகளாக விளக்கியுள்ளார். இதுவே அட்டாங்க யோகம் என அழைக்கப்படுகிறது. அவையாவன இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி. ஆகும்.

அட்டாங்க யோகத்தை பொதுவாக ராஜ யோகம் என அழைக்கப் பட்டாலும் முதன் நான்கு படிமுறைகள் கிரியா யோகம் எனவும் அடுத்த நான்கு படிமுறைகள் ராஜ யோகம் எனவும் அழைக்கப்படுகிறது.

கிரியா யோகம்

அட்டாங்க யோகத்தில் முதன் நான்கு படிமுறைகளான இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகியவை வெளிப்புறமாக செயற்படுத்தும் பயிற்சி முறைகளாகும். இதனை கிரியா யோகம் (பகீர்முகம்) என அழைக்கப்படுகிறது இவை உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும்.

இராஜயோகம்

மிகுதி நான்கு படிமுறைகளான பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் உள்முகமான பயிற்சி முறைகளாகும். பொதுவாக இந்த நான்கு பயிற்சி முறைகளும் இராஜயோகம் (அந்தர் யோகம்) என அழைக்கப்படுகிறது

இவை உள்முகமான தேடலால் முத்தியடையும் வழிமுறையாகும்.

அட்டாங்க யோகத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு படிமுறையையும் பய பத்தியுடன் கடைப்பிடிப்பவர்களுக்கே அடுத்த படிமுறை பையன் கொடுக்கும்.

கேசரியோகம்:

அட்டாங்க யோகத்தின் உள்முகப்படிமுறைகளான பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய யோகப்பயிற்சி முறைகளை வெவ்வேறு முறையில் பயிற்சி செய்யக்கூடியவாறு மூன்று பயிற்சி முறைகளாகவும் திருமூலர் விளக்கியுள்ளார். அவையாவன அடயோகம், இலம்பிகாயோகம் மற்றும் இராஜயோகம் ஆகிய மூன்று பயிற்சி முறைகளாகும். இம்மூன்று பயிற்சி முறைகளையும் பொதுவாக கேசரியோகம் என அழைக்கப்படுகிறது. கேசரி என்பது சிங்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். அதாவது ஒரு சிங்கமானது தனது கண்களை மேற்புறமாக ஆகாயம் நோக்கிக் குவிப்பதுபோல எமது கண்களைக் குவித்து செய்யப்படும் பயிற்சி முறையாகையால் கேசரி யோகம் என அழைக்கப்படுகிறது.

அடயோகம்: உடலை வருத்திப் பிராணாயாமப் பயிற்சி செய்து தேக சித்தி அடைந்து சமாதி நிலையைப் பெறுதல் அடயோக முறையாகும்.

இலம்பிகா யோகம்: இப் பயிற்சி முறையில் நாக்கை மடித்து உள்நாக்குப் பிரதேசத்தில் உள்ள துவாரத்தை அடைத்துப் பிராண செயம் பெற்றுச் சமாதி நிலையைப் பெறுதல் இலம்பிகா யோகப் பயிற்சி முறையாகும்.

இராஜயோகம்: மூச்சுப் பயிற்சி மூலமாகப் புலன்களைக் கட்டுப்படுத்தி குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து உச்சிவரை கொண்டுவந்து சமாதி நிலை அடைதல் இராஜயோகம் ஆகும்.

எந்த முறையில் யோகப் பயிற்சி செய்தாலும் அடையும் பயன் சமாதிநிலை என்ற ஒன்றேயாகும்.

திருமூலர் திருமந்திரம்.

அந்நெறி இந்நெறி என்னா தட்டங்கத்

தன்னெறி சென்று சமாதியில் நிலமின்

நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் லேகலாம்

புன்னெறி யாகத்திற் போகில்லையாமே

விளக்கம்:- உலகில் பலவிதமான யோக நெறிகள் உண்டு. அந்தநெறி இந்த நெறி என்று எண்ணாமல் அதாவது அந்த யோகப் பயிற்சி நல்லதா அல்லது வேறு யோகப்பயிற்சி நல்லதா என்று எந்தப் பயிற்சியையும் தொடர்ந்து செய்யாமல் அலைந்து திரிவதை விடுத்து, அ ட்டாங்க யோகம்” என்ற வாசி யோக நெறியை கடை பிடியுங்கள். ஒரு குருவை முழுமையாக நம்பி முழு நம்பிக்கையோடு தொடர்ந்து பயிற்சி செய்து அதில் முழுமையாக கலந்து சமாதி நிலை அடையுங்கள். இதனால் பூரண ஞானம் அடையலாம். அது மட்டுமல்லாது தனியாக யாகம், பூஜைகள் போன்ற வழிகளால்லாலும் ஞானம் அடைய முடியாது

நீர் எடுப்பதற்காக மண்ணில் ஒரு இடத்தைத் தெரிவுசெய்து ஆழமாக பொறுமையாக குழிபறிக்க வேண்டுமே தவிர பொறுமையில்லாது இங்கும் அங்குமாக இடம் மாறிமாறி குழி பறிப்பதால் காலம்தான் வீணாகுமே தவிர எவ்வித நன்மையும் கிட்டாது. அதுபோல மனதுக்கு பிடித்தமான குரு அமைந்ததும் அவருனேயே இருந்து அவர் சொற்படி யோகக் கலையைப் பயிலவேண்டும். அவர் அவர் தகுதிக்கு ஏற்றவாறு யோக நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.

திருமூலர் பின்வருமாறு விளக்குகிறார்.

ஈரைந்தில் பூரித்துத் தியான ருத்திரன்
ஏர்வு ஒன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீர் ஒன்று மேல்ஏழ் கீழ்ஏழ் புவிச் சென்று
ஏர் ஒன்று வியாபியாய் நிற்றல் ஈராறே
”.      திருமந்திரம்

விளக்கம்: யோகப் பயிற்சியினை தொடர்ந்து பத்து ஆண்டுகள் செய்து வரும்போது சிவநிலையை அடையக் கூடியதாக இருக்கும். பதினோரு ஆண்டுகளில் அட்டமா சித்திகளும் (எட்டு சித்திகள்) எட்டும். பன்னிரண்டு ஆண்டு யோகப் பயிற்சியால் கீழ் உலகங்கள் ஏழிலும், மேல் உலகங்கள் ஏழிலும் பரந்திருக்கும் இறைவனுடன் ஐக்கியமாகும் ஆற்றல் கிடைக்கும்.

எனக்கு ஒரு உண்மையான குரு வேண்டுமென்று உன்னுள் கேட்டுக்கொள். உனக்கு ஒரு குருவைக் இறைவன் அனுப்பி வைப்பான் என்கிறது வேதம்.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %