சாமியாரும் குறும்புக்காரச் சிறுவனும்
ஒரு ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலியானவனாகவும் குறும்புக்காரச் சிறுவனாகவும் இருந்தான். ஒருமுறை அவ்வூருக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அச் சாமியார் அங்குள்ள ஒரு பெரிய ஆலமரத்துக்குக் கீழுள்ள திண்ணையில் அமர்ந்திருந்து எல்லோருக்கும் ஆசிகள் வழங்கினார்.
அந்தக் குறும்புக்காரச் சிறுவன் அந்தச் சாமியாருடன் குறும்பு செய்ய விரும்பினான்.
அச் சிறுவன் ஒரு சிறிய பட்டுப் பூச்சியைப் பிடித்து உள்ளம் கையில் வைத்துக் கொண்டு பொத்திப் பிடித்தவாறு அந்தச் சாமியாரிடம் வந்து “சாமி எனது உள்ளம் கையில் ஒரு பட்டுப் பூச்சி உள்ளது அது உயிரோடு உள்ளதா அல்லது இறந்து விட்டதா?” என்று சாமியாரைப் பரீட்சிப்பது போல வினவினான்.
சாமியாருக்கு அவனது குறும்புத்தனம் புரிந்துவிட்டது.
சாமியார் யோசித்தார் அவனது கையில் பூச்சி உயிரோடு உள்ளது என்று கூறினால் அவன் தனது கைகளால் அப்பூச்சியை நசித்துக் கொன்றுவிட்டு பூச்சி இறந்து இருந்தது சாமியாரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறுவான். ஆனால் பூச்சி இறந்து விட்டது என்று கூறினால் கையைத் திறந்து பூச்சி உயிருடனுள்ளது என்று காட்டி சாமியாரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று கூறுவான். தரும சங்கடத்துக்கு உள்ளானார் அந்தச் சாமியார்.
எப்படியாவது அந்தப் பூச்சியையும் காப்பாற்ற வேண்டும் அத்துடன் தானும் பிழை விடாமல் தப்பித்துக் கொள்ள வேன்டும் என்று சிந்தித்த சாமியார் அச் சிறுவனிடம் “பூச்சி இறப்பதும், உயிரோடு இருப்பதும் எல்லாம் உன் கைகளில்த் தான் தங்கியுள்ளது” கூறினார்.
சாராம்சம்:
எமது சமயோசித புத்தியினால் நாமும் அவமானங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எம்முடன் இருப்பவர்களையும் காப்பற்றிக் கொள்ளலாம்.
கு. சிவகுமாரன் ([email protected])
— ஆத்ம வணக்கம் —