சாமியாரும் படகோட்டியும்
ஒரு சாமியார் படகொன்றில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர் காவி உடை தரித்து உருத்திராட்ச மாலை அணிந்து தன்னை ஒரு சாமியாராகக் காட்டிக்கொண்டார். அவர் சென்ற படகின் படகோட்டியோ பெரிதாகப் படித்தவன் போலக் காணப்படவில்லை.
சாமியார் அந்தப் படகோட்டியிடம் “அப்பா நீ என்ன படித்திருக்கிறாய்” என்று வினாவினார்.
அதற்கு அந்தப் படகோட்டி “ஐயா நான் பெரிதாக எதுவும் படிக்கவில்லை என்று மிகவும் பணிவாகப் பதிலளித்தான்.
சாமியாரோ நீ தேவார திரு வாசகம் படிக்க வில்லையா? பகவத் கீதை படிக்க வில்லையா? மந்திரங்கள் எதுவும் படிக்க வில்லையா? உன் வாழ்க்கையில் பல காலங்களை நீ வீணடித்துவிட்டாய் என்று மிகவும் ஏளனமாக அவனுக்குப் பதிலளித்தார்.
அதற்கு அந்தப் படகோட்டி “என்னால் எதனையும் படிக்க முடியவில்லை எனக்குத் தெரிந்தது இந்தப் படகோட்டும் தொழில் மட்டும் தான். எனது தந்தையார் எனக்கு இதனைக் கற்றுக் கொடுத்தார். இத் தொழிலை வைத்து எனது வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருக்கிறேன்” என்று மிகவும் பணிவாகப் பதிலளித்தான்.
அப்போது அந்த வள்ளத்தில் எதிர்பாராத விதமாக ஒரு வெடிப்பு ஏற்பட்டு நீர் ஓடத்தினுள் உட்புகத் தொடங்கியது.
அப்போது படகோட்டி அந்தச் சாமியாரிடம் “சாமி உங்களுக்கு நீந்தத் தெரியுமா?” என்று கேட்டான்.
அதற்கு அந்தச் சாமியார் “இல்லை அப்பா எனக்கு நீந்தத் தெரியாது. நான் நீச்சல் கற்றுக் கொள்ளவில்லை” என்று பதட்டத்துடன் பதிலளித்தார்.
அதற்கு அந்தப் படகோட்டி “சாமி பயப்படாதீர்கள் எனக்கு நீச்சல் தெரியும் நான் உங்களைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என்று பதிலளித்தான்.
தான் படித்த படிப்பு தனக்கு உதவாது என்பதனை சாமியார் அப்போது உணர்ந்து கொண்டார். தன கர்வத்தை எண்ணி சாமியார் வெட்க்கப்பட்டுக் கொண்டார்.
அது மட்டுமல்லாது சாமி நீ இவ்வளவு படித்திருந்தும் நீச்சல் தெரியாததால் உன் முழு வாழ்க்கையும் இப்போது போகப்போகிறதே என்று கேட்க்கத் தெரியாத அந்தப் படிக்காத மேதையின் தொழில் தருமத்தையும் தனக்கு ஒரு பாடமாக எண்ணிக்கொண்டார்.
xxx
நாம் என்ன படித்தென்ன நாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு கற்காத கல்வியும் அறிந்து கொள்ளாத அனுபவமும் எப்போதும் எமக்குப் பயன்தராது.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —