மனிதனாக வாழக் கற்றுக்கொள்
ஒரு ஊரில் ஒரு முரட்டு வாலிபன் இருந்தான். அவன் புதுப்புது விதமான வித்தைகள் கற்பதில் ஆர்வமாக இருந்தான். அதற்காக அவன் பல ஊர்களுக்கும் சென்று வேறு வேறு குருமார்களிடம் வித்தைகள் கற்று வந்து தனது ஊரில் உள்ளவர்களுக் கெல்லாம் செய்து காட்டுவான். அதனால் அவனுக்குத் தான் பல வித்தைகள் கற்றவன் என்ற தலைக் கனமும் இருந்ததால் யாரையும் மதிக்காமலும் வாழ்ந்து வந்தான்.
அப்படியாக வாழ்ந்து வந்த நாட்களில் அவனுக்குத் திருமணம் முடிக்கும் ஆசை வந்தது. ஊரில் உள்ளவர்களோ அவனது முரட்டுத் தனத்தாலும் தலைக்கனத்தாலும் அவனுக்குப் பெண் கொடுக்கத் தயங்கினர்.
அப்படியான காலகட்டத்தில் அவ்வூருக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அவ்வூர் மக்களெல்லாம் அவரிடம் சென்று தமது குறைகளையும் கூறி அவரது அறிவுரையையும், ஆசீர்வாதமும் பெற்றார்கள்.
அந்த முரட்டு வாலிபனும் சாமியாரிடம் சென்று தனது குறையைக் கூறினான். அப்போது அவன் தனக்கு “மண்ணுக்குள் புழுவைப் போல ஒருநாள் இருக்க முடியும், தன்னால் நீருக்குள் மீனைப்போல ஒருநாள் வாழ முடியும், குரங்கு போல மரத்துக்கு மரம் தாவித்தாவி ஓடமுடியும் இப்படிப் பல வித்தைகள் கற்றிருக்கிறேன். இன்னும் பல வித்தைகள் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்கு யாரும் பெண் கொடுக்கிறார்கள் இல்லை” என்று கவலையுடன் கூறினான்.
அவன் கூறிய அனைத்தையும் செவிமடுத்த சாமியார் அவனுக்குப் பதிலளித்தார் “வாலிபனே நீ பல வித்தைகள் கற்றிருக்கிறாய். ஒரு புழுவைப் போல, ஒரு மீனைப்போல. ஒரு குரங்கைப்போல வாழவே விருப்பப்படுகிறாய். ஆனால் நீ ஒரு மனிதனாக வாழ இன்னும் கற்றுக் கொள்ளவில்லையே. இன்றிலிருந்து நீ மனிதனாக வாழக் கற்றுக்கொள். உன் வாழ்க்கை சிறக்கும்” என்று அறிவுரை கூறினார்.
அப்போதுதான் அந்த முரட்டு வாலிபனுக்குத் தன் தவறு புரிந்தது.
சாராம்சம்:
எமது விருப்பத்திற்காகக் கற்பதெல்லாம் வாழ்க்கைக்கு எப்போதும் உதவுவதில்லை. நாம் வாழும் சமுதாயத்துக்கு ஏற்றவாறு கற்றுப் பயன்படுத்தும் போதுதான் அது எமக்கும் பயன்தரும் நாம் வாழும் சமுதாயத்துக்கும் பயன்தரும்.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —