உன்னை நீயே கவனி

0 0
Read Time:4 Minute, 6 Second

நேபாள சிற்றரசனின் தேர் உயரமான ஒரு மலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கை மேல் மிகவும் வெறுப்புக் கொண்டிருந்த அம்மன்னன் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையில் இருந்தான். எல்லாம் இருந்தும் அவனுக்கு நிம்மதி இல்லை.

குழப்பமான சிந்தனைகளுடன் சென்று கொண்டிருந்தபோது ஒரு அரச மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு சாமியாரைப் பார்த்தான்.

எளிமையான காவி உடை தரித்து இருந்த அந்த சாமியாரின் முகத்தில் பேரானந்தம் தாண்டவமாடுவதை ஆச்சரியத்துடன் நோக்கினான்.

தான் தற்கொலை செய்துகொள்ள முன்பு இந்தச் சாமியாருடன் ஒரு தடவை மனம்விட்டுப் பேசிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்துத் தேரை நிறுத்தி இறங்கினான்.

தனது மூடியிருந்த கண்களைத் திறந்தார் அந்தச் சாமியார். தன் முன் நின்ற மன்னனைப் பார்த்து “உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார்.

“நான் ஒரு அரசன். எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது. என் பிரச்னையை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. உங்கள் ஒளியுடைய முகம் என்னை ஈர்த்தது. நான் தற்கொலை செய்து கொள்வதற்கு முடிவு எடுத்துள்ளேன். என் பிரச்னை என்னவென்று அதற்கு முன்னர் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தங்களால் எனக்கு உதவ முடியுமா?” என்றான் மன்னன்.

மன்னன் சொல்வதை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த சாமியாரின் பார்வை மன்னனின் கால்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிறு வயது முதலே காலாட்டுகிற பழக்கம் உண்டு. அந்த சாமியார் தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்த மன்னன் சட்டென்று காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.

“மன்னனே! உனக்கு எவ்வளவு காலமாக காலாட்டுகிற பழக்கம் உள்ளது?” என்று கேட்டார் சாமியார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.

“இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?” என்று கேட்டார் அந்தச் சாமியார்.

“நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள். அதனால் நிறுத்திவிட்டேன்” என்று பதிலளித்தான் மன்னன்.

“நான் உன் கால்களையே கவனித்ததால் நீ உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எதையெல்லாம் நிறுத்த வேண்டும் என்பது உனக்கே தெரியவரும்! “என்றார் சாமியார்

மன்னனின் இருண்ட மனதில் ஓர் நம்பிக்கை தெரியத் தொடங்கியது. தற்கொலை செய்யும் எண்ணத்தை விட்டு மீண்டுமொருறை வாழ்ந்துதான் பார்ப்போமே என்று முடிவெடுத்தான் மன்னன்.

மிகுந்த பணிவோடு, “நீங்கள் யார்?” என்று கேட்டான் மன்னன்.

“புத்தர்” என்று பதில் வந்தது

முகநூலில் படித்ததில் என்னை மிகவும் கவர்ந்த கதை.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %