தியானம் என்றால் என்ன (தியானம் தூக்கம் மௌனம்)

0 0
Read Time:21 Minute, 42 Second

தியானம், மௌனம் மற்றும் தூக்கம் என்றால் என்ன என்ற அடிப்படைக் கருத்துக்களை எனது குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள் கொடுத்த விளக்கங்களில் இருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

தியானம் என்றால் சிந்தனைகள் அற்ற நிலை என்று அர்த்தம். தியானம் என்பது ஏதோ ஒரு பொருளை எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும்.

எமது உடல் பொருள் ஆவி (ஆன்மா) மூன்றையும் அதாவது எம்மையே கடவுளுக்குத் தானமாகக் கொடுப்பதுதான் தியானம். அது யோகப் பயிற்சியின் மூலமாகவே சாத்தியப்படும். அது ஒரு ஞானியாலேயே முடியும்.

மனம் ஒரே பொருளின் மேலேயே ஓடி கொண்டிருக்கும் நிலைக்குத் தியானம் என்று பெயர்.

உதாரணமாக வானம் ஒரு முடிவில்லாத பரந்த வெளி. ஆனால் அந்த வெளியைப் பார்த்து அது வானம் என்று குறிப்பிடுகிறோம். அந்த வானம் எமக்கு நீல வர்ணமாக காட்சியளிக்கிறது. நாம் அதனை அழகான நீல வானம் என்று காட்சிப் படுத்துகிறோம். உண்மையில் அங்கு எதுவும் இல்லை. அதுபோல எமது சிந்தனைகள் ஒரு சிந்தனை அற்ற நிலையில் நிலைக்கச் செய்வதே தியானமாகும். அங்கும் அதாவது அந்த சிந்தனை அற்ற நிலையிலும் மனதில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது அங்கு காட்சிகள் கிடைக்கும். அது கனவு அல்ல நிஜமான காட்சிகளே. அதுவே உள்முகத் தேடலாகும். அதாவது அந்த நேரத்தில் புலன்கள் அனைத்தும் விழிப்பு நிலையில் இருக்கும் ஆனால் மனமானது அந்த புலன்கள் பால் செல்லாது உள்முகமாக தேடிக் கொண்டிருக்கும் என்பதே உண்மையாகும்.

இவ்விடத்தில் நாம் தூக்கத்துக்கும் தியானத்துக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தினை எண்ணிப் பார்ப்போமாக இருந்தால் தூக்கம் என்பது புலன்கள் மற்றும் அங்கங்கள் அடங்கிய நிலையில் மனது அடங்கிய நிலையே தூக்கமாகும். அதனால்த்தான் தூக்கத்தின்போது உடல் தரையில்ச் சாய்ந்திருக்கும். தூக்கம் ஒருவித மரணமே. மரணத்தின் ஒத்திகையே தூக்கமாகும். நாம் தூங்கும்போது ஆன்மாவானது எமது உடலில் இருந்து வெளியே பயணம் செய்கிறது. அப்போது அது பல காட்சிகளைக் காண்கிறது பலரைச் சந்திக்கிறது. அதுவே கனவாகும். அந்தக் கனவின்போது காணும் காட்ச்சிகள் உருவங்கள் எமக்குப் பரீட்சயமாகவும் இருக்கும் பரீட்சயம் அற்றதாகவும் இருக்கும். மரணத்தின்போது ஆன்மாவானது உடலை விட்டுப் பிரிந்து வெளியேறும்போது இப்படியான காட்சிகளே தோன்றும். அங்கங்கள் அடங்கிய நிலையில் அதாவது செயலற்ற நிலையில் நடைபெறுவது தூக்கம். அங்கங்கள் செயலிழந்த நிலையில் ஆன்மாவானது உடலில் இருந்து வெளியேறுவது மரணமாகும்.

ஆனால் தியானம் எனப்படுவது அங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நாம் செய்யும் யோகப் பயிற்சியினால் மனமானது ஐம்புலன்கள் வழியாக வெளிப்புறமாகச் செல்லாது உள்முகமாகத் தேடுவதே தியானமாகும். அங்கங்கள் செயல்பட்டுக் கொண்டுருப்பதால் உடலானது நிமிர்ந்து இருக்கும். அதாவது நாம் எந்த நிலையில் இருந்து யோகம் செய்கிறோமோ அந்நிலையிலேயே உடல் இருக்கும்.

பரம்பொருளை முழுதும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற துடிப்போடு வெளிப்புறமாக அலைந்து திரியும் மனதில் உள்ள ஆசைகளை அழித்து மனசை உள்முகமாகச் செலுத்தி அந்த மூலத்தை ஆராய்ந்து அறிந்து கொள்வதே தியானமாகும்.

இறை பொருளைப் பற்றிய தொடர்ச்சியான சிந்தனையே தியானம் எனப்படுகிறது. ஒரு பொருளில் மட்டுமே குவிக்கப்பட்ட மனம் வேறு எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்றால் அதற்குத் தியானம் என்று பெயர்.

எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றேயாகத் தூயதாக, சிதறாததாக, வலிமையுடன், தெளிவுடன் இருக்கும் மனநிலைக்கு தியானம் என்று பெயர்.

தூக்கம் என்பது எமது உடலுக்குத் தேவையான ஓய்வு. உடலியல் ரீதியாக உடல் தனக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்காகவே தூக்கம் அமைகிறது. நாம் தூங்க வேண்டுமாக இருந்தால் உறங்க ஒரு இடம் அதாவது தரை அல்லது ஒரு பஞ்சணை அல்லது ஒரு சாய்மனை போன்ற ஒரு இடம் தேவைப்படுகிறது. அப்படியே நாம் அவ்விடத்தில் படுத்திருந்து கண்களை மூட மெல்ல மெல்லமாக எண்ணங்கள் அடங்கி. அங்கங்கள் அடங்கி தூக்கத்தினை வரவளைத்துக் கொள்கிறோம். அப்படியே தூங்கி விடுகிறோம். அப்போது மனம் அடங்கிவிடுகிறது.

அதேபோல தியானமும் ஒருவகைத் தூக்கமே. தூக்கத்தினை நாம் எப்படி வரவழைக்கிறோமோ அப்படியாகவே யோகிகள் தியானத்தினை வரவழைத்துக் கொள்கிறார்கள். அதாவது ஒரு குருவிடம் முறையாக யோகம் பயின்று குரு அறிவுறுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றி தியானம் செய்வதற்குரிய ஒரு இடத்தினைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து யோகப் பயிற்சி செய்யும்போது நாம் “தியானம்” என்ற நிலையினை அடைவோம். இதுவே தியானம் அல்லது தியான நிலை ஆகும்.

தியானத்தின்போது ஐம்புலன்களும் தொழில்ப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் மனமானது வெளிப்புறமாக ஐம்புலன்கள் பால்ச் செல்லாது உட்புறமாக இறை தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும். தியானத்தின்போது மனமானது அடங்குவதில்லை அது உள்முகமாக உள்முகத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

அதனாலேயே தியானத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் எந் நிலையில் இருந்து பயிற்சி செய்கிறார்களோ அந்த நிலையிலேயே அதாவது உட்காந்து இருக்கும் நிலையிலேயே தியான நிலையில் இருப்பார்கள்.

அதாவது உணர்வற்று, உடலற்று, சிந்தனையற்று, நினைவற்று, பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று, பிரம்மத்திடம் மனமும் புத்தியும் லயித்துப் போகவேண்டும். அதுவே தியானமாகும்.

பல சிந்தனைகளோடு கண்களை மூடிக்கொண்டிருத்தல் தியானமாகாது. அது ஓய்வெடுப்பதாகும். அதுபோல நாம் படுத்திருந்து கண்களை மூடிக்கொண்டிருத்தல் தூக்கமாகாது.

அதாவது தூக்கத்தினை நாம் எப்படி வரவழைத்துக் கொள்கிறோயமோ அதுபோலவே யோகிகள் யோகப்பயிற்சி மூலமாக தியானத்தினை வரவழைத்துக் கொள்கிறார்கள்.

இவ்விடத்தில் மௌனம் என்றால் என்ன என்று நாம் விளங்கிக் கொள்வதும் முக்கியமானது. மௌனம் என்பது வாயாலும், மனதாலும், செயலாலும் பேசாதிருப்பதே என பதஞ்சலி முனிவர் தனது யோக சூத்திரம் எனும் நூலில் விளக்கியுள்ளார். மௌனத்தின்போது நாம் மட்டுப்படுத்தப்பட்ட அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கலாம் ஆனால் எந்தச் சிந்தனையிலும் ஈடுபடக்கூடாது. யாருடனும் எவ்விதமான சந்திப்பிலும் ஈடுபடக்கூடாது. அதாவது வாய்தானே பேசக்கூடாது என எழுதிக் காட்டுவதும் சைகையில் பேசுவதும் மௌன நிலையாகாது. அது மௌனம் ஆகாது. அது மட்டுமல்ல பாட்டுக் கேட்பது, கண்களால் வெளி உலகை இரசிப்பது மூக்கினால் வாசனைகளை நுகர்வது போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபடாதிருக்க வேண்டும். இன்னும் ஆழமாகப் பார்ப்போமானால் ஒருநாள் மௌனமாக அதாவது மௌன விரதம் கடைப்பிடிப்பவர்கள் தாம் சமைத்து உண்ணும் உணவில் சுவையையோ அன்றி வாசத்தினையோ தேடாது உடலுக்கு உணவு என்று சமைத்து உண்பது மௌனத்தின் போது கடைப்பிடிக்க வேண்டும். அதாவது ஆழ்நிலையில் அமைதியாய் இருத்தலே மௌனம் எனப்படும்.

தூக்கம் எமது உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது, இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், மன ஆரோக்கியம், உணர்ச்சி, நல்வாழ்வு, நோயெதிர்ப்பு ஆகிய அனைத்தையும் கொடுக்கிறது.

மௌனம் மகத்தான சக்தி வாய்ந்தது. பல பிரச்னைகளுக்கு தீர்வு தரக்கூடியது. மௌனவிரதம் இருப்பது நம் உடல், உள்ளத்தை தூய்மையாக்கும். அதிகம் கோபப்படுபவர்கள் மௌனவிரதம் இருந்தால் கோபத்திலிருந்து விடுபடலாம். மௌனவிரதம் நம் உடலில் உள்ள ஆற்றல்களை ஒன்றிணைக்கும். நம்மைப் பற்றிய ஆய்வுக்கும் சிறந்தது. மௌனவிரதம் இருந்து மனத்தைக் கட்டுப்படுத்திப் பழகினால் நாம் பிறருடன் பழகும் வேளைகளில் தேவையற்ற வார்த்தைகள் வராது கட்டுப்படுத்தும். மௌனம் ஒரு வகையில் தியானத்தின் ஆரம்பப் படிநிலையாகும். நம்மை நாம் உணர, நம்மில் இறைவனை உணர மௌனவிரதம் சிறந்த துணை புரியும். மௌனம் தியான நிலைக்கு எம்மை இலகுவாக அழைத்துச் செல்லும்.

மனதை உள்முகமாகச் செலுத்துதல் தியானமாகும். அட்டாங்க யோகத்தில்க் கூறப்பட்ட எட்டுப் படிநிலைகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றில் ஏழாவதாக வருவது தியானம் ஆகும். தியானத்தால் சமாதி அல்லது முத்தி கிட்டும்.

அட்டாங்க யோகத்தில் தியானம் பற்றி திருமூலர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

வரும் ஆதி ஈரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன் போக மேவல்;
உருவாய சத்தி பரத்தியானம்; உன்னும்
குரு ஆர் சிவத்தியானம் யோகத்தின் கூறே..”     – திருமந்திரம்.

விளக்கம்: பூதம் ஐந்து, தன்மாத்திரை ஐந்து, அந்தக்கரணம் நான்கு, பிரகிருதி ஒன்று, புருடன் ஒன்று`ஆகிய பத்து இச்சைகளிலும் இருந்து மனமானது விடுபட்டு தியானத்தில் நிலைக்கும்போது.(அதாவது பொறி புலன்கள் நீங்கி இருப்பது தியானம்) உச்சியில் ஒளி வடிவாக இறைவனை தியானிப்பின், அது சக்தி  தியானமாகும். இறைவனை உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத்தியானமாகும். இவை இரண்டும் யோகத்தின் இரு கூறுகளே.

—x—

ஒரு யோகி (யோகப்பயிற்சி செய்பவர்கள் யோகிகள் என அழைக்கப் படுவார்கள்) தியான நிலையில் இருந்து முக்தி அடையும் நிலையை பின்வருமாறு விளக்குகிறார்.கொங்கணச் சித்தர்.

உணர்வற்று வுடலற்று யோகமற்று
யோடுவது மாடுவது மிரண்டுமற்று
பணர்வற்று நினைவற்றுப் பாசமற்றுப்
பார்க்கிறதும் பாராது மிரண்டுமற்றுச்
சுணர்வற்று லெச்சையற்றுக் கூச்சமற்று
சொல்வதுவுஞ் சொல்லாது மிரண்டுமற்று
நிணர்வற்ற நிட்களத்தில் நிலைத்துப் போக
நேராக குண்டலியை நிலைத்துப் பாரே.” – கொங்கணவர் –

விளக்கம்: மனமானது உணர்வற்று, உடலை மறந்த நிலையில், ஓடுவதற்று, ஆடுவதற்று அதாவது மனமானது அங்கு இங்கு என்று அலைந்து திரியாமல் உட்புறமாக நெற்றிப் புருவத்தில் ஆட்ட அசைவின்றி நிலைத்திருந்து (தவ நிலை), நினைவற்று (சிந்தனையற்று), பாசமற்று, பார்ப்பதும், பார்க்காததுமாகிய இரண்டும் அற்று   வெளியுலக நிகழ்வுகளில் மனத்தைச் செலுத்தாமல், அச்சம், மடம், நாணம், பயப்பு என்ற குணங்கள் அழிந்த நிலையில், சொல்வது, சொல்லாதது போன்ற நிலை அதாவது பிறருடன் பேச்சற்ற (மௌன) நிலையில் அதாவது தன்னை மறந்த நிலையில் மனமானது அந்த ஈசனுடன் லயிக்கும்போது குண்டலினி சக்தியானது மேலெழுந்து சிரசு நோக்கி வந்து அந்த ஜோதியுடன் கலக்கும்  அதுவே முக்தி நிலை என்கிறார் கொங்கணவர்.

—x—

எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளிடம் சீடர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஐயா தியானம் செய்யச் சிறந்த இடம் எது?

குரு: சூழ்நிலைகளை மாற்றுவதால் ஒரு பயனும் இல்லை. தடங்கல் மனதில் உள்ளது. வீட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் மனதில் இருந்து மீளவேண்டும். அதாவது மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதனை காட்டில் இருந்து செய்ய முடிந்தால் வீட்டில் இருந்து ஏன் செய்ய முடியாது? எனவே சூழ்நிலைகளை மாற்றுவதால் பயன் ஏதும் இல்லை நீங்கள் எந்தச் சூழலில் இருந்தாலும் உங்களது முயற்சியினைத் தொடருங்கள்.

கேள்வி: ஐயா தியானம் செய்வதால் என்ன நன்மை கிடைக்கும்?

குரு: எதுவுமே கிடைக்காது. மாறாக கோபம், பயம், பதட்டம், பொறாமை இப்படியாக நிறைய இழக்கவேண்டிவரும்.

கேள்வி: ஐயா தியானம் என்றால் என்ன?

குரு: தியானம் என்றால் என்னன்னா, நீ தியானம் பண்ணுவதே உனக்குத் தெரியக்கூடாது, அதுதான் தியானம். நான் தியானம் செய்துகொண்டிருக்கிறேன். நான் கடவுளை வழிபடுகிறேன் என்பதே உனக்குத் தெரியக்கூடாது. நீ தியானம் செய்ய உட்காரும்போது மட்டும் தான் உனக்குத் தெரியணும். அப்புறம் நீ உன்னை மறந்திடனும். உனக்கு எதுவுமே தெரியக்கூடாது. உன்னிலுள்ள எல்லா இயக்கமும் நின்ற மாதிரி நீ பாவனை பண்ணிக்கணும். நான் விழித்துக் கொண்டிருக்கிறேனா அல்லது தூங்கிவிட்டேனா என்று தெரியாத நிலை. ஆனால் இது ஞானம் கிடையாது. அதுதான் தியானம்.

கேள்வி: தியானம் என்பதன் விளக்கம் என்ன சாமி?

குரு: நீயே உன்னைப்பற்றிச் சிந்திப்பதுதான் தியானம். நீ யாரென்று நீ தேடவேண்டும். அப்போதுதான் உன் மனம் உள்முகமாகத் தேட ஆரம்பிக்கும் அந்த உள்முகமான தேடலே தியானமாகும்.

எப்படி உள்முகமாகத் தேடுவது எப்படி உன்னை நீ யாரென்று அறிந்து கொள்ளும் வித்தையே யோகப் பயிற்சியாகும். நீ அதனை ஒரு குருவிடமிருந்து முறைப்படி கற்றுக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் புத்தகத்தில் படித்து அல்லது காணொளி மூலமாக அரை குறையாக கற்று யோகம் செய்யாதே. அது பல பின் விளைவுகளை, நோய்களை உனக்கு ஏற்படுத்தலாம். எனவே ஒரு குவிடம் முறைப்படி யோகம் கற்று அவர் கூறியதுபோல பயிற்சி செய்து வர உனக்கு எல்லாம் புரியும்.

கேள்வி: ஐயா ஒரு குருவை எப்படிக் கண்டு கொள்வது.

குரு: நீ ஒரு குருவைத் தேடு. அதாவது எனக்கு ஒரு குரு வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடி வேண்டு. அவர் உனக்கு ஒரு நல்ல குருவைக் காட்டுவார். ஒரு குரு என்பவர் தனது சீடனின் முழு சந்தேகங்களையும் தீர்ப்பவராக இருக்க வேண்டும். அவர் முதலில் தன்னை யாரென்று முழுமையாக அறிந்தவராக இருக்க வேண்டும். அவரே உண்மையான குரு. உண்மையான குரு சீடனைத் தேடிப் போகமாட்டர். சீடன் அவரைத் தேடி வர வேண்டும். அவர்தான் உண்மையான குரு.

—x—

மகரிஷி பதஞ்சலியின் உபதேசப்படி “கட்டுப்படுத்தப்பட்டு அசைவற்றிருக்கும் சித்தமே தாரணை” எனப்படும், அதாவது மனதில் ஏற்படும் எண்ண அலைகளை அதாவது சித்தத்தினைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலைகொள்ளச் செய்யும் செயல் முறைதான் “தாரணை” எனப்படும்.12 வினாடிகள் சித்தம் செயல்படாமல் இருந்தால் அது ஒரு தாரணை எனப்படும். 12 தாரணைகள் சேர்ந்ததே ஒரு தியானம் எனப்படுகிறது. அதாவது 144 வினாடிகள் சித்தம் கட்டுப்பட்டிருந்தால் அது ஒரு தியானம் எனக் கொள்ளப்படும் என விளக்குகிறார் பதஞ்சலி முனிவர்.

தியானம் என்பது எந்த சிந்தனையும் இல்லாதது.

தியானம் தான் நீ யாரென்று உனக்கு காட்டும்.

மனதை விட்டு தொலைவில் போகும் முறைதான் தியானம்.

தூக்கம் என்பது, விழிப்புணர்வு அற்ற தியானம்.
தியானம் என்பது, விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.

பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளால் நடாத்தப்படும் ராஜயோகப் பாடசாலை, இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலே போளிவாக்கம் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஆச்சிரமத்துடன் அமைந்த இப்பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது.

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் ஆன்மீக நாட்டம் கொண்டு தன்னைத் தேடி வரும் பக்தர்களின் ஆன்மீகம் சம்பந்தமான கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுத்து அவர்களது ஆன்மீக அறியாமையைப் போக்கி அவர்களுக்கு உபதேசம் கொடுக்கிறார் பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்கள்.

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %