கந்த சஷ்டி விரதம் (Nov 1/2024 to Nov 6/2024)
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டிவிரதம். இந்த விரதத்தின் சிறப்பை வைத்தே “சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்” என்ற பழமொழி எழுந்தது. சஷ்டி விரதம் இருந்தால் வீட்டில்ச் செல்வம் கொழிக்கும் என்பது பொருளாகும்.
கந்தசஷ்டி விரதம், ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் சதுர்த்தசித் திதியில் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாட்களும் விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சஷ்டி என்றால் ஆறு என்று பொருளாகும். கந்தசஷ்டி விரதமானது முருகக் கடவுள் ஆறு நாட்கள் சூரனுடன் போர் புரிந்து ஆறாவதுநாள் சஷ்டி அன்று சூரனை அழித்த தினமான சூரன்போருடன் முடிவடைகிறது.
முருகன் கோயில் கொண்டுள்ள எல்லா ஆலயங்களிலுமே கந்தசஷ்டி விரதம் மிகச் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது
தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந்தவமாகக் கருதி, அமாவாசைத் தினத்தில் ஒரு வேளை உணவு உண்டு மிகுதி .ஆறு தினங்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை கடைப்பிடிப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
இவ்விரத முறையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, அல்லது ஐந்து நாட்களும் இரவுவேளையில் மட்டும் உணவருந்தி ஆறாம் நாள் உபவாசம் இருந்து ஏழாம் நாள் காலையில் உணவு அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்
விரத தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து, காப்புக்கட்டல் அதாவது சங்கற்பம் செய்து விரதத்தினை ஆரம்பிப்பது வழக்கம்.
பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர். இறுதி நாளில் கோவிலில் காப்பை அவிழ்த்து பூசை செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை நீராடி பாரணைப் பூஜை முடிந்தது விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் உன்னதமான விரதம் இந்த கந்த சஷ்டி விரதமாகும்.
முருகப் பெருமான் சூரசங்காரம் செய்து தேவர்களைக் காத்த அருட் செயலைக் குறிக்கும் இவ்விழாவின் ஆறாம் நாள் முருகன் ஆலயங்களில் ‘சூரன் போர்’ என்னும் சமய நிகழ்வு நடைபெறும்.
கந்த சஷ்டி விரத வரலாறு
சிங்கன், தாரகன் முதலிய அசுரர்கள் நெடுங்காலமாக தேவர், மனிதர் யாவரையும்துன்புறுத்தி அழித்து வந்தனர். பரமசிவன் இதற்கொரு முடிவு காணும் நோக்கில், தனது சக்தியையே முருகப் பெருமானாகப் பிறப்பித்தார். சிவபெருமானது நெற்றியிலிருந்து தெறித்த பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகளாகத் தோன்றின அக்குழந்தைகளை உமாதேவியார் அணைத்து எடுக்க ஆறுதிருமுகமும், பன்னிரண்டு திருக்கையமுடைய ஓருருவாய் முருகப் பெருமான் எழுந்தருளினார்.
அந்த முருகப் பெருமான் இந்தச் சூரபதுமாதி அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டு வென்றார். இந்த அருட்பெருங் கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறைமுதல் ஆறு நாட்களையும் விரத நாட்களாக முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்த சஷ்டி என்ற பேரில் பூலோக மாந்தரும் அனுஷ்டிக்கக் கிடைத்தது.
சூர சம்காரத்தின் முடிவில் முருகன், மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார் என கந்தபுராணம் கூறுகிறது.
கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகும். ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.
இவ்விரதத்தின் போது, தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்தபுராணம் ஆகியவற்றைப் படிப்பது என்பது வழிபாட்டின் ஒரு பகுதியாகும்.
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை பெண்கள் அறுவரால் வளர்க்கப்பட்டவன். அவனது மந்திரம் ஆறெழுத்து. அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரதநாட்கள் ஆறு.
ஆறெழுத்து மந்திரம் (ச ர வ ண ப வ)
ச – லட்சுமி கடாட்ச்சம்
ர – சரஸ்வதி கடாட்ச்சம்
வ – போகம் – மோக்ஷம்
ண – சத்துரு ஜெயம்
ப – ருத்யு ஜெயம்
வ – நோயற்ற வாழ்வு
ஆறுபடை வீடுகள்
ஆறுபடை வீடுகளும் ஆறு ஆதாரங்களாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் – ஸ்வாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை – அனாஹதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை.
சரவணப் பொய்கை
முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திரு ஆவினன் குடியில் (பழனி) சுப்பிரமணிய சுவாமி கோவில் மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சரவணப் பொய்கையாகும்.
கந்தர் சஷ்டி கவசம்
பாலன் தேவராஜன் என்ற முருக பக்தனால் ஆறுபடை வீடுகளையும் நோக்கி எழுதப்பட்ட முருக புராணங்களில் திருச்செந்தூர் முருகனைநோக்கிப் பாடப்பட்ட கந்த சஷ்ட்டி கவசமே பிரபல்யமாகி எல்லோராலும் பாராயணம் பண்ணப்படுகிறது.
திருச்செந்தூர் முருகனை நோக்கி பாலன் தேவ ராயன் என்பவரால் பாடப்பெற்ற கந்தர் சஷ்டி கவசத்தினை தினமும் காலையிலும் மாலையிலும் சிந்தை தவறாது முருகன் மீது பக்தி வைத்து பாராயணம் பண்ணவேண்டும். அதிலும் தினமும் முப்பத்தாறு தடவைகள் ஒரே சிந்தனையோடு தொடர்ந்து பாராயணம் பண்ணி விபூதி பூசி வழிபட்டால் எட்டுத் திக்கும் உன்வசமாகும். எட்டுத் திக்கிலும் உள்ள தெய்வங்கள் உனக்கு அருள்புரியும். எதிரிகள் கூட உன்னைத் தேடி வந்து வணங்குவர் என்று கூறுகிறார்
உதாரணமாக கந்தர் சஷ்டி கவசத்தில், “ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய” என்று ஒரு வரி வருகிறது. அதாவது கந்தர் சஷ்டி கவசத்தினை ஒரு நாளைக்கு முப்பத்தாறு தடவை தொடர்ந்து மனமுருகித் துதித்தால் எட்டுத் திக்கும் உனது வசமாகும் என்று அர்த்தமாகும்.
“கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கிலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர்
மற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்”.
— அன்பே சிவம் —