வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்
கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. நந்திக்கடலும், வயல்வெளிகளும், பாலைமரச் சோலையும் சூழ்ந்த பசுமையான சூழலில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
இலங்கையில் கண்ணகி வழிபாட்டில் இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாகும். கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகி அம்மனை வழிபடுகின்றனர்.
கண்ணகி மதுரையை எரித்ததன் பின்பு இலங்கைக்கு வந்து பல இடங்களில் தங்கினாள். பின் வற்றாப்பளைக்கு வந்து தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டு அங்கு தங்கியதாக சிலம்பு கூறல் என்னும் கண்ணகி காப்பியம் கூறுகின்றது.
கண்ணகி வழிபாட்டைப் பத்தினித் தெய்வ வழிபாடாக ஈழத்தில் அறிமுகம் செய்து வைத்தவன் கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கஜபாகு மன்ன் ஆவான் எனச் சிலப்பதிகாரச் செய்தி கூறுகின்றது. சேரமன்னன் கண்ணகிக்கு விழாவெடுத்த போது கடல்சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும் அவ்விழாவிற் பங்குகொண்டான் என்றும் அவனே ஈழத்தில் கண்ணகி வழிபாட்டை அறிமுகப்படுத்தினான் என்றும் கூறப்படுகின்றது. வற்றாப்பளையிலிருந்தே இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு கண்ணகி அம்மன் வழிபாடு பரவியதென்பர்.
வரலாறு
கண்ணகி அம்மன் வற்றாப்பளைக்கு வந்து இடைச் சிறுவர்களுக்குக் காட்சிகொடுத்த நிகழ்;ச்சியையும் அதற்கு முன்பு முள்ளியவளைக்கு வந்ததையும் அம்மன் சிந்து குறிப்பிடுகின்றது.
மாடு மேய்க்கும் சிறுவர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது மூதாட்டி ஒருத்தி அவ்விடம் வந்து பட்டுப்போன வேப்பம்மரத்துக்கு கீழே இருப்பதைக் கண்டனர். சிறுவர்கள் மூதாட்டியை வரவேற்று உபசரித்தனர். தனக்குப் பசிக்கிறது என்று மூதாட்டி சொல்லவே அவர்கள் பாற்புக்கை சமைத்துக் கொடுத்தளர். பொழுது பட்டு விட்டதனால் விளக்கேற்றுமாறு மூதாட்டி சிறுவர்களிடம் கூறினாள். ஏண்ணெய் இல்லையெனச் சிறுவர்கள் கூறினர். கடல்நீரை அள்ளி எடுத்து விளக்கேற்றுமாறு மூதாட்டி கூறினாள். அங்ஙனமே அவர்கள் அருகிலுள்ள நந்திக் கடலில் நீர் எடுத்து வந்து விளக்கேற்றினர். தனது தலையில் பேன் அதிகமாகையால் தலையில் பேன் பார்க்குமாறு மூதாட்டி கேட்டுக் கொண்டாள். சிறுவர்கள் பார்த்த போது தலையெல்லாம் கணகளாயிருப்பதைக் கண்டு பயந்து அலர. திடீரென மூதாட்டி மறைந்து விட்டாள். “மீண்டும் கைவாசி மாதம் ஒரு திங்கள் தினத்தில் வருவேன் எனக்குப் பொங்கிப் படையுங்கள்” என அசரீரி ஒலித்தது.
சிறுவர்கள் இதனை அக்கிராமத்தவர்களிடம் அறிவித்தனர். அவர்கள் முதலில் இதனை நம்ப வில்லை. அவர்கள் அவ்விடத்தில் எங்கும் தேடியும் மூதாட்டியைக் காணவில்லை. மூதாட்டி இருந்த வேப்ப மரத்தில் தளிர் வந்திருப்பதைக் கண்டனர். அந்த இடத்தில் சிறு ஆலயம் அமைத்து வழிபாடு செய்தனர். வைகாசி மாதத்துப் பூரணையை அண்டிய திங்கட்கிழமை பொங்கல் செய்தனர். அயல் கிராமத்து மக்களும் இவ்வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
அன்றுமுதல் அருகிலுள்ள கிராமமான முள்ளியவளையிலுள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் பொங்கலுக்கான முன்னோடி நிகழ்ச்சிகள் நடைபெற்று தீபம் ஏற்றுவதற்காக கடல் நீர் எடுத்து வரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் தீபம் ஏற்றி பொங்கல் நடைபெறும். வற்றாப்பளைப் பொங்கலுக்கு முதல் ஏழுநாள் மடைகளும் பொங்கலும் இன்றும் காட்டுவிநாயகர் ஆலயம் என அழைக்கப்படும் மூத்தநயினார் ஆலயத்திலேயே நடைபெற்று வருகின்றன.
அதாவது வைகாசிப் பொங்கலுக்கு ஒரு கிழமைக்கு முன்பே, கோயில் பூசாரி, பக்தர்கள், கோயில் நிர்வாகிகள், ஒரு பித்தளைக் குடத்தை மேளதாளத்தோடு சிலாவத்தை என்ற கடற்கரைக்கு எடுத்துச் சென்று, கடல் நீரை குடத்தில் நிரப்புவார்கள். கடல் அலை பொங்கி வரும் போது குடத்தை சரித்து, கடல் நீரை ஒரே தடவையில் மொண்டி அள்ளுவது வழமையாக இருந்து வருகிறது. குடத்தை நீரோடு முள்ளியவளையில் உள்ள காட்டுவிநாயகர் ஆலயத்தில் வைப்பார்கள். வைகாசி பொங்கல் தினத்தன்று விநாயகர் கோவிலில் இருந்து கண்ணகி அம்மன் கோவிலுக்கு தண்ணீர்க் குடத்தை எடுத்துச் சென்று, மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு குடத்தில் உள்ள கடல் நீரில் விளக்கேற்றி வழிபடுவார்கள்.
சிலப்பதிகாரக் கண்ணகி மானிடப் பெண், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தன் கற்பின் திறத்தால் தெய்வநிலை எய்தியதைச் சுட்டி நிற்கிறது கண்ணகி அம்மன் வரலாறு.
கண்ணகி அம்மனின் அற்புதங்கள் பல அடியாரை ஈர்த்துள்ளமை மனங்கொள்ளத்தக்கது.
கடல்நீரில் விளக்கெரிய வைத்தல், பட்ட படவாள் தளிர்த்து மரமாதல், தலையில் ஆயிரம் கண்களை காட்டியமை. புனிச்சையை ஆட்டுவித்து காயால் பறங்கித் துரைக்கு எறிவித்தமை, ஆலயப் பொருள்களைக் களவு செய்தோரின் கண்களை மறைத்தமை முதலான பல அற்புதங்களை வற்றாப்பளை அம்மன் செய்ததாகக் கதையுண்டு.
வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வழங்கப்படும் பிரசாதமும், விபூதியும் அம்மை, பொக்கிளிப்பான், சின்னமுத்து, கண்ணோய் போன்ற நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
ஆண்டுதோறும் வைகாசிப் பூரணையை அண்மிய திங்கட்கிழமை பொங்கல் கோலாகலமாக நடை பெறும். பொங்கலுக்கு ஒருவாரம் முன்பதாகவே வற்றாப்பளையும் அயற்கிராமங்களும் பக்தர் கூட்டத்தினால் நிறைந்திருக்கும்.
கால்நடையாகக் கதிர்காமம் செல்வோர் அம்மன் பொங்கலைத் தரிசித்த பின்னர் கண்ணகி அம்மனின் வழிகாட்டலுடன் யாத்திரையைத் தொடர்வர்.
–— அன்பே சிவம் —