ஒளவையார் வரலாறு
ஒளவையார்
மக்களுக்கு பல சிறந்த கருத்துக்களைக் கூறிய சில தெய்வப் புலவர்களுள் ஒளவையாரும் ஒருவர். ஒளவையார் தமிழுக்கும் சைவத்திற்கும் அரும்பெரும் தொண்டாற்றி பல அறிவுப் பொக்கிஷங்களை மக்களுக்காக அருளியவர். இவர் தமிழும் சைவமும் வளர்த்த தமிழ்ப் புலவர்களில் முதன்மையானவர் எனப் போற்றப்படுகிறார். தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டாற்றுவதன் பொருட்டு தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்.
இவர் வாழ்ந்த காலத்தில் தமிழ் இலக்கியத்தை உயர்ந்த இடத்திற்கு எட்டச் செய்து மகத்தான தமிழ்த்தொண்டு புரிந்தவர் ஒளவைப் பிராட்டி என்பது தமிழ்கூறு நல்லுலகம் கண்ட உண்மையாகும்.
ஒளவையார் வாழ்ந்த காலம் கி மு 300 இற்கும் 400 இற்கும் இடையில் இருக்கும் என சரித்திர ஆய்வு கூறுகிறது.
இவரின் வரலாறு பற்றி ஆராயும்போது இவர் ஆதி பகவன் என்ற தம்பதியினருக்கு இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தார் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமிழகத்திலே “ஆதி பகவன்” என்ற இறைபக்தி மிக்க தம்பதியர் தாம் மணம் முடிக்கும் போது தமக்கிடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அதாவது அவர்கள் ஊர் ஊராகச் சென்று ஆலய தரிசனம் செய்வ தென்றும், தாம் செல்லும் வழியில் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை அவ்வூரிலேயே விட்டுச் செல்வதாகவும் சபதம் எடுத்துக் கொண்டனர். அப்படியாக அவர்களது யாத்திரையின்போது தமிழகத்திலே மைலாப்பூர் என்னும் இடத்திலே வள்ளுவர் முதன் மகனாகப் பிறந்தார். சபத்தின்படி தன் மகனைப் பிரிய முடியாது அன்னை ஆதி, மனம் நொந்து கலங்கி நிற்ற வேளை அப்பிள்ளையிடமிருந்து அசரீரி போல
“எவ்வுயிரும் காக்க ஓர் ஈசன் உண்டோ இல்லையோ
அவ்வுயிரில் நாம் ஒருவர் அல்லவோ – வவ்விப்
பொருகுவது நெஞ்சே புழுங்குவதும் வேண்டா
வருகுவதும் தானே வரும்”
விளக்கம்: இவ்வுலகத்திலுள்ள எல்லா உயிர்களையும் காக்க அதனைப் படைத்த ஈசன் இருக்கிறான். நானும் அவ்வுயிர்களில் ஒருவனே. எனவே வரும் இன்ப துன்பங்களைக் கண்டு மனம் கலக்கமடைய வேண்டாம்.
என்ற பாடலைக் கேட்ட ஆதி ஆறுதலடைந்து பிள்ளையை அவ்விடத்திலேயே விட்டுத் தமது திருத்தல யாத்திரையைத் தொடர்ந்ததாகவும் அப்பிள்ளையே திருவள்ளுவர் என்பதும் வரலாறு. திருவள்ளுவர் தான் இயற்றிய திருக்குறளின் முதலாவது குறளான
அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
விளக்கம்: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை (“அ”) முதன்மையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது. இங்கு “ஆதி பகவன்” என்பது கடவுளைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதே வேளை திருவள்ளுவரின் தாயான ஆதியையும் தந்தையான பகவனையும் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
அவ்வாறு தொடர்ந்து திருத்தல யாத்திரை செய்யும்போது அடுத்ததாக அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்தது. யாத்திரை தொடர்வதனால் அப்பிள்ளையையும் அவ்விடத்திலேயே விட்டுச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தாயார் அப்பிள்ளையை விட்டுப் பிரிய மனமில்லாமல் இறைவனை வேண்டினார். அப்போது அப்பிள்ளையிடம் இருந்து அசரீரியாக
“இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
விட்ட சிவனுஞ் செத்துவிட்டானோ? –முட்டமுட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக்கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ”
விளக்கம்: விருப்புடன் என் தலையில் இதுதான் என் தலைவிதியென்று எழுதி வைத்துவிட்ட ஈசன் இறந்துவிட்டானா? முட்ட, முட்ட அதாவது தொடர்ந்து துன்பமே வந்தாலும், அந்த ஈசனே காத்தருள்வான். அவன் பார்த்துக் கொள்வான் கலங்காதே மனமே.
என்ற பாடலைக் கேட்ட பெற்றோர்கள் மனமகிழ்ந்து ஆறுதலடைந்து அப் பெண்பிள்ளையையும் அவ்விடத்திலேயே விட்டுத் தமது யாத்திரையைத் தொடர்ந்தனர். பிள்ளைகள் அற்ற பாணன் ஒருவரால் அப்பிள்ளை கண்டெடுக்கப்பட்டு ஒளவை எனப் பெயரிடப்பட்டு வளர்க்கப்பட்டது. இவரே எமக்கு அரிய தெய்வீகப் பாடல்களைத் தந்த ஒளவையாராகும்.
யாத்திரையின்போது அடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தை உப்பை என்னும் பெயர் பெற்றது. அந்தக் குழந்தையும் பிறந்தவுடன், “யானை முதல் எறும்பு வரை காக்கும் இறைவன் என்னையும் காப்பாற்றுவான் கலங்காதே தாயே”, என்று அசரீரியாகப் பாடியதாம்.
“அத்தி முதல் எறும்பீறான உயிர் அததனைக்கும்
சித்த மகிழ்ந்தளிக்கும் தேசிகன்–முற்றவே
கற்பித்தான் போனானோ?காக்கக் கடனிலையோ?
அற்பனோ அன்னாய் அரன்?”
இப்பாடலைக் கேட்ட பெற்றோர் மனமகிழ்ந்து அக்குழந்தையையும் அவ்விடத்திலேயே விட்டு யாத்திரையைத் தொடர்ந்தனர்.
இதற்கடுத்ததாகப் பிறந்த ஆண் குழந்தை அதியமான் என்ற பெயர் பெற்றது. அக்குழந்தையும் பின்வருமாறு அசரீரியாக பாடி பெற்றோரின் கவலையைத் தீர்த்தது. இவரே பின்னாளில் அதியமான் என்ற பெயரில் தகடூரை அரசாண்டார் எனவும் ஒளவையாருடன் நல்லுறவைப் பேணி வந்தார் எனவும் இம்மன்னனே ஒளவையாருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும் நெல்லிக்கனியைக் கொடுத்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
“கருப்பைக்குண் முட்டைக்கும் கல்லினுட் டேரைக்கும்
விருப்புற்றமுதளிக்கும் மெய்யன்–உருப்பெற்றால்
ஊடி வளர்க்கானோ? ஓகெடுவாய் அன்னாய்! கேள்
வாட்டமுனக்கேன்? மகிழ்!”
விளக்கம்: அம்மா கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும், கல்லுக்குள் வசிக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன். நீ கவலையிலாமல் மகிழ்வுடன் செல் என்றது.
இதற்கடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தை உறுவை என்னும் பெயர் பெற்றது இக்குழந்தையிடமிருந்தும் அசரீரியாகப் பின்வரும் பாடல் வந்து பெற்றோர் கவலையைப் போக்கியது.
“சண்டப்பைக்குள்ளுயிர்தன் தாயருந்தத் தானருந்தும்
அண்டத்துயிர் பிழைப்பதாச்சரியம் –மண்டி
அலைகின்ற அன்னாய்! அரனுடைய உண்மை
நிலைகண்டு நீயறிந்து நில்.”
விளக்கம்: குழந்தையோ, அம்மா, கருப்பைக்குள் இருக்கும் குழந்தை தாயின் உணவையே உண்டு வளரவில்லையா? இதுவும் இறைவனின் செயலில்லையா? நீ ஏன் கவலைப்படுகிறாய்? என்று கேட்டவுடன் அக்குழந்தையையும் அவ்விடத்திலேயே விட்டுப் பிரிந்து தமது யாத்திரையைத் தொடர்ந்தனர்.
அடுத்ததாக இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை திருவாதவூரில் பிறந்து கபிலர் எனப் பெயர் பெற்றது. கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர். அக்குழந்தையிடமிருந்தும் தாயின் கவலையைப் போக்க அசரீரியாக பின்வரும் பாடல் கேட்டது.
“கண்ணுழையாக் காட்டிற் கருங்க ற்றவளைக்கும்
உண்ணும் படியறிந் தூட்டுமவர் – நண்ணும்
நமக்கும் படியளப்பார் நாரியோர் பாகர்
தமக்குத் தொழிலென்னதான்?”
விளக்கம்: நடுக் காட்டில் கல்லுக்குள் இருக்கும் தவளையையும் அறிந்து அதற்குப் படியளக்கும் இறைவன் என்னைக் காக்க மாட்டானா? இதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை? கலங்காமல் உங்கள் யாத்திரையைத் தொடருங்கள் என்ற கருத்தறிந்து மகிழ்வுடன் அக்குழந்தையையும் அவ்விடத்திலேயே விட்டுத் தமது யாத்திரையைத் தொடர்ந்தனர்.
அவர்களது யாத்திரையின்போது அடுத்ததாக ஏழாவதாக இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து வள்ளியம்மை எனப் பெயர் பெற்றது. அக்குழந்தையிடமிருந்தும் தாயின் கவலையைப் போக்க அசரீரியாக பின்வரும் பாடல் கேட்டது.
“அன்னை வயிற்றில் அருத்தி வளர்த்தவன் தான்
இன்னும் வளர்க்கானோ? என் தாயே!– மின்னரவஞ்
சூடும் பெருமான்,சுடுகாட்டில் நின்று விளை
யாடும் பெருமான் அவன்”
“தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கே உணவளிக்கும் கடவுள் எனக்கும் உணவளிப்பான். தாயே, வருந்தாது செல்க”
என்ற கருத்தறிந்து மகிழ்வுடன் அக்குழந்தையையும் அவ்விடத்திலேயே விட்டுத் தமது யாத்திரையைத் தொடர்ந்தனர்.
இவ்வாறு ஒளவையாருக்கு ஆறு சகோதரர்கள் இருந்தார்கள் என வரலாற்றுக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
விநாயகப் பெருமானது சிறந்த பக்தையாகத் திகழ்ந்த ஒளவையார் திருமண வயதை அடைந்தவுடன் இவரது வளர்ப்புப் பெற்றோர் இவருக்குத் திருமணம் முடித்து வைக்க முயற்சித்தபோது இல்லற வாழ்வை அறவே வெறுத்து விநாயகரை நோக்கித் தவமிருந்து முதுமைக் கோலத்தைப் பெற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாது விநாயகக் கடவுளின் திருவருளால் தமிழ் அறிவையும் பெற்றுக்கொண்டார். அன்று முதல் தமிழ்நாட்டிலுள்ள ஊர்கள் எல்லாம் கால் நடையாகச் சென்று மக்களுக்குப் பல சிறந்த கருத்துக்களை பாடல்கள் சொற்பொழிவுகள் மூலமாகக் கூறிவந்தார். மக்களும் இவரை வரவேற்று ஒளவைப் பாட்டி என அன்புடன் அழைத்தனர். இவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும் இவர் கௌரவிக்கப்பட்டார்.மன்னர்களுக்கும் நன்னெறிகளையும் சிறந்த கருத்துக்களையும் கூறிவந்தார். பல மன்னர்கள் இவரை அரண்மனைக்கு வந்து அரசவைக்கு கவிஞராக இருக்குமாறு வலியுறுத்தியும் அதனை ஏற்றுக்கொள்ளாது பாமர மக்களுடன் சேர்ந்து எளிய வாழ்க்கையை விரும்பி வாழ்ந்தார். பல வேளைகளில் இவர் ஒருவேளை உணவுகூட இன்றித் தல யாத்திரை கள் செய்தார் எனவும் இவர் ஓடியற் கூழையே விரும்பி உண்பார் எனவும் கதைகள் உள்ளன
ஓடியற் கூழ்
ஒளவையார் ஓடியற் கூழையே மிகவும் விரும்பி உண்பார். ஒரு நாள், ஒளவைப் பிராட்டியார் சோழ நாட்டில் அம்பர் என்றொரு கிராமம் வழியாகச் நடந்து சென்று கொன்டிருந்தார். வெயில் மிகுந்த நண்பகலில் சோர்வோடு நீண்ட தூரம் நடந்த களைப்பில் அங்கிருந்த சிலம்பி எனும் பெயர்கொன்ட ஒரு தாசியின் வீட்டுத் திண்னையில் அமர்ந்து இளைப்பாறலானார். அவரைக் கண்ட தாசியும் அவரை மிகவும் அன்போடும் மரியாதையோடும் வரவேற்று அவருக்கு விருப்பமான ஓடியற் கூழ் சமைத்துக் கொடுத்து நல்லபடி உபசரித்தார்.
அக்காலத்தில் புலவர்களால் பாடப்பெறுவது மிகவும் சிறப்பான கெளரவத்திற்குரிய விடயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது. சிலம்பிக்கும் தன்னைப்பற்றி புலவர்களால் புகழ்ந்து பாடக் கேட்க விருப்பமுற்று சோழ நாட்டின் பெரும் புலவர் கம்பரிடத்தில் அவள் பாட்டுக்கேட்க அவர் 100 பொன்னுக்கு ஒரு வெண்பா பாடுவார் என்பதையறிந்து, தன்னிடமிருந்த 50 பொன்னையும் அவருக்குக் கொடுக்க அவர் அரை வெண்பா மட்டுமே அதாவது இரு வரிகள் மட்டுமே பாடிவிட்டு மிகுதி 50 பொன் கொடுக்கும்போது மிகுதி வரிகளை பாடி முடிப்பதாகக் கூறிச் சென்று விட்டார்.
“தண்ணீரும்காவிரியேதார்வேந்தன்சோழனே
மண்ணாவதும்சோழமண்டலமே”
கம்பர் பாடிய அரை வெண்பா சிலம்பி வீட்டுச் சுவரில் எழுதப்பட்டிருந்தது. அதனைக் கண்ட ஒளவையார் அத்தாசியிடம் அதுபற்றி விசாரிக்கலானர், சிலம்பியும் நடந்ததை ஒளவையிடம் கூறி மனம் வருந்தினாள். அவள்பால் மனமிரங்கிய ஒளவையார்
“பெண்ணாவாள் அம்பொற்சிலம்பி அரவிந்தத்தாளணியும்
செம்பொற்சிலம்பே சிலம்பு“
எனும் வரிகளைச் சேர்த்து வெண்பாவை பூர்த்தி செய்தார்.
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதும் சோழமண்டலமே – பெண்ணாவாள்
அம்பொற்சிலம்பி அரவிந்தத்தாளணியும்
செம்பொற்சிலம்பேசிலம்பு
அதாவது தண்ணீரில் சிறப்புக்குரியது காவிரிநீர். அரசர்களில் சிறந்தவன் சோழ மன்னன். மண்ணிலே சிறந்தது சோழ மண்டலம். இவற்றைப் போலவே சிலம்பில் சிறந்தது சிலம்பி என்னும் இந்த நல்லாள் காலில் உள்ள சிலம்பு. எனப்பொருள்பட பாடி முடித்தார்.
ஒளவையின் திருவாக்கால் சிலம்பி ஊரில் புகழ் பெறலானாள். அதன் பின்னர் சிலம்பி ஏழ்மை நீங்கி மிகவும் வசதி படைத்தவளானாள்.
இதனைக் கேவியுற்ற கம்பர் மிகவும் கோபமுற்று “கூழுக்குப் பாடி குடி கெடுத்தாள் பாவி” என்று ஒளவையாரை இகழ்ந்தார் எனவும் கதைகள் உண்டு.
நெல்லிக்கனி
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற வீரத்திலும், வள்ளல் குணத்திலும் மிகவும் புழ்பெற்றவர் மன்னன் தகடூர் எனும் நிலப்பரப்பை ஆண்டுவந்தான். இவன் ஒளவையிடம் மிகவும் அன்பும் பக்தியும் உள்ளவனாக இருந்தான். ஒளவையம் இவன்மீது அன்புகொண்டவராக இருந்து அவனைப் பாரட்டிப் பல பாடல்களும் பாடியுள்ளார்.
அதியமானின் புகழ்கண்டு பொறாமையுற்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஒன்று கூடி இவன்மீது யுத்தம் நடத்த திட்டங்கள் தீட்டினர். இதனை அறிந்து கொண்ட ஒளவையார் அவர்களுக்கு அறிவுரை கூறி அவர்களைச் சாந்தப் படுத்தினார். தமிழ்ப்பற்றும், தெய்வ பக்தியும் மிகுந்த அதியமான் நெடுமான் அஞ்சியை வஞ்சிப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மைகள் வரப்போவதில்லை. மாறாக ஒரு நல்லவனை அழித்த அவப்பெயர் மட்டுமே மிஞ்சும் எனப் பலவாறாக எடுத்துக்கூறி அவர்களின் போர்த்திட்டத்தைக் கைவிடச் செய்தார். ஒளவையின் பால் மதிப்புக்கொண்ட அவர்களும் உண்மையை உணர்ந்து போரிடும் எண்ணத்தைக் கைவிவிட்டனர்.
இதனை பின்வரும் பாடலில் ஒளவையார் விளக்கியுள்ளார்.
களம்புகல் ஓம்புமின் தெவ்விர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
அதியமான் நெடுமான் அஞ்சியை காண ஒரு நாள் ஒளவை தகடூருக்கு வருகிறார். ஒளவையை அன்போடு வரவேற்று உபசரிக்கின்றான் மன்னன் அதியமான். அப்போது மன்னன் ஒரு கருநெல்லிக்கனியை ஒளவைக்குத் தந்து உண்னும்படி அன்போடு வற்புறுத்துகிறான், ஒளவையும் அக்கனியை உண்டார். அதன் வித்தியாசமான் சுவையில் அதிசயித்த ஒளவை, அதியமானிடம் அக்கனியைப்பற்றி விசாரிக்க.
மன்னன் தன் தவ வலிமையினால் இறைவனிடமிருந்து கிடைத்த நீண்டகாலம் நோயின்றி உயிர் வாழவைக்கும் ஓர் அற்புத கருநெல்லிக்கனி என்றும் அதை உண்ணும் பேறு பெற்றவர் நீண்ட நெடுங்காலம் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று வாழ்வார் எனும் உண்மையை உரைக்கின்றான்.
அதிசயித்த ஒளவை நீண்ட காலம் வாழ வேண்டிய மன்னனே, வயதான எனக்கு எதற்கு இக்கனி? நீயல்லவோ இக்கனியை உண்டு நெடுங்காலம் வாழ வேண்டும்? என வினவுகிறார், அதற்கு மன்னன் அதியமான் “ஒளவை பிராட்டியாரே என்னைப் போன்ற ஒரு மன்னன் நீண்ட காலம் வாழ்வதைக் காட்டிலும், உம்மைப் போன்றதொரு தமிழ்ப் புலவர் நெடுங்காலம் வாழ்ந்து தமிழுக்கும் சைவத்துக்கும் தொண்டு செய்வதே சாலச் சிறந்தது” என விளக்கினான். அக்கனியை உண்ட ஒளவை நெடுங்காலம் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது, ஒளவையாரோடு இன்றளவும் மாவீரனும், சிறந்த தமிழ் நெஞ்சனுமாகிய அரசன் அதியமான் நெடுமான் அஞ்சியின் புகழும் வாழ்கிறது.
அது மட்டுமன்றி ஒளவையார் விநாயகரின் அருளால் “விநாயர் அகவல்” என்ற ஞானப் பாடலைப் பாடிய ஒரு சித்தராவார். இப்படியான காரணங்களால் இவர் பல தலைமுறைகள் உயிருடன் இருந்திருக்கிறார்.
பல சித்தர்கள் இவ்வுலகில் பல யுகங்கள் வாழ்ந்து இப்புவியிலுள்ள மக்களுக்கு ஆன்மீகத் தொண்டுகள் ஆற்றியிருக்கிறார்கள். உதாரணமாக திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்து திருமந்திரத்தைக் தந்திருக்கிறார். அகத்திய முனிவர் பல யுகங்கள் வாழ்ந்து அகத்தியம் எனும் ஞான நூலைத் தந்திருக்கிறார். அவ்வாறே ஒளவையாரும் பல காலம் இப்புவியில் சஞ்சரித்து பல ஞான நூல்களைத் தந்திருக்கின்றார். ஆன்மீக வாதிகளால் இவ்வுண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
பல ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பல புலவர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் ஒளவையார் என்ற பெயரில் இரண்டு அல்லது மூன்று பெண் புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.
இவர் சிறந்த முருக பக்தராகவும் இருந்து அரும்பெரும் தோத்திரங்கள் இயற்றியுள்ளார். இவரது பக்தியின் மகிமையினால் முருகப் பெருமான் பலமுறை இவர் முன் தோன்றி இவரது பக்தியையும் தமிழறிவையும் சோதித்து உலகறியைச் செய்துள்ளார்.
திருக்குறளை அரங்கேற்றியமை
திரு வள்ளுவர் இயற்றிய திருக்குறளானது ஒவ்வொரு பாடலும் இரு வரிகளைக் கொண்டதனால், அது குறளாக அதாவது முற்றுப் பெறாமல் இருப்பதாகவும், முழுமையான பாடலாக ஏறுக்கொள்ள முடியாதெனவும் அன்று அரசாண்ட பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் அரங்கேற்ற மறுத்தது. இதனை அறிந்த ஒளவையார் தமிழ்ச் சங்கத்திடம் சென்று அப்பாடல்கள் உலக மக்களுக்கு தேவையான சிறந்த கருத்துக்களைக் கொண்டது எனவும், அரங்கேற்றப் படவேண்டும் எனவும் வாதாடினார். இறுதியில் அப்பாடல்கள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப் படுபவையாக இருந்தால் அரங்கேற்றுகிறோம் என தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூற அருகில் உள்ள பொற்தாமரை வாவியில் அத்தனை குறள்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளையும் இட்டார். அவ்வாறு இடப்பட்ட ஓலைச் சுவடிகள் தாமரை இலைகளில் வைக்கப்பட்டு மிதந்து வந்ததெனவும் அக்குறள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு முத்தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டு அன்று முதல் திருக்குறள் எனவும் அழைக்கப்பட்டது என்பது வரலாறு.
திருக்குறளின் பெருமையை ஒளவையார் பின்வருமாறு குறிப்பிடுகிறார்
“அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”
அணு என்பது மிகச் சிறிய துகள். அப்படிப்பட்ட பிளக்க முடியாத, துளைக்க முடியாத அணுவையும் துளைத்து அதனுள் ஏழுகடலைப் புகுத்துவது போன்ற அரிய, பெரிய செயலை அதாவது இரு வரிகளில் மிகப் பெரிய தத்துவங்களைப் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவனார். அதாவது ஒவ்வொரு குறளிலும், அரிய-பெரிய, ஆழ்ந்த-உயர்ந்த, பரந்த-விரிந்த கருத்துகள் உள்ளன என்பது இதன் பொருளாகும்.
ஒளவையார் உலக மக்களுக்காக பல பாடல்களை பாடியுள்ளார். இவர் சிறுவர்களுக்காக பாடிய பாடல்களே ஆத்திசூடி கொன்றை வேந்தன், நல்வழி மற்றும் மூதுரை ஆகும். இவர் இயற்றிய நூல்கள் இலகுவில் எவராலும் புரிந்து கொள்ளக்கூடியவை.
மானிடம் எப்படி வாழவேண்டும் என்றும், எப்படி வாழக்கூடாது என்றும் பாமரன் முதல் பகுத்தறிவாளி வரை பின்பற்றும் வாழ்க்கை நெறிமுறைகளை எல்லோரும் மிகவும் எளிய முறையில் அறிந்து விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் செய்யுள் வடிவில் பல அறிவுரைகள் கூறியுள்ளார்
இவர் மிகவும் தெய்வபக்தி மிக்கவர். விநாயகக் கடவுளைத் துதிப்பதற்காக அருளிய அருள்மலையான் தோத்திரம், விநாயகர் அகவல் போன்ற தோத்திரங்கள் தினமும் படிக்கப்பட வேண்டியவை.
இவர் காலத்தில் தமிழ் இலக்கியம் உயர் நிலையை எய்தியது என்பர். கீழக்கண்டவாறு சரித்திர ஆசிரியர்களால் ஒளவையின் நூல்கள் பகுத்துக் கூறப்படுகின்றன.
இவரால் 59 செய்யுள்கள் பாடப்பட்டுள்ளன, அவை குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு போன்ற நூல்களில் காணப்படுகின்றன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33 எனவும். ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள் என பகுத்துக் கூறப்படுகின்றன.
அவையாவன
- ஆத்திசூடி
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- மூதுரை
- ஞானக்குறள் (ஔவைகுறள்)
- விநாயகர் அகவல்
- நாலு கோடிப் பாடல்கள்
நீதிநூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்), சமயநூல்கள் (ஞானக்குறள் (ஔவைகுறள்), விநாயகர்அகவல்)
நாலு கோடிப் பாடல்கள்.
சிற்றிலக்கியம் (பந்தன்அந்தாதி)
இவர் பாடிய அசதிக்கோவை, பந்தனந்தாதி, போன்ற நூல்கள் காலத்தால் அழிந்து நமது கைக்கு எட்டாமல் போய்விட்டது.
— வரலாறு முற்றும் —
ஒளவையாரின் பாடல்கள் விளக்கங்களுடன் பின்வரும் பகுதிகளாக இணைத்துள்ளோம்
- ஒளவையார் வரலாறு
- ஒளவையார் நூறு கோடிப் பாடல்கள் – பகுதி 1
- ஒளவையார் ஆத்திசூடி – பகுதி 2
- ஒளவையார் கொன்றை வேந்தன் – பகுதி 3
- ஒளவையார் நல்வழி – பகுதி 4
- ஒளவையார் மூதுரை – பகுதி 5
- ஒளவையார் ஞானக்குறள் – பகுதி 6
- ஒளவையார் விநாயகர் அகவல் – பகுதி 7
கு சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —