ஒளவையார் நாலு கோடிப் பாடல்கள் – பகுதி 1
ஔவையார் விரதம், செவ்வாய் பிள்ளையார் விரதம்.
ஔவையார் வழிபாடு அல்லது செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்பது, தமிழ்ப் பெண்களால் மட்டுமே கடைப்பிடிக்கப்படும் ஒரு இந்து சமய வழிபாடாகும். இது ஆண்கள் இல்லாமல் பெண்களால் மட்டுமே இரவு வேளையில் நடத்தப்படும் ஒளவையார் வழிபாடாகும்.
இந்த வழிபாட்டு முறை செவ்வாய் பிள்ளையார் வழிபாடு என்றும், பாட்டி வழிபாடு என்றும் சில இடங்களில் அழைக்கப்படுகின்றது.
இந்த வழிபாட்டு முறை பொதுவாக தை, மாசி, ஆடி மாதங்களில், தொடர்ந்து மூன்று செவ்வாய்க் கிழமைகளில் கடைப்பிடிக்கப் படுகிறது.
வயதான சுமங்கலிப் பெண்ணின் தலைமையில், நள்ளிரவில் ஒரு வீட்டில் இந்த வழிபாடு நடக்கும். நிறைகுடம் வைத்து அதனை ஒளவையாராகப் பாவித்து அரிசி மாவில் உப்பில்லாமல் பிசைந்து கொழுக்கட்டை செய்து, வேப்பிலை, புளியம் இலை, புங்க இலைகளைப் பரப்பி அதில் கொழுக்கட்டையைப் படைத்து விநாயகர் வழிபாடு செய்வர். இவ்வழிபாட்டுக்குத் தலைமையேற்ற வயதான சுமங்கலிப் பெண், ஒளவையாரின் பிள்ளையார் வழிபாட்டு கதையை அனைவருக்கும் எடுத்துச் சொல்வார்.
இவ்வாறு பூசை செய்து மூன்று செவ்வாய்க் கிழமைகள் வழிபட்டு வர அவர்கள் துன்பங்கள் நீங்கி வாழ்வு வளம்பெறும்.
சுட்ட பழம் கொடுத்து முருகன் காட்சி கொடுத்தமை
முருகப் பெருமான் ஒருமுறை மாடு மேய்க்கும் சிறுவனாக ஒரு நாவல் மரத்தில் இருந்து அவ்வழியால்ச் சென்ற ஒளவையாரை அழைத்து உனக்கு நாவல்ப் பழம் வேண்டுமா என்று கேட்டான். ஒளவையாரும் விரும்பி ஆம் பழம் வேண்டும் என்று கேட்க உனக்குச் சுட்டபழம் வேண்டுமா அல்லது சுடாதபழம் வேண்டுமா என்று சிறுவன் கேட்டான். ஒளவை வியப்புடன் அதென்ன சுட்டபழம், சுடாதபழம் என்று ஆவலுடன் தனது அறியாமையை சிருவனுக்குக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற நோக்கத்துடனும் சரி எனக்குச் சுட்டபழம் போடு என்று கூறினார். உடனே சிறுவன் மிகவும் கனிந்த பழங்களைப் பறித்து கீழே மணல் மீது போட, ஒளவையாரும் அவற்றை எடுத்து அப்பழங்களில் ஒட்டியிருந்த மணல் போகும்படி வாயால் ஊதினார். அச் செயலைப் பார்த்த அச் சிறுவன் என்ன பாட்டி பழங்கள் சுடுகின்றனவா? என்று கிண்டலடித்தான். சுட்ட பழம் என்று அச் சிறுவன் கூறியதன் அர்த்தத்தினைப் புரிந்து கொண்ட. ஒளவையார் ஒரு சிறுவன் ஒரு தமிழ்க் கருத்தால் தன்னை ஏமாற்றி விட்டான் என்று வெட்கமடைந்து பின்வருமாறு பாடினார்.
“கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி
சிறுகதலித் தண்டுக்கு நாணும் – பெருங்கானில்
காரெருமை மேய்க்கின்ற காளைக்கு நான் தோற்றது
ஈரிரவும் தூங்காது என் கண்”
அதாவது பெரிய பெரிய கருங்காலி மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிய உறுதியான இரும்புக் கோடாலியால், இளங் கதலித் தண்டை வெட்ட முடியாது போகும். கதலி என்பது வாழையின் ஒரு வகை. அதாவது வாளைத் தண்டு நாராக இருப்பதால் கோடரியால் வெட்ட முடியாது இருக்கும். அதுபோல பெரும் புலவனான நான் இந்தப் பெருங்காட்டில் மாடு மேய்க்கின்ற இந்தச் சிறுவனிடத்தில் தோற்றதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு உறக்கமே வாராதே என்று மனம் வாடினார் ஔவையார். உடனே அச்சிறுவன் முருகனாகத் தோன்றி ஒளவையாருக்குக் காட்சி கொடுத்தான் எனவும் அவரின் பெருமையை ஊர் அறிய வைத்தான் எனவும் கதைகள் உள்ளன.
முருகனை வணங்கிய ஒளவையாரின் மனதிலிருந்த புலமைக் கர்வம் அகன்றது. நெஞ்சில் அமைதி குடி கொண்டது. அப்போது ஒளவையாரைப் பார்த்து முருகன், “ஒளவையே உமது அமுதத் தமிழைக் கேட்க்கவும் சில ஐயங்களுக்குத் தெளிவு பெறவுமே நான் வந்தேன். எனது ஐயங்களைத் தங்கள் தமிழ்ப் புலமையினால்ப் போக்குங்கள்” என்றான்.
“முருகா! நீ அறியாதது எதுவும் உண்டா? நீ குருவாக இருந்து உன் தந்தைக்கே பிரணவ மந்திரத்தின் பொருளை விளங்கியவன் அப்பா! உனது ஐயத்தைப் போக்கும் பெருமை என் தமிழுக்குக் கிடைக்கட்டும்” என்றார் ஒளவையார்.
அப்போது முருகன் உலகில் அரியது, பெரியது, இனியது, கொடியது எவை என்று கேட்டான். அதற்கு ஒளவையார் விடையாக பின்வரும் பாடல்களைப் பாடியுள்ளார்.
அரியது
“அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே”
விளக்கம்: வடிவேலவனே இவ்வுலகில் அரியது எது என்று கேட்பாயாகின், இந்த உலகில் மிகவும் அரியது மானிடராகப் பிறப்பது தான். மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு, பெண் முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும், அதாவது ஆணாகப் பிறந்தாலும் அறிவும், கல்வியும் விரும்பிக் கற்பவனாக ஆதல் அரியது. அறிவும், கல்வியும் பெற்றிருந்தாலும் பிறருக்குக் கொடுக்கும் தானமும் தவமும் செய்பவராக இருத்தல் அரியது. தானமும், தவமும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு வான்உலகப் பெருவாழ்வு அதாவது முக்தி கிடைக்கும்.
பெரியது
“பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”.
விளக்கம்: இந்த உலகில் மிகப் பெரியது எது என்று கேட்பாயாகின் என் முருகக் கடவுளே, இந்த உலகம்தான் பெரியது. ஆனால் இந்த உலகமோ பிரம்மனால் படைக்கப்பட்டது. எனவே பிரம்மன்தான் பெரியவன் என்றால், பிரம்மனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) இருந்து உதித்தவன். எனவே திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் கையிலுள்ள கமண்டலத்தில் அடங்கியுள்ளது. எனவே, கமண்டலம் தான் பெரியது என்றால், கமண்டலமோ இந்தப் பூமியில் உள்ள சிறிதளவு மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேடன் என்னும் பாம்பு தனது தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது கை விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள். எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது ஆகும்
இனியது
“இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுள் ளாரைக்
கனவிலும் நனவிலும் காண்பது தானே”
விளக்கம்: இந்த உலகில் மிகவும் இனியது எது என்று கேட்பாயாகின் என் முருகக் கடவுளே, இந்த உலகில் மிகவும் இனிமையானது, தனிமையில் இருப்பதுதான். அதைவிட இனிமையானது இறைவனை வணங்குவது. இறைவனை வணங்குவதை விட அறிவு உடைய மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது இனிமையானது. அதைவிட இனிமையானது கனவிலும் நனவிலும் அறிவு உடையவர்களை எண்ணிக் கொண்டு இருப்பது ஆகும்.
கொடியது
“கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை
அதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்
அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே”.
விளக்கம்: நெடிய அதாவது நீண்ட வேலினைக் கையிலேந்தியுள்ள வேலவனே, முருகப் பெருமானே உலகத்தில் கொடியது எதுவென என்னிடம் வந்து கேட்பாயாகின் நான் கூறுவேன் ஏழ்மையே அதாவது வறுமையே மிகவும் கொடியதாகும். அதனிலும் இளமைப் பருவத்தில் நிலவும் வறுமை மிகவும் கொடியது. அதனிலும் தீர்க்கமுடியாத நோயினால் பீடிக்கப்படுவது மிகமிகக் கொடியது. அதனிலும் கொடியது “அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்” என்பது அன்பில்லாத அதாவது அன்பு பாசம் இல்லாத பெண்களுடன் வாழ்வது. இங்கு பெண் என்பது தாய், மனைவி அல்லது நாம் சேர்ந்து வாழும் பெண்கள் எனப் பொருள்படும். இறுதியாக “அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே” என்பது அப்படிப்பட்ட அன்பு, பாசம் இல்லாத பெண்களிடம் இருந்து உணவு வாங்கி எமது வயிற்றுப் பசியினைப் போக்குவது என்பது மிகமிகக் கொடுமையானது என கூறுகிறார் அவ்வையார்.
ஔவையார் பாடிய நான்கு கோடி பாடல்கள்
ஒருமுறை சோழ மன்னன் ஒருவன் தனது அரசவைப் புலவர்களை அழைத்து, “நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்”, என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே வந்த ஒளவையார் புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடிக் கொடுக்கிறேன். மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள், என்று கூறிவிட்டு நாலு வரிகொண்ட ஒரே ஒரு பாடலை மட்டும் பாடிக் கொடுத்தார்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
என்பதே அப்பாடல்.
இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
1. “மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்”
விளக்கம்: நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது
2. “உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்”
விளக்கம்: இன்முகத்துடன் உபசரிக்காதவர் வீட்டில் விருந்து உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
3. “கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்”
விளக்கம்: கோடி பொன்னைக் கொடுத்தாவது சொந்த பந்தங்களுடன் எப்போதும் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
4. “கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்”.
விளக்கம்: பல கோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் சொன்ன சொல் தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.
இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார், இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
உன்னை மதிக்காதவர் வீட்டு முற்றம் மிதிக்காதே, அவர்கள் வீட்டுக்குச் செல்லாதே! இன்முகத்துடன் உபசரிக்காதவர் வீட்டில் விருந்து உண்ணாதே! என்பவை எதிர்மறை ஆகும்.
சொந்த பந்தங்களுடன் எப்போதும் சேர்ந்து வாழ்ந்துகொள்! எந்தச் சந்தர்ப்பத்திலும் சொன்ன சொல் தவறாமல் வாழ்ந்துகொள்! என்பவை உடன்பாடு ஆகும்.
— பகுதி 1 முற்றும் —
ஒளவையாரின் பாடல்கள் விளக்கங்களுடன் பின்வரும் பகுதிகளாக இணைத்துள்ளோம்
- ஒளவையார் வரலாறு
- ஒளவையார் நாலு கோடிப் பாடல்கள் – பகுதி 1
- ஒளவையார் ஆத்திசூடி – பகுதி 2
- ஒளவையார் கொன்றை வேந்தன் – பகுதி 3
- ஒளவையார் நல்வழி – பகுதி 4
- ஒளவையார் மூதுரை – பகுதி 5
- ஒளவையார் ஞானக்குறள் – பகுதி 6
- ஒளவையார் விநாயகர் அகவல் – பகுதி 7
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —