ஒளவையார் மூதுரை – பகுதி 5

0 0
Read Time:26 Minute, 23 Second

ஒளவையார் அருளிச்செய்த மூதுரை.

மூதுரை என்பது மூத்தோர் மூதாதையர்களது அறிவுரை எனப்படும். ஔவையார் இயற்றிய ஒரு நீதி நூல். வாழ்கைக்குத் தேவையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. பாடல்களைக் கொண்டுள்ளது.

கடவுள் வாழ்த்து

வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனிநுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு

விளக்கம்: தும்பிக்கையுள்ள விநாயகப் பெருமானது திருவடிகளைத் தினமும் பூச்சூடி வணங்கி வருபவர்களுக்கு சிறந்த நாவன்மை, நல்வாழ்வு திருமகள் கடாட்சம் உடல் நலம் ஆகியவை உண்டாகும்

வெண்பாக்கள்

வெண்பா 1
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல்? எனவேண்டாம் – நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.

விளக்கம்: ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு பிரதிபலனும், நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. நாம் ஊற்றும் நீரை வேர் மூலம் உண்டாலும், தென்னை மரம் நன்கு வளர்ந்து அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும். அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

வெண்பா 2
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.

விளக்கம்: நல்லவர்களுக்கு செய்யும் உதவியானது கல்லின் மேல் செதுக்கிய எழுத்துப்போல அவர்களது மனதில் என்றும் நிலைத்து நிற்கும். ஆனால் மூடர்களுக்குச் செய்யும் உதவிகளானது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று அவர்களால் உடனேயே மறக்கப்பட்டுப் பயனற்றுப் போகும்.

வெண்பா 3
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவில் இனியவும் – இன்னாத
நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

விளக்கம்: இனிமையான இளமைப் பருவத்தில் வறுமை வாட்டுவது துன்பத்தைக் கொடுக்கும். அதுபோல துன்பந்தரும் முதுமைப் பருவத்தில்க் கிடைக்கும் செல்வம் எவ்விதமான இன்பத்தையும் கொடுக்காது. அது பருவமில்லாத (அணிய முடியாத) காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

வெண்பா 4
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

விளக்கம்: நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள் நண்பர்களாக மாட்டார்கள். எம் நிலை தாழ்ந்தாலும் நற்பண்புள்ளோர் நண்பர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பானது எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப் போன்றது அவர்கள் நட்பு.

வெண்பா 5
அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா
.

விளக்கம்: நன்கு வளர்ந்த நீண்ட மரங்களும் பருவம் வரும்போது மட்டுமே பூத்துக் காய்க்கும். அது போல எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் காலம் நேரம் வரும்போது மட்டுமே அவை கைகூடும்.

வெண்பா 6
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ? கல் தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும்பாரம் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்

விளக்கம்: கற்தூணானது ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றும்போது உடைந்து விழுந்து விடுமே அல்லாது, வளைந்து போகாது. அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரையும் விடத்த துணிந்தவர்கள் எதிரிகளைக் கண்டு ஒருபோதும் பணிந்துபோக மாட்டார்கள்.

வெண்பா 7
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம்

விளக்கம்: நீரில் மிதந்து வளரும் அல்லிக் கொடியானது நீர் மட்டம் உயரும்போது உயர்ந்து வற்றும்போது தாழ்ந்து நீர் மட்டத்திலேயே தங்கி இருப்பதுபோல, ஒருவரின் அறிவானது அவர் கற்ற கல்வியின் தரத்தில்த் தங்கி இருக்கும். ஒருவருக்கு கிடைக்கும் செல்வமானது அவர்கள் முற்பிறவியில்ச் செய்த நன்மை தீமைகளில்த் தங்கி இருக்கும். செல்வம் என்பது பல பொருள்படும். அதாவது பொன், பொருள், பிள்ளைச் செல்வம், கல்விச் செல்வம், தேக ஆரோக்கியம் போன்ற சிறப்புக்களைக் குறிக்கும். அதுபோல ஒருவரது குணமானது அவர் பிறந்து வளரும் குடும்பத்தின் தரத்தில்த் தங்கி இருக்கும்.

வெண்பா 8
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று

விளக்கம்: நற்பண்புகள் கொண்ட மனிதரை காண்பது, அவர்களுடன் பழகுவது, அவர் சொல் கேட்டு நடப்பது, அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் பகிர்ந்துகொள்ளவது, அவர்களோடு சேர்ந்து இருப்பது எல்லாமே நன்மை பயக்கும்.

வெண்பா 9
தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயார்சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் தீது.

விளக்கம்: தீய குணங்கள் கொண்ட மனிதரைக் காண்பது, அவர்களுடன் பழகுவது, அவர் சொல் கேட்டு நடப்பது, அவர்கள் குணங்களை மற்றவரிடத்தில் பகிர்ந்து கொள்வது, அவர்களோடு சேர்ந்து இருப்பது எல்லாமே எமக்குத் தீமையையே கொடுக்கும்.

வெண்பா 10
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

விளக்கம்: உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீரானது வாய்க்கால் வழியாக ஓடும்போது அவ்வழியே முளைத்துள்ள புல்லுக்கும் பயன்படும். அது போலவே இந்த உலகில் நல்லவர் ஒருவர் இருந்தால்ப் போதும் அந்த ஒருவருக்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும். அதாவது நல்ல மனிதர்களின் செயல் எல்லோருக்கும் பயன்படும்.

வெண்பா 11
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி
ஏற்றம் கருமம் செயல்

விளக்கம்: அரிசியின் மேலுள்ள கோது உமி என அழைக்கப்படும். உமியுடன் கூடிய அரிசி நெல் எனப்படும். முளைக்கும்போது முளை வருவது அரிசியில் இருந்து. அப்படி முளைப்பது அரிசியாக இருந்தாலும் உமியின் சிறுபகுதி அகன்றிருந்தாலும் அந்த நெல் முளைக்காது. அதுபோல எப்படிப்பட்ட வல்லமை பொருந்தியவர்களாக இருந்தாலும் தமது தகுதிக்கு மீறிச் செய்யும் செயல்கள் வெற்றி தரா.

வெண்பா 12
மடல்பெரிது தாழை; மகிழ்இனிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா – கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்

விளக்கம்: தாழம் பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம் தருவதில்லை. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல வாசனையைத் தருகிறது. பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூடப் பயன்படாது. ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கு நல்ல நீரைத் தருகிறது. அதுபோல உடலளவில்ச் சிறியவர்களாக தோன்றுபவர்களும் பலருக்கும் நன்மைதரக்கூடிய சிறந்த காரியங்களை செய்யக்கூடிய வல்லமை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே உருவத்தை வைத்து ஒருவரை எடை போடக் கூடாது.

வெண்பா 13
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் – சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

விளக்கம்
காட்டிலே நீண்டு வளர்ந்து கிளைகளோடும், கொம்புகளோடும் நிற்பவை அல்ல உண்மையான மரங்கள். சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை புரிந்துகொள்ள முடியாதவனுமே உண்மையான மரமாகும்.

வெண்பா 14
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாக பாவித்துத் – தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும்
கல்லாதான் கற்ற கவி

விளக்கம்: முறையாகக் கல்வி கற்காத ஒருவன் தான் அரை குறையாக அறிந்தவற்றை, தான் நன்றாக அறிந்தவன் போல் பிறருக்குக் கூறும் செயலானது, மயில் தன் அழகான தோகையை விரித்து ஆடுவதைக் கண்ட வான்கோழி தானும் தன் கூளைச் சிறகினை விரித்து மயில்போல தானும் நடனமாடுவதான கற்பனையில் ஆடும் செயலுக்கு ஒப்பானது.

வெண்பா 15
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்க ஆகாரம் ஆனாற்போல பாங்கு அறியா
புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்

விளக்கம்: நோயுற்ற நிலையிலிருக்கும் வேங்கை, புலி போன்ற மிருகங்களுக்கு வைத்தியம் செய்து பிழைக்க வைத்தாலும், அறிவற்ற அக்கொடிய மிருகங்கள் தமக்கு வைத்தியம் செய்தவரையும் கொன்று தின்னும் குணமுடையவை. அதுபோல கல்லின் மேல்ப் போடப்படும் மட்பாண்டம் உடைந்து நொறுங்குவது போல பண்பறியாத அற்ப அறிவினருக்கு செய்யும் உதவிகளானவை சில வேளைகளில் உதவி செய்பவர்களுக்கே தீமையைக் கொடுக்கும். (விடகாரி – மருத்துவன்)

வெண்பா 16
அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு.

விளக்கம்: நீரில் மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கானது சிறிய மீன்களை ஓடவிட்டு பெரிய மீன்கள் வரும்வரை சிலைபோல ஆடாது, அசையாது காத்திருந்து அவற்றைப் பிடித்து உண்ணும். அதுபோல அடக்கமாக அமைதியாக இருப்பவர்களை அறிவில்லாதவர்கள் அல்லது வலிமை குறைந்தவர்கள் என்று நினைத்து அவர்களுடன் மோதுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

வெண்பா 17
அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு

விளக்கம்: குளத்தில் நீர் வற்றும்போது அங்கிருந்து விலகிச் செல்லும் பறவைகள் போல, துன்பம் வந்தபோது விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர். நீர் வற்றிய போதும் அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் போன்ற கொடிகளைப் போல, எமக்குத் துன்பம் வரும்போதும் எம்முடனேயே இருந்து எமது துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே எமது உண்மையான உறவினராவர்.

வெண்பா 18
சீரியர் கெட்டாலும் சீரியரே, சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்.

விளக்கம்: தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன் சிதறலும் தங்கமே. ஆனால் மண்பானை உடைந்து போனால்? அது எதற்கும் பயன்படாது. அதனைப் போல சிறந்த பண்புடையவர்கள் வறுமை வந்த போதும் தமது உயரிய பண்புகளை ஒருபோதும் கைவிடமாட்டார். ஆனால் அறிவற்ற முட்டாள்கள் தமக்கு வறுமை துன்பம் வரும்போது இன்னும் இழிந்த செயல்களையே அதாவது களவு, சூது போன்ற செயல்களில் இறங்குவர்.

வெண்பா 19
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி – தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.

விளக்கம்: நாழியால் அதாவது அளவிடப் பயன்படும் கொத்தால் (பாத்திரத்தால்) ஒருபடி உமியையோ, தவிட்டையோ, தானியத்தையோ கூட்டிக் குறைத்து அளந்துவிடலாம். ஆனால், ஆழ்கடலில் கொண்டுபோய் நிறை நாழியை எவ்வளவுதான் ஆழ அமுக்கி அளந்தாலும், ஒரு நாழி அளவு தண்ணீர்தான் இருக்கும். அவ்வாறே, நிறைவான செல்வமும், பண்புடைய கணவனும் கிடைத்தாலும், தாம் தாம் செய்த வினையின் தன்மைக் கேற்றவாறே, வாழ்க்கை அமையும். ஊழ்வினையைப் பொறுத்தே பயனடைய முடியும். அதுபோல, கணவன், மனைவியாகிய நீங்கள் உங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருங்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள். விதிப்படியே வாழ்க்கை அமையும்.

வெண்பா 20
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு
.

விளக்கம்: பிறக்கும்போது சில நோய்கள் நம்முடனேயே பிறந்து தினம் தினம் நம்மைக் கொன்று விடுகிறது. அதுபோல உடன் பிறந்தோர் சிலர் எம்முடனேயே இருந்து எமக்குத் தினம் தினம் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எங்கோ தூரத்தில் மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள் மருந்தாகி எம் நோயைத் தீர்ப்பதுபோல சில அந்நியர்கள் நண்பர்கள் எமக்கு எப்போதும் நன்மை தருபவராக இருப்பார்கள்.

வெண்பா 21
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் – இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்.

விளக்கம்: நல்ல குணங்களுடன் மனைவி அமைந்து விட்டால் அந்த இல்லம் சிறப்பாக அமையும். ஆனால் அந்த இல்லாள் (மனைவி) நல்ல குணமற்றவளாக எதற்கும் சண்டையிடுபவளாக இருந்தால் அந்த இல்லம் புலியின் குகையில் வாழ்வது போலாகிவிடும்.

வெண்பா 22
எழுதியவா றேகாண் இரங்கு மடநெஞ்சே
கருதியவா றாமோ கருமம் – கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை.

விளக்கம்: மட நெஞ்சே, பெரும் திட்டத்தோடும் எதிர்பார்ப் போடும் கற்பக மரத்திடம் சென்றாலும், காஞ்சிரங்காயே கிடைத்ததென்றால் அது நம் முன் வினைப் பயனே. விதியில் எழுதியுள்ள படிதான் நமக்குக் கிடைக்குமே அல்லாது நாம் நினைப்ப தெல்லாம் நடந்து விடாது. விதிப்பலன் படியே வாழ்க்கை அமையும். (கற்பக மரம் – கேட்டதெல்லாம் கொடுக்கும் மரம். காஞ்சிரங்காய் – நஞ்சுக்காய்)

வெண்பா 23
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே – வில்பிடித்து
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்

விளக்கம்: சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட கல்லைப் போலப் பிரிந்து விடுவர். மீண்டும் இணைந்து கொள்ள மாட்டார். பெரியோர் பெரும் சினத்தால் பிரிந்தாலும், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதாகவே இருக்கும். விரைவில் மறைந்துவிடும்.

வெண்பா 24
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்
கற்றாரைக் கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

விளக்கம்: தாமரை பூத்திருக்கும் குளத்தில் அன்னப் பறவை விரும்பி வசிக்கும். அதுபோல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைகள் சேர்ந்து விரும்பி உண்பதுபோல கல்வி அறிவில்லாத மூடர்களுடன் மூடர்களே சேர்வர்.

வெண்பா 25
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.

விளக்கம்: தன்னிடம் விசமிருப்பதை அறிந்து நாகபாம்பு மறைந்து வாழும். விசமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும். அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர், ஆனால்க் குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து எல்லோருடனும் உறவாடுவர்.

வெண்பா 26
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு.

விளக்கம்: ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக் கற்றவனே படித்தவனே மேலானவன். ஏனெனில், அரசனுக்கு அவன் தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை. ஆனால் கற்றவனுக்கோ அவன் செல்லுமிடம் எல்லாம் சிறப்பு இருக்கும். எல்லோரும் மதிப்பர்.

வெண்பா 27
கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் – மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்

விளக்கம்: கற்றறிந்தவர் அறிவுரைகள் கற்காதவர்களுக்கு கசப்பாகவே இருக்கும். தீயவர்களுக்கு தர்மம் கசப்பாகவே தோன்றும். வாழையானது தான் ஈன்ற குலையால் அதாவது அது காயாகிக் கனியானவுடன் தானும் அழிந்துவிடும். அதுபோல இல்லற வாழ்வில் மனைவி கணவனுடன் ஒத்துப் போகவிட்டால் அவர்களது வாழ்வே அழிந்து போய்விடும்.

வெண்பா 28
சந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்
கந்தம் குறைபடா தாதலால் – தம்தம்
தனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கெட்டால்
மனம்சிறியர் ஆவரோ மற்று.

விளக்கம்: தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனக் கட்டை மணம் குறைவதில்லை. அதைப் போலவே தாராள குணம் படைத்த அரசர்களும் தன் செல்வம் குறைந்த காலத்திலும் அவர்களது சிறந்த மனம் ஒருபோதும் மாறாது.

வெண்பா 29
மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் – திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்

விளக்கம்: ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும், அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும் இறை அருள் ஒருவனுக்கு இருக்கும் வரையில் தான் அவனுடன் இருக்கும். இறை அருள் அகலும் போது இவையனைத்தும் அவனை விட்டுப் போய்விடும். எல்லாம் விதிப்பயனே.

வெண்பா 30
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்
.

விளக்கம்: தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும் மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு நினைப்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

— பகுதி 5 முற்றும் —

ஒளவையாரின் பாடல்கள் விளக்கங்களுடன் பின்வரும் பகுதிகளாக இணைத்துள்ளோம்

  • ஒளவையார் வரலாறு
  • ஒளவையார் நாலு கோடிப் பாடல்கள் – பகுதி 1
  • ஒளவையார் ஆத்திசூடி – பகுதி 2
  • ஒளவையார் கொன்றை வேந்தன் – பகுதி 3
  • ஒளவையார் நல்வழி – பகுதி 4
  • ஒளவையார் மூதுரை – பகுதி 5
  • ஒளவையார் ஞானக்குறள் – பகுதி 6
  • ஒளவையார் விநாயகர் அகவல் – பகுதி 7

கு சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %