கேள்வி பதில் பகுதி 6 – பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகள்

0 0
Read Time:19 Minute, 18 Second

கேள்வி: ஐயா எமது தாய் தந்தையரை நாம் எப்படிப் பேணவேண்டும்

குரு: உன்னை இந்த உலகத்துக்கு வர வைத்தவர்கள் உனது தாயாரும் தந்தையாரும். அவர்கள் இல்லாவிட்டால் நாம் இந்தப் பூமிக்கு வந்திருக்க முடியாது. அவர்களே இந்த வாழ்கையையை உனக்குக் கொடுத்தவர்கள். அவர்கள் மூலமாகவே நீ இந்த உலகத்துக்கு அடையாளப் படுத்தப்பட்டாய். அவர்களை மறக்க முடியுமோ. எவனொருவன் தன் தாய் தந்தையரை மதிக்க மாட்டானோ அவன் கடவுளையும் மதிக்க மாட்டான். எவனுடைய மனம் அவனது தாய் தந்தாயாரை தெய்வமாக நினைக்குதோ அவனுடைய மனம் இறைவனைச் சார்ந்திடும்.

பட்டினத்தார் ஒரு மிகப் பெரிய மகான். மகான்களுக்கு ஒருபோதும் துக்கம் வராது. இன்ப துன்பங்களைக் கடந்தவர்களே மகான்கள். ஆனால் அப்படிப்பட்ட மகான் பட்டினத்தார் அவர்கள் உலக நன்மைக்காக வருத்தப்பட்டார். வருத்தப்படுவது வேறு. துக்கப்படுவது வேறு. அதாவது இந்த மனிதர்கள் ஏன் ஒரு நல்ல வழியைப் பின்பற்றி நடந்து அந்த இறைவனை அறிய மாட்டேன் என்கிறார்கள். உலக சிற்றின்பங்களில் மூழ்கி தானும் துன்பப்பட்டு பிறரையும் துன்பப்படுத்துகிறார்கள் என்று வருந்துகிறார். ஆனால்த் துக்கப் படவில்லை.

அப்படிப்பட்ட பட்டினத்தார் தனது தாயின் இறப்பின்போது

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

என்று துக்கப்படுகிறார். தனது தாயின் உடலைத் தீமூட்டி எரிக்கும் வேளை வரும்போது பதறுகிறார். அப்படிப்பட்ட பெரிய மகானாலேயே தன் தாயின் பிரிவைப் பொறுக்க முடியால் அழுது புலம்புகிறார்.

அப்படியாக வருந்தி தாயின் பெருமையை பின்வரும் பாடல்களில் விளக்கியிருக்கிறார். எமக்கு உணர்த்தியிருக்கிறார். அதனை நாம் ஏன் புரிந்து கொள்கிறோம் இல்லை. தாய் தந்தையரை மதியுங்கள். வயதான காலத்தில் அவர்களை ஆதரியுங்கள். அவர்களுடன் பேசுங்கள் மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

எத்தனை வாழ்க்கைச் சுமை வந்தபோதும் ஒவ்வொரு பிள்ளையும் தம் தாய், தந்தையருக்கு செய்யும் கடமைகளை மறவாது நிறைவேற்றுங்கள். அவர்களைக் கண் கலங்காது பார்த்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்கள் கடமையே.

பட்டினத்தடிகள் தாயின் பெருமை பற்றி பாடிய பாடல்கள்.

பெரும் செல்வந்தரான பட்டினத்தடிகள் தனது சுகங்களைத் துறந்து துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில், அவருடைய அன்னையார் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்து, “தாயாரின் ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்” என்று கூறியபடி சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, “ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று” என்று பாடத் தொடங்கி, தம் தவ வலிமையினால் தன் தாயாரின் உடலுக்குத் தீமூட்டி தம் தாய்க்குரிய இறுதிச் சடங்கை நிறைவேற்றினார்.

பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் தாயின் பெருமையைக் கூறுபனவாக அமைந்துள்ளன.

பாடல் 01

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

விளக்கம்: பத்து மாதங்கள் வயிற்றில்ச் சுமந்து, தன் உடல் எல்லாம் வருந்திப் பெற்றெடுத்து, குழந்தையாக, பச்சை உடம்பினனாய் நான் இருந்தபோது, இரக்கத்தோடு தன் கைகளில்த் தாங்கி, அணைத்து அமுதம்போன்ற தாய்ப் பாலூட்டியவளை இனி எந்தப் பிறவியில் காணப்போகிறேன் தாயே?

பாடல் 02:

முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?

விளக்கம்: பிள்ளை வரம் வேண்டித் தவமிருந்து கருவுற்று, முன்னூறு நாட்கள் தன் வயிற்றில் என்னைச் சுமந்தாள். நான் சுகமாக ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்று பகல் இரவாக சிவனை வழிபட்டாள். வயிற்றில் நான் வளர, வளர என் சுமையைத் தாங்கினாள். அந்தத் தாயின் உடம்பிற்கா நான் தீ மூட்டப் போகிறேன் தாயே?

பாடல் 03:

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?

விளக்கம்: கூடையிலும், தொட்டிலிலும், மார் மேலும், தோள் மேலும், கட்டிலிலும், கிடத்தி எனக்கு அன்பு காட்டினாள். தன் சேலை முந்தானையில் மூடி வைத்து என்னைக் காப்பாற்றினாள். சீராட்டினாள். அந்தத் தாயின் உடம்பிற்கா நான் தீ மூட்டப் போகிறேன் தாயே?

பாடல் 04:

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்?

விளக்கம்: தான் நொந்து சுமந்து என்னைப் பெற்றெடுத்தாள். எனக்கு நோகாதவாறு தன் கைகளில் என்னைத் தாங்கி, தாய்ப் பாலூட்டி வளர்த்தாள். பகல் இரவாய் தன் கைகளிலேயே என்னைத் தாங்கித் திரிந்து என்னை வளர்த்தாள். அந்தத் தாயின் உடம்பிற்கா நான் தீ மூட்டப் போகிறேன் தாயே?

பாடல் 05:

அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?

விளக்கம்: தேனே, அமிர்தமே, செல்வத் திரவியமே, பூமானே என்றெல்லாம் என்னை அழைத்த என் தாயின் வாய்க்கு ருசியான உணவும், பால் பழமும் உண்ணக் கொடுத்து மகிழாமல், இறுதியாக வாய்க்கு அரிசி கொடுக்கும் நிலை வந்துள்ளதே என் தாயே நான் என் செய்வேன்?

பாடல் 06:

அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு?

விளக்கம்: என் முகம் மீது முகம் வைத்து என்னை முத்தமிட்டு, என் மகனே என்று அழைத்த என் தாயின் வாய்க்கு இறுதியாக வாய் அரிசி போடும் நிலை வந்துள்ளதே. என் தாயின் தலைமேல் கொள்ளி வைக்கப் போகிறேனே. என் தாயே நான் என் செய்வேன்?

பாடல் 07:

முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

விளக்கம்: புருவ மத்தியில் தீப சுடர் தோன்றும்போது, அதாவது சிவனின் தீ. சிவன் என்பது ஆன்மா. ஆன்மா என்பது குண்டலினி. அந்தக் குண்டலித் தீ மேலெழுந்து புருவ மத்திக்கு (முப்புரத்திற்கு) வரும்போது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களையும் எரித்து முத்தி கிடைக்கும். பின்னை இட்ட தீ அதாவது ஆஞ்சநேயரின் பின்புறத்தில் அதன் வாலில் இடப்பட்ட தீயானது தென் இலங்கையை ராவணனின் கர்வத்தை எரித்தது. அன்னையின் அடிவயிற்றினில்த் தோன்றிய நாம் நமது அன்னை அடிவயிறு எரியாமல், மனம் நோகாமல், சாபம் இடாமல் நாம் நடந்து கொள்ளவேண்டும். யானும் இட்ட தீ எனது அன்னையின் உடலுக்கு யான் தீ வைக்கிறேன் அதாவது யோகத் தீயில் திளைத்திருக்கும் ஞானியான பட்டினத்தார் எண்ணும் போது அந்தத் தாயின் உடல் எரிய ஆரம்பிக்கிறது.

பாடல் 08:

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை

விளக்கம்: நான் எவ்விதமான குற்றங்களும் புரியாமல் தடுத்து, என்னைக் காப்பாற்றி, என்னைக் கண்டித்து வளர்த்த என் தாயின் கைகள், தாயின் உடல் தீயில் எரிகின்றதே என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே. என்னால் என் தாயைக் காப்பாற்ற முடியவில்லையே. என் தாயே நான் என் செய்வேன்.

பாடல் 09:

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?

விளக்கம்: தீயில் வெந்து போனாளே என் தாய். மீண்டும் பிறப்பில்லாமல் சிவனே உன்னுடன் இணைந்து கொண்டாளோ? தினமும், எந்நேரமும் உனையே எண்ணித் தவமிருந்து என்னைப் பெற்ற என் தாய் எங்கு சென்றாள் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்வேன்?

பாடல் 10:

வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

விளக்கம்: நேற்றுவரை உயிருடன் இருந்தாள். சுசுறுப்பாக அங்கும் இங்கும் உலாவி எம்முடன் இருந்தாள். இன்று தீயில் வெந்து சாம்பலானாள். அவளது சாம்பலுக்கு பால் தெளித்து இறுதி மரியாதை செய்ய எல்லோரும் வாருங்கள். யாரும் துன்பப்படாதீர்கள். துயரப்படாதீர்கள். எல்லாம் அந்த சிவன் செயலே. சிவமயமே.

கேள்வி: பூரகம் கும்பகம் ரேசகம் என்றால் என்ன? விளக்க முடியுமா ஐயா?

குரு: யோகத்தின்போது மூச்சை உள்ளே இழுத்தல் பூரகம் எனப்படும். இழுத்த மூச்சை உள்ளே அடக்குதல் கும்பகம் எனப்படும். அதனை மெதுவாக வெளியே விடுவது ரேசகம் எனப்படும்.

அதிலும் மூச்சை உள்ளே இழுக்கும்போது 16 மாத்திரை அளவு உள்ளே இழுத்து, 64 மாத்திரை அளவு உள்ளே அடக்கி, 32 மாத்திரை அளவு வெளியே விடவேண்டும். அதாவது மாத்திரை எனப்படுவது எண்ணிக்கை எனப்படும். அதாவது நீ சாதாரணமாக ஓன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் கொண்டு 16 வரும்வரை உள்ளே இழுத்து, மீண்டும் ஓன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக்கொண்டு 64 வரும்வரை உள்ளே அடக்கி, மீண்டும் ஓன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் கொண்டு 32 வரும்வரை மூச்சை வெளியே விடவேண்டும்.

இதன் பயன் என்னவென்றால் மூச்சு நாளடைவில் மடை மாறும். அதாவது சுவாசப்பைக்குச் செல்லும் மூச்சு மடை மாறி முதுகுத் தண்டு வழியாகச் சென்று மூலாதாரத்தினை அடையும். அதனால் உன் மனது உலக நாட்டங்களில் இருந்து விடுபட்டு தெய்வ நாட்டத்தில் விருப்பம் கொள்ளும்.

ஒரு குருவின் துணையுடனேயே இப்பயிற்சியைச் செய்ய வேண்டும்.

கேள்வி: ஐயா நாம் கடவுளை வணங்கும்போது வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், தேங்காய், பூ மற்றும் கற்பூரம் ஏற்றி வழிபடுவதன் அடிப்படைக் காரணம் என்ன என்று விளக்க முடியுமா?

குரு: இந்த உலகம் பஞ்ச பூதங்களினால் ஆனது. அதுபோல நமது உடலும் பஞ்ச பூதங்களினால் ஆனது. அதற்கு அடையாளமாகவே நாம் அவற்றை இறைவன் சந்நிதியில் படைத்து வணங்குகிறோம்.

அதாவது வெற்றிலை, பூ என்பன காற்றின் அடையாளம். பாக்கு நீரின் அடையாளம். கர்ப்பூரம் நெருப்பின் அடையாளம். பஞ்ச பூதங்களில் நீர், நெருப்பு, காற்று ஆகியவை மிக முக்கியமானவை அதனாலேயே இவற்றை அடையாளமாக வைத்து வழிபடுகிறோம்.

உலகத்தில் உள்ள பழங்களில் தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் உண்டு. அது ஆன்மீக ரீதியில் இடகலை, பிங்கலை, சுழுமுனை நாடிகளைக் குறிக்கிறது. தேங்காய்க்கு மட்டை, ஓடு அதனுள் தேங்காய் உண்டு. இந்த மூன்றும் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களைக் குறிக்கிறது. இந்த மூன்றும் அழியும்போது உள்ளே உள்ள நீர் அந்த அமுதம் கிடைக்கிறது என்று அர்த்தமாகும். அதாவது உங்கள் மனம் அந்தத் தேங்காய் போல வெள்ளையானால் மும் மலத்தையும் நீக்கினால் உங்களுக்கு அமுதம் கிடைக்கும் அதாவது முத்தி கிடைக்கும் என்று அர்த்தமாகும்.

கேள்வி: ஐயா கோவிலில் பூசை நடக்கும்போது மணி அடிப்பதன் அர்த்தம் என்ன?

குரு: மணி ஓசை கேட்க்கும்போது உனக்கு வேறு எந்தச் சத்தமும் கேட்க்காது. அதனால் உனது கவனம் சிதறாது கடவுளையே அந்தத் தீபத்தினையே நீ பார்ப்பாய். அடுத்ததாக அந்த மணியோசையின் அதிர்வு உனது நரம்புகளில் நல்ல அதிர்வினை ஏற்படுத்தும். அது உனது மனதுக்கு மகிழ்வைக் கொடுக்கும். அதனாலதான் மணி அடிப்பார்கள்.

நல்ல காரியங்கள் நடக்கும்போது மேளம், கெட்டிமேளம் அடிப்பது அப்படியான காரணத்துக்காகத்தான். உதாரணமாக தாலிகட்டும் நேரத்தில் கெட்டிமேளம் கொட்டுவார்கள். அந்த நேரத்தில் வேறு எந்த கெட்ட வார்த்தைகளோ, தேவையற்ற ஒலிகளோ காதுகளுக்குக் கேட்கக்கூடாது என்பதற்காகத்தான் அப்படி மேளம் அடிப்பார்கள். அது மட்டுமல்ல மங்கள ஓலி நரம்புகளையும் இதமாக்கி மனதுக்கு மகிழ்வைக் கொடுக்கும்.

கேள்வி: ஐயா விரதமிருந்து ஐயப்பன் கோவிலுக்குப் போகும் அடியவர்களை கன்னிச்சாமி, சாமி மற்றும் மணிகண்ட சாமி என்று அழைப்பதன் அர்த்தம் என்ன?

அதாவது நீ முதல்த் தடவையாக விரதமிருந்து ஐயப்பனை வணங்கும்போது உன்னைக் கன்னிச் சாமி என்று அழைப்பார்கள். இப்பதான் நீ வழிபட ஆரம்பித்திருக்கிறாய் என்று அர்த்தமாகும். அப்புறம் உன்னச் சாமி என்று அழைப்பார்கள். அதாவது நீ விரதங்கள் இருந்து சாமியாக முன்னேறி இருக்கிறாய் என்று அர்த்தமாகும். அதிலிருந்து உனக்கு முன்னேற்றம் ஏற்பட்டு உனக்குள் ஓசை கேட்க்கும் காலம் வரும்போது அவர்களை மணிகண்டசாமி என்று அழைப்பார்கள். எவனொருவனுடைய உள்ளத்தில் ஓசை கேட்க ஆரம்பிக்கிறதோ அவனால்க் கடவுளை அறிய முடியும். ஓசை உனக்கு உள்ளே கேட்கவேண்டும் அதை விடுத்து வெளியில்க் கேக்கும் ஓசையால் காதுகளுக்கு இன்பமாக இருக்குமே தவிர நீ கடவுளை அறிய முடியாது.

கு சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %