சித்திராப் பௌர்ணமி (பூரணை)
சித்திரை மாதத்தில் முதலாவதாக வரும் பௌர்ணமி தினமே உலகெங்கிலும் வாழும் இந்துக்களால் மிகவும் புனிதமாகக் கொண்டாடப் படுகிறது. சித்திராப் பௌர்ணமிக்கு பல சிறப்புகள் உண்டு.
ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் சித்தர்கள், ஞானிகளை வணங்கி, அவர்களை நினைவு கூர்ந்து அவர்களது ஆசீர்வாதம் பெறும் நாளாகும். பகல் முழுவதும் விரதமிருந்து பூசை செய்து நடு நிசியில் சந்திரனை கண்டு தரிசித்து விரதத்தினை நிறைவு செய்வர்.
தமது தாயை இழந்தவர்கள் இத்தினத்தில் தாயை நினைத்து விரதம் அனுட்டித்து புனித நீர் நிலைகளில் நீராடி பிரார்த்தனை செய்து வழிபடும் நாளாகும்.
எமது தலைவிதியை நிர்ணயிக்கும், எமது பாவ புண்ணியக் கணக்குகளை எழுதிப் பேணும் யமதர்மராஜனின் கணக்குப் பிள்ளையாகிய சித்திரகுப்தர் அவதாரம் செய்த நாளாகும்.
சித்திரை மாதம், பௌர்ணமி நாளன்று காமதேனுவின் பிள்ளையாக சித்திரபுத்திரர் பிறந்தார். சித்திரபுத்திரன் ஒரு சிவபக்தனாக இருந்தார். இவரது வழிபாட்டில் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு உயிரினங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணியை வழங்கினார் என்று புராணம் கூறுகிறது. சித்திர குப்பித்தனின் பிறப்பினாலேயே சித்திராப் பௌணமி சிறப்புப் பெறுகிறது.
சித்திரம் என்றால் எண்ணம், செயல், பிரதி என பொருள்படும். குப்தம் என்றால் ரகசியம் என்று பொருள்படும். இவர் ஒவ்வொரு உயிரினத்தினையும் கண்காணித்து அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தினையும் அதாவது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களை அப்படியே சித்திரமாக அதாவது பொருள் மாறாத விதமாக பிரதி எடுத்து குறித்து வைத்துவிடுவார். இத் தொழில் சித்திரகுப்தம் என அழைக்கப்படுகிறது. “சித்திர குப்தம்” எனும் தொழில் செய்வதால் இவருக்கு “சித்திர குப்தன்” என்கிற திருநாமம் வந்தது என்கிறது புராணம்.
தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் அதாவது அது நன்மையோ அன்றி தீமையோ அது இரகசியமாக கண்காணிக்கப்பட்டு கணக்கில் வைக்கப்படுகிறது என்பது அர்த்தமாகும்.
சித்ரகுப்த என்பது மறைந்துள்ள படம் எனப்படும். இந்த பூமியில் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் நமக்கு மேலான சக்தி ஒன்று (நமக்கு தெரியாமலேயே நமது தோளில் சித்ரகுப்தர்களாக அமர்ந்து) இடைவிடாமல் கண்காணிக்கிறது. இந்த எண்ணத்தை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்வதே சித்ரா பவுர்ணமி பூஜையின் மானசீக பலன் ஆகும்.
சித்திரா பௌர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், மேற்கொண்டு பாவங்கள் செய்யாமல் இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது.
சித்திர புத்திரன்:
ஒருமுறை சிவபெருமான் பார்வதி தேவியை மகிழ்விக்க எண்ணி ஒரு சித்திரம் வரைந்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி அந்த சித்திரத்தை உயிரூட்ட சிவனிடம் வேண்டினார். அந்தச் சித்திரத்துக்கு சிவன் உயிரூட்ட சித்திர புத்திரன் தோன்றினார் என்பது ஒரு வரலாறு.
ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதிர்த்தார். அவருக்கு சிவன் இவ்வுலகின் ஒவ்வொருவருடைய பாவ புண்ணியங்களை கணக்கெடுக்கும் தொழிலை வழங்கினார் என்பதும் புராணக்கதை.
சித்திராப் பௌர்ணமி அன்று விரதமிருந்து சித்ரகுப்தனை வணங்கி நாம் செய்த தவறுகளை மன்னிக்க மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வாசனைப் பொருள் கலந்த சாதம் நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். மேலும், இந்த நாளில் உப்பு, பசும்பால், தயிர் இவைகளை தவிர்த்து நாம் விரதம் இருப்பதுடன் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து இறைவனின் பரிபூரண அருளைப் பெறுவோம்.
கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இது சித்திரைக் கூழ் அல்லது சித்திரைக் கஞ்சி என அழைக்கப்படும்.
வழிபாட்டின் பொழுது,
சித்ரகுப்தா, சித்திர குப்தா
சேவித்தேன் நான் சித்திரகுப்தா!
நானே செய்த பாவமனைத்தும்
நல்லவனே நீ கடுகளவாக்கு!
நானே செய்த புண்ணியமனைத்தும்
நல்லவனே நீ மலையளவாக்கு!
வானும், நிலவும் உள்ளவரைக்கும்
வாழ்க்கைப் பாதையை வளமாய் மாற்று!
உணவும், உடையும் உறைவிடம் அனைத்தும்
தினமும் வழங்கத் திருவருள் கூட்டு!
என்று பாடி வழிபட வேண்டும்.
சித்திரைக் கஞ்சி
பண்டைக்கால மக்களின் பிரதான உணவு கூழாகும். அந்தக் கூழ் கிடைக்காமல் பட்டினி சாவுகள்கூட நடை பெற்றிருக்கிறது. அதனாலேயே அக்காலத்தில் கோயிலில் வைத்து கூழ் ஊற்றினார்கள். நாகரிக வளர்ச்சியில் கூழ் என்பது மறக்கடிக்கப்பட்டு, அரிசி உணவான கஞ்சியாக மாறியது. அதன் அடிப்படையிலேயே சித்திராப் பௌர்ணமி அன்று அன்னதானமாக கோயில்களில் சித்திரைக் கஞ்சி காச்சி அனைவருக்கும் வழங்கப்படுகிறது.
சென்னை போளிவாக்கத்திலும் மலேசியா பேராக்கிலும் அமைந்துள்ள பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் சுவாமிகளின் பிரம்ம சூத்திர குழு ராஜயோகப் பாடசாலையில் சித்திராப் பௌர்ணமி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மேலதிக விபரம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய விபரம்.
போளிவாக்கம் – திருவள்ளுர் மாவட்டம்.
Tiruvallur, Polivakkam, Tamil Nadu 602001.
சீனிவாசன் ஐயா: (91) 7904189707
தியாகு ஐயா: (91) 8825454432
ஜீவானந்தம் ஐயா: (91) 8122279790
மலேசியா ஆச்சிரமம்
தியாகராஜன் ஐயா
Ayer Tawar, Perak Darul
60 16 503 1340 (WhatsApp)
— அன்பே சிவம் —