கடவுள் நேரில் வரமாட்டார்
ஒரு ஊரில் ஒரு சிவ பக்தர் இருந்தார். அவர் எப்போதும் கடவுள் நினைவுடனேயே வாழ்ந்து வந்தார். அப்படியான ஒரு நாளில் அவரது ஊரில் கடும் மழை பெய்து வெள்ளம் வரத் தொடங்கியது. அந்த சிவ பக்தரோ வழமைபோல தான் வழிபடும் வில்வமரத்து சிவனைத் துதித்தவாறு தன்னை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றும்படி வேண்டியவாறு சிவலிங்கத்தின் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.
அப்போது அவ்விடம் வந்த அவரது ஊர்க்காரர் ஒருவர், ஐயா ஊருக்குள் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது நீங்கள் இவ்விடத்தில் இருப்பது உயிருக்கு ஆபத்தைத் தரலாம் எனவே எம்முடன் வாருங்கள், மழை நின்று வெள்ளம் வற்றும்வரை பாதுகாப்பான இடத்துக்குப் போகலாம் என்று அழைத்தார். அதற்கு அந்த சிவ பக்தரோ நான் உங்களுடன் வரவில்லை அந்த சிவன் வந்து என்னைக் காப்பாற்றுவான் என்று கூறி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.
அவர்களும் சென்றுவிட்டார்கள். வெள்ளமோ சிவ பக்தரின் இடுப்பு அளவுக்கு வந்துவிட்டது. அப்போது அவ்வழியாக ஒரு சிலர் ஒரு சிறிய வள்ளத்தில் வந்து சிவ பக்தரே வெள்ளம் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. எனவே வள்ளத்தில் ஏறி எம்முடன் வந்தால் உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று அழைத்தார்கள்.
அதற்கு அந்த சிவ பக்தரோ நான் உங்களுடன் வரவில்லை என்னை அந்த சிவன் வந்து காப்பாற்றுவான் என்று கூறி அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.
வெள்ள மட்டமோ உயர்ந்து அவரது கழுத்து அளவுக்கு வந்துவிட்டது. அப்போது அவ்விடத்துக்கு ஒரு உலங்கு வானூர்தி வந்து இவரை அழைத்தார்கள். சிவபக்தரே ஊரில் உள்ள எல்லோரும் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று விட்டார்கள். நீங்கள் எம்முடன் வாருங்கள் இல்லையேல் தங்களது உயிருக்கு ஆபத்து என்று கூறி அவரை அழைத்தார்கள்.
அந்த சிவ பக்தரோ என்னை சிவன் வந்து காப்பாற்றுவான். நான் உங்களுடன் வரவில்லை என்று அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.
இறுதியில் வெள்ளம் அவரது தலைக்கு மேலால் பாயத் தொடங்கியது அந்த சிவ பக்தரும் இறந்து பரலோகம் போனார். அங்கு சிவனைக் கண்டு “சிவனே நான் உன் பக்தனாக இருக்கிறேன். நீ ஏன் ஏன்னை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றவில்லை” என்று வினவி அழத் தொடங்கினார்.
அதற்கு சிவன் அமைதியாக “பக்தனே நான் உன்னை மூன்று தடவைகள் காப்பாற்ற ஆள் அனுப்பினேன். ஆனால் நீதான் அங்கிருந்து வர மறுத்துவிட்டாயே” என்று அந்த சிவபக்தரின் தப்பைச் சுட்டிக் காட்டினார். அப்போதுதான் அந்த சிவ பக்தருக்கு தான் செய்த தவறு அதாவது தனக்கு அவ்வப்போது கிடைத்த உதவிகள் அந்த சந்தர்ப்பங்களைத் தான் தவற விட்டதை உணர்ந்து சிவனிடம் மன்னிப்புக் கோரினார்.
சாராம்சம்
கடவுள் எப்போதும் நேரிடையாக எம்மிடம் வரமாட்டார். எமக்கு அவரின் உதவிகள் தேவைப்படும்போது பிறர் மூலமாக சந்தர்ப்பங்கள் கொடுப்பார். நாம் தான் அதனை உணர்ந்து எமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
கு. சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
— அன்பே சிவம் —