யாழ்ப்பாணம்

0 0
Read Time:5 Minute, 57 Second

ஒரு தமிழ் அறிஞனால் ஒரு தமிழ் இசைக் கலைஞனால் ஒரு சிறந்த அரசனால் ஆளப்பட்டதால் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்ற தமிழ் பிரதேசம் ஆகும்.

கி மு 200 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் சோள நாட்டிலே பிறவியிலேயே கண் தெரியாதவராகிய வீரராகவன் (பாணன்) எனும் பெயருடைய ஒருவர் இருந்தார். இவர் தமிழில் கவிதைகள் இயற்றி பாடுவதில் மிகவும் சிறந்து விளங்குபவராக இருந்தார். இவர் பாடும்போது “யாழ்” எனும் இசைக்கருவியை மீட்டியபடியே பாடல்கள் பாடுவார். இதனால் இவரை “யாழ்ப்பாணன்” என்றே அனைவரும் அழைத்தனர். இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது.

அக்காலகட்டத்தில் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான ஏலேலசிங்கன் (அரசன் பெயர் வாலசிங்கன் எனவும் ஒரு ஆராய்ச்சி கூறுகிறது) எனும் அரசன் தமிழ் மீதுள்ள பற்றினால் தமிழ் அறிஞர்களுக்கு சிறப்பளித்து பரிசில்கள் வழங்குவதில் ஆர்வமுள்ளவனாக இருந்தான். இதனை அறிந்த பாணன் தானும் இலங்கை சென்று பாடல் பாடி அரசனிடம் இருந்து பரிசில்கள் பெறப் போவதாக மனைவியிடம் கூறினார். இவரது கூற்றை அவமதித்த இவரது மனைவி உனக்கு மன்னன் “யானையும் நாடும் பரிசளிப்பான் போய் வாங்கிக்கொள்” என ஏளனமாகக் கூறி இவரை அவமதித்தாள். மனைவி இவரை அவமானப் படுத்தியதால் விரக்தியுற்று இலங்கை மன்னனை ஒருமுறை பார்த்தே ஆகவேண்டும் எனும் எண்ணத்தில் மரக்கலத்தில் இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்றார். அனுராதபுரத்தில் இருந்து இலங்கையை ஆண்டுவந்த ஏலேலசிங்கன் என்ற அரசனிடம் சென்று தனது தமிழ் புலமையைக் காட்ட ஒரு சந்தர்ப்பம் தருமாறு விண்ணப்பித்தார்.

மன்னனும் இவரது திறமையை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் வழங்கினான்.

அரச சபையில் உடல் ஊனமுற்றவர்களை காண்பது அரசர்க்கு இழுக்காக அந்தக் காலத்தில் இருந்தமையால், அரசன் இவரை நேரில்ப் பார்க்காதவாறு ஒரு திரை இடப்பட்டது. இதனை தனது மனக்கண்ணால் உணர்ந்த பாணன் மிகவும் கவலையுற்று பின்வரும் பாடலைப் பாடினார்.

அதாவது இந்த நாட்டை ஆளும் சிறந்த மன்னனாகிய ஏலேலசிங்க மன்னன் பாடல் பாடினால் எனக்கு யானைக்குட்டியும், இடமும், பரிசளிப்பான் எனும் நோக்குடன் பாடவந்த என்னை பார்க்கதவாறு திரைபோட்டு மறைத்து விட்டாயே என்று பாடினார்.

இவர் அரச சபையில் தனது யாழினை மீட்டி தமிழில்ப் பாடி அரசன் உட்பட அனைவரது அபிமானத்தையும் பெற்றுக் கொண்டார். அதுமட்டுமன்றி கண்தெரியாத இவரால் எப்படி திரை போட்டதனை அறிந்துகொண்டார் என்று ஆச்சரியப்பட்ட மன்னன் மிகவும் மனமகிழ்ந்து திரையை விலக்கி இவரைக் கட்டி அணைத்துப் போற்றினான். அப்படியே இவர் கேட்டவாறு இலங்கையின் வட புலத்திலுள்ள “மணற்றி” என்ற பிரதேசமும், யானையும் பரிசாகக் கொடுத்து, பல்லக்கில் இவரை ஏற்றி சில சேவகர்களுடன் மணற்றி நோக்கி அனுப்பி வைத்தான்.

சிலகாலம் மணற்றி பகுதியில் வசித்த இவர் மீண்டும் இந்தியா சென்று தனது மனைவியை அழைத்து வந்து “நல்லூரில்” தனது இராசதானியை அமைத்து ஆண்டு வந்தார்.

யாழ்ப்பாணனால் ஆளப்பட்டதால் “மணற்றி” என்று அழைக்கப்பட்ட பிரதேசம்  நாளடைவில் “யாழ்ப்பாணம்” என எல்லோராலும் அழைக்கப்பட்டது. இவர் 70 வருடங்கள் யாழ்ப்பாணத்தை ஆண்டார் எனவும் வரலாறுகள் கூறுகிறது. இவருடைய கொடி யாழைக் கையில் ஏந்திய சமயக்கட் கொடியாகும். அது மிதுனக் கொடி எனவும் அழைக்கப்பட்டது.

யாழ்ப்பாண சரித்திரத்தினை விளக்கும் நூல்களாக பிவரும் நூல்கள் அமைந்துள்ளன. அவையாவன “வைபவமாலை”, “கைலாயமாலை”, “பரராச சேகரனுலா”, “இராசமுறை”, “வையைப்பாடல்” ஆகும்.

குறிப்பு: பொதுவாக வரலாற்று நூல்கள் வாயிலாக மிகவும் நீண்டகால வரலாறுகளை ஆராயும்போது, அவை நடைபெற்ற காலங்களும், சம்பந்தப் பட்டவர்களது பெயர்களும் துல்லியமாகக் கணிப்பிடுவது என்பது மிகவும் கடினமானதாகும். ஆனால் நடைபெற்ற சம்பவங்களும், நிகழ்வுகளும் சரியானவையாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

குமார் குணரத்தினம் (kgunaretnam@hotmail.com)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *