பட்டினத்தடிகள் தாயின் பெருமை பற்றி பாடிய பாடல்கள்
வணிகம் செய்துவந்த பெரும் செல்வந்தரான பட்டினத்தடிகள் அனைத்தையும் துறந்து, துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில், அவருடைய அன்னையார் மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்து, “தாயாரின் ஈமச்சடங்கை நான் எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன்” என்று கூறியபடி சரியான நேரத்தில் சுடுகாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழை மட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையடுக்கி, “ஐயிரண்டு திங்களாயங்கமெலா நொந்து பெற்று” என்று பாடத் தொடங்கி, தம் தவ வலிமையினால் தன் தாயாரின் உடலுக்குத் தீமூட்டி தம் தாய்க்குரிய இறுதிச் சடங்கை நிறைவேற்றினார்.
பட்டினத்தார் சுடுகாட்டில் தன் தாய்க்கு ஈமச்சடங்கு செய்தபோது பாடிய பத்து பாடல்களும் தாயின் பெருமையைக் கூறுபனவாக அமைந்துள்ளன.
பாடல் 01
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?
விளக்கம்: பத்து மாதங்கள் வயிற்றில்ச் சுமந்து தன் உடல் எல்லாம் வருந்திப் பெற்றெடுத்து, பச்சை உடம்பின னாய் இருக்கும் போது இரக்கத்தோடு தன் கைகளில்த் தாங்கி, அணைத்து அமுதம்போன்ற தாய்ப் பாலூட்டியவளை இனி எந்தப் பிறவியில் காணப்போகிறேன் தாயே?
முந்தித்தவம் கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் – தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்?
விளக்கம்: பிள்ளை வரம் வேண்டித் தவமிருந்து கருவுற்று முன்னூறு நாட்கள் தன் வயிற்றில் என்னைச் சுமந்தாள். நான் சுகமாக ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும் என்று பகல் இரவாக சிவனை வழிபட்டாள். வயிற்றில் நான் வளர, வளர என் சுமையைத் தாங்கினாள். அந்தத் தாயின் உடம்பிற்கா நான் தீ மூட்டப் போகிறேன் தாயே?
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து – முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?
விளக்கம்: கூடையிலும், தொட்டிலிலும், மார் மேலும், தோள் மேலும், கட்டிலிலும், கிடத்தி எனக்கு அன்பு காட்டினாள். தன் சேலை முந்தானையில் மூடி வைத்து என்னைக் காப்பாற்றினாள். சீராட்டினாள். அந்தத் தாயின் உடம்பிற்கா நான் தீ மூட்டப் போகிறேன் தாயே?
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே – அந்தி பகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்?
விளக்கம்: தான் நொந்து சுமந்து என்னைப் பெற்றெடுத்தாள். எனக்கு நோகாதவாறு தன் கைகளில் என்னைத் தாங்கி, தாய்ப் பாலூட்டி வளர்த்தாள். பகல் இரவாய் தன் கைகளிலேயே என்னைத் தாங்கித் திரிந்து என்னை வளர்த்தாள். அந்தத் தாயின் உடம்பிற்கா நான் தீ மூட்டப் போகிறேன் தாயே?
அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் – உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே என அழைத்த வாய்க்கு?
விளக்கம்: தேனே, அமிர்தமே, செல்வத் திரவியமே, பூமானே என்றெல்லாம் என்னை அழைத்த என் தாயின் வாய்க்கு ருசியான உணவும், பால் பழமும் உண்ணக் கொடுத்து மகிழாமல் இறுதியாக வாய்க்கு அரிசி கொடுக்கும் நிலை வந்துள்ளதே என் தாயே நான் என் செய்வேன்.
அள்ளி இடுவது அரிசியோ? தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் மெள்ள
முகம்மேல் முகம்வைத்து முத்தாடி “என்றன்
மகனே” என அழைத்த வாய்க்கு?
விளக்கம்: என் முகம் மீது முகம் வைத்து என்னை முத்தமிட்டு என் மகனே என்று அழைத்த என் தாயின் வாய்க்கு இறுதியாக வாய்க் அரிசி போடும் நிலை வந்துள்ளதே. என் தாயின் தலைமேல் கொள்ளி வைக்கப்போகிறேனே. என் தாயே நான் என் செய்வேன்?
முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே
விளக்கம்: புருவ மத்தியில் தீப சுடர் தோன்றும்போது, அதாவது சிவனின் தீ. சிவன் என்பது ஆன்மா. ஆன்மா என்பது குண்டலினி. அந்தக் குண்டலித் தீ மேலெழுந்து புருவ மத்திக்கு (முப்புரத்திற்கு) வரும்போது ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மலங்களையும் எரித்து முத்தி கிடைக்கும். பின்னை இட்ட தீ அதாவது ஆஞ்சநேயரின் பின்புறத்தில் அதன் வாலில் இடப்பட்ட தீயானது தென் இலங்கையை ராவணனின் கர்வத்தை எரித்தது. அன்னையின் அடிவயிற்றினில்த் தோன்றிய நாம் நமது அன்னை அடிவயிறு எரியாமல், மனம் நோகாமல், சாபம் இடாமல் நாம் நடந்து கொள்ளவேண்டும். யானும் இட்ட தீ எனது அன்னையின் உடலுக்கு யான் தீ வைக்கிறேன் அதாவது யோகத் தீயில் திளைத்திருக்கும் ஞானியான பட்டினத்தார் எண்ணும் போது அந்தத் தாயின் உடல் எரிய ஆரம்பிக்கிறது.
வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவிபறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
விளக்கம்: நான் எவ்விதமான குற்றங்களும் புரியாமல் தடுத்து, என்னைக் காப்பாற்றி, என்னைக் கண்டித்து வளர்த்த என் தாயின் கைகள், தாயின் உடல் தீயில் எரிகின்றதே என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே. என்னால் என் தாயைக் காப்பாற்ற முடியவில்லையே. என் தாயே நான் என் செய்வேன்.
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ – சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்துஎன்
தன்னையே ஈன்றெடுத்த தாய்?
விளக்கம்: தீயில் வெந்து போனாளே என் தாய். மீண்டும் பிறப்பில்லாமல் சிவனே உன்னுடன் இணைந்து கொண்டாளோ? தினமும், எந்நேரமும் உனையே எண்ணித் தவமிருந்து என்னைப் பெற்ற என் தாய் எங்கு சென்றாள் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்வேன்?
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்
விளக்கம்: நேற்றுவரை உயிருடன் இருந்தாள். சுசுறுப்பாக அங்கும் இங்கும் உலாவி எம்முடன் இருந்தாள். இன்று தீயில் வெந்து சாம்பலானாள். அவளது சாம்பலுக்கு பால் தெளித்து இறுதி மரியாதை செய்ய எல்லோரும் வாருங்கள். யாரும் துன்பப் படாதீர்கள். துயரப் படாதீர்கள். எல்லாம் அந்த சிவன் செயலே. சிவமயமே.
கு சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —
[…] post பட்டினத்தடிகள் தாயின் பெருமை பற்றி ப… first appeared on Sivapathy […]