சிதம்பரம் நடராஜர் (தில்லை நடராசர்) ஆலயம்

தில்லை நடராசர் கோயில்
- அமைவிடம்: சிதம்பரம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
- ஆலயம்: தில்லை நடராஜர், சிதம்பரம் நடராசர்
- மூலவர்: திருமூலநாதர்
- அம்மன்: சிவகாமசுந்தரி
- நடராஜர் பெயர்: தில்லை நடராசர் (உற்சவர்)
- நடனக் கோலம்: ஆனந்த தாண்டவம்
- தல விருட்சம்: தில்லை மரம்
- அம்பலம் / சபைகள்: சிற்றம்பலம் (சிற்சபை), பொன்னம்பலம் (கனகசபை), நிருத்தசபை (தேர் அம்பலம், நடனசபை), தேவசபை (பேரம்பலம்), ராஜசபை (ஆயிரங்கால் மண்டபம்)
- தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி தீர்த்தம், பிரம தீர்த்தம், சிவப்பிரியை தீர்த்தம், புலிமேடு தீர்த்தம், குய்ய தீர்த்தம்.
சிதம்பரம் நடராஜர் கோயில்
இந்தியாவின் தெற்கு மாநிலமான தமிழ்நாட்டிலுள்ள கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் எனும் ஊரில் அமைந்துள்ள மிகச் சிறப்பு வாய்ந்த சிவன் கோயிலாகும். சிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர், முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லைவனம் என அழைக்கப்பட்டது. இத் திருத்தலமானது நடராஜர் கோயில், சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் என்றும் குறிப்பிடப்படுகிறது.
கோயிலின் கட்டிடக்கலையும் அங்கு அமைந்துள்ள நடராஜர் சிலையும் கலைக்கும் ஆன்மீகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பைப் பிரதிபலிக்கிறது.
இத் திருக்கோவிலை அந்நாளில் ‘சிற்றம்பலம்’ என்றே அழைத்தனர். பின்னர் சோழர் பேரரசுச் காலங்களில் அவ்வரங்கம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு பொற்கூரை வேயப்பட்டு பொன்னம்பலம் எனும் பெயரிலும், பேரம்பலம் எனும் பெயரிலும் அழைக்கப் படலாயிற்று. இத் திருத்தலத்திலேயே, இந்த பொன்னம்பலத்திலேயே சோழ மன்னர்கள் முடிசூடிக்கொண்ட இடமாகவும் விளங்கியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
சிற்றம்பலம் (சிற்றம்பலம் = சிறிய + அம்பலம்) என்றால் சிறிய அம்பலம் எனவும் பொருள் கொள்ளப்படும். அதாவது அம்பலம் என்றால் மக்கள் கூடும் இடம் அம்பலம் (அரங்கம்) என அழைக்கப்படும்.
சோழமன்னர்கள் முடிசூடிக்கொண்ட இடம் பொன்னம்பலம் எனவும் பாண்டிய மன்னர்கள் முடிசூடிக்கொண்ட இடம் வெள்ளம்பலம் (மதுரை வெள்ளியம்பலம்) எனவும் புராண வரலாறுகள் குறிப்பிடுகின்றன.
சிதம்பரம் என்ற சொல்லுக்கு இன்னொரு பெயர் காரணமும் உண்டு. அதாவது. “சிதம்பரம்” என்ற சொல் “சித்”+ “அம்பரம்” எனப் பிரிக்கப்படும். சித் என்றால் அறிவு (ஞானம்) எனவும், அம்பரம் என்றால் வெட்டவெளி (ஆகாயம்) எனவும் பொருள் கொள்ளப்படும் எனவும் இன்னொரு விளக்கமும் உண்டு.
சிதம்பரம் கோவில் பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தினைக் குறிக்கும் தலமாக விளங்குவதால் சிற்றம்பலம் எனவும் அழைப்பர். அதாவது சிற்றம்பலம் (சித் + அம்பரம்) என பிரிக்கப்பட்டு, சித் என்றால் நுட்பமான எனவும் அம்பரம் என்றால் திறந்தவெளி (ஆகாயம்) எனவும் பொருள் கொள்ளப்படும். எனவே ஆகாயம் தெரியக் கூடியவாறு திறந்தவெளி மண்டபமாக இருப்பதனால் சிற்றம்பரம் எனவும் அழைக்கப்பட்டது. அதனால் ஆரம்ப காலத்தில் இக்கோவிலை சிற்றம்பலம் ஆலயம் என அழைத்தனர். சிலர் தில்லைச் சிற்றம்பலம் எனவும் அழைத்தனர். நாளடைவில் சிற்றம்பலம் என்ற பெயர் மருவி சிதம்பரம் என அழைக்கப்படலாயிற்று.
தில்லை நடராஜர் ஆலயத்தின் ஏனைய பெயர்கள்:
- தில்லைவனம்: தில்லை மரங்கள் நிறைந்த இடம்.
- பொன்னம்பலம்: தங்கக்கூரை வேயப்பட்ட நடராஜர் சபை.
- புலியூர்: புலிப்பாணி சித்தர் வழிபட்ட தலம்.
- வியாக்ரபுரம்: வியாக்ரபாத முனிவர் வழிபட்ட தலம்.
- புண்டரீகபுரம்: புண்டரீக முனிவர் வழிபட்ட தலம்.
- பிரமபுரி / பிரமஸ்தபுரி: பிரம்மன் வழிபட்ட தலம்.
- பூலோக கைலாசம்: பூலோகத்தில் உள்ள கைலாயமாக கருதப்படுகிறது.
- கோயில்: சைவ சமயத்தில் ‘கோயில்’ என்று சொன்னால் அது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினையே குறிக்கும்.
திருசிற்றம்பலம்
பொதுவாக புனிதமான இடங்களைக் குறிக்கும்போது அந்த சொற்களின் முன்னால் திரு என்ற சொல் சேர்க்கப்படும். அதுவே “திருசிற்றம்பலம்” என அழைக்கப்படுகிறது. தேவார திருவாசங்கள் படிக்க ஆரம்பிக்க முன்னர் திருச்சிற்றம்பலம் என்று கூறிய பின்னரே பாடல்கள் பாட ஆரம்பிப்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது ஒரு ஐதீகம் (நம்பிக்கை) ஆகும்.
சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தின் சிறப்புக்களில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தினைக் குறிக்கும் தலமாக அமைகிறது என்பதுவும் சிவனின் ஐம்பெரும் அம்பலங்களில் ஒன்றாகும் என்பதுவும் சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி என்பதுவும் அடங்குகின்றன.
நடராஜர் சிலைகளில் சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லை நடராஜர் கோவிலில் அமைந்துள்ள நடராஜர் சிலையே உலகிலுள்ள நடராஜர் சிலைகளில் முதன்மையானதாகவும் மனித வாழ்வின் தத்துவத்தினை எடுத்துரைப்பதாகவும் அமைந்துள்ளது. சிதம்பரத்தில் அமைந்துள்ள தில்லைநடராஜர் ஆலயம் ஒரு மனித உடலின் அம்சங்களை விளக்குவதாகவும், அங்கு அமைந்துள்ள நடராஜர் சிலையானது மனிதவாழ்வின் தத்துவங்களை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. இன்னும் ஆன்மீக ரீதியாகக் கூறும்போது, தூல உடலுக்கு சிதம்பரம் கோவிலின் அமைப்பும், சூக்கும உடலின் தத்துவங்களுக்கு நடராஜர் சிலையின் அமைப்பும் அமைந்துள்ளது.
நடராஜர் என்பது சிவன், நடனக் கோலத்தில் காட்சி கொடுக்கும் வடிவமாகும். நடராசர் என்ற சொல்லானது நட + ராசர் என பொருள் கொள்ளப்படும். நட என்றால் நடனம்
எனவும், ராசர் என்றால் ராஜா எனவும், அதாவது நடனங்களுக்கு அரசன் என பொருள் கொள்ளப்படும்.
ஆரம்பத்தில் நடனராஜர் என அழைக்கப் பட்டதாகவும் பின்னர் பெயர் மருவி நடராஜர் என அழைக்கப் படலாயிற்று என்பது புராண வரலாற்று சான்றாகும்.
பொதுவாக ஒரு புராதன ஆலயத்தின், ஒரு புராதன நூலின் அல்லது ஒரு புராதன கலாச்சாரத்தின் காலத்தினை ஆராய்பவர்கள் ஏனைய புராதன நூல்களில், புராதன பாடல்களில், கல்வெட்டுக்களில் அந்தந்த ஆலயங்கள் அல்லது புராதன நூல்கள் பற்றிய தகவல்கள் உள்ளனவா என்று ஆராய்ந்து அதிலிருந்தே அதன் காலத்தினை கணக்கிடுவார்கள். உதாரணமாக திருமூலரது திருமந்திரத்தின் காலத்தினை ஆராய முற்படுபவர்கள் பல நூல்களை ஆராய்வார்கள். ஒளவையார், திருஞான சம்பந்தர் போன்றோரது பாடல்களில் திருமூலர் பற்றிய அல்லது திருமந்திரம் பற்றிய தகவல்கள் இல்லாவிட்டால், திருமூலர் ஒளவையார் மற்றும் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் ஆகியோரது காலத்துக்கு முற்பட்டவர் என்ற முடிவுக்கு வருவார்கள்.
இப்படியாகவே ஒரு பண்டைய நாகரீகம், புராதன ஆலயங்கள், புராதன நூல்கள் எக்கால கட்டத்தினைச் சேர்ந்தவை என்ற ஒரு முடிவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு கல்விசார் நிறுவனங்கள் மூலமாக ஆராயும்போது தகவல்கள் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அந்த ஆராய்ச்சி முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும். அந்த தகவல்களே மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்படும்.
பல பாடல்களில் பல நூல்களில் லெமூரியா கண்டம், பாண்டியன் இராட்சியம் போன்ற நீருக்குள் மூழ்கிப்போன தமிழர்களது பண்டைய நாகரீக நகரங்கள் நிரூபிக்கப்பட முடியாமல் இருப்பதால் இன்றும் ஆராய்ச்சியாளர்களால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் உள்ளது. பல தமிழர்களாலேயே எமது முன்னோர்களது பல வியத்தகு ஆன்மீக விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளாகவே இருந்து வருகிறது.
புராண வரலாறுகளின்படி சங்க இலக்கியமான கலித்தொகையின் (கி மு 600) முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாகவே உள்ளது. ஆதலினால் சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் ஆலயம் புகழ் பெற்றிருந்தது என்பது உறுதியாகிறது.
கி மு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூலர் தமது திருமந்திர நூலில் சிதம்பரம் கோவில் மற்றும் நடராஜர் நடனம் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனவே சிதம்பரம் நடராஜர் ஆலயமும் நடராஜர் தோற்றமும் கி மு 5000 ஆண்டுகளுக்கு முந்தியதாக உறுதிப்படுத்தப் படுகிறது.
திருமூலர் திருமந்திரம் ஏழாம் தந்திரம் – பிண்ட லிங்கம் பாடல் 1726
“மானுட ராக்கை வடிவு சிவலிங்கம்
மானுட ராக்கை வடிவு சிதம்பரம்
மானுட ராக்கை வடிவு சதாசிவம்
மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே”.
விளக்கம்:
- மானுடராக்கை வடிவு சிவலிங்கம்: மனித உடல் (ஆக்கை) சிவலிங்கத்தின் வடிவம் அல்லது தத்துவத்தினைப் பிரதிபலிக்கிறது.
- மானுடராக்கை வடிவு சிதம்பரம்: இந்த மனித உடலின் அங்கங்களின் பிரதிபலிப்பே சிதம்பரம் கோவிலின் வடிவமாகும்.
- மானுடராக்கை வடிவு சதாசிவம்: இந்த மனித உடலுடன் இணைந்திருக்கும் சூக்கும உடல் சதாசிவனின் (சிவனின்) தத்துவத்தினைப் பிரதிபலிக்கிறது.
- மானுடராக்கை வடிவு திருக்கூத்தே: இந்த மனித உடலின் வாழ்க்கை முறையையே நடராஜரின் நடனம் பிரதிபலிக்கிறது.
மூலக் கருத்து: அதாவது மனித உடல் இயக்கம் சிவலிங்கமாகவும் (ஆண், பெண்ணின் இயக்கத்தினை சிவலிங்கம் பிரதிபலிக்கிறது). மனித உடலின் அங்கங்களை விளக்கும் அடையாளமாக சிதம்பரம் நடராஜர் கோவில் அமைப்பு அமைந்துள்ளது. மனித உடலுடன் இணைந்திருக்கும் சூக்கும உடலின் தத்துவமே சதாசிவ மூர்த்தியாகவும், மனித வாழ்வின் சுழற்சியின் அடையாளமாக நடராஜரின் கூத்தாகவும் (நடனமாகவும்) குறிப்பிடப்படுகிறது.
கி மு 7000 ஆண்டளவில் வாழ்ந்த, இன்னும் ஆன்மீகரீதியாக சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அகத்திய முனிவர் தில்லைச் சிதம்பரத்தினை பின்வருமாறு குறிப்பிடுகிறார் ஆனால் அவரது பாடல்கள் கிடைக்கவில்லை.
அகத்தியமா முனிவர் தில்லை நடராஜரின் நடனத்தினை மனித உடலின் தூல, சூக்கும உடல்களின் ரகசியத்தை விளக்கும் தத்துவமாக விளக்கியுள்ளார். “அகஸ்தியர் 12000” போன்ற நூல்களில், நடராஜரின் நடனக்கலை மற்றும் சிவனின் யோகநிலை போன்ற தத்துவங்கள் விளக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இவ்விடத்தில் தமிழின், தமிழர்களது வரலாற்றினை நாம் சிந்தித்துக் கொள்ளவேண்டும்.
இந்து புராணங்களின்படி, இந்த உலகின் காலச்சுழற்சி கிருதயுகம் (சத்யயுகம்), திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என நான்கு பிரதான யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு யுகங்களையும் சேர்த்து ஒரு சதுர்யுகம் (43,20,000 ஆண்டுகள்) எனக் கொள்ளப்படுகிறது. தற்போது கலியுகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
யுகங்களும் அவற்றின் கால அளவுகளும்.
- கிருத யுகம் (சத்ய யுகம்): 17 28 000 ஆண்டுகள். (டைனோசர்கள் வாழ்ந்த காலமாகக் கருதப்படுகிறது)
- திரேதாயுகம்: 12 96 000 ஆண்டுகள். இக்காலத்தில் ராம அவதாரம் இராமாயண போர் நிகழ்ந்தது. இராமாயண போரில் பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு முடிவில் பெரிய அழிவு நடைபெற்று அத்துடன் அந்த யுகம் முற்றுப்பெற்றது
- துவாபரயுகம்: 8,64,000 ஆண்டுகள். கிருஷ்ண அவதாரம் மகாபாரத போர் நிகழ்ந்தது. மகாபாரத போரில் பல ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு முடிவில் பெரிய அழிவு நடைபெற்று அத்துடன் அந்த யுகம் முற்றுப்பெற்றது.
- கலியுகம்: 4,32,000 ஆண்டுகள். தற்போது நடைபெறும் யுகம். இந்த யுகத்திலேயே கி மு 9000 ஆண்டளவில் முகருகர் என்ற சித்தரும் பின்னர் கி மு 7000 ஆண்டளவில் அகத்திய பெருமானும் பின்னர் கி மு 5000 ஆண்டளவில் திருமூலரும் தோன்றியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தில்லை நடராஜர் ஆலயம் காலப்போக்கில் இயற்கை அழிவுகள் மற்றும் பல மன்னர்களின் படை எடுப்பினால் பராமரிப்பின்றி சிதைவடைந்துபோக பின்னர் வந்த பல்லவ, சோழ மன்னர்களினால் புனரமைக்கப்பட்டு அதன் வரலாறும் வெளிக்கொணரப் பட்டதாகும்.
உலகில் சைவமும், தமிழும் தழைத்தோங்க பாடுபட்டவர்களில் சோழ மன்னர்களும் முதலானவர்களாவர். இவர்கள் காலத்திலேயே இந்தோனேசியா, கம்போடியா போன்ற பிற நாடுகளிலும் பல இந்துக் கோவில்கள் மிகவும் சிறந்த கட்டிடக் கலையம்சத்துடம் கட்டப்பட்டன.
தில்லை நடராஜர் ஆலயத்தின் சிறப்பம்சங்கள்
ஐம்பெரும் அம்பலங்களில் சிற்றம்பலம் முதன்மையானது.
பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தை குறிக்கிறது.
தேவார பதிகங்கள் சேகரிக்கப்பட்ட தலமாகும்.
திருத்தலத்தின் கட்டிட அமைப்பும் அதன் தத்துவமும்: திருத்தலத்தின் கட்டிட அமைப்பு மனித உடலின் அமைப்புடன் ஒப்பிடப்படுகிறது.
திருத்தலத்தில் அமைந்துள்ள நடராஜர் சிலையின் தத்துவம்: இங்கு அமைந்துள்ள நடராஜர் சிலையின் தத்துவம் ஆன்மீகரீதியான மனித வாழ்வின் தத்துவத்தினை விளக்குவதாக அமைந்துள்ளது.
திருத்தலத்தின் அமைவிடம்
சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் காந்தப் புலத்தின் மையத்தில், பூமத்திய ரேகையின் நடுப்பகுதியில் அமைந்துள்ளதாக இன்றய விஞ்ஞானிகளால் கண்டறியப் பட்டுள்ளது. காந்தப்புலத்தின் மையம் எனக் கூறும்போது பூமியின் மத்திய பகுதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதாவது பூமியின் மேற்பரப்பில் காந்தப்புலம் மிகவும் குறைவாக உள்ள புள்ளியில் திருத்தலம் அமைந்துள்ளது. செயற்கைக் கோள்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு மேலாக செல்லும்போது அதன் இணைப்பு துண்டிக்கப் படுகிறது என்று நாசா கண்டறிந்துள்ளதாகவும் ஒரு தகவல் உண்டு.
பூமத்திய ரேகை (Equator) என்பது பூமியின் மேற்பரப்பில் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் இடையில் நடுப்பகுதியில், கிழக்கு, மேற்காகச் செல்லும் ஒரு கற்பனைக் கோடு ஆகும். ஆராய்ச்சியாளர்கள் பூமத்திய ரேகையின் மையப்பகுதி என்பது பூமத்திய ரேகை மற்றும் பூமியின் காந்த சக்தி (Magnetic Center) ஆகிய இரண்டும் இணையும் புள்ளி என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அதாவது இந்த இடத்தில்தான் பூமியின் காந்த அச்சு மையப்புள்ளி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பூமத்திய ரேகைப் பகுதியில் சூரியனின் கதிர்கள் ஆண்டு முழுவதும் படும் எனவும் இதன் காரணமாக இப்பகுதியில் இரவும் பகலும் சமமான நேரத்தைக் கொண்டிருக்கும் எனவும் அறியப்படுகிறது.
தில்லை நடராஜர் ஆலயத்தில் அமைந்துள்ள நடராஜர் சிலையின் தூக்கிய பாதங்களின் பெருவிரல் பூமத்திய ரேகையின் மையப்பகுதியை சுட்டி நிற்பதாக அமைந்துள்ளது ஒரு வியப்பான அதிசயமாகும்.
இன்று விஞ்ஞானிகள் பல கருவிகளின் துணைகொண்டு அறியப்படும் பூமத்திய ரேகையின் மையப்பகுதியானது, அன்றைய எமது சித்தர்களால் மிகவும் துல்லியமாகக் கணிக்கப்பட்டதில் ஆன்மீகவாதிகளுக்கு எவ்விதமான ஆச்சரியமும் இருக்காது என்பதுவே நிதர்சனமான உண்மையாகும்.
உறுதிப்படுத்தப்பட்ட வரலாற்றுப்படி பார்த்தாலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எந்த விஞ்ஞான தொழில்நுட்பங்களும் இல்லாத ஒரு காலத்தில், ஒரு மனிதனின் உடல் இப்படித்தான் இருக்கிறது என்பதனை எப்படி கண்டறிந்தார்கள்? எப்படி இந்தக் கோயிலை வடிவமைத்தார்கள்? என்ற கேள்விக்கு ஆன்மிகம் மற்றும் மெய்ஞ்ஞானமே காரணம் என்பதுவே நிதர்சனமான உண்மையாகும்.
தில்லை நடராசர் திருத்தலத்தின் சிறப்பம்சங்கள்
சிவனின் ஐம்பெரும் அம்பலங்களில், சிதம்பரம் கோவிலும் ஒன்றாகும்.
ஐம்பெரும் அம்பலங்கள் (அரங்கங்கள் / மண்டபங்கள்)
சிவன் நடனக் கோலத்தில் நடராஜராக எழுந்தருளியுள்ள ஆலயங்களுள் முக்கியமான ஐந்து தலங்களில் அமைந்துள்ள மன்றங்கள் (அம்பலங்கள் / அரங்கம்) ஐம்பெரும் அம்பலங்கள் என அழைக்கப்படுகின்றன. அம்பலம் என்பது மன்றம் அல்லது மண்டபம் என்று அர்த்தமாகும். இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாகவும் இங்கிருந்தே நடனக்கலை உருவாகி பரவியதாகவும் சைவசமய சான்றுகள் குறிப்பிடுகின்றன.
அம்பலம்: தற்காலத்தில் திருமண மண்டபங்கள் கலை நிகழ்வுகள் நடைபெறும் பெரிய, பெரிய மண்டபங்கள் இருப்பதுபோல, அக்காலத்தில் பொதுவாக ஆலயங்களிலேயே பெரிய. பெரிய மண்டபங்கள் அமைத்திருந்தார்கள். அங்கிருந்தே நாட்டியம், வாத்திய கலை, சொற்பொழிவுகள் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. அந்த மண்டபங்களே அம்பலங்கள் என அழைக்கப்பட்டன.
சிற்சபை: ஒரு பெரிய மண்டபத்தினை பல பகுதிகளாகப் பிரித்து சிறிய மண்டபங்களாக அமைத்து அங்கு வேறு வேறு நிகழ்வுகள் நடைபெரும். அவ்வாறே பெரிய அம்பலங்கள் உள்ளே சிறிய பகுதிகளாகப் பிரித்து அவை சிற்சபைகள் என அழைக்கப்படுகின்றன.
இரத்தினம்பலம் – திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்
- அம்பலம்: இரத்தினம்பலம்
- சிற்சபை: முதல்சபை அல்லது ரத்தினசபை
- நடனக் கோலம்: ஊர்த்துவ தாண்டவம்
பொன்னம்பலம் – சிதம்பரம் நடராசர் கோயில்
- அம்பலம்: பொன்னம்பலம், சிற்றம்பலம்
- சிற்சபை: நிருத்தசபை (நடனசபை), தேவசபை மற்றும் ராஜசபை
- நடனக் கோலம்: ஆனந்ததாண்டவம்
வெள்ளியம்பலம் – மதுரை மீனாட்சியம்மன் கோவில்
- அம்பலம்: வெள்ளியம்பலம்
- சிற்சபை: (வெள்ளியம்பலம் அல்லது ரஜதசபை.
- நடனக் கோலம்: சந்தியா தாண்டவம், காளி தாண்டவம்
தாமிரஅம்பலம் – திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் திருக்கோவில்
- அம்பலம்: தாமிரஅம்பலம் (தாமிரம் என்றால் செப்பு)
- சிற்சபை: தாமிரசபை.
- நடனக் கோலம்: முனி தாண்டவம்
சித்திர அம்பலம் – குற்றாலநாதர் கோயில்
- அம்பலம்: சித்திர அம்பலம்
- சிற்சபை: சித்திர சபை
- நடனக் கோலம்: திரிபுரா தாண்டவம்
அம்பலங்கள் சற்று விளக்கமாக
இரத்தின அம்பலம் – திருவாலங்காடு வடாரண்யேசுவரர்
- மூலவர்: வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான்
- அம்மன்: வண்டார்குழலி, பிரம்மராளகாம்பாள்
- நடராஜர் பெயர்: இரத்தின சபாபதி (அல்லது ரத்னசபேசர்)
- நடனக் கோலம்: ஊர்த்தவ தாண்டவம்
- தல விருட்சம்: பலா, ஆலமரம்
- தீர்த்தம்: முத்தி
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ள வடாரண்யேசுவரர் ஆலயத்தில் அமைந்துள்ள நடராசர் சந்நிதி (அம்பலம்) இரத்தின அம்பலம் அல்லது இரத்தினசபை (மாணிக்கசபை) என அழைக்கப்படுகிறது. பண்டையக் காலத்தில் இத்தலம் ஆலமரங்கள் நிறைந்த காடாகக் காட்சியளித்ததால் இறைவனுக்கு வடாரண்யேசுவரர் எனவும், தலம் திருவாலங்காடு எனவும் பெயர் பெற்றது. இக்கோயிலில் உள்ள கமலத்தேர் அதாவது தாமரை மலர் போன்ற வடிவிலான தேர் மிகவும் புகழ்பெற்றது.
இங்குள்ள செப்புத்திருமேனியால் ஆன நடராஜர் தனது இடதுகாலை உயரத் தூக்கிய நடனக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள நடனக் கோலம் ஊர்த்தவ தாண்டவம் என அழைக்கப்படுகிறது. இவ்வம்பலத்தின் விமானம் (கூரை) செப்புத்தகடுகளால் வேயப்பட்டு ஐந்து கலசங்களுடன் அமைந்துள்ளது. சபையில் பெரிய ஸ்படிக லிங்கமும், சிறிய மரகதலிங்கமும் அமைந்துள்ளது.
புராணக் கதை: ஒருமுறை காளி தேவிக்கும் நடராசருக்கும், இடையில் நடந்த நடனப் போட்டியில், இருவரில் யார் சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள் என்று காணமுடியாதவாறு இருவரும் சமமாக ஆடினர். அப்போது நடராசர், கீழே விழுந்த தனது காதணியை நடனம் இடையுறா வண்ணம் தனது இடது காலால் எடுத்து உயரத்தூக்கி எடுத்த காதணியை அதே காலாலேயே அணிய முற்பட, காளிதேவியால் அக்கோலத்தில் ஆடமுடியாமல் தன் தோல்வியை ஒப்புக் கொண்டதாக ஒரு வரலாறு உண்டு. சிவனின் இந்த நடன வடிவமே ஊர்த்தவ தாண்டவம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள நடராஜர் இரத்தினசபாபதி என்று அழைக்கப்படுகிறார்.
பொன்னம்பலம் – சிதம்பரம் நடராசர் கோயில்
- மூலவர்: திருமூலநாதர்
- அம்மன்: சிவகாமசுந்தரி
- நடராஜர் பெயர்: தில்லை நடராசர்
- நடனக் கோலம்: ஆனந்த தாண்டவம்
- தல விருட்சம்: தில்லை மரம்
- தீர்த்தம்: சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி தீர்த்தம், பிரம தீர்த்தம், சிவப்பிரியை தீர்த்தம், புலிமேடு தீர்த்தம், குய்ய தீர்த்தம்.
வெள்ளியம்பலம் – மதுரை மீனாட்சியம்மன் கோவில்
- மூலவர்: சுந்தரேஸ்வரர்
- மூலவர் அம்மன்: மீனாட்சி அம்மன்
- நடராஜர் பெயர்: வெள்ளியம்பல நடராஜர் (அல்லது ரஜதசபை நடராஜர்)
- நடனக் கோலம்: சந்தியா தாண்டவம் அல்லது காளி தாண்டவம்
- தல விருட்சம்: கடம்ப மரம்
- தீர்த்தம்: பொற்தாமரைக்குளம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலுள்ள நடராசர் சன்னிதி வெள்ளியம்பலம் என அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள வெள்ளியால் ஆன மண்டபம் (அம்பலம்) வெள்ளியம்பலம் அல்லது இரஜதசபை என அழைக்கப் படுகிறது. பிற தலங்களில் எல்லாம் இடது காலைத் தூக்கி ஆடும் நடராசர் வெள்ளியம்பலத்தில் மட்டும் வலது காலைத் தூக்கி ஆடும் நிலையில் காட்சி தருகிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடராஜரின் நடனக் கோலம் சந்தியா தாண்டவம் அல்லது காளி தாண்டவம் என அழைக்கப்படுகிறது. இத்தல நடராசர் “வெள்ளி அம்பல நடராசர்” என்று அழைக்கப் படுகிறார்.
புராணக் கதை: சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் திருமணத்தைக் காணவந்த வியாக்கிரபாதர் முனிவரும், பதஞ்சலி முனிவரும் நடராசனின் ஆனந்த தாண்டவத்தைக் காணாமல் உணவு உண்ண மாட்டோம் என மறுக்க, சிவன் அவர்களுக்காகத் தான் ஆடிய கோலத்தை மதுரையில் காட்டியருளிய இடம் வெள்ளியம்பலம் என புராணங்கள் கூறுகின்றன. சிவன் சிதம்பரத்தில் ஆடியதுபோல வலது காலில் தனது நடனத்தை ஆட அதனைக் கண்ணுற்ற இராஜசேகர பாண்டிய மன்னன், அவருக்குக் கால் வலிக்குமே என்று கருதி சிவனிடம் காலை மாற்றி ஆடும்படி வேண்டிக் கொள்ள நடராசரும் அவனுக்காக இடதுகாலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது.
குறிப்பு: சித்தர்கள் நடனக் காட்சியைக் கண்டார்கள் மன்னன் நடனக் காட்சியைக் கண்டான், என்று கூறும்போது, நாம் இதனை யதார்த்தமான முறையில் அணுக வேண்டும். அதாவது நாம் கனவு காணுகின்றோம். பல கனவுகள் அன்றாடம் நாம் செய்யும் செயலை ஒத்ததாக இருக்கும். இது எமது மூளையில் அன்று நிகழ்ந்த எம்மைப் பாதித்த நினைவுகளின் பிரதிபலிப்பாக இருக்கும். சில கனவுகள் நாம் நினைத்துக் கூடப் பார்க்காத சில சம்பவங்களாக, பெயர் தெரியாத மனிதர்களின் சந்திப்புக்கள் போன்றன அமையும். இவை எமது ஆழ்மனதில் பதிந்துள்ள முற்பிறப்பு சம்பவங்களின் தாக்கமாக இருக்கும். சில கனவுகள் நடக்கப்போகும் ஏதோ ஒரு சம்பவத்தின் எதிர்வு கூறலாக அமையும். அதாவது நடக்க இருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கனவுகளாக அமையும். இப்படியான கனவுகளுக்கு சரியான அடிப்படைக் காரணம் தெரியாது. ஆனால் எம்மை வழிநடத்தும் எதோ ஒரு சக்தியின் அருளினாலேயே இப்படியான எதிர்வுகூறல் கனவுகள் தோன்றுகின்றன. இப்படியான அனுபவங்கள் எம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இப்படியாகவே முனிவர்கள், சித்தர்கள், மன்னர்களுக்கு நடைபெற்று அவர்கள் அக் கனவுகளை நனவாகினார்கள் என்பதாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
தாமிர அம்பலம் – திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
- மூலவர்: நெல்லையப்பர்
- அம்மன்: காந்திமதி
- நடராஜர் பெயர்: தாமிரசபை நடராஜர் (தாமிரசபாபதி / அழகியகூத்தர்)
- நடனக் கோலம்: முனி தாண்டவம்
- தல விருட்சம்: மூங்கில்
- தீர்த்தம்: தாமிரபரணி
திருநெல்வேலி மாவட்டம் செப்பறை என்ற ஊரில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ள நடராசர் சன்னிதி தாமிரஅம்பலம் அல்லது தாமிரசபை என அழைக்கப் படுகிறது. (தாமிரம் என்பது செப்பு அல்லது செம்பு என்ற உலோகமாகும்). செப்புத் தகடுகளால் வேயப்பட்டு அழகுடன் காட்சியளிக்கும் இந்த தாமிரஅம்பலம் மிகவும் சிறந்ததொரு கலைப் படைப்பாகக் காட்சி தருகிறது. இக்கோவிலின் தலவிருட்சமாக மூங்கிலும், தீர்த்தமாக தாமிரபரணியும் விளங்குகிறது. மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசனத்தின்போது இங்கு நடராசருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சித்திர அம்பலம் – குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர்
- மூலவர்: குற்றாலநாதர் (குறும்பலாஈசர்)
- அம்மன்: குழல்வாய் மொழியம்மை
- நடராஜர் பெயர்: சித்திரசபை நடராஜர் (சித்திர நடராஜர்)
- நடனக் கோலம்: திரிபுர தாண்டவம்
- தல விருட்சம்: பலா மரம்
- தீர்த்தம்: சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள அருள்மிகு குற்றாலநாதர் சுவாமி திருக்கோயிலில் அமைந்துள்ள அம்பலம் சித்திரஅம்பலம் (சித்திரசபை) என அழைக்கப் படுகிறது. நடராஜப் பெருமான் நடனமாடும் அற்புதக் கோலத்தை ஓவிய வடிவில் காட்சி தருகிறார். இங்குள்ள நடராஜரின் நடனம் திரிபுரா தாண்டவம் என அழைக்கப் படுகிறது.
சங்கு வடிவில் அமைந்துள்ள இந்த ஆலயம், மேற்குத் தொடர்ச்சி மலையில் சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமான, பிரதான அருவி (பேரருவி) அருகில் அமைந்துள்ளது.
ஏனைய அம்பலங்களில் திருவுருவச் சிலைகள் (விக்கிரகங்கள்) வடிவில் இருக்கும் நடராஜர், இங்கு ஓவிய வடிவில் காட்சி தருகிறார். முழுமையாக மரத்தினால் கட்டப்பட்ட இக் கோவிலின் உள்ளே சிவனின் பல்வேறு கதைகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் நிறைந்துள்ளன. குற்றாலநாதர் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது, அம்பிகை மற்றும் இறைவனின் நடனக்காட்சிகள் இந்த சித்திர சபையிலேயே அரங்கேறும்.
பஞ்சபூத தலங்கள்
பஞ்ச பூத தலங்களில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் ஆகாயத்தினைக் குறிக்கும் தலமாக அமைகிறது.
பஞ்சபூத தலங்கள் என்பது பஞ்ச பூதங்களான “நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்” ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஐந்து சிவாலயங்கள் ஆகும். இத்தலங்களில் மூலவராக உள்ள சிவலிங்கங்கள் அந்தந்த பஞ்சபூதங்களின் பெயர்களாலேயே அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு சிவாலயமும் அதன் வரலாறு காரணமாகவும், அதனதன் சிறப்பு வாய்ந்த தன்மையினாலும் ஒவ்வொரு பூதத்திற்குரிய கோயிலாக விளங்குகின்றன.
பஞ்சபூத தலங்களாவன
- நிலம் (பூமி): ஏகாம்பரநாதர் ஆலயம், பிருத்விலிங்கம் அல்லது மணல்லிங்கம் காஞ்சிபுரம்.
- நீர்: ஜம்புகேஸ்வரர் ஆலயம், அப்புலிங்கம் அல்லது ஜம்புலிங்கம். திருவானைக்காவல் (திருச்சி).
- நெருப்பு (அக்னி): அருணாசலேஸ்வரர் ஆலயம், அக்னிலிங்கம் அல்லது ஜோதிலிங்கம், திருவண்ணாமலை.
- காற்று (வாயு): காளஹஸ்தீஸ்வரர் ஆலயம், வாயுலிங்கம், ஸ்ரீகாளஹஸ்தி.
- ஆகாயம்: நடராஜர் ஆலயம், ஆகாசலிங்கம், சிதம்பரம்.
பஞ்சபூத தலங்கள் சற்று விளக்கமாக
நிலம் (பூமி): ஏகாம்பரநாதர் ஆலயம் – காஞ்சிபுரம்
- மூலவர்: தழுவக் குழைந்தநாதர்
- அம்மன்: ஏலவார்குழலி அம்மையார்
- லிங்கம் பெயர்: பிருத்வி லிங்கம் (மண்லிங்கம்)
- தத்துவம்: மண் தத்துவம்
- தல விருட்சம்: மாமரம்
- தீர்த்தம்: கம்பை ஆறு
ஏகாம்பரநாதர் ஆலயம்.காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரமாம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது. பழைய சமய நூல்களில் இத்திருத்தலம் “திருக்கச்சியேகம்பம்” என அழைக்கப் படுகிறது. இத்தலம் பஞ்சபூத தலங்களில் மண் தத்துவத்தினைப் பிரதிபலிக்கும் தலமாக அமைந்துள்ளது.
இங்கு உள்ள லிங்கம் மண்ணால் ஆனது. இந்த லிங்கம் “பிருத்வி லிங்கம்” என அழைக்கப்படுகிறது. பிருத்வி என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு பூமி அல்லது நிலம் என்று பொருள்படும். மண்ணால் ஆனதால் இந்த லிங்கத்திற்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. இந்த லிங்கம் சுயமாகத் தோன்றியதால் சுயம்பு லிங்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஏகாம்பரநாதர் ஆலயத்தின் தல விருட்சம் மாமரம் ஆகும். இது ஏறத்தாழ 3,500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. இந்த மாமரம் நான்கு வெவ்வேறு கிளைகளில் நான்கு வேறு, வேறு விதமான சுவைகளைக் கொண்ட கனிகளைத் தருகிறது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
நீர்: திருவானைக்காவல், திருச்சி
- மூலவர்: ஜம்புகேஸ்வரர்
- அம்மன்: அகிலாண்டேஸ்வரி
- லிங்கம் பெயர்: ஜம்புகேஸ்வரர்
- தத்துவம்: நீர்
- தல விருட்சம்: வெண்நாவல் மரம்
- தீர்த்தம்: காவிரி
திருச்சியில் அமைந்துள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம், சிவனின் பஞ்சபூத தலங்களில் நீர் தத்துவத்தினை குறிக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இது காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவரான லிங்கம் ஜம்புகேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். மூலவரான ஜம்புகேஸ்வரர் நீர் மட்டத்துக்கு கீழாக அமைந்துள்ளார். அதனால் எப்போதும் லிங்கத்துக்கு தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். இத்திருத்தலத்தில் யானை சிவனை பூஜித்ததால் ‘திருவானைக்காவல்’ என்ற பெயர் பெற்றது என்பது புராண வரலாறு.
நெருப்பு (அக்னி): அருணாசலேஸ்வரர், திருவண்ணாமலை
- மூலவர்: அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார்
- அம்மன்: அபீதகுஜாம்பாள், உண்ணாமுலை
- லிங்கம் பெயர்: அருணாசலேஸ்வரர்
- தத்துவம்: நெருப்பு
- தல விருட்சம்: மகிழமரம்
- தீர்த்தம்: சிவகங்கை தீர்த்தம்
இத்திருத்தலம் தமிழ்நாட்டின், திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் அண்ணாமலை என்றும் அருணாசலம் என்றும் அழைக்கப்படுகிறார். அருணாசலம் என்பதைப் பிரித்தால் அருணம் + அசலம் என்று வரும். அருணம் என்றால் நெருப்பு, அசலம் என்றால் மலை ஆகவே இது நெருப்பு மலை என பொருள் கொள்ளப் படுகிறது. பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புக்குரிய தலமாகப் போற்றப்படுகிறது. இங்கு மலையே இறைவனின் சொரூபமாக வணங்கப்படுகிறது. மலையைச் சுற்றி வந்து வணங்குதல் கிரிவலம் என அழைக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மலையில் கார்த்திகை தீப நாள் அன்று ஏற்றப்படும் கார்த்திகைத் தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
காற்று (வாயு): திருக்காளத்தி (ஸ்ரீகாளஹஸ்தி)
- மூலவர்: காளஹஸ்தீஸ்வரர்
- அம்மன்: ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை
- லிங்கம் பெயர்: காளஹஸ்தீஸ்வரர்
- தத்துவம்: வாயு
- தல விருட்சம்: மகிழம்
- தீர்த்தம்: சுவர்ணமுகி, பொன்முகலியாறு
இத்திருத்தலம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுவர்ணமுகி ஆற்றங்கரையில் அமைந்துள்ள தலமாகும். காளஹஸ்தீஸ்வரர் கோயில் தட்சிண (தென்) கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீகாளஹஸ்தி என்பது ‘ஸ்ரீ’ (“சீ” – சிலந்தி), ‘காள’ (பாம்பு), ‘ஹஸ்தி’ (யானை) ஆகிய மூன்றும் பூஜித்து முக்தி அடைந்ததால் இப்பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
திருக்காளத்தி-காளஹஸ்தீஸ்வரர் கோயில் பஞ்சபூதத் தலங்களில் வாயுத் தலமாக விளங்குகிறது. மூலஸ்தானத்தில் இருக்கும் அகல் தீபம் எப்போதும் காற்றில் ஆடிக்கொண்டே இருப்பது, இது வாயு தலம் என்பதற்கான சிறப்பம்சமாக விளங்குகிறது. இக்கோவிலின் மூலவரை சுற்றி எப்போதும் ஒரு காற்றோட்டம் இருப்பதனை உணர முடியும்.
ஆகாயம்: பொன்னம்பலம் – சிதம்பரம் நடராசர் கோயில்
- மூலவர்: திருமூலநாதர்
- அம்மன்: சிவகாமசுந்தரி
- தத்துவம்: ஆகாயம்
- தல விருட்சம்: தில்லை மரம்
- தீர்த்தம்: சிவகங்கை
தில்லை நடராஜர் ஆலயம் என்றாலே அறிந்து கொள்ள முடியாத பல தெய்வீக மர்மங்களும், ஆழ்ந்த ஆன்மீக ரகசியங்களும், தத்துவங்களும் நிறைந்த தலமாகும். அதன் முழுமையான ஆன்மீகத் தகவல்கள் எமக்குக் கிடைக்கவில்லை என்பதுவே உண்மையாகும்.
அந்த ரகசியங்கள் எல்லாம் வெளிப்படவேண்டிய காலத்தில் அதனை அறிய வேண்டியவர்கள் அறியும் வண்ணம் தாமாகவே வெளிப்படும் என்பதுவே உண்மையாகும். ஒரு ஆன்மீகவாதியின் கருத்துப்படி உனக்கு என்னென்ன தகவல்கள் கிடைக்க வேண்டுமோ அவையெல்லாம் உனக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அறிந்து, உணர்ந்து அதன்படி வாழ்ந்துகொள் என்பது அவரது கருத்தாகும்.
கி மு 7000 ஆண்டளவில் வாழ்ந்த இன்றும் எம்முடன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அகத்திய மாமுனிவர் சிதம்பரத்தின் பெருமையை பின்வருமாறு விளக்கியுள்ளார். சிதம்பரம் திருத்தலத்தை வேறு யாரும் அல்ல, பரமசிவனே தனக்காக அமைத்துக் கொண்டாராம். இதனை அறிந்த பார்வதிதேவி, ஒருவிதப் போட்டியின் காரணமாக, “நீர் ஒரு தலத்தை அமைத்தால், நானும் எனக்கென ஒரு தலத்தை அமைப்பேன்” என்று கூறி தனக்கான ஒரு ஆலயத்தினை உருவாக்கினாராம். அந்தத் திருத்தலமே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகும்.என அகத்தியர் குறிப்பிடுகிறார்.
எனவே அப்பனுக்கு சிதம்பரம், அம்மைக்கு மதுரை மீனாட்சிஅம்மன் என்பதுவே அந்த சிறப்பம்சமாகும். சிதம்பரம் கோவில் சென்று தரிசிக்க விரும்புபவர்கள் முதலில் மதுரை மீனாட்சியை வணங்கிவிட்டே சிதம்பரம் செல்லவேண்டும் என்பது ஐதீகமாகும். அதாவது அம்மையை வணங்கிவிட்டே அப்பனை தரிசிக்க வேண்டும் என்பது அதன் அர்த்தமாகும்.
திருத்தலத்தின் கட்டிட அமைப்பும் அதன் தத்துவமும்
பொதுவாக ஒரு ஆலய நிர்மாணம் எனப்படுவது புராதன புராண, இதிகாசங்களில் கொடுக்கப்பட்டுள்ள கட்டிடக் கலையின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப் படுகின்றன. புராண இதிகாசங்கள் எமது பண்டைய சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றவர்களால் எமக்கு கூறப்பட்ட வாழ்வியல் தத்துவங்களாகும். சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் ஆன்மீக வழிகாட்டியாக மட்டுமன்றி மருத்துவ ரீதியாகவும் எமக்கு பல சிகிச்சை முறைகளை விளக்கியுள்ளார்கள். உலகில் உள்ள கோவில்களுக்கெல்லாம் மூல கோவிலாக விளங்கும் சிதம்பரம் ஆலயத்தின் அமைப்பின் தத்துவமும் எமக்கு அதனை உணர்த்துகிறது. அதுமட்டுமன்றி ஆலய மைப்பின் தத்துவத்தினையும் சித்தர்களே எமக்கு கூறியுள்ளார்கள், விளக்கியுள்ளார்கள். இருந்தும் ஆலயத்தின் முழுச் சிறப்பம்சமும் எமக்குக் கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதனையே திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே”
- உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்: நம் உள்ளம் ஒரு பெரிய கோயில், அதாவது நமது உடல் ஒரு ஆலயத்தின் அமைப்புக்கு ஒப்பானது.
- வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்: எமது வாயானது ஒரு கோபுர வாசலுக்கு ஒப்பானது. எமது வாயில் இருந்து எப்போதும் சிறந்த கருத்துக்களே வெளிவரவேண்டும்.
- தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்: உண்மையான ஞானத்தால் தெளிவு பெற்றவர்களுக்கு, உடலினுள் இருக்கும் ஆன்மாவே சிவலிங்கமாகத் திகழ்கிறது.
- கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி விளக்கே: ஆன்மீக பாதையில் நாட்டம் கொண்டு உள்முகமாக இறைவனைத் தேடினால் நம்மைத் தவறான பாதையில் வழிநடாத்தும் ஐந்து புலன்களும், மாய இருளைப் போக்கும் மணி விளக்குகளாக மாறி இறைவனை அடைய வழிவகுக்கும்.
சிதம்பரம் ஆலய அமைப்பின் விளக்கங்கள்
- இந்தப் பிரபஞ்சத்தில் அமைந்துள்ள பஞ்ச பூதங்களில் ஆகாயமே முதலில் தோன்றியது. பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தத்துவத்தினை விளக்கும் தலமாக சிதம்பரம் கோவில் அமைந்துள்ளது. இதனால் உலகிலுள்ள ஆலயங்களுக்கெல்லாம் முதல் தலமாக (கோவிலாக) சிதம்பரம் ஆலயம் உள்ளது.
- பிரசித்தி பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து ஆரம்பிப்பது சிறப்பு என்பது ஒரு ஐதீகமாக உள்ளது. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பதுபோல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் ஆலயத்தினையே குறிக்கும்.
- தில்லை நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ஆகம விதிப்படி அமைந்துள்ளது. தில்லை நடராஜர் ஆலயத்தில் அமைந்துள்ள சுற்றுப்புற கட்டிடங்கள் ஆயிரம் வருடங்களுக்கு மேலானவை, பழமையானவை என நவீன தொழில்நுட்பக் கருவிகளின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது. பல மன்னர்களின் ஆட்சியின்போது வெளிப்புறக் கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்யப் பட்டிருக்கலாம், புதிதாகக் கட்டுப்பட்டிருக்கலாம். இருந்தும் தொன்மையான ஆலயத்தின் உட்புறம் எவ்வளவு காலத்திற்கு முந்தையது என்று யாராலும் கணிக்க முடியாமலுள்ளது.
- மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று பெருமைகளையும் இவ்வாலயம் கொண்டுள்ளது.
மூர்த்தி: நடராஜர் ஆலயத்தின் மூலவர் சுயம்புவாகத் தோன்றிய லிங்கவடிவில் அமைந்த “திருமூலநாதர் அல்லது ஆதிமூலநாதர்” என்ற பெயரில் அருள் செய்கிறார். இவர் பொன்னம்பலநாதா் எனவும் அழைக்கப்படுகிறார்.
குறிப்பு: இங்குள்ள நடராஜர் மூலவர் அல்ல உற்சவர் ஆகும். இருந்தும் நடராஜர் மூலவர் எனவும் அழைக்கப்படுகிறார்.
மூலவர்: கோயிலின் கருவறையில் (மூலஸ்தானத்தில்) நிலையாக அமர்ந்திருக்கும் முதன்மைக் கடவுள் மூலவர் என அழைக்கப்படுகிறார். மூலவர் பெரும்பாலும் கருங்கல்லால் செய்யப்பட்டிருப்பார்.
உற்சவர்: திருவிழா காலங்களிலும், வீதி உலாக்களின் போதும் கோயிலை வலம் வருவதற்காகக் கொண்டுவரப்படும் இறைவனின் திருவுருவம் உற்சவர் என அழைக்கப்படுகிறார். உற்சவர் பொதுவாக வெள்ளி, செம்பு அல்லது பஞ்சலோகத்தினால் செய்யப்பட்டிருப்பார்.
திருச்சிற்றம்பலத்தின் அமைப்பு:
மூலவரான சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்க வடிவிலுள்ள திருமூலநாதர் சித்சபையில் நடராஜருக்குப் பின்புறமாக மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார்.
(சுயம்பு என்றால் தானாகவே தோன்றியது அல்லது இயற்கையாக உருவானது என்று அர்த்தம். மனிதர்களால் உருவாக்கப்படாமல், இயற்கையாகவே உருவாகும் தெய்வீகத் திருமேனிகள் (குறிப்பாக லிங்கங்கள்) சுயம்பு என்று அழைக்கப் படுகின்றன. சில வேளைகளில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இருக்கலாம். காலப்போக்கில் அதன் சரித்திரம் மறைந்துபோக, பிற்காலத்தில் அந்த லிங்கம் கண்டு பிடிக்கப்படும்போது சுயம்பாகத் தோன்றியதாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது).
தலம்: இறைவன் வீற்றிருக்கும் ஆலயமும் அதன் சிறப்பும் தலம் எனப்படும். தில்லை நடராஜர் ஆலயம் பஞ்சபூத தலங்களில் “ஆகாயத் தலமாக” விளங்குகிறது. அது மட்டுமன்றி சிற்றம்பலம் (சிற்சபை), பொன்னம்பலம் (கனகசபை) ஆகிய பெரிய அம்பலங்களையும் (மண்டபங்கள்), சிற்சபைகளாக நிருத்தசபை (நடனசபை), தேவசபை மற்றும் ராஜசபை ஆகிய மூன்று அழகிய சபைகளைக் (சிறிய மண்டபங்கள்) கொண்டுள்ளதும் இத்தலத்தின் சிறப்பம்சமாகும்.
தீர்த்தம்: ஆலயத்தின் அருகில் அல்லது வளாகத்திற்குள் அமைந்திருக்கும் புனித நீர்நிலைகள் (கிணறு, கேணி, குளம், ஆறு) தீர்த்தம் எனப்படும். இக்கோயிலின் பிரதான தீர்த்தம் ‘சிவகங்கை’ தீர்த்தமாகும். இது தவிர பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் உள்ளிட்ட பல புனித தீர்த்தங்களும் இவ்வாலயத்தினுள் அமைந்துள்ளன.
- தில்லை நடராஜர் ஆலயம் திருமூலராலும் வணங்கப்பட்டுள்ளது. திருமூலர் தான் எழுதிய திருமந்திரம் என்ற நூலின் ஏடுகளை தில்லை நடராஜர் ஆலயத்தின் கொடி மரத்துக்குக் கீழாகப் புதைத்து வைத்தார் எனவும், பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அங்கு சென்ற திருஞான சம்பந்தரால் வெளிக்கொணரப் பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. அது மட்டுமன்றி திருமூலர் தனது இவ்வுலக வாழ்வை முடிக்கும்போது தில்லை நடராஜர் ஆலயத்தின் மூலவரான சிவலிங்க வடிவிலுள்ள திருமூலநாதருடன் ஐக்கியமானார், முக்தியடைந்தார் எனவும் வரலாறுகள் கூறுகின்றன. இத்தலத்தில் திருமூலரின் தனிச் சன்னதி ‘ஸ்ரீ மூலன் சன்னதி’ என்ற பெயரில் அமைந்துள்ளது.
- புலிக்கால் முனிவர் என்ற வியாக்கிரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி கொடுத்தான் என கோயில்புராணம் கூறுகிறது. இரு முனிவர்களுக்கும் இறைவன் நடனக் காட்சியளித்த இடமே சிற்றம்பலம் என்ற அரங்கமாகும். தான் கண்ட நடனக் காட்சியை வைத்து பதஞ்சலி முனிவர் நடராஜரை பிரதிஷ்டை செய்தார் என்ற புராண கதையும் உள்ளது. அன்று தொட்டு இறைவன் அங்கே ஆனந்தத் தாண்டவ மூர்த்தியாய் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள் வழங்கி வருகின்றார்.
பதஞ்சலி முனிவர் ஆகம முறைப்படி சிதம்பரம் கோவிலில் நடராஜரை பிரதிஷ்டை செய்தார் எனவும் அந்தக் கோவிலின் அன்றாடப் பணிகள், பூஜைகள் எப்படி நடைபெற வேண்டும், கோவிலை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் உருவாக்கி வைத்தார் எனவும் கோவில் புராணம் கூறுகிறது. பதஞ்சலி முனிவர் கூறிய நடைமுறைகள் இன்றும் ஆலயத்தில் கடைப்பிடிக்கப் படுகின்றன.
- ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணம் இருக்கும். தல புராணம் என்றால் ஒரு குறிப்பிட்ட ஆலயத்தின் (தலத்தின்) வரலாறு, அதன் புனிதத்தன்மை, அங்குள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றின் பெருமை, மற்றும் அங்கு வழிபட்டு முக்தி அடைந்தவர்களின் வரலாறுகளை விளக்கும் பதிவு அல்லது நூல் தலபுராணம் எனப்படும். சிதம்பரம் ஆலயத்துக்கு “புலியூர் புராணம்”, “கோவில் புராணம்”, “சிதம்பரப் புராணம்” என மூன்று தல புராணங்கள் உள்ளன.
- சிதம்பம் தில்லை நடராஜர் கோவிலுக்கு தனிப்பட்ட முறையில் பஞ்சபுராணப் பாடல்கள் பாடப்பட்டிருப்பது அதன் சிறப்பாகும்.
குறிப்பு: பொதுவாக எல்லாக் கோவில்களுக்கும் தனிப்பட்ட பஞ்ச புராணப் பாடல்கள் இல்லாதபோது பொதுவான பஞ்சபுராணம் பாடப்படும்.
பஞ்சபுராணம் என்பது சைவக் கோவில்களில் வழிபாட்டின் போது, இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளின் போது, மந்திரங்களுடன் சேர்த்து இந்த ஐந்து பாடல்களும் பாடப்படுகின்றன. இறைவனைப் போற்றிப் பாடுவதற்குரிய ஐந்து தமிழ் திருமுறைகளிலிருந்து தலா ஒரு பாடல் வீதம் மொத்தம் ஐந்து பாடல்களைப் பாடும் முறையாகும்.
ஐந்து திருமுறைகளானவை
- தேவாரம் – திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரால் பாடப்பட்டது.
- திருவாசகம் – மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
- திருவிசைப்பா – திருமாளிகைத்தேவர் உள்ளிட்ட ஒன்பது அடியார்களால் பாடப்பட்டது.
- திருப்பல்லாண்டு – சேந்தனாரால் பாடப்பட்டது.
- பெரியபுராணம் – சேக்கிழாரால் பாடப்பட்டது.
- தில்லை நடராஜர் ஆலயத்தில் மனதை ஒருமுகப்படுத்தி ஆழந்த தியான நிலையில் இருந்தால், தில்லை நடராஜர் கையில் உள்ள உடுக்கையிலிருந்து எழும் புனிதமான ஒலியை, நாதத்தை கேட்கும் தெய்வீக அனுபவத்தைப் பெறும் பாக்கியம் கிடைக்கும் என அகத்தியர் குறிப்பிடுகிறார்.
- சைவப் பெரியோர்களான நாயன்மார்களில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் உட்பட பல நாயன்மார்கள் இங்கு வந்து தில்லை நடராஜரை வணங்கி தேவாரங்கள் பாடியதால் இது பாடல்பெற்ற தலம் என்று அழைக்கப் படுகின்றது. அது மட்டுமன்றி இத்தலம் பன்னிரண்டு திருமுறைகள் அனைத்திலும் பாடப்பட்டுள்ள தலமெனும் பெருமையைக் கொண்டதாகும்.
- திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குருபூஜை பெரிய திருவிழாபோல இத்தலத்தில் கொண்டாடப் படுகிறது.
- 1981-ஆம் ஆண்டு சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் ஆரம்பிக்கப்பட்ட “நாட்டியாஞ்சலி” என்ற விழா, தற்போது உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற நடனக் கலைஞர்களை ஈர்க்கும் மாபெரும் கலை விழாவாக வளர்ந்துள்ளது. இது
நடராஜருக்கு நாட்டியக் கலைஞர்கள் தங்கள் நடனக் கலையை அர்ப்பணிக்கும் ஒரு புகழ்பெற்ற பாரம்பரிய நடனத் திருவிழாவாகும். இவ்விழா ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி அன்று தொடங்கி, பல நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இங்கே பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், ஒடிசி, கதக் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நடனங்கள் ஆடப்படுகின்றன.
- இந்து மதத்தில் இருந்து புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த தலமாக மாற்ற முயன்றான்.என்றும் அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார் எனவும் ஒரு புராண வரலாறு உண்டு.
- தில்லை நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தேர்த்திருவிழாவும், மார்கழி மாதம் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்திருவிழாவும் என இரு திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன. அத்துடன் அங்கு நடைபெறும் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று திருவாதிரைக்களி சாப்பிட்டால் சிறப்பு என்பது ஐதீகம்.
சிதம்பரம் நடராசருக்கு தினந்தோறும் ஆறு காலப் பூசைகள் நடைபெறுகின்றன.
- திருப்பள்ளியெழுச்சி: அதிகாலை நடைபெறும்
- இரண்டாம் காலம் : முற்பகல் 10:00 மணிக்கு ந டைபெறுகிறது
- உச்சிகாலம்: நண்பகல் 12:00 மணிக்கு நடைபெறும்.
- சாயரட்சை: மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.
- இரண்டாம் ஜாமம்: இரவு 8:00 மணிக்கு நடைபெறும்.
- அர்த்தஜாமம்: இரவு 10:00 மணிக்கு நடைபெறும்.
நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்கள் நடைபெறுகின்றன.
தில்லை நடராஜருக்கு ஒரு ஆண்டில் ஆறு (6) முறை மட்டுமே மகா அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகங்கள் குறிப்பிட்ட நட்சத்திர மற்றும் திதி நாட்களில் நடைபெறுகின்றன. (மனிதர்களுக்கு ஒருநாள், தேவர்களுக்கு ஒரு ஆண்டாக கருதப்படுகிறது. அதனால் மனிதர்கள் ஆலயங்களில் தினமும் ஆறுகாலப் பூசை செய்வதுபோல தேவர்கள் தில்லை நடராஜருக்கு செய்யும் பூசையாக வருடத்தில் ஆறு நாட்கள் நடைபெறுகின்றன என்பது ஒரு ஐதீகமாகும்).
மகா அபிஷேகம் நடைபெறும் தினங்கள்
- சித்திரை மாதம், திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலையில் அபிசேகம் நடைபெறும்.
- ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம் நடைபெறும்.
- ஆவணி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம் நடைபெறும்.
- புராட்டாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிசேகம் நடைபெறும்.
- மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபையில் அதிகாலையில் அபிசேகம் நடைபெறும்.
- மாசி மாதம், பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிசேகம் நடைபெறும்.
நடராஜர் வருடத்தில் இரண்டு முறை மட்டுமே கோயிலின் நான்கு வீதிகளிலும் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அவை:
- ஆனித்திருமஞ்சனம் (ஆனி மாதம் உத்திர நட்சத்திரம்)
- ஆருத்ரா தரிசனம் (மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடைபெறும்)
கோவில் அமைப்பு
கோபுரங்கள்
நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு கோபுரமாக நான்கு ராஜ கோபுரங்கள் அமைந்துள்ளன. இக்கோபுரங்கள் ஏழு அடுக்குகளைக் கொண்டவையாகவும் அண்ணளவாக 135 அடி உயரம் உடையனவாகவும் அமைந்துள்ளன
கிழக்கு கோபுரத்தில் நூற்றியெட்டு சிவதாண்டவ நடன நிலைகளை விளக்கும் சிற்பங்களைக் காணமுடியும். அதாவது ஆடல் கலையின் (நடன நிலைகளை) அனைத்து நுட்பங்களையும் விளக்குகின்றது. இதிலிருந்தே பரதநாட்டிய நடனத்தின் அசைவுகள் தோன்றியது.
ஏனைய கோபுரங்களில் பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோரது சிலைகளும் உள்ளன.
அது மட்டுமன்றி இங்குள்ள நான்கு கோபுரங்களும் சிறப்புக் களஞ்சியங்களாக உள்ளன. கோபுர உச்சியில் உள்ள பீடத்தின் உட்புறத்தில் நெல் மற்றும் நவதானியங்கள் களஞ்சியப் படுத்தப் படுகின்றன. அதாவது நாட்டில் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை அழிவுகள் ஏற்படும்போது பயிர்கள் அழிந்தால், கோபுர உச்சியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்களை எடுத்து பயிர் செய்கைக்குப் பயன்படுத்தப்படும். தானியங்கள் பொதுவாக பன்னிரண்டு வருடங்களுக்குப் பாதுகாப்பகச் சேமித்து வைக்கப்படலாம். அதனாலேயே பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற்று பழைய தானியங்களை எடுத்துவிட்டு புதிய தானியங்கள் அங்கு சேமிக்கப்படுகின்றன. அது மட்டுமன்றி நவதானியங்களில் அடங்கியுள்ள ஒவ்வொரு தானியமும் தான் தொடர்புடைய ஒவ்வொரு கோள்களில் இருந்தும் கதிர்களை ஈர்த்து கோபுரத்தின் வழியாக அங்கு கடந்து செல்பவர்களுக்கு நன்மைகளை அளிக்கின்றன என்பதுவும் ஒரு அறிவியல்பூர்வமான உண்மையாகும்.
ஆலய வளாகத்தினுள் அமைந்துள்ள சிறிய கோவில்கள்
சிதம்பரம் நடராசர் ஆலய வளாகத்தினுள் பல தனியான கோயில்களும் அமைந்திருக்கின்றன.
- சிவகாமசுந்தரி அம்மன் கோவில் – மூன்றாவது பிரகாரத்தில் (வீதி) வடக்குப் பகுதியில் சிவகாமசுந்தரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலய சந்நிதியில் யமன் மற்றும் சித்திரகுப்தனுக்கும் சிலைகள் அமைந்துள்ளன.
- பாண்டிய நாயகர் கோவில் – சிவகாம சுந்தரி அம்மன் கோவிலின் வடக்குப் புறமாக, பாண்டிய நாயகர் கோவில் அமைந்துள்ளது. இது ஒரு முருகன் கோவிலாகும். இக்கோவிலில் ஆறுமுகம் கொண்ட முருகன், வள்ளி மற்றும் தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
- நவலிங்க ஆலயம் – நவகிரகங்களால் வழிபடப்பட்ட இலிங்கங்கள் உள்ள கோவிலாகும்.
- வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் வித்தியாசமான தோற்றத்தில் அமைந்த சிவ வடிவங்களைப் பார்க்க முடியும்.
தில்லை நடராஜர் ஆலயத்தில் அமைந்துள்ள சந்நிதிகள்.
தில்லை நடராஜர் ஆலயம் முழுவதும் பல தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன.
- முதன்மை சந்நிதி: ஆனந்த நடராஜர் சந்நிதி. இதுவே இத்தலத்தின் மிக முக்கிய சந்நிதியாகும். பொன்னம்பலத்தில் (கனகசபை) சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடும் கோலத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்.
- மூலவர் சந்நிதி: நடராஜருக்குப் பின்புறமாக உள்ள கருவறையில் மூலவரான திருமூலட்டானேஸ்வரர் (திருமூலநாதர்) லிங்க வடிவில் இருந்து அருள் பாலிக்கிறார். இச் சந்நிதி ‘திருமூலட்டானம்’ என அழைக்கப்படுகிறது. சிவகலைகள் அனைத்தும் காலையில் சிதம்பரம் நடராசர் கோயிலிருந்து புறப்பட்டு உலகில் உள்ள கோயில்களுக்குச் சென்று அருள்பாலித்துவிட்டு இரவில் மீண்டும் இந்த மூலத்தான திருமூலநாதர் லிங்கத்தில் வந்து ஒடுங்குவதாக ஐதீகம். இவ்வாறு அனைத்து சிவகலைகளும் சிதம்பரத்தில் ஒடுங்குவதால் பல்வேறு தலங்களுக்கு சென்று வழிபடுவதற்குப் பதிலாக தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் அர்த்தசாம பூசையில் கலந்து கொள்வது ஈடானதாகக் கருதப்படுகிறது.
- சிவகாமசுந்தரி அம்பாள் சந்நிதி: நடராஜர் சந்நிதிக்கு அருகில் அமைந்துள்ள அம்மனின் சந்நிதி.
- கோவிந்தராஜப் பெருமாள்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி, நடராஜர் சந்நிதி அருகிலேயே அமைந்துள்ளது.
- காளிகாம்பாள் சந்நிதி: மூலக்கோவிலுக்கு வெளியே நிருத்த சபையில் அமைந்துள்ள சந்நிதி.
- திருமூலர் மற்றும் கம்பத்து இளையனார் ஆகியோரின் சந்நிதிகள்.
- நால்வர் சந்நிதி: அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோரின் சந்நிதிகள்.
- முனீஸ்வரர் சந்நிதி: வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களுக்குக் காட்சியளித்த இடத்தின் அருகிலுள்ள சந்நிதி.
- சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் மற்றும் தில்லைக் காளி ஆகிய தெய்வங்களுக்கும் சந்நிதிகள் அமைந்துள்ளன.
- முக்குறுணி விநாயகர், திருமுறை காட்டிய விநாயகர், பொல்லாப் பிள்ளையார், வல்லப கணபதி, மோகன கணபதி, கற்பக விநாயகர், நர்த்தன விநாயகர், திருமூல விநாயகர் என பல்வேறு விநாயகர் சந்நிதிகள் இக் கோயிலில் அமைந்துள்ளன.
- சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் இருப்பதை இங்குள்ள பொல்லாப் பிள்ளையாரே நம்பியாண்டார் நம்பியிடம் கனவில் கூறி அவற்றை வெளிக்கொணர்ந்தார் என்பது வரலாறு.
குறிப்பு: ஆலயத்தில் சந்நிதி என்பது இறைவன் அல்லது ஏனைய தெய்வங்கள் (பரிவாரத் தெய்வங்கள்) எழுந்தருளியிருக்கும் கருவறை மற்றும் அதன் முன்னால் நின்று வழிபடும் பகுதியாகும்.
நடராஜர் ஆலயத்துக்கு கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றால் நேரடியாக நடராஜர் சந்நிதிக்குப் போவதுபோல இருக்கும். ஆனால் தெற்கு வாசல் வழியாக உள்ளே செல்லும்போது வலதுபுறமாக பாண்டிநாயகர் சுப்பிரமணியர் சந்நிதி இருக்கும். அந்த சந்நிதிக்கு எதிராக நவலிங்கம் (ஒன்பது லிங்கங்கள்) சந்நிதி அமைந்துள்ளது. அதற்கு அடுத்ததாக துர்க்கை அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அதற்கு அடுத்து தில்லைநாயகி சிவகாமி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.
தில்லை நடராஜர் ஆலயத்தின் தெற்கு வீதியில் அமைந்துள்ள கோபுரத்தின் உட்புறமாக மோட்ச தீபம் எரிக்கப்படும் பகுதி அமைந்துள்ளது. மோட்சதீபம் எனப்படுவது இறந்தவர்கள் இறைவனது திருவடிகளை அடையவேண்டும் என்பதற்காக ஏற்றப்படும் தீபமாகும்.
கோவில் – ஆலயம்
கோவில் என்றால் கருவறையையும் மூலவரைம் குறிக்கும். ஆலயம் என்பது கருவறை, பிரகாரம், கோபுரங்கள், பிற சந்நிதிகள் என ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்குவதாகும் என்று பொருள் கொள்ளப்படும். பொதுவாக கோவில் என்று கூறினால் அது சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலையே குறிக்கும். அதாவது உலகில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களுக்கும் சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயமே மூலத்தானமாகும் (கருவறை) என்பதனாலேயே இத்திருத்தலம் கோவில் என அழைக்கப்படுகிறது.
உருவம், அருவம், அருவுருவம்
தில்லை நடராஜர் ஆலயத்தில் சிவன் உருவ நிலையில் நடராஜராகவும், அருவ நிலையில் சிதம்பர ரகசிய நிலையில் இருந்தும், அருவுருவ நிலையில் திருமூலட்டானேஸ்வரர் என்ற பெயரில் லிங்க வடிவில் இருந்தும் அருள்பாலிக்கிறார்.
பொதுவாக தியானிப்பதற்கு (மனதை ஒருமித்து வழிபடுவதற்கு) உருவமே இலகுவானதாகும். அருவுருவம் ஓரளவு தியானிக்கலாம். ஆனால் அருவம் பொதுவாக எல்லோராலும் தியானிக்க முடியாது என்பதாலேயே இறைவனாலேயே அருவுருவமாக லிங்க நிலையிலும் உருவ நிலையில் நடராஜராகவும் தில்லையில் அருள்புரிகிறார்.
இந்து சமயத்தில் கடவுளின் திருமேனிகள் உருவம், அருவம், அருவுருவம் என மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இறைவனை மனிதர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்காகவும், வழிபடுவதற்கு ஏற்றவாறும் இந்த மூன்று நிலைகளும் அமைந்துள்ளன.
உருவம்: கண்ணால் பார்த்து அடையாளப்படுத்தக்கூடிய வடிவம் உருவம் எனப்படும். மனித, விலங்கு உருவங்கள். விநாயகர், முருகன் ஆகிய கடவுளின் வடிவங்கள். தில்லையில் அமைந்துள்ள நடராஜர் உருவ நிலையில் இருந்து அருள்பலிக்கிறார்.
அருவம்: உருவமற்ற நிலை. கண்களுக்குப் புலப்படாத, எல்லைகளற்ற ஆனால் எம்மால் அது இருப்பதனை உணரக்கூடிய நிலை. காற்று அருவத்திற்கு ஒரு உதாரணமாகும். எமது கண்களால் காணமுடியாத ஆனால் எம்மால் உணரக்கூடிய இறைநிலை அருவ நிலையாகும். தில்லை நடராஜர் ஆலயத்தில் அமைந்துள்ள “சிதம்பர ரகசியம்” என்ற திறந்தவெளி என்பது இறைவனை அருவ நிலையில் வைத்து வழிபடும் நிலையாகும்.
அருவுருவம்: அருவுருவம்: உருவத்திற்கும், அருவத்திற்கும் இடைப்பட்ட நிலை அருவுவம் எனப்படும். அதாவது குறிப்பிடக்கூடிய வடிவம் இல்லாமல் இருப்பது. முழுமையான உருவம் இல்லாமல் இருப்பது அருவுருவம் எனப்படும். அதாவது உடலின் அங்கங்களான கண், காது, மூக்கு, தலை, கை, கால்கள் இல்லாமல் இருக்கும் தோற்றம் அருவுருவம் எனப்படும். (உதாரணமாக தலையற்ற மனித உடலை அல்லது தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட உடலை ‘முண்டம்’ என்று குறிப்பிடுவர்). அருவுருவம் என்பது முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஆனால் எளிமையாக வழிபட இந்த வடிவம் உதவுகிறது. சிவலிங்கம் ஒரு அருவுருவ தோற்றம். நெருப்பு ஒரு அருவுருவ தோற்றம். அது மட்டுமன்றி நாம் மரங்களுக்கு கீழாக ஒரு கல்லை வைத்து அதனை விநாயகர், முருகன் என்று வழிபடும்போது அக்கல் ஒரு அருவுருவ தோற்றமாகும். தில்லையில் மூலத்தானத்தில் அமர்ந்திருக்கும். “திருமூலட்டானேஸ்வரர் அல்லது ஆதிமூலநாதர்” என்று அழைக்கப்படும் லிங்கம் ஒரு அருவுருவ தோற்றமாகும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஐந்து சபைகள் உள்ளன.
சிற்றம்பலம் (சித்சபை): இங்கே நடராஜர் உருவ வடிவில் எழுந்தருளி இருக்கிறார். நடராஜருக்குப் பின்னால் அமைந்துள்ள கருவறையில் அருவுருவ வடிவில் லிங்கமாக இருந்து அருள்பாலிக்கும் மூலவரின் பெயர் திருமூலநாதர் அல்லது திருமூலட்டானேஸ்வரர் ஆகும். இவர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இவர் அமர்ந்துள்ள கருவரை திருமூலட்டானம் என அழைக்கப்படுகிறது. ‘சிதம்பர ரகசியம்’ என்ற சிவனின் அருவ தோற்றமும் இங்கேயே அமைந்துள்ளது.
புலிக்கால் முனிவர் என்றழைக்கப்படும் வியாக்கிரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் சிற்றம்பலத்தில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்தான் என கோயில்புராணம் கூறும். இச்சபையில் (சிற்றம்பலம்) இறைவன் ஆடிய நடனம் “ஆனந்த நடனம்” என அழைக்கப்படுகிறது.
பொன்னம்பலம் (கனகசபை): இது கனகசபை என்றும் அழைக்கப்படுகிறது. நடராஜருக்கு மகா அபிஷேகங்கள் இங்கு நடைபெறும். இங்கு அமைந்துள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு காலப் பூசைகள் நடைபெறுகிறது. இங்கு அமைந்துள்ள ரத்தினத்தால் ஆன இரத்தின சபாபதிக்கு தினமும் அபிஷேகம் நடைபெறுகிறது. இதன் விமானம் அதாவது மேற்கூரை பொற் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இந்த சபைக்கு, முதலாம் பராந்தகன் என்ற சோழ மன்னன் பொற்கூரை வேய்ந்தான் என்றும் புராண வரலாறு கூறுகிறது.
நிருத்தசபை (தேர் அம்பலம், நடனசபை): சிவபெருமான் காளிதேவியுடன் நடனப் போட்டி நடாத்திய சந்நிதி. இங்கு ஆடப்பட்ட நடனம் ஊர்த்தவ தாண்டவம் என அழைக்கப்படுகிறது. இந்த பீடம் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தேரின் வடிவில் அமைந்துள்ளது.
பேரம்பலம் (தேவசபை): விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியுள்ள மண்டபம்.
இராஜ சபை: ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் சிற்பக்கலையையும், கட்டடக் கலையையும் வெளிப்படுத்தும் ஆயிரம் தூண்கள் கொண்ட அழகிய மண்டபம் ஆகும். ஆனி திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசனத்தின் பொழுது சிவகாமி அம்மையுடன் நடராஜர் தரிசனம் கொடுக்குமிடம். அக்காலத்தில் சோழ மன்னர் மரபில் முடிசூடப் பெறுபவர்களுக்கு இம்மண்டபத்தில் வைத்தே முடிசூட்டு விழா நடைபெற்று வந்தது.
தில்லை சிதம்பரம் கோவில் கட்டிட அமைப்பும் அதன் தத்துவங்களும்
மனிதரின் உடல் அமைப்பின் தத்துவத்தினை வெளிப்படுத்துவது போலவே நடராசர் கோவிலின் கட்டிட அமைப்பும் அமைந்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் வெளிப் பிரகாரத்தில் (வீதியில்) ஒன்பது நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. அத்துடன் நான்கு திசைகளுக்கும் ஒவ்வொன்றாக நான்கு கோபுரங்கள் அமைந்துள்ளன.
- ஒன்பது நுழைவு வாயில்கள் மனித உடலில் இருக்கும் ஒன்பது (நவ துவாரங்களை) வாயில்களை குறிகின்றது.
- நான்கு கோபுரங்களும் ஆன்மா இறைவனை அடைவதற்குரிய நான்கு வழிகளை உணர்த்துகின்றது. இந்து சமயத்தில் ஆன்மா இறைவனை அடைவதற்குரிய நான்கு வழிகள் கூறப்பட்டுள்ளன அவையாவன சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகும்.
- சரியை (தாச மார்க்கம்): இறைவனுக்குத் தொண்டு செய்தல். அதாவது, கோயிலைப் பெருக்குதல், திருவிளக்கு ஏற்றுதல், நந்தவனம் அமைத்தல் போன்ற உடல் சார்ந்த பணிகளைச் செய்தல் சரியை தொண்டு எனப்படும். திருநாவுக்கரசர் சரியைத் தொண்டு செய்து முக்தியடைந்தார்.
- கிரியை (சற்புத்திர மார்க்கம்): சரியைத் தொண்டுடன் மந்திரங்களை உச்சரித்து அர்ச்சனை செய்தல் போன்ற மனம் மற்றும் செயல் சார்ந்த வழிபாடுகள். திருஞானசம்பந்தர் கிரியைத் தொண்டு செய்து முக்தியடைந்தார்.
- யோகம் (சக மார்க்கம்): புற வழிபாடுகளைக் கடந்து, மனதை ஒருமுகப்படுத்தி அகத்தில் இறைவனை உணரும் தியானப் பயிற்சி. சுந்தரமூர்த்தி நாயனார்.யோகப் பயிற்சி செய்து முக்தியடைந்தார்.
- ஞானம் (சன்மார்க்கம்): இறைவனின் உண்மைப் பொருளை அறிவால் உணர்ந்து, தானும் இறைவனும் ஒன்றான நிலையை அடைதல். இதுவே முக்திக்கான இறுதிப் படியாகும். மாணிக்கவாசகர் சன்மார்க்க நெறி நின்று முக்தி அடைந்தார்.
மனித உடலானது அன்னமயகோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் என்னும் ஐந்து கோசங்களை (தூல, சூக்கும உடல்களால் ஆனது) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் (வீதிகள்) அமைந்துள்ளன.
சிவகங்கை தீர்த்த குளம் அமைந்துள்ள பகுதியில் சிறு கருங்கல் தூண் ஓன்று நாட்டப்பட்டுள்ளது. அங்கியிருந்து நான்கு ராஜகோபுரங்களையும் பார்த்து தரிசனம் செய்ய முடியும்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ள ஒரு சிறிய கோவில் அமைந்துள்ளது. ‘திருத்தொண்டத் தொகையில்’ குறிப்பிடப்படும் ஒன்பது தொகையடியார்களை போற்றும் வகையில், இந்த ஒன்பது லிங்கங்களை எண்ணி வழிபடுகின்றனர். இத்திருக் கோயில் ‘நவலிங்கக் கோயில்’ எனவும் அழைக்கப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாஸ்தாவின் (அய்யனார்) எட்டு அவதாரங்கள் கோயிலின் வேறு வேறு பிரகாரங்களில் (வேறு வேறு வீதிகளில்) எட்டு திசைகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த எட்டு அவதாரங்களும் அத்தலத்தை வலம் வருவதாக ஐதீகம். அந்த எட்டு அவதாரங்களாவன.
- மகா சாஸ்தா
- ஜகன்மோகன சாஸ்தா
- கிராத சாஸ்தா (சில குறிப்புகளில் ராக சாஸ்தா)
- பால சாஸ்தா
- தர்ம சாஸ்தா
- விஷ்ணு சாஸ்தா
- பிரம்ம சாஸ்தா
- ருத்ர சாஸ்தா.
குறிப்பு: இவ்வுலகிலுள்ள ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்காக சிவனும் சக்தியும் இணைந்து சில அவதாரங்களை எடுத்துள்ளார் என விஷ்ணு புராணம் கூறுகிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நோக்கத்திற்காக வழிபடப் படுகின்றன. இப்படியான அவதாரங்கள் சாஸ்தா என அழைக்கப் படுகின்றது. சாஸ்தா என்றால் “காவல் தெய்வம்” அல்லது “வழி நடத்துபவர்” என்று பொருள். உதாரணமாக தமிழ்நாட்டின் கிராமங்களில் வழிபடப்படும் ஐயனார் ஒரு சாஸ்தாவாகும்.
- மஹா சாஸ்தா: இவரை வழிபடுவதால் வாழ்வில் முன்னேற்றாம் ஏற்படும். உடல் சம்பந்தப்பட்ட தீராத நோய்கள் மற்றும் உடல் உபாதைகள் விலகும், மன உளைச்சல் நீங்கி ஆழ்ந்த மனநிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம்.
- ஜகன்மோகன சாஸ்தா: (விஷ்ணுவின் யோக நித்திரை கோலம்) இவரை வழிபடுவதால் மனஅமைதி, தீராத நோய்கள் நீங்குதல் மற்றும் ஆன்மீக தெளிவு (ஞானம்) கிடைக்கும் என்பது ஐதீகம்.
- கிராத சாஸ்தாவை (வேடுவ வடிவிலான சாஸ்தா) வழிபடுவதால், எதிரிகளை வெல்லும் ஆற்றல், எதிர்ப்புகள் விலகுதல் மற்றும் தடைகளைத் தகர்த்து நினைத்த காரியத்தில் வெற்றி பெறும் தைரியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- பால சாஸ்தா: குழந்தை வடிவில் (பாலன்) அருள்பாலிக்கும் இவரை வழிபடுவதால், குழந்தைச் செல்வம் கிடைப்பது மற்றும் கல்வி அறிவு, ஞாபகசக்தி சிறந்து விளங்குவது போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
- தர்ம சாஸ்தா: இவர் சபரிமலையில் ஐயப்பனாக காட்சி தருகிறார். ஐயப்பன் தர்மத்தின் காவலாகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் வாழ்க்கையில் நேர்மறையான எண்ணங்கள், அமைதி மற்றும் மன உறுதி கிடைக்கும் என்பது ஐதீகம்.
- விஷ்ணு சாஸ்தாவை வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும், மன அமைதியும் கிட்டும் என்பது ஐதீகம்.
- பிரம்ம சாஸ்தாவை வழிபடுவதால் அறிவு வளர்ச்சி, நல்லொழுக்கம், நினைவாற்றல் மற்றும் ஞானம் பெருகும் என்பது ஐதீகம்.
- ருத்ர சாஸ்தாவை வழிபடுவதால் தீய சக்திகள் விலகுதல், மனப் பயம் நீங்குதல் மற்றும் பாதுகாப்பு ஆகிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஆலயத்தில் அமைந்துள்ள அம்பலன்கள் (சபைகள்)
- சிற்சபை (சிற்றம்பலம்)
- கனகசபை (பொன்னம்பலம், எதிரம்பலம்)
- நிருத்தசபை (தேர் அம்பலம், நடனசபை)
- தேவசபை (பேரம்பலம்)
- ராஜசபை
சிற்றம்பலம் (சிற்சபை): இதுவே கருவறை ஆகும். இங்குதான் நடராஜர் ஆனந்தத் தாண்டவம் புரிகிறார். இந்த சபை ‘சிதம்பர ரகசியம்’ மற்றும் ஆகாய தத்துவத்தைக் குறிக்கிறது.
சிற்றம்பலம் தங்கப்பூச்சு பூசப்பட்ட செப்பு விமானத்தில் ஒன்பது கலசங்களுடன் கிழக்கு மேற்காக நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது. தெற்குப்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் சந்தனப் பலகைகளால் அடைக்கப்பட்டுள்ளது.
வியாக்கிரபாத முனிவருக்கும், பதஞ்சலி முனிவருக்கும் தைப்பூசத் திருநாள் அன்று தில்லையில் இறைவன் ஆனந்த நடனத் திருக்காட்சி அளித்த இடம் சிற்றம்பலம் ஆகும். இங்குதான் நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
சிற்றம்பலத்தின் அமைப்பு:
சிற்றம்பலத்தில் முன்புறமாக நடராஜப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இவரே முதல் மூர்த்தியாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறார்.
நடராஜ சந்நிதிக்கான கொடிமரம் தங்கத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.
மூலவரான திருமூலநாதர் சிவலிங்க வடிவில், நடராஜப் பெருமானுக்கு பின்புறமாக அமைந்துள்ள கருவறையில் (மூலஸ்தானம்) எழுந்தருளியுள்ளார்.
சிற்றம்பலம் மரத்தினால் ஆன மண்டபமாகும். இது அதன் தொன்மையைக் காட்டுகிறது.
பொற்சபைக்கும் சித்சபைக்குமிடையே உள்ள கூரைப் பகுதியில் 96 துளைகளுடன் கூடிய 224 பொற் தகடுகள் பொருத்தப் பட்டுள்ளன.
சிதம்பர ரகசியத்தை கனகசபையிலிருந்து 96 துவாரங்கள் வழியாக தரிசிக்க வேண்டும்.
இந்த 96 துவாரங்கள் 96 தத்துவங்களைக் குறிப்பிடுகின்றன. ஒரு உடலினுள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை சித்தர்கள் கண்டறிந்துள்ளார்கள் அதாவது ஒரு உடல் இயங்கும் விதத்தை 96 வகையான தத்தவங்களின் அடிப்படையில் சித்தர்கள் வகுத்துள்ளனர். அவையாவன ஆன்ம தத்துவங்கள் – 24, உடலின் வாசல்கள் (நவ துவாரங்கள்) – 9, தாதுக்கள் – 7, மண்டலங்கள் – 3, முக்குணங்கள் – 3, மும்மலங்கள் – 3, நோய்கள் – 3, விகாரங்கள் – 8, ஆதாரங்கள் – 6, வாயுக்கள் – 10, நாடிகள் – 10, அவத்தைகள் – 5, ஐவுடம்புகள் – 5 ஆகும்.
சித்சபையின் கூரையில் பொருத்தப்பட்டுள்ள 224 தங்கத் தகடுகள் (அடைப்புப் பலகைகள்), இந்து சமய தத்துவத்தின்படி 224 உலகங்களைக் குறிப்பிடுகின்றன
சைவ சித்தாந்தக் கோட்பாட்டின்படி இந்தப் பிரபஞ்சத்தில் 224 புவனங்கள் (உலகங்கள்) அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆன்மாக்கள் தங்களின் வினைப்பயனுக்கு ஏற்ப இந்தப் புவனங்களில் சஞ்சரித்து தமது வினைப்பயனை அனுபவித்துக் கழித்துக் கொள்வதாக கூறுகின்றது.
நடராஜர் கோயிலில் உள்ள பொன்னம்பலத்தில் நடராஜருக்கும் கருவறைக்கு செல்லும் வழியில் உள்ள இடைநிலை மண்டபத்தில் அமைந்துள்ள 6 தூண்களும் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட 6 சாஸ்திரங்களைக் குறிக்கின்றன.
ஆறு சாஸ்திரங்கள்:
- நியாய சாஸ்திரம்: கௌதம முனிவரரால் எழுதப்பட்டது. தர்க்கம் மற்றும் நியாயமான வாதங்கள் மூலம் உண்மையை அறிந்துகொள்வது பற்றி விளக்குகின்றது.
- வைசேடிக சாஸ்திரம்: கணாத முனிவரரால் எழுதப்பட்டது. பிரபஞ்சம் எவற்றால் ஆனது என்பதை விளக்குகின்றது.
- சாங்கிய சாஸ்திரம்: கபில முனிவரரால் எழுதப்பட்டது. இயற்கை மற்றும் ஆன்மா பற்றியும், படைப்பின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் விளக்குகின்றது.
- யோக சாஸ்திரம்: பதஞ்சலி முனிவரரால் எழுதப்பட்டது. நோக்கம்: மனதை ஒருமுகப்படுத்துதல், தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் ஆன்மீக விடுதலையை அடைவது பற்றி விளக்குகின்றது.
- மீமாம்ச சாஸ்திரம்: ஜைமினி முனிவரரால் எழுதப்பட்டது. வேதங்களில் கூறப்பட்டுள்ள சடங்குகள், யாகங்கள் மற்றும் தர்மத்தின் வழிகளை பற்றி விளக்குகின்றது.
- வேதாந்த சாஸ்திரம்: வியாச முனிவரரால் எழுதப்பட்டது. இறைவன் மற்றும் ஆன்மாவிற்கு இடையே உள்ள உறவை பற்றி விளக்குகின்றது.
சிதம்பர ரகசியம்:
சிற்றம்பலத்தில் நடராஜரின் வலது பக்கத்தில் ஒரு சிறிய வாயில் உள்ளது, அங்குள்ள திரை அகற்றப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அங்கு திருவுருவம் இல்லாது, தங்கத்தால் ஆன வில்வ தளமாலை (அதாவது தங்கத்தால் ஆன வில்வ இலை வடிவில் செய்யப்பட்ட தங்க இலைகளைக் கொண்டு கோர்க்கப்பட்ட மாலை) ஒன்று தொங்க விடப்பட்டிருக்கும்.இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.
சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியை தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இதைனையே ‘சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும்’ என்று கூறப்படுகிறது
சித்சபையினுள்ளே இறைவன் சிதம்பர ரகசியம் என அருவமாகவும், நடராஜர் என உருவமாகவும், சிலிங்கமாக அருவுருவமாக மூன்று நிலைகளில் எழுந்தருளியுள்ளார்.
சிற்றம்பலத்தின் (சிற்சபை) அமைப்பு:
சித்சபையின் (திருச்சிற்றம்பலம்) தளத்தில் (நிலத்தில்) பதிக்கப்பட்டுள்ள 51 கற்கள் மாத்ருகாட்சரங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த கற்களில் மாத்ருகாட்சரங்கள் பொறிக்கப் பட்டுள்ளதாக ஐதீகம். மாத்ருகாட்சரங்கள் (மாத்ருகா அட்சரங்கள்) என்பவை, 51 சமஸ்கிருத மூலமந்திர எழுத்துக்களைக் குறிக்கின்றன. இவை பிரபஞ்சத்தின் அனைத்து ஒலிகளுக்கும், மந்திரங்களுக்கும் மூல எழுத்துக்களாகக் கருதப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
நடராஜப் பெருமான் வீற்றிருக்கும் மேடை தரை மட்டத்திலிருந்து ஏறக்குறைய 5 அடி உயரத்தில் உள்ளது.
சிற்றம்பலத்தில் 5 தெய்வீகப் பீடங்கள் உள்ளன
தரையில் சிறிய மேடை அமைத்து அதன்மேலேயே தெய்வச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த மேடைகள் பீடங்கள் என அழைக்கப்படுகின்றன.
பஞ்சாட்சரப் படி ஏறி கால் வைக்கும் இடம் பிரம்மபீடம் என அழைக்கப்படுகிறது இது அரை அடி அகலமே இருக்கும்.
சிதம்பர ரகசியம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரகஸ்யம் இருக்கும் பீடம் சதாசிவபீடம் என அழைக்கப்படுகிறது.
பிரம்ம பீடத்தை அடுத்து திருச்சிற்றம்பலத்தினுள் சற்றேறக்குறைய ஓரடி அகலமுள்ள இடத்தில் ஐந்து தங்கத் தூண்கள் உள்ளன. இப்பகுதி விஷ்ணுபீடம் என அழைக்கப்படுகிறது. இவ் ஐந்து தூண்களும் பஞ்ச பூதங்களை குறிப்பிடுகின்றன.
நடராஜப் பெருமான் முன்பு அர்ச்சகர் நின்று பூசைகள் செய்யும் இடம் ருத்ரபீடம் என அழைக்கப்படுகிறது. இது மூன்றடி நீள, அகலம் கொண்டது. இங்கு 28 வெள்ளித் தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களைக் குறிப்பிடுகின்றன.
நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் பீடம் மகேஸ்வரபீடம் என அழைக்கப்படுகிறது. இது ஏறக்குறைய 6 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டது. இப்பீடம் தங்கத்தால் பூசப்பட்டுள்ளது.
மகேஸ்வர பீடத்தில் இருபடிகள் உண்டு. மேற்குப்படியில் சந்திரமௌலீசுவரர் ஆகிய ஸ்படிக லிங்கமூர்த்தியும், ரத்தின சபாபதி ஆகிய ரத்தினத்தினாலான நடராஜ மூர்த்தியும் தனித்தனியாக எழுந்தருளியுள்ளனர். மகேஸ்வர பீடத்தில் ரத்தினம் பதித்த இறைவனின் திருவடிகள் சிவபாதுகை எனும் தங்கத் தட்டில் நடராஜருக்கு வலப்புறமாக வைக்கப்பட்டுள்ளது. நடராஜப் பெருமானின் வலப்புறத்தில் ஸ்ரீமுகலிங்கம் உள்ளது.
சிற்சபையில், மூலவர் நடராஜருக்குப் பின்னால் உள்ள மூலவர் லிங்கம் இருக்கும் கருவறையைச் சுற்றி வலம் வரும் பகுதி பிரணவப் பிராகாரம் என்று அழைக்கப் படுகிறது. இந்த பிராகாரம் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக அமைந்துள்ளது. இந்த பிராகாரத்தின் வழியே மூலவரை சுற்றி வரும்போது ‘சிதம்பர ரகசியம்’ என்ற சிவனின் அருவத்தினை தரிசிக்கக் கிடைக்கிறது.
சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்தினை சுற்றி விநாயகர், முருகன் போன்ற தெய்வ சிலைகள் இருக்கும். ஆனால் தில்லை நடராஜர் ஆலய மூலஸ்தானத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.
சிற்றம்பலத்தின் மேல் தளத்தில் அமைந்த 64 சந்தனக் கைமரங்களும் 64 கலைகளைக் குறிக்கின்றன.
நடராஜ பெருமானுக்குரிய விமானம் (மேல்தளம்) இதய வடிவில் அமைந்துள்ளது.
பொன்னம்பலம் (கனகசபை, எதிரம்பலம்): சிற்சபைக்கு முன் அமைந்துள்ள இந்த சபையின். மூலவருக்கு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் இந்த சபையில்தான் நடைபெறுகின்றன.
- “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக சற்று சாய்ந்து அமைக்கப்பட்டுள்ளது. அதாவது பிரதான வாயிலுக்கும், சித்த சபைக்கும் (மூலத்தானத்துக்கும்) உள்ள நேர்கோட்டில் இல்லாது சற்று இடப்புறமாக சாய்ந்து பக்கவாட்டில் அமைந்துள்ள மண்டபமாகும். எனவே பொன்னம்பலம் ஒரு உடலின் இதயத்தினை குறிப்பிடுவதாக அமைந்துள்ளது.
- சிற்றம்பலத்தில் அமர்ந்துள்ள நடராஜருக்கு எதிராக அமைந்துள்ள மண்டபம் என்பதால் பொன்னம்பலத்தினை, எதிரம்பலம் எனவும் அழைக்கப்படுகிறது. அடியார்கள் இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்குவர்.
- பொன்னம்பலத்தில் (சிற்சபை) இருந்து ஐந்து படிகளில் ஏறியே சிற்றம்பலத்திற்குச் (கனகசபை) செல்லவேன்டும். இந்த படிகள் பஞ்சாக்கரப் படிகள் (அல்லது பஞ்சாட்சர படிகள்) என அழைக்கப் படுகின்றன. அதாவது இந்த ஐந்து படிகளும் சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தினைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது. பஞ்சாட்சர மந்திரம் எனப்படுவது சிவனின் மூலமந்திரமான ‘சி, வ, ய, ந, ம’ என்ற ஐந்து எழுத்து மந்திரமாகும். ஒவ்வொரு படியும் ஒவ்வொரு எழுத்தினைக் குறிக்கிறது என்பது பொருளாகும்.
- இப்படிகளின் இருபக்கங்களிலும் யானை உருவம் இருப்பதால் இப்படிகள் திருக்களிற்றுப்படி எனவும் அழைக்கப்படுகிறது.
- கனகசபையிலிருந்து சிற்றம்பலம் எனப்படும் சித்சபைக்கு செல்லும் நுழைவாயிலில் பஞ்சாட்சரப் படிகளுக்கு மேலே அமைந்த கதவினை அவித்யை என்பர். இக்கதவின் இருபுறமும் சுபாகு, விமலன் எனும் இருதுவாரபாலகர்கள் உள்ளனர். இவ்வாயில் இதயவாயில் என அழைக்கப்படுகிறது.
- பொன்னம்பலத்தில் (கனகசபை) ஒன்பது வாசல்கள் உள்ளன. இந்த ஒன்பது வாசல்களும் மனித உடலிலுள்ள ஒன்பது துவாரங்களைக் (நவ துவாரங்கள்) குறிக்கின்றன. (அதாவது பொன்னம்பலம் என்ற மண்டபத்துக்கு ஒன்பது வாயில்கள் வழியாகப் போய்வர முடியும்.)
மனித உடலிலுள்ள நவ துவாரங்கள் – இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்கின் துவாரங்கள் இரண்டு, ஒரு வாய், மலத்துவாரம், சிறுநீர் துவாரம் ஆகிய ஒன்பது துவாரங்கள்.
- பொன்னம்பலத்தில் 28 தூண்கள் அமைந்துள்ளன. இந்த 28 தூண்களும் 28 சிவாகமங்களைக் குறிக்கின்றன. சிவன் அருளியதாகக் கூறப்படும் 28 ஆகமங்கள் சிவாகமங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆகமங்கள் திருக்கோயில் அமைப்பு, வழிபாட்டு முறைகள், நித்திய, நைமித்திக பூசைகள் மற்றும் ஆன்மீக சடங்குகள் ஆகியவற்றை விளக்குகின்றன. இவை சிவபேதம் (10), ருத்ரபேதம் (18) என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- இந்த 28 தூண்களின் மீது குறுக்கமாகவும் நெடுக்காகவும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM). மனிதனின்உடலில் ஓடும் ரத்த நாளங்களைப்போல இந்தப் பலகைகள் இணைக்கப் பட்டுள்ளன. இந்த 64 பலகைகளும் 64 கலைகளைக் (ஆயகலைகள்) குறிப்பிடுகின்றன.
- சிற்சபை (சிற்றம்பலம்) மற்றும் கனகசபைக்கு (பொன்னம்பலம்) முன்பாக அமைந்துள்ள அழகிய சிறிய மண்டபம் அர்த்த மண்டபமாகும். அர்த்த மண்டபத்தில் 6 தூண்கள் உள்ளன. இந்த 6 தூண்களும் இந்து சமயத்தின் 6 சாஸ்திரங்களைக் குறிக்கின்றன.
ஆறு சாஸ்திரங்கள்:
நியாய சாஸ்திரம்: தர்க்கம் மற்றும் வாதத்தின் அடிப்படைகளை விளக்குகிறது. (கௌதம முனிவரால் எழுதப்பட்டது).
வைசேஷிக சாஸ்திரம்: பிரபஞ்சத்தின் இயற்பியல் கூறுகள், பருப்பொருட்கள் மற்றும் அணுவியலை ஆராய்கிறது. (கணாத முனிவரால் எழுதப்பட்டது).
சாங்கிய சாஸ்திரம்: பிரபஞ்சத்தின் உருவாக்கம், இயற்கை (பிரகிருதி) மற்றும் ஆன்மா (புருஷன்) ஆகியவற்றின் தத்துவங்களை விளக்குகிறது. (கபில முனிவரால் எழுதப்பட்டது).
யோக சாஸ்திரம்: மனதைக் கட்டுப்படுத்தி, உடலையும் ஆன்மாவையும் ஒருமுகப்படுத்தும் அஷ்டாங்க யோக முறைகளைக் கூறுகிறது. (பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டது).
பூர்வ மீமாம்சை: வேதங்களின் சடங்குகள், யாகங்கள் மற்றும் கர்மங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. (ஜைமினி முனிவரால் எழுதப்பட்டது).
உத்தர மீமாம்சை / வேதாந்தம்: ஆன்மா மற்றும் பரமாத்மா (இறைவன்) ஒன்றே என்ற தத்துவத்தை விளக்குகிறது. (வேத வியாசர் / பத்ராயனர் முனிவரால் எழுதப்பட்டது)
சிற்சபை (சிற்றம்பலம்) மற்றும் கனகசபைக்கு (பொன்னம்பலம்) முன்பாக அமைந்துள்ள அர்த்த மண்டபத்திற்கு அருகில் உள்ள மண்டபத்தில் 18 தூண்கள் உள்ளன. இவை 18 புராணங்களைக் குறிக்கின்றன.
18 மகா புராணங்கள்: பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், பாகவத புராணம், நாரத புராணம், மார்க்கண்டேய புராணம், அக்னி புராணம், பவிஷ்ய புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், லிங்க புராணம், வராக புராணம், கந்த புராணம், வாமன புராணம், கூர்ம புராணம், மச்ச புராணம், கருட புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவை ஆகும்.
பொன்னம்பலத்தை தாங்கும் வகையில் 4 தூண்கள் உள்ளன. இந்த நான்கு தூண்களும் நான்கு வேதங்களைக் குறிக்கின்றன. இந்து மதத்தின் அடிப்படையான மற்றும் மிகத்தொன்மையான புனித நூல்கள் வேதங்கள் என அழைக்கப் படுகின்றன. இவை இருக்கு (ரிக்), யசுர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும்.
- இருக்கு (ரிக்) வேதம்: வேதகங்களில் மிகவும் பழமையானது. செய்யுள் வடிவில் அமைந்துள்ள நூலாகும்.
- யசுர் வேதம்: யாகங்கள், வேள்விகள் மற்றும் வழிபாட்டு முறைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறது.
- சாம வேதம்: இசையுடன் பாடக்கூடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இதுவே இந்திய இசைக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது.
- அதர்வண வேதம்: மந்திரங்கள், மருத்துவ முறைகள் மற்றும் உலகியல் நல்வாழ்வுக்கான வழிமுறைகளை விளக்குகிறது.
பொற்சபையின் மேல் உள்ள தங்கத்தால் ஆன சிறிய கோபுரத்தில் 9 கலசங்கள் உள்ளன. இந்த ஒன்பது கலசங்களும் நவசக்திகளை (ஒன்பது வகையான சக்திகள்) குறிக்கின்றன.
நவ சக்திகள்: சக்தி என்றால் அன்னை பராசக்தியையே குறிக்கும். அன்னை ஆனவள் ஒன்பது வடிவங்கள் (நவ சக்தி நிலைகள்) எடுத்து அனைத்து உயிரினங்களையும் காத்து அருள்கிறாள். நவசக்திகளுக்கு உரிய சிறந்த விரதம் நவராத்திரிகள் ஆகும்.
- மனோன்மணி: பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குவமடைந்த ஆன்மாக்களின் பாவங்களை அகற்றி, இறைவனோடு சேர்ப்பவள்.
- சர்வபூதமணி: அனைத்து ஆன்மாக்களிலும் கலந்து நின்று அவற்றின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.
- பலப்பிரதமணி: சூரிய சக்தியாக போற்றப்படுபவள். பக்தர்களின் தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து தேவையான வலிமையையும் ஆற்றலையும் அருள்பவள்
- கலவிகரணி: பிரபஞ்ச சக்தியாக போற்றப்படுபவள். உடல் மற்றும் மன பலத்தைநேர்மறையாக மாற்றியமைக்கும் சக்தி கொண்டவள்.
- பலவிகரணி: சந்திரனின் ஒளியாக போற்றப்படுபவள். ஆன்மாக்களின் அறியாமையையும், மாயையையும் போக்குபவள்.
- காளி: காற்றில் பிராண சக்தியாக கலந்து நின்று உயிர்களுக்கு தேவையான சக்தியை கொடுப்பவள். உலகைக் காக்கவும், தீய சக்திகளை அழிக்கவும் கூடிய உக்கிர வடிவம் எடுத்துள்ளவள்
- ரவுத்திரி: நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை கொடுப்பவள். தீயவற்றையும் தீயவர்களை அழிக்கும் வல்லமை கொண்டவள்.
- கேட்டை: நீரினில் திரவமாகவும் சுவையாகவும் இருப்பவள். : உலக இயக்கத்திற்கும் செல்வத்திற்கும் அதிபதியாக விளங்குபவள்.
- வாமை: மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே இணைத்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள். சகல சௌபாக்கியங்களையும் அருளும் கருணை வடிவம் கொண்டவள்.
பொன்னம்பலத்தின் மேல் உள்ள தங்கக் கூரை 21,600 தங்க ஓடுகள் கொண்டு வேயப்பட்டுள்ளது. இந்த 21000 என்ற எண்ணிக்கை ஒரு நாளில் மனிதன் விடும் சுவாசங்களின் எண்ணிக்கையைக் குறிப்பதாகும். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 =21,600). அதாவது சராசரியாக ஒரு மனிதன் ஒரு நிமிடத்துக்கு 15 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதனை குறிப்பதாக அமைந்துள்ளது.
இந்தத் தங்க ஓடுகள் 72,000 தங்கத்தினால் ஆன ஆணிகள் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன. இந்த 72000 என்ற எண்ணிக்கை நம் சூக்கும உடலில் உள்ள சூக்கும நாடிகளின் எண்ணிக்கையைக் குறிப்பனவாகும்.
சோழர் ஆட்சிகாலத்தில் முதலாம் பிராந்தகன் எனும் மன்னர் இந்த அரும்பெரும்காரியத்தைச் செய்து முடித்தார். அவரது முயற்சியினால் தில்லை நடராசர் கோயிலுக்கு தங்கக்கூரை கிடைத்தது. இதனால் பொன்கூரை வேய்ந்த தேவன் எனும் பெயர் பெற்றான்.
நிருத்தசபை (தேர் அம்பலம், நடனசபை): தில்லை நடராஜர் கோயிலில் உள்ள நிருத்த சபையில் (நடன சபை) நடராஜர் காளியுடன் போட்டி போட்டு நடனம் ஆடி (ஊர்த்துவ தாண்டவம்) தன் வெற்றியை நிலைநாட்டிய இடமாகப் போற்றப்படுகிறது.
நிருத்தசபை தேர் போன்ற அமைப்பில், அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த மண்டபம் 56 அழகிய மரத்தூண்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு மண்டபமாகும். பரதநாட்டியத்தின் அடிப்படை அசைவுகளான 108 முத்திரைகளை (கரணங்களை) விளக்கும் சிற்பங்கள் 56 தூண்களிலும் மிகவும் தத்துவரூபமாக செதுக்கப்பட்டுள்ளன.
இச்சபையில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, சரபேஸ்வரர் மற்றும் பஞ்ச பாண்டவர்களால் பூஜிக்கப்பட்ட சோமாஸ்கந்தர் ஆகியோர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
தேவசபை (பேரம்பலம்): உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் இடமாக இது விளங்குகிறது. திருவிழாக் காலங்களில் சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் இங்கு நாடாத்தப்படுகின்றன. மணவில் கூத்தனான காளிங்கராயன் விக்கிரமசோழன் காலத்தில் இச்சபையைச் செம்பினால் வேய்ந்தான் என்று அறிவதோடு, பின்பு இப்பேரம்பலத்திற்கு பொன் வேய்ந்தவன் மூன்றாங்குலோத்துங்கச் சோழன் எனவும் ஒரு புராணக் குறிப்பு உண்டு.
ராஜசபை (ஆயிரங்கால் மண்டபம்): தில்லை நடராஜர் கோயிலில் உள்ள ராஜசபை கலைநயமிக்க சிற்பங்கள் கொண்ட ஆயிரம் தூண்களால் ஆன மண்டபமாகும். இதனால் இம்மண்டபம் ‘ஆயிரங்கால் மண்டபம்’ எனவும் அழைக்கப்படுகிறது. சோழ மன்னர்களின் முக்கியமான நிகழ்வுகள் இம்மடபத்திலேயே நடைபெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன.
ஆயிரம் தூண்கள் என்பது ஆன்மீக ரீதியாக ஏழாவது சக்கரமான தலை உச்சியில் ஆயிரம் இதழ் தாமரை வடிவில் அமைந்துள்ள சஹஸ்ரார சக்கரம் அல்லது துரிய சக்கரத்தை குறிப்பதாகக் அமைந்துள்ளது
இது கோயிலின் கிழக்கு கோபுர வாயிலுக்கு அருகில், சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்குப் புறமாக அமைந்துள்ள பிரம்மாண்டமான அழகிய மண்டபமாகும்.
மண்டபத்தின் முன்பாக உள்ள பந்தலின் மேல் விதானம் முழுவதும் புராணகால நிகழ்வுகளை விவரிக்கும் அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
முக்கிய திருவிழாக்களின்போது, ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மையார் நடராஜருடன் வீதியுலா வந்து இந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருவர்.
சேக்கிழார் பெருமான் இயற்றிய சைவ சமயத்தின் முக்கிய நூலான பெரியபுராணம் தில்லை வாழ் அந்தணர்கள் மற்றும் மன்னர் முன்னிலையில் ராஜசபையிலேயே அரங்கேற்றப்பட்டது.
நடராஜர் வடிவமும் அது கூறும் தத்துவமும்
சிவபெருமான், இங்கு நடனமாடும் தோற்றத்தில் இருக்கிறார். தில்லை நடராஜரின் தோற்றத்தில் உள்ள ஒவ்வொரு அசைவும் ஆழ்ந்த பிரபஞ்ச தத்துவங்களை விளக்குகிறது. தில்லை நடராஜரின் ஆனந்த தாண்டவ தோற்றம் மற்றும் அதன் தத்துவார்த்த விளக்கங்கள், வேதங்கள், ஆகமங்கள், தேவாரப் பாடல்கள், திருவாசகம், மற்றும் திருமூலரின் திருமந்திரம், அகத்திய முனிவரது பாடல்கள், ஏனைய சித்தர்கள், முனிவர்களது ஆன்மீக நூல்கள் மூலமாகவும், சிதம்பர தல புராணம் போன்ற வரலாற்று ஆவணங்கள் மூலமாகவும் அறியப்படுகின்றன. இருந்தும் நடராஜர் மற்றும் ஆலயத்தின் முழு தத்துவார்த்தமான விளக்கங்களும் எமக்கு கிடைக்கவில்லை என்பதுவே உண்மையாகும். எமக்கு என்ன தேவையோ அந்த விளக்கங்கள் எமக்குக் கிடைத்துள்ளன.
ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.
தில்லை நடராஜர் நடனவடிவில் காட்சி அளிக்கிறார். தில்லை நடராஜரின் நடன வடிவம் என்பது ‘ஆனந்த தாண்டவம்’ (பேரின்ப நடனம்) என அழைக்கப்படுகிறது இதில் சிவபெருமான் பிரபஞ்சத்தின் படைப்பு, காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களைச் செய்யும் ‘பஞ்சகிருத்திய மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். இது ஆன்மீகத்தினை விளக்கும் தத்துவ நிலையாகவும், கலை மற்றும் அறிவியலின் சங்கமமாகவும் கருதப்படுகிறது. அதாவது பிரபஞ்ச இயக்கத்தை விளக்கும் ஒரு குறியீட்டு வடிவமாகும்.
படைப்பவனும் படைப்புக்களும்: படைப்பவரையும் படைப்புக்களையும் பிரிக்க முடியாதது நடனக் கலையாகும். பல படைப்புக்களை படைப்பவரிடம் இருந்து பிரித்துப் பார்க்க முடியும் உதாரணமாக ஓவியம் ஒரு படைப்பு. ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரைந்த பின்னர் அந்த ஓவியம் அதனைப் படைத்த ஒவியனிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கும். அதாவது அந்த ஓவியத்தினைப் படைத்த படைப்பவன் இல்லாமலே அந்த ஓவியத்தினை அந்தப் படைப்பினை தனியாகப் பார்த்து ரசிக்க முடியும். அதுபோலவே சமையல், கதை, கட்டுரை, பாடல் போன்ற படைப்புக்கள் படைக்கப்பட்ட பின்னர் படைப்பனிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடனமும் ஒரு கலை ஆனால் நடனம் ஆடுபவரையும் அவர்கள் கொடுக்கும் அந்த பாவனைகளையும் தனித் தனியே பிரித்துப் பார்க்க முடியாது. நடனம் ஆடிக் கொண்டிருக்கும் போதே அந்த கலையை பார்த்து ரசிக்க வேண்டும். இதுவே நடனக் கலை என்பது படைப்பவனையும் படைப்புக்களையும் பிரிக்க முடியாது என்ற தத்துவமாகும்.
இதுவே நடராஜரின் தத்துவமுமாகும். சிவன் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார் அவரது அசைவிலேயே இந்தப் பிரபஞ்சம், இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற தத்துவமாகும். (விஞ்ஞான விளக்கமாக ஒரு அணு எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் என்பது விஞ்ஞானிகளது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரான கண்டு பிடிப்பாகும்.) ஆனால் சிவனும் அவனது படைப்புக்களும் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது எமது சித்தர்களது (மெய்ஞ்ஞானிகளது) பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூறிய கூற்றாகும்).
“படைப்புக்களை ஆராய்வது விஞ்ஞானம் படைப்பவனையே ஆராய்வது மெய்ஞ்ஞானம்.”
இறைவனின் இந்த நடன வடிவம், மனிதர்களது அறியாமையை அகற்றி ஞானத்தை அடைவதற்கான வழியைத் தத்துவ ரூபமாகப் போதிக்கின்றது.
தில்லை நடராஜர்
பல்லவ மன்னர் மரபைச் சேர்ந்தவர் 10 முதல் 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் அரசாண்ட இரணியவர்மன் (சிம்மவர்மன்) என்ற மன்னன் கொடிய வெப்பு நோய் (தோல் நோய்) நீங்குவதற்காக சிவபெருமானை வேண்டி, இத்திருக்கோயிலில் நடராஜரை ஸ்தாபிதம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது. தில்லை (சிதம்பரம்) நடராஜர் சிலை பஞ்சலோகத்தால் (தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகிய ஐந்து உலோகங்கள்) செய்யப்பட்டுள்ளது.
குறிப்பு: அதாவது திருமூலரும் பதஞ்சலி முனிவரும் சிவனின் முதல் மாணாக்கனான நந்திதேவரிடம் ஒரே கால கக்கட்டத்தில் சீடர்களாக இருந்து வேத ஆகமங்களை கற்றுக் கொண்டார்கள். பின் சிவனின் கட்டளைப்படி இருவரும் பூமிக்கு வந்து மானிடர் பிரவிப்பிணியில் இருந்து விடுபட ஆன்மீக தத்துவங்களை திருமூலர் திரு மந்திரமாகவும் பதஞ்சலி முனிவர் பதஞ்சலி யோக சூத்திரம் மூலமாகவும் கூறியவர்கள். திருமூலர் காலம் கி மு 3000 அல்லது 4000 வருடங்களுக்கு முந்தியது. தில்லை நடராஜரை முதன் முதலில் பிரதிஷ்டை செய்தவர்கள் பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்கிரபாதர் (புலிக்கால் முனிவர்) ஆவர். இவர்கள் எந்த ரூபத்தில் நடராஜரை பிரதிஷ்டை செய்தார்கள் என்பது அறியப்படவில்லை. பொதுவாக புராதன ஆலயங்கள் காப்போக்கில் சிதைவடையும்போது பின்னால் வரும் மன்னர்கள் மற்றும் பொருளாதார வசதி படைத்தவர்களால் புணருத்தானம் செய்யப்படும். இவ்வாறே சிதம்பரம் ஆலயமும் பலதடவைகள் பல மன்னர்களால் புணருத்தானம் செய்யப்பட்டது. நடராஜர் சிலையும் சிங்கவர்மன் (ஹிரண்யவர்மன்) என்ற மன்னனனால் ஐம்பொன்னினால் புணருத்தானம் செய்யப்பட்டது.
நடராஜர் சிலையின் பொதுவான தோற்றப்பாடு (வடிவம்)
மயிலிறகுபோல் வடிவமைக்கப்பட்ட தலை அணி (தலைப்பாகை) ஒன்றும், ஒரு பாம்பும் நடராஜரின் தலையில் சூடப்பட்டுள்ளது. தலை அணியில் ஒரு முகம் தெரிகிறது நடராஜரின் தலைமுடி இருபுறமும் காற்றில் பறந்தபடியும், அந்த முடியில் கங்கையும், பிறைச் சந்திரனும் காணப்படுகிறது.
நடராஜரின் வலது காதில் ஆண்கள் அணியும் மகர குண்டலமும், இடது காதில் பெண்கள அணியும் வட்டவடிவிலான காதணியும் அணிந்துள்ளார். நடராஜரின் முகம் பார்ப்பதற்கு வலதுபுறம் ஆண் போலவும் இடதுபுறம் பெண்போலவும் தோற்றமளிக்கிறது. முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை தவழ்கிறது.
நடராஜர் சிலையின் கழுத்தில் மண்டை ஓடுகளால் ஆன மாலை, கழுத்தைச் சுற்றியபடி ஒரு நாகபாம்பு, திருமாங்கல்யம் மற்றும் பல்வேறு சைவ பாரம்பரிய மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இடுப்பில் புலித்தோல் ஆடையுடன், உடலின் குண்டலினி சக்தியைக் குறிக்கும் நாகம் அரைஞாண் கயிறுபோல சுற்றப்பட்டுள்ளது.
வலது காலில் சிலம்பும் மற்றும் இடது காலில் நாட்டியம் ஆடும் பெண்கள் அணியும் கழல் போன்ற அணிகலன்களும் உள்ளன
நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற்கையில், உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற் கையில் தீச்சுவாலையும், ஏந்தியிருக்க, வலப்புறக் கீழ்க்கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயஹஸ்தம்) உள்ளது. இடது கீழ்க்கை தும்பிக்கை நிலை (கஜஹஸ்தம்) எனப்படும் ஒருநிலையில் கை விரல்கள் தூக்கிய காலைச் சுட்டியபடி அமைந்துள்ளது. இடதுகால் தூக்கியபடியும் வலது கால் முயலகன் (அபஸ்மாரன்) எனும் அரக்கன் மீது ஊன்றியப்படும் உள்ளது. நடராஜரின் இடுப்புப் பகுதியில் வலப்புறமாக ஒரு பாம்பு படம் எடுத்தபடி ஓடிக்கொண்டிருக்கிறது. நடராஜரின் உருவத்தை சுற்றி திருவாசி எனும் வட்டமும் அந்த வட்டத்தில் 51 தீச் சுவாலைகளும் காணப்படுகின்றன. நடராஜரின் தலைக்கு மேலாக உள்ள திருவாசியில் யாளியின் முகம் காணப்படுகிறது இந்த முழு சிலையும் ஒரு தாமரை மலரின் வடிவம்கொண்ட பீடத்தின்மீது (தாமரைப் பீடம்) வைக்கப்பட்டுள்ளது.
நடராஜரின் நடனத் தோற்றத்தின் சிறப்பம்சங்களும் அது உணர்த்தும் தத்துவங்களும்
மயில் தோகை போன்ற வடிவிலான தலை அணி (தலைப்பாகை): மயில் தோகையானது பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், மனதை மயக்கும் வண்ணத்திலும் தோற்றமளிக்கும். இது ஆன்மாக்களை மயக்கும் உலக மாயையை உணர்த்துகிறது. இந்த மாயையை இறைவன் தன் தலைமீது அணிகலனாகச் சூடி, உலகத்தை இயக்குகிறார் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது ஆன்மாக்கள் மாயை எனும் வலையில் சிக்கி இறைவனை உணர அறிய முடியாமல் இவ்வுலக இன்பத்தில் மயங்கி கிடக்கிறார்கள் எனும் தத்துவத்தினை விளக்குகிறது.
சடாமுடி: நாட்டியம் ஆடும்போது சடைமுடி முகத்தின் இருபுறமும் காற்றில் பறந்தபடி விரிந்து ஆடுவது போலக் காணப்படுகிறது. விரிந்த சடைமுடியில் கங்கை, பிறைச்சந்திரன், மற்றும் கொன்றைப்பூ ஆகியவை சூடப்பட்டிருக்கும். அந்தச் சடாமுடியில் ஒரு நாக பாம்பும் காணப்படுகிறது.
விரிந்த சடைமுடி: நடராஜரின் விரிந்த சடைமுடி, அவரது பேராற்றலையும், பிரபஞ்சத்தை இயக்கும் நடனத்தின் வேகத்தையும் குறிக்கிறது. இது அண்டவெளியில் உள்ள இயற்கையின் இயக்கச் சக்தியையும் வெளிப்படுத்துகிறது
கங்கை: நடராஜரின் தலைமுடியில் (சடைமுடியில்) இருக்கும் கங்கை நதியானது, பிரபஞ்சத்தில் நீரின் இயக்கத்தையும், சிவனின் பெருங்கருணையையும் குறிக்கிறது. நடராஜரின் தாண்டவக் கோலத்தில் விரிந்த சடைகள் சுழலும்போது, அதில் உள்ள நீர்த்துளிகள் எங்கும் சிதறிப் பாய்வது அண்டத்தின் இயக்கத்தைக் காட்டுகிறது
பிறைச்சந்திரன்: நடராஜரின் தலைமுடியில் உள்ள பிறைச்சந்திரன் காலத்தின் சுழற்சியைக் குறிக்கிறது. சந்திரனின் வளர்வதும் தேய்வதுமான சுழற்சி (வளர்பிறை மற்றும் தேய்பிறை) பிரபஞ்சத்தின் கால ஓட்டத்தையும், ஆக்கம் மற்றும் அழிவின் முடிவற்ற சுழற்சியையும் குறிக்கிறது.
கொன்றைப்பூ: நடராஜரின் தலைமுடியில் உள்ள கொன்றைப் பூ சிவபெருமானின் அருள் செழிப்பு, தூய்மையைக் குறிக்கிறது. அதன் பொன்னிறம் ஆன்மீக ஒளியையும், ஐந்து இதழ்கள் சிவனின் புனித ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவய’ தத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
நாகம்: நடராஜரின் தலைமுடியில் உள்ள நாகம் (பாம்பு) மூலாதாரச் சக்கரத்தில் உள்ள குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. பாம்பு சுருண்டு கிடப்பதுபோல தூங்கும் நிலையில் இருக்கும் குண்டலினி சக்தியானது ஆன்ம ஆற்றலால் விழித்தெழுந்து உச்சியை அடைவதை நாகம் உணர்த்துகிறது.
நெற்றிக்கண்: நடராஜரின் புருவங்களுக்கு மத்தியில் உள்ள நெற்றிக்கண் முக்காலத்தையும் கடந்த ஞானத்தை உணர்த்துகிறது. இது மூன்றாவது கண் என அழைக்கப்படுகிறது. முக்கால ஞானம் எனப்படுவது கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்றையும் அறியும் தன்மையைக் குறிக்கிறது. ஒருவருக்கு மூலாதாரச் சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியானது யோகத்தினால் மேலெழுந்து உச்சியை அடையும்போது ஏற்ப்படும் ஞான நிலையில் கிடைக்கிறது.
நடராஜரின் கழுத்தில் பிரம்ம கபால மாலை (மண்டை ஓடுகளால் ஆன மாலை), திருமாங்கல்யம் மற்றும் பல்வேறு தமிழ் பாரம்பரிய மாலைகளும் (முத்துமாலை, புலிநகம் / புலிப்பல் மாலை) அலங்கரிக்கப் பட்டுள்ளன
கபால மாலை: 32 அரக்கர்களது தலைகளை வெட்டி, அவற்றை மாலையாகக் கோத்துத் தனது கழுத்தில் அணிந்துள்ளார். இது தீயவற்றை அழிப்பதும் அவரே என்பதைக் குறிக்கிறது.
திருமாங்கல்யம்: திருமணமான பெண்கள் அணியும் திருமாங்கல்யம். இது சிவனும் சக்தியும் இணைந்திருக்கும் நிலையை பிரிக்க முடியாத ஒற்றுமையை மற்றும் தம்பதியரின் மங்கலப் பேற்றைக் குறிக்கிறது
முத்துமாலை (முத்தாரம்): தூய்மையான பக்தி மற்றும் இறைவனின் பேரொளியைக் குறிக்கிறது.
புலிநகம் / புலிப்பல் மாலை: அகந்தை மற்றும் தீய புலன்களை வென்ற வீரத்தையும், எல்லையற்ற சக்தியையும் குறிக்கிறது.
காதுகள் (குண்டலங்கள்): நடராஜரின் வலது காதில் ஆண்கள் அணியும் மகர குண்டலமும், இடது காதில் பெண்கள் அணியும் குழலையும் (வட்டமான காதணி) அணிந்துள்ளார். இது ஒரு உடலில் சிவனும் சக்தியும் பாதி பாதி என்ற அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை உணர்த்துகிறது.
மார்பு: மார்பில் புனிதமான ருத்ராட்ச மாலைகள் அலங்கரிக்கின்றன.
கைகள் மற்றும் மேல்கை: மேல்கைகளில் தோள்வளைகளும், கைகளில் கடகமும் (வளையல்கள்) உள்ளன.
இடுப்பு: இடுப்பில் புலித்தோல் ஆடையுடன், உடலின் குண்டலினி சக்தியைக் குறிக்கும் நாகம் அரையணியாகச் சுற்றப்பட்டுள்ளது. புலி என்பது கொடூரத்தை அடக்கி தனது ஆடையாக்கியுள்ளார் என்பதனை விளக்குகிறது
கால்கள்: வலது காலில் புருவத் தண்டை (சிலம்பு) மற்றும் இடது காலில் பெண்கள் அணியும் கழல் போன்ற அணிகலன்கள் உள்ளன.
நடராஜர் உடலில் அணிந்திருக்கும் அணிகலன்கள் ஆணும் பெண்ணும் பாதி பாதி என்ற தத்துவத்தை கூறுகிறது.
ஆனந்த தாண்டவம்
ஆடல் கடவுள் என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.
தாண்டவமம் ஆடும் நிலையிலும் நடராஜரின் முகமோ சாந்த சொரூபமாக, சிறிது புன்னகையுடன் காட்சி தருகிறது. இது வாழ்க்கையில் எப்படியான நிலை வந்தாலும் கலங்காதே என்று கூறுவதாக அமைந்துள்ளது.
நான்கு கைகளைக் கொண்டுள்ள நடராசர் தோற்றத்தின் வலப்புற மேற் கையில் உடுக்கை எனப்படும் இசைக் கருவியும், இடப்புற மேற்கையில் தீச்சுவாலையும் ஏந்தியிருக்க வலப்புறக் கீழ்க்கை அடைக்கலம் தரும் நிலையில் (அபயமுத்திரை) காணப்படுகிறது. இடது கீழ்க்கை விரல்கள் தூக்கியுள்ள திருவடியைச் (பாதத்தைச்) சுட்டியபடி அமைந்துள்ளது.
வலது மேற்கை (உடுக்கை): இக்கையில் ஏந்தியுள்ள உடுக்கை (டமருகம்) ஒலியைக் குறிக்கிறது. இந்த உலகம் ஒலியின் மூலம் ஆரம்பமாகியது என்பதைக் குறிக்கின்றது. இது உலகைப் படைக்கும் (சிருஷ்டி) ஆற்றலைக் குறிக்கிறது. படைத்தல் தொழில்.
வலப்புறக் கீழ்க்கை (அபய ஹஸ்தம்): இக்கை அபய முத்திரையில் (அஞ்சாதே என்ற பாவனை) அமைந்திருக்கிறது. இது பக்தர்களைக் காக்கும் (அருளும்) தன்மையைக் குறிக்கிறது. காத்தல் தொழில்.
இடப்புற மேற்கை: ஏந்தியுள்ள நெருப்பு (அக்னி) உலகத்தின் அழிவு அல்லது ஒடுக்கத்தைக் குறிக்கிறது. அழித்தல் தொழில்.
இடது கீழ்க்கை: தூக்கியுள்ள திருவடியைச் (பாதத்தைச்) சுட்டிக் காட்டும் கஜஹஸ்த முத்திரை. தூக்கப்பட்ட இடது காலைக் காட்டுவது பக்தர்களுக்குக் கிடைக்கும் விடுதலை (முக்தி/அருள்) மற்றும் சரணடைதலை உணர்த்துகிறது. உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும் முக்தி கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. அருளல் தொழில்.
கால்கள்: வலது கால் ஊன்றிய நிலையிலும், இடது கால் தூக்கிய நிலையிலும் உள்ளது.
நடராஜரின் தூக்கிய இடது கால் (குஞ்சிதபாதம்): முக்தி மற்றும் ஆன்ம ஈடேற்றம் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து (பிறவிப் பிணியில் இருந்து) உயிர்களை விடுவிக்கும் இறைவனின் கருணையை இந்தத் தூக்கிய பாதம் விளக்குகிறது. ஐந்தொழில்களில் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இது இறுதி நிலையான அருளல் தொழிலைக் குறிக்கிறது.
ஊன்றிய வலது கால்: நடராஜரின் ஊன்றிய வலது கால் மறைத்தல் தொழிலை அதாவது அறியாமை மற்றும் அகங்காரத்தை அடக்குதல் ஆகிய தத்துவங்களை உணர்த்துகிறது ஊன்றிய வலது கால்: நடராஜரின் ஊன்றிய வலது கால் மறைத்தல் தொழிலை அதாவது அறியாமை மற்றும் அகங்காரத்தை அடக்குதல் ஆகிய தத்துவங்களை உணர்த்துகிறது. வலதுகால் முயலகன் (அபஸ்மாரம்) என்னும் அரக்கன் (அறியாமை) மீது ஊன்றப்பட்டுள்ளது. மனிதனிடம் உள்ள அறியாமை, அகங்காரம் மற்றும் ஆணவம் ஆகியவற்றை இறைவன் தன் காலால் மிதித்து அடக்குகிறார் என்பதை இது காட்டுகிறது.
முயலகன் (அபஸ்மரன்): நடராஜர் வலது காலடியில் இருக்கும் முயலகன் (அபஸ்மரன்), மனிதனுக்குள் இருக்கும் ஆணவம், மற்றும் அறியாமையை குறிக்கிறது. ஆணவம், மற்றும் அறியாமை ஆன்மாவை இறைவனிடமிருந்து பிரிக்கிறது. இந்த அறியாமையை முழுமையாக அழிக்க முடியாது ஆனால் அதனை ஞானத்தால் அடக்கி ஆளவேண்டும் என்பதே இந்தத் தத்துவத்தின் முக்கிய அம்சமாகும். அறியாமையையும், ஆணவத்தையும் முற்றிலுமாக அழிப்பது கடினம். ஆனால், அவற்றை எப்போதும் நம் கட்டுப்பாட்டிற்குள், நம் காலடியில் வைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
திருவாசி: நடராஜரை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம் திருவாசி என அழைக்கப் படுகிறது. சிவன் ஞானவெளியில் (பிரபஞ்சத்தில்) தாண்டவாமடுவதை உணர்த்துகிறது. திருவாசி பிரணவத்தின் (ஓம்) வடிவமாகக் காணப்படுகிறது. அண்டத்தின் அடிப்படையான ஓம் எனும் நாத ஒலியே திருவாசி ஆகும்.
பெரிய ஒளிவட்டமான திருவாசியில் வெளிப்புறமாக 51 தீப்பிழம்புகள் காணப்படுகின்றன. இந்த தீப்பிழம்புகள் ஒரு ஆன்மா பல பிறவிகளை எடுக்கின்றது என்பதனை அதாவது காலத்தின் சுழற்சியை உணர்த்துகிறது. ஒவ்வொரு தீப்பிழம்பிலும் மூன்று சிறிய தீப்பிழம்புகள் காணப்படுகின்றன. இது ஒரு ஆன்மாவின் ஒரு பிறவியில் இறைவனின் படைத்தல் காத்தல் அருளல் ஆகிய தொழிலின் தத்துவத்தினை விளக்குகிறது.
குறிப்பு: பொதுவாக ஆலயங்களில் சாமி சிலைகளின் பீடத்தின் மேல் உலோகத்தால் செய்யப்பட்ட (பொதுவாக வெள்ளி அல்லது செம்பு எனும் உலோகத்தால் செய்யப் பட்டிருக்கும்) வேலைப்பாடுகள் கொண்ட வளைவு அமைப்பு திருவாசி (திருவாசிகை) எனப்படும். இதன் இருபுறமும் மகர முகங்களும் உச்சியில் யாளி முகமும் அமைந்திருக்கும்.
யாளி முகம்: நடராஜர் சிலையின் தலைக்கு மேலே திருவாசியின் உச்சியில் யாளி முகம் (சிங்கத்தின் முகம் போன்ற வடிவம்) காணப்படுகிறது. இது பிரபஞ்சத்தில் உள்ள தீய சக்திகளை விழுங்கி (அழித்து) பக்தர்களைக் காக்கும் வலிமைமிக்க காவல் தெய்வமாகச் சித்தரிக்கப் படுகிறது.
தாமரை பீடம்: நடராஜர் சிலை தாமரை மலர் போன்ற தாமரை பீடம் (பத்ம பீடம்) மீது அமைந்துள்ளது. பிரபஞ்சத்தின் தூய்மை, மற்றும் தெய்வீகத் தன்மையை இப்பீடம் குறிக்கிறது. சேற்றில் இருந்தாலும் தூய்மையாக மலரும் தாமரை போல, மனித மனமும் உலக மாயைகளில் சிக்காமல் இறைவனை அடைய வேண்டும் என்ற தத்துவத்தை இது உணர்த்துகிறது. தாமரை மலர் எப்படி நீருக்குள் இருந்தாலும் நனையாமல் இருக்கிறதோ, அதேபோல ஆன்மாவும் இவ்வுலகப் பற்றுகளில் சிக்காமல் தூய்மையாக இருக்க வேன்டும் என்பதனை இது உணர்த்துகிறது.
அதேவேளை பல இதழ்கள் கொண்ட தாமரை மலர்ப்போன்ற பீடமானது எமது தலை உச்சியில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்போல அமைந்திருக்கும் துரியச் சக்கரத்தினை பிரதி பலிப்பதாக அமைந்துள்ளது. அதாவது மூலாதாரச் சக்கரத்தில் உள்ள குண்டலினி சக்தியானது ஆன்மீகப் பயிற்சியின் மூலமாக சுழுமுனைநாடி வழியாக மேலெழுந்து துரியச் சக்கரத்தினை அடையும்போது சிவனின் நடனம் தெரியும் அப்போது ஒரு ஆன்மா முக்தி அடையும் என்பதனை விளங்குவதாகவும் அமைந்துள்ளது.
அப்பர் பெருமான் அருளிய தேவாரம்
“குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே”
- குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்: வில் போன்று வளைந்த புருவமும், கோவைப்பழம் போன்ற சிவந்த உதடுகளில் மலர்ந்த மெல்லிய புன்சிரிப்பும்
- பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்: குளிர்ச்சியான பரந்து விரிந்த சடையும், பவளம் போன்ற திருமேனியில் பூசிய பால் போன்ற வெண்மையான திருநீறும்,
- இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்: காண்போர்க்கு இன்பம் அளிக்கும்படியாக தூக்கிய பொற்பாதத்துடன் தோன்றும் அழகிய நடனக் கோலமும் காணக் கிடைத்தால்,
- மனிதப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே: அந்த நடனக் கோலத்தைக் காண்பதற்காக வே இந்த பூமியில் மீண்டும் மீண்டும் மானிடப் பிறவி எடுக்கவேண்டும்.
தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா போன்ற பதிகங்கள் சேகரிக்கப்பட்டிருந்த தலமாகும்
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா போன்ற பதிகங்கள் சிதம்பரம் ஆலயத்தில் ஒரு பூட்டிய மண்டபத்தில் சேகரித்து வைக்கப் பட்டிருந்ததாகவும் ராஜராஜ சோழ மன்னனின் முயற்சியால் நம்பியாண்டார் நம்பியினால் அங்கிருந்து சேகரிக்கப்பட்டு பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
குறிப்பு: திருஞானசம்பந்தருடன் எப்போதும் மூன்றுபேர் சென்று கொண்டிருப்பார்களாம். திருஞானசம்பந்தர் பாடும்போது அவற்றை ஏடுகளில் எழுதி வைத்துக் கொள்வது அவர்களது பணியாக இருந்தது. அதில் ஒரு ஏடு திருஞானசம்பந்தருடைய தனிப்பட்ட சேகரிப்பில் வைக்கப்படும். ஒரு ஏடு அவர் எந்த ஊரில், எந்த திருக்கோவிலில் இருந்து பாடுகிறாரோ அந்த கோவிலுக்குக் கொடுக்கப்படும். ஒரு ஏடு தில்லை நடராஜர் கோவிலில்: சேகரித்து வைப்பதற்காக அனுப்பி வைக்கப்படும் என்று வரலாற்று குறிப்புகள் குறிப்பிடுகின்றன. இதிலிருந்து அந்தக் காலத்திலேயே தெய்வீக கோப்புக்கள் சேகரிக்கப்பட்ட தலமாக தில்லை நடராஜர் ஆலயம் விளங்கியது என்பது அத் திருக்கோவிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். அது மட்டுமன்றி அறுபத்து மூன்று நாயன்மார்களது வரலாறுகளும் அவர்களது தெய்வீக படைப்புக்களும் சிதம்பரம் கோவிலில் பூட்டிய அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருந்ததாகவும் நம்பியாண்டார் நம்பிகள் சிதம்பரம் ஆலயத்தில் ஏடுகளை சேகரித்தபோது பல ஏடுகள் பூச்சிகள், வண்டுகளால் அழிந்து போய்விட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
உமாபதி சிவாச்சாரியார் என்ற சிவபக்தரின் சிவபக்தியை உலகத்தாருக்கு உணர்த்த விரும்பிய இறைவன், ஒரு தடவை சிதம்பரம் நடராஜர் கோவிலில் உமாபதி சிவாச்சாரியார் வராமல் கொடியேற்றம் நடந்தபோது கொடி ஏறாமல் தடைப்பட்டது. இதனை உணர்ந்த நிர்வாகத்தினர் உமாபதி சிவாச்சாரியாரை அழைத்து வந்தபோது அவர் கொடிக்கவி என்ற பாடலைப் பாடினார். அப்போது கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடைபெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.
திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி தில்லை நடராஜர் ஆலயத்தில் வெளியிட விரும்பினார். இவர் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவராதலால் முதலில் இவர் எழுதிய நூல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறைவனின் ஆசீர்வாதம் வேண்டி, தன் நூலைத் தில்லை நடராசப் பெருமான் சந்நிதிக்குச் செல்லும் பஞ்சாக்கரப் படியில் (திருக்களிற்றுப்படி) வைத்தபோது, படியின் இரு பக்கமுள்ள கல்யானைகளில் ஒருயானை உயிர் பெற்றுத் தம் தும்பிக்கையால் அந்நூலை எடுத்து நடராசப் பெருமானின் திருவடியில் வைக்க, அந்நூலின் சிறப்பை உணர்ந்த அடியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். அதனாலேயே, அந்நூல் திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் பெற்றது என்பது கர்ண பரம்பரையாக வரும் செய்தியாகும்.
மாணிக்கவாசகர் கூற இறைவனே எழுதிக் கொடுத்த திருவாசகம் அரங்கேறிய திருத்தலம் தில்லை நடராஜர் ஆலயமாகும்.
தில்லை நடராஜர் ஆலயத்தில் பொன்னம்பலம் எனும் கருவறை முதலில் தென்திசை நோக்கி இருந்ததாகவும் பின்னர் பல்லவ மன்னர்கள் புணருத்தானம் செய்தபோது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாகவும் புராண வரலாறுகள் கூறுகின்றன.
தில்லை நடராஜர் ஆலயத்தில் உள்ள “திருவம்பலச் சக்கரம்” (சிதாகாச சக்கரம் அல்லது அன்னாகர்ஷண சக்கரம்) என்பது சிவசக்தி ஐக்கியத்தின் வடிவமாக வழிபடப்படும் ஒரு புனிதமான யந்திரமாகும். நடராஜரின் வலப்பக்கச் சுவரில் இது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம்
