பிரியாவின் கவிதைகள் – தொகுப்பு – 02

0 0
Read Time:22 Minute, 20 Second

கவிதை தொகுப்பு – 02

“நினைவிற்கும் கனவிற்கும் இடையில் நிற்கிற கவிதை நீ”

  • கவிதைக்கு கற்பனை தேவையில்லை
  • கண்சிமிட்டும் வானம் போதும்,
  • இதழ் விரிக்கும் பூக்கள் போதும்,
  • கால் நனைக்கும் கடலலைகள் போதும்,
  • தலையசைக்கும் மரங்கள் போதும்,
  • தாய்மடியில் ஓர் நிமிடம் போதும்.
  • தந்தை முகத்தில் ஓர்த் துளி
  • வியர்வை போதும்.
  • யாருமில்லா தனியறை
  • ஒன்று போதும்
  • பொய்கள் எல்லாம் கவிதையாவதுமில்லை.
  • கவிஞர்கள் கவிதைக்கு மெய்யாயிருப்பதும் இல்லை
  • சிறகுகள் குவித்து
  • சிறகுகள் விரிக்கும்
  • பறவை போல.
  • சொற்கள் சேர்ந்து எழுத்தோவியமாய்
  • காகிதத்தில் குவிந்தால் அது
  • கவிதையாகிறது
  • தன்னைத் தானே சரி செய்து
  • கொள்ளுங்கள்..
  • அதை விட சிறந்த மாற்றம்
  • எதுவுமில்லை உலகில்
  • நாளை எதுவும் நடக்கலாம்.
  • நிறைவேறுவது போல
  • நிறைவேறாமலும்.
  • நிறைவேறாதது போல
  • நிறைவேறுவதும்
  • நடக்கலாம்

“எல்லோராலும் நீ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்” என்பதும் மனம் சொல்லும் மிக அழகான பொய். அந்தப் பொய்யை நம்பும் வரை, நீங்கள் உங்கள் உண்மையான முகத்தை மறைத்துக்கொண்டே வாழ்வீர்கள். நினைவில் கொள்ளுங்கள். அனைவருக்கும் பிடிக்க வேண்டும் என்பதல்ல வாழ்க்கை. உங்களை உண்மையாகப் புரிந்து கொள்ளும் சிலருக்கு மட்டும் போதுமானவராக இருப்பதுதான் வாழ்க்கை”

  • நடைபாதை தோறும்,
  • ஓராயிரம் கதைகள்…
  • வழிகாட்டிகள் அறியும்,
  • கதைகளின் மூலங்கள்…
  • அன்றொரு குப்பனின்
  • வறுமைப் புலம்பல்கள்…
  • பின்னொரு புத்தனின்
  • தத்துவச் சிதறல்கள்…
  • மற்றுமொரு ராதையின்
  • ஏக்கப் பொருமல்கள்…
  • இன்னுமொரு சீதையின்
  • குதர்க்க நியாயங்கள்…
  • நாளுமொரு தாமசின்
  • மன்னிப்புக் கோரல்கள்…
  • தினமொரு அப்பாசின்
  • பெருமூச்சுத் தேறல்கள்…
  • பாதையோர மரங்களெல்லாம்
  • பொறுமையின் சிகரங்கள்…
  • இத்தனையும் உள்வாங்கி,
  • வெடித்துச் சிதறிடாத
  • அதிசயங்கள்

சரியான மனிதரைத் தேடுவதற்கு முன், சரியான தேர்வுகளைச் செய்யும் மனநிலையை உருவாக்குங்கள். ஏனென்றால் ஆரோக்கியமான உறவுகள் அதிர்ஷ்டத்தால் உருவாகுவதில்லை..

சுயமரியாதை, தெளிவான எல்லைகள் மற்றும் நம்முடைய மதிப்பை அறிந்த மனதால்தான் உருவாகின்றது

  • மனதைக் காயப்படுத்தும் சில வார்த்தைகள்,
  • உள்ளத்தை கலங்க வைக்கும் சில நிகழ்வுகள்
  • இதையெல்லாம் வாழ்க்கையில்
  • தவிர்க்கவே முடியாது.
  • முடிந்த அளவுக்கு யாரிடமும் நெருக்கம் இல்லாமல் வாழ்ந்து விட்டு போவதுதான் நல்லது.
  • இல்லையெனில்
  • கஷ்டப்படுவோம்.
  • அல்லது கஷ்டப்படுத்துவோம்.
  • மகிழ்ச்சியாய் வாழ ஆயிரம் வழி இருக்கிறது…
  • ஆனால்…
  • கவலையின்றி வாழ மூன்று வழி தான்…
  • வருவது வரட்டும்…
  • போவது போகட்டும்…
  • நடப்பது நடக்கட்டும்…
  • எத்தனையோ முகங்களை கடந்துபோகிறேன்,
  • ஒவ்வொன்றும்
  • ஒரு புனைவென மனம் இறுத்திக்கொள்ளுதல்
  • எளிதாக இல்லை,
  • கொள்ளை அன்பைக்கொட்டும் எனக்கானதொரு
  • கண்களைத்
  • தேடி சலித்தேபோனேன்,
  • அலட்சிய விழிக்குள்
  • மிதக்கும் கசப்பை
  • இந்த பிரபஞ்ச மடிப்பு
  • எப்படி தந்தது?
  • கூர் நோக்கும்
  • விழிக்கு கொஞ்சமாய்
  • விலகி விடுகிறது அகம்,
  • தழுவியே போகும்
  • பார்வைக்கு
  • புன்னகைக்க முடிகிறது?
  • வினாக்களோடு
  • வினவும் ஊடுருவிய
  • விழிக்கு
  • என் பார்வை
  • எனை அறியாமலே பதில்சொல்லிவிடுகிறது…
  • அந்த எனக்கான
  • ஒரு காதல் கனிந்த
  • பார்வையை நினைவில் துழாவித்துழாவி
  • நெஞ்சுக்குள்ளே தேக்கி நீவிவிட்டுக்கொள்கிறேன்
  • இன்னும் பாதைகள்
  • இருக்கிறதே கடப்பதற்கு..
  • சில நேரங்களில் சில மனிதர்கள்

எனக்கு பிடித்த புத்தகம்

  • அது என்னுடையாதாக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டத்தில்லை.
  • அது யாருடைய கைகளில் நிம்மதியாக இருக்க விரும்புகிறதோ அது அங்கேயே இருக்கட்டும்.
  • அது தான் அதன் விருப்பம்,
  • ஆனால் தேடி தேடி அலைந்து என் கைகளில் வந்து சேர்ந்த அந்த புத்தகத்தை
  • அதன் ஒவ்வொரு வரியையும் ரசித்தேன்.
  • ஒவ்வொரு வலியையும் உணர்ந்தேன்.
  • என் மனம் உடைந்தாலும் அதை முழுமையாக வாசித்து முடித்தேன்.
  • இறுதியில் அதை மூடி வைத்து திருப்பி கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது புத்தகத்தை இழந்ததற்காக நான் வருந்தவில்லை.
  • என் மனதிற்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகம் என்னுடைய நூலகத்தில் இடம் பெறாமல் போய் விட்டதே அதுதான் அமைதியாக என் இதயத்தை உடைத்தது

கவிதை: குறைத்துக் கொள்ளுங்கள்

  • அன்பில் கொஞ்சம்
  • குறைத்துக் கொள்ளுங்கள்
  • வெறுப்பிலும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • உழைப்பில் கொஞ்சம்
  • குறைத்துக்கொள்ளுங்கள்
  • சோம்பலிலும் கொஞ்சம்
  • குறைத்துக் கொள்ளுங்கள்
  • அணைப்பின் இறுக்கத்தை
  • கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • இடைவெளிகளையும்
  • கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • பேச்சைக் கொஞ்சம்
  • குறைத்துக் கொள்ளுங்கள்
  • மெளனத்தையும் கொஞ்சம்
  • குறைத்துக் கொள்ளுங்கள்
  • கண்ணீரை கொஞ்சம்
  • குறைத்துக் கொள்ளுங்கள்
  • சிரிப்பையும் கொஞ்சம்
  • குறைத்துக் கொள்ளுங்கள்
  • அறிவுரைகளை கொஞ்சம்
  • குறைத்துக்கொள்ளுங்கள்
  • கண்டுகொள்ளாதிருப்பதையும்
  • கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • அகங்காரத்தை கொஞ்சம்
  • குறைத்துக் கொள்ளுங்கள்
  • அடிபணிதலையும்
  • கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • சிந்திப்பதை
  • கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • மூடத்தனமாய் இருப்பதையும்
  • கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • புகார்கள் சொல்வதை
  • கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்
  • எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதையும்
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
  • துரோகங்களை
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
  • விசுவாசங்களையும்
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
  • வீட்டில் இருப்பதை
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
  • வெளியில் அலைவதையும்
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
  • குடிப்பதை
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
  • எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாததை
  • கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்
  • வாழ்வதை கொஞ்சம்
  • குறைத்துக்கொள்ளுங்கள்
  • சாவதையும் கொஞ்சம்
  • குறைத்துக்கொள்ளுங்கள்
  • எல்லாவற்றிலும்
  • ஏதோ ஒன்று தாளமுடியாதிருக்கிறது
  • எண்ணங்களில் கவனம் வையுங்கள்,
  • அவை சொற்களாகின்றன…
  • சொற்களில் கவனம் வையுங்கள்,
  • அவை செயல்களாகின்றன…
  • செயல்களில் கவனம் வையுங்கள்,
  • அவை பழக்கங்களாக மாறுகின்றன..
  • பழக்கங்களில் கவனம் வையுங்கள்,
  • அவைதான் நம் வாழ்வை
  • தீர்மானிக்கின்றன…!!!

கவிதை: சுமை

  • தினந் தோறும் ஒருவீடு
  • நிழல் போல
  • அவளை தொடர்கிறது
  • அந்த வீட்டை
  • பார்த்து பார்த்து
  • வடிவமைக்கிறாள்
  • அழகிய சிற்பங்களால்
  • வீட்டை அலங்கரிக்க
  • எண்ணுகிறாள்
  • அவள் அதற்காக
  • ஆயிரம் வீடுகளின்
  • செங்கற்களை சுமக்க
  • வேண்டியுள்ளது
  • முன்பாகவே தான்
  • சுமக்க வேண்டிய
  • செங்கல்லுக்காக
  • கோரிக்கை
  • வைத்து மன்றாடுகிறாள்
  • கிடைக்காமல் போய்விடுமோ
  • என்ற பயம்
  • அவள் மனதில்
  • அரளிப் பூவென
  • மலர்கிறது
  • ஒரு நாளைக்கு
  • சில செங்கல்லையேனும்
  • சுமந்து விட்டால்
  • இலக்கை
  • அடைந்து விடுவேன்
  • என்கிறாள்
  • அவளுக்கு உதவ
  • நானும் முன்வந்து
  • என் கைகளைத்
  • தருகிறேன்
  • இந்தக் காலம் மட்டும்
  • ஓரமாய் நின்று
  • எத்துனை செங்கற்களை
  • சுமந்தாளென
  • எண்ணிக் கொண்டிருக்கிறது
  • அவள் கனவு வீட்டை
  • கட்ட நீ அனுமதிப்பாயா?
  • காலத்திடம் கேட்கத்
  • தோன்றுகிறது.

அன்பு

அன்பைச் செலுத்தி யார் மனதிலாவது இடம் பிடிப்பதெல்லாம் கூட எளிதாகத்தான் இருக்கிறது. அந்த அன்பைத் தொடர்ந்து சரிவரக் கையாளத் தெரியாமல் தோற்று வெளியேறும் போதுதான் எவ்வித நிபந்தனையுமின்றி நேசிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது புரிகிறது.

வெற்றி

  • நான் எந்த வெற்றியை நோக்கியும்
  • வேலை செய்யவில்லை
  • வேலை முடிந்து அருந்தும்
  • ஒரு தேநீர் எனக்குக் காட்டும்
  • நல் வழி ஒன்றே போதும்

கவிதை: முதல் பக்கம்

முடிவு அழ வைக்கும் என்று தெரிந்தும் முதல் பக்கத்தை வாசித்தேன்.

முதல் பக்கம் சிரிக்க வைத்தது. அதனால் கடைசி பக்கம் வலிக்கும் என்று தெரிந்தும் கதையை தொடர்ந்தேன்..

சில கதைகளின் முடிவு கண்ணீராக இருந்தாலும் அதை வாசித்த நாட்கள் மட்டும் என்றும் அழகான நினைவாகவே இருக்கும்.

கவிதை:

  • எண்ணங்களில் கவனம் வையுங்கள்,
  • அவை சொற்களாகின்றன…
  • சொற்களில் கவனம் வையுங்கள்,
  • அவை செயல்களாகின்றன…
  • செயல்களில் கவனம் வையுங்கள்,
  • அவை பழக்கங்களாக மாறுகின்றன…
  • பழக்கங்களில் கவனம் வையுங்கள்,
  • அவைதான் நம் வாழ்வை
  • தீர்மானிக்கின்றன…!!

கவிதை: மரணம்

  • எல்லோரின் முதுகுக்கு
  • பின்னாலும் ஒரு ஆழ்ந்த
  • புன்னகையுடன்,
  • தொட்டு விடும்
  • தூரத்தில் தான் நின்று
  • கொண்டிருக்கிறது

கவிதை: முட்கள்

  • நம் பாதைகளில் முட்கள் எப்போதும் இருப்பதில்லை. ஆனால்
  • கள்ளிகளுக்கிடையில் கவனமாக பயணப்பட வேண்டும்.
  • வழி நெடுகிலும் கிடக்கும்
  • தடைகளில் கால்கள் இடரி விழுந்து இதய கண்ணாடியை உடைத்து
  • விடாத திடம் வேண்டும்…..
  • நீளும் பாதையில்
  • நிகழ்பவை அத்தனையும் அனுபவமாக கொள்ள வேண்டும்…
  • நரிக்களுக்கும் ஆடுகளுக்குமான
  • அடையாள அட்டைகளை
  • நுண்ணிய வித்யாசத்தில்
  • கண்டெடுக்க தெரிந்திருக்க
  • வேண்டும்…..
  • பருந்துகளுக்கும் பாம்புகளுக்கும்
  • விருந்தாகிடாமல் பறந்து தப்பி
  • பாதுகாத்துக் கொள்ளும் பட்சியாக தெரிந்திருக்க வேண்டும்…..
  • மிருகங்களிடம் தப்பி பிழைக்க கொம்புகள் வளர்க்க வேண்டும்
  • நுனி நாக்கில் விஷம் அறியும் நுண்ணிய பார்வை வேண்டும்…..
  • முகம் பார்த்து அகமகிழ பேசி
  • புறம் சென்று புறம் பேசும்
  • மனிதர்களை அறிய ஞானம் நிறைய நிறைய வேண்டும்….
  • இத்தனையும் தாண்டி வாழ்ந்து தொலையவும் வேண்டும்….

என் எழுத்துக்கள்

“என் எழுத்துக்களை வைத்து என்னை என் நிகழ்காலத்தில் தேடாதீர்கள்.

அது எல்லாம் என் இறந்து போன இறந்தகாலம்…

இப்போ நான் என் எதிர்காலத்தில் இருக்கிறேன். அங்கே உங்களை மகிழ்வுடன் சந்திப்பேன்”

கவிதை: வரம்பற்ற கருணை

  • வாங்குபவருக்கு
  • என்றும் திருப்தி
  • இருப்பதில்லை
  • அதனால்
  • கொடுப்பவரே
  • உங்களை
  • கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்
  • வரம்பற்ற கருணை
  • உங்களை
  • ஏமாளியாக்கிவிடும்

உழைப்பு

“உன் உயர்ந்த கனவுகளுக்கும் உண்மையான வாழ்விற்கும் நடுவில் இருக்கும் தொலைவு உனது அயராத உழைப்பினாலும், அசைக்க முடியாத தன்னம்பிக்ககையினாலும் தீர்மானிக்கப்படுகிறது”

கவிதை: அன்பின் மதிப்பு

  • என் அன்பை
  • அளந்து பார்த்தவர்கள்
  • அதன் மதிப்பை
  • அறிந்திருக்கவில்லை
  • அவர்களிடம்
  • எடைபோடும் தராசு இருந்தது மனிதர்களைத் தவிர
  • மனங்களைத் தவிர
  • எல்லாவற்றையும்
  • அதில் நிறுத்த முடிந்தது
  • எதையும் மறக்கவில்லை
  • எதையும் நினைவுபடுத்தவும் இல்லை
  • என் வாழ்க்கையில் அவர்களுக்கான இடத்தை மாற்றி எழுதினேன்
  • இப்போது அவர்களின் பெயர் கூட
  • என் முகவரியில் இல்லை
  • எல்லோரையும் அவரவர் இடத்தில் வைத்துவிட்டேன்
  • சிலரை நினைவில்
  • சிலரை மன்னிப்பில்
  • சிலரை அவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த பாடத்தில்
  • எனக்கு என்னால்
  • அன்பு செய்யப்பட்டவர்களின்
  • மகிழ்வு நிச்சயமாக அவசியம்
  • அவர்கள் தானே
  • அறிவின் பாதையைத்
  • திறந்து வைத்தவர்கள்
  • சில நாட்களில் நன்றியோடு
  • அவர்களை நினைத்துக்கொள்கிறேன்….

கவிதை: சிடுமூஞ்சி

  • தனியாக இருப்பவள்…
  • உறவாடத் தெரியாத
  • சிடுமூஞ்சி என்றார்கள்.
  • ஆனால், பல முகங்களின்
  • முகமூடிகளைப் பார்த்தவள் அவள்

கவிதை: சில சந்திப்புகள்

  • சில சந்திப்புகள்
  • மகிழ்ச்சியை மட்டும்
  • தருவதில்லை
  • கடந்த காலத்திலிருந்து
  • நாம் எவ்வளவு தூரம்
  • வந்துவிட்டோமென்பதை
  • மௌனமாக நினைவூட்டுகின்றன

அன்புக்குரிய வனிதா

அன்புக்குரிய பெண் சமூக போராளி வனிதாவின் இறப்புக்கு பின் தத்தமது வாழ்க்கையில் தனித்து போராடும் பெண்களின் பின்னால் உள்ள வலிகளை பற்றி பேச வேண்டும் என தோன்றியது.

இன்று என் பயணத்தின் நேரங்களை இதற்காக பயன்படுத்திக் கொண்டேன். இது யாரையும் குற்றம் சொல்லவோ அல்லது மனவேதனை குட்படுத்தவோ அல்ல. எல்லா பெண்களுக்கும் தமது இனிமையான காலம் என்று வாழ்வது அவர்களது பள்ளி காலம் மட்டும் தான். அங்கேயே எதிர்காலம் குறித்ததான தேடல்களுடனும் கனவுகளுடனும் வாழ்க்கை ஆரம்பமாகி விடுகிறது. அந்த கனவுகளும் தேடல்களும் 100 பேரில் 20 பேருக்கு தான் சரியாக அமைந்து விடும் 80 பேர் பிழையாகி போன வாழ்க்கைக்குள் சென்று கடமைக்காக என வாழ முற்படுகின்றனர்.

அதிலும் 30 பேர் அந்த வாழ்க்கை முறைக்குள் தங்களை இசைவாக்கப் படுத்திக்கொண்டாலும் 50 பேர் தமது வாழ்க்கையில் போராட்டங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு வாழ தொடங்கி விடுகின்றனர். அப்படியாக வாழ்வியல் தொடர்பான போராட்ட கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட பெண்கள் தமது வாழ்க்கையில் மகிழ்ச்சியானவர்களாக வெளிப்படுத்திக் கொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இந்த சமூகம் அவர்களை மகிழ்ச்சியான பெண்கள் என்றே கருதுகின்றது. இவ்வாறு வாழும் பெண்கள் அணிந்து கொள்ளும் முகமூடிகள் ஏராளமானவை. ஒவ்வொருவரின் முன்னாலும் ஒவ்வொரு முகமூடிகள். பிள்ளைகளின் முன்னாள் ஒரு முகமூடி. பெற்றோர், உறவினர்கள் முன்னாள் ஒரு முகமூடி. நண்பர்கள் முன்னாள் ஒரு முகமூடி. வேலைத் தலங்களில் ஒரு முகமூடியென சமூகத்தின் முன்னாள் பல முகமூடிகளை அணிந்து கொள்கின்றனர்.

அத்தனை முகமூடிக்கு பின்னால் உண்மையான ஒரு முகம் ஒளிந்துகொண்டு தான் இருக்கிறது. அங்குதான் உண்மையான வலிகளும் உண்மையான எதிர்பார்ப்புகளும் உண்மையான மகிழ்ச்சியும் வாழ்ந்து கொண்டிருக்கும். அது யாராலும் கவனிக்கபடுவது இல்லை.

சில நேரங்களில் முகமூடிகளின் பின் மறைக்கப்படுகிற உண்மையான முகத்தை உரியவர்களே மறந்து போகின்றனர். உணர்வுகளுடானான போராட்டங்களை தனியாக சந்திக்கும் சமயங்களில் அங்கு கண்ணீர் மட்டுமே ஆறுதல் தருகிறது. எப்போதும் உண்மையான வாழ்வியல் என்பது சுமைகள் நிறைந்ததாகவே இருக்கிறது. அந்த சுமைகள் எப்போதும் தனியாகவே சுமக்கப்படும். அது யாருக்கும் தெரியாது. யாரிடமும் முழுமையாக வெளிப்படுத்த படாது. அது எப்போதும் தனியாகவே நம்மை கொல்லும்.

பணம், பொருள் அல்ல அந்த சுமை. அது ஒரு நம்பிக்கை சார்ந்தது, உணர்வு சார்ந்தது, அது ஒரு உண்மையான உயிரின் தேடல் மட்டுமே. அந்த உணர்வு தவறுகளை ஏற்றுக்கொள்வது இல்லை, மன்னிப்பதும் இல்லை. நம்பிக்கை உடைப்படுவது போல ஒரு வலி உலகில் எதுவுமே இல்லை என்பேன் நான். அந்த உண்மையான தேவைகள் இல்லாத மனிதர்கள் மனிதர்களே இல்லை. இந்த பூமியில் யாரும் யாரையும் சரியாக புரிந்து கொள்ள முடியாது என்பது தான் உண்மை. யாரிடமும் கூறப்படாத ஒரு தேடல் எல்லோருக்குள்ளும் இருக்கும் அந்த உண்மையான தேடல் பொய்த்து போவது தான் வாழ்க்கையில் மிக பெரும் தோல்வி ஆகும்.

எல்லா பெண்களுக்கும் இது பொருந்தும். எல்லாவற்றையும் 100 வீதம் அடைந்தவர்கள் யாரும் இல்லை. ஆனால் வாழ்க்கையில் எந்த நிமிடமும் நமக்கு நிச்சயம் கிடையாது. இறப்பு என்பது எதற்கும் தீர்வும் ஆகாது. புரிந்து கொள்ளுதல் என்பது ஒருவருடைய இரகசியங்களை தேடி தெரிந்து கொள்வது அல்ல. ஒவ்வொருக்கு பின்னும் அவர்களது தனிப்பட்ட தேவைகள், விருப்பங்கள் இருக்கும் என்பதை புரிந்துக்கொண்டு அவர்களை அவர்களாகவே வாழ விடுவது தான்.

அன்புடன் பிரியா

நன்றிகள்

பிரியா பிரியதர்சினி, வவுனியா – இலங்கை

FB: Priya Priyatharsiny

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %