வைரவ பொங்கல் (நாய்ப்) பொங்கல்

வைரவ பொங்கல் (நாய்ப்) பொங்கல்
இந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் வைரவப் பெருமானும் மிகவும் முக்கியமானவர். பைரவர் ஒரு காவல் தெய்வமாகவே பொதுவாக கிராமப்புற மக்களாலேயே அதிகமாக வணங்கப் படுகிறார். வயல் வெளிகள், சந்திகள், பாரிய ஆலமரங்கள் மற்றும் ஒதுக்குப் புறமான பகுதிகளில் வைரவரை சூலமாக வைத்து தம்மைப் பாதுக்காக்கும் காவல் தெய்வமாக கிராம மக்களால் வணங்கப் படுகிறார். வைரவரை வணங்கினால் பேய், பிசாசு, பில்லி, சூனியம், நாவூறு போன்றன அணுகாது அல்லது அவற்றில் இருந்து விடுபடலாம் என்பது கிராம மக்களின் அதீத நம்பிக்கையாகும். தமக்கு ஏற்படும் நோய்களைத் தீர்ப்பதற்காக பைரவருக்கு பொங்கல், வடை மாலை போன்றன சமைத்துப் படைத்தது வழிபட தமது நோய்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.
சிலர் பைரவருக்கு ஆடு, கோழி போன்றன நேர்ந்து விட்டு கோவிலில் அவற்றைப் பலிகொடுத்து (வெட்டிச் சமைத்து) படைத்து வழிபடுவர். இப்படியான பலிகொடுப்பதை வேள்வி என அழைக்கிறார்கள். பைரவர் கோவிலில் மட்டுமன்றி கிராமங்களில் காளி கோவிகளிலும் வேள்வி நடைபெறுகிறது. ஆனால் எந்த வேத, ஆகமங்களிலும் இறைவனுக்கு ஒரு உயிரை வெட்டி படையுங்கள் என்று கூறப்படவில்லை. இது கிராம மக்கள் தாம் அந்த விலங்குகளை கொன்று உண்பதற்காக ஏற்படுத்திய ஒரு சடங்காகவே கருதப்படுகிறது.
அனைத்து உயிரினங்களும் கடவுளால் உருவாக்கப் பட்டவையே. அப்படியாக தான் உருவாக்கிய உயிரினங்களை தனக்கு உணவாகத் தரும்படி கடவுள் மனிதனிடம் கேட்குமா? அப்படி இருந்தாலும் கடவுள் கோழியையும், ஆட்டுக் கடாயையும் மட்டுமே கேட்குமா? ஏன் சிங்கம் அல்லது ஒரு புலியை, ஒரு பாம்பை எனக்குப் பலி கொடு என்று கடவுள் மனிதனிடம் கேட்கவில்லை?
கடவுளுக்குப் பலி கொடுப்பது என்பது மனிதனது ஒரு முட்டாள்த்தனமான நம்பிக்கையாகும். தான் விரும்பி உண்ணும் ஆடு, கோழி போன்ற விலங்குகளை தான் உண்பதற்காக ஏற்படுத்திய ஒரு வைபவமாகும். இந்த உண்மைகளை மக்கள் முக்கியமாக கிராமத்து மக்கள் தற்போது உணர ஆரம்பித்து விட்டார்கள். நவீன விஞ்ஞான வளர்ச்சியும் அதற்கு ஒரு காரணமாகும். அரசாங்கங்களும் ஆலயங்களில் நடைபெறும் மிருக பலியை தடை செய்துவிட்டார்கள். இருந்தும் கிராமங்களில் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆங்காங்கே சில ஆலயங்களில் கடவுளுக்காக நடாத்தப்படும் வேள்விகள் அல்லது நேர்த்திக் கடன்கள் என்ற பெயரில் மிருக பலிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நோய் துன்பம் பிரச்சினைகள் தீரவேண்டும் என்று செய்யப்படும் மிருக பலியின் பின்னர் அவர்களது நோய் தீர்ந்ததா என்றால் அதுவும் இல்லை. முற்காலத்தில் இருந்த ஒரு சிலர் தமது வாய் ருசியைப் போக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கோழி, ஆடு, மாடு (எருமை) போன்ற மிருக பலிகள், வேள்வி என்ற பெயரில் இன்றும் வளர்ச்சி அடையாத கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. (எருமையை பலி கொடுப்பது முக்கியமாக நேபாளத்திலும் பன்றி பலி பொதுவாக பின்தங்கிய சீனக் கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது.)
பைரவரின் தோற்றம் பற்றிய விளக்கங்கள் பைரவ புராணம், அக்கினி புராணம்,சிவபுராணம் மற்றும் லிங்க புராணம் ஆகியவற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
புராணம் எனப்படுவது ஒரு கடவுள் அல்லது ஒரு கோவில் உருவாகிய வரலாற்றினை அதன் சரித்திரத்தினைச் சித்தரிக்கும் ஒரு நூலாகும். ஒரு கடவுளை பற்றிய புராணத்திலே அந்தக் கடவுள் எதற்காகத் தோன்றினார், அந்தக்கடவுளை நாம் எப்படி வழிபடவேண்டும், அந்தக் கடவுளுக்கு பூசை செய்யும் மந்திரங்கள், படைக்கப்படும் உணவுகள், அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், எந்தத் தினங்களில் வழிபட்டால் எமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்ற வழிபட்டு முறைகள் கூறப்பட்டிருக்கும்.
பைரவரின் தோற்றம்: ஒருமுறை பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தம்மில் யார் பெரியவர் என்ற அகம்பாவம் எழுந்தபோது, அவர்களின் கர்வம் அடக்க சிவபெருமான் நெருப்புப் பிழம்பாகத் காட்சியளித்தார். அதனைக் கண்ணுற்ற பிரம்மன் தனக்கு ஐந்து தலை இருந்ததால் தனக்கு நிகரானவர் யாரும் இல்லை என்ற எண்ணத்துடன் இருந்தான். சிவனை மதிக்காது தானே பெரியவன் என்ற அகந்தையுடன் நின்றான். பிரம்மன் சிவனை மதிக்காமல் இருந்ததால் கோபம் கொண்ட சிவன் உலக ஒழுக்கத்தைக் காக்கவும், பிரம்மனின் அகந்தையை ஒடுக்கவும் கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று தன் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த நெருப்பில் இருந்து உக்கிரமான பைரவ மூர்த்தியைத் தோற்றுவித்தார். பைரவர் தனது திருக்கரத்தின் நகத்தால் பிரம்மனின் ஐந்தாவது தலையைக் கிள்ளி அவனது அகந்தையை அழித்தார். அப்போது அவ்வழியே வந்த ஒரு கருப்பு நாய் பைரவரின் திருக்கரத்தில் இருந்த பிரம்மனின் ஐந்தாவது தலையில் இருந்து வடிந்த குருதியை குடித்து அந்த இரத்தம் நிலத்தில் விழுந்து பூமியை மாசடையாமல் காத்தது. அன்றுமுதல் பைரவர் அந்த நாயை தன்னுடனேயே வைத்துக் கொண்டார். அன்றுமுதல் நாய் பைரவரின் வாகனமாக (செல்லப் பிராணியாக) அமைந்தது. எங்கெல்லாம் ஆணவம் அடக்கப்பட வேண்டுமோ, எங்கெல்லாம் பாதுகாப்பு தேவைப் படுகிறதோ அப்போது யாரெல்லாம் பைரவரை வணங்கி அழைக்கிறார்களோ அங்கெல்லாம் பைரவர் தனது கருணையைக் காட்டுவார். அவருடன் அவரது வாகனமான நாயும் இருக்கும் என்று பைரவ புராணம் கூறுகிறது.
நாம் ஒரு கடவுளை மிகவும் பக்தியுடன் வணங்கி அக் கடவுளின் உதவியை வேண்டும்போது, அத் தெய்வங்கள் பல வடிவில் வந்து அல்லது அவர்களது வாகனங்கள் மூலமாகவோ அல்லது எமக்கு கனவிலோ அல்லது நனவிலோ தோன்றி எமது வேண்டுதலை நிறைவேற்றும் என்பது ஐதீகம்.
சிவன் பொதுவாக மனித உருவிலேயே காட்சி கொடுப்பர், உதவிகள் புரிவார். சக்தி மான் உருவிலும், விநாயகர் யானை உருவிலும், முருகன் மயில், பாம்பு அல்லது ஆடு உருவிலும், பெருமாள் கருடன் உருவிலும், பைரவர் நாய் உருவிலும், நாகதம்பிரான் பாம்பு உருவிலும், சனீஸ்வரன் காக உருவிலும் காட்சி கொடுத்து தன்னை மனமுருகி வழிபடும் பக்தர்களுக்கு உதவிகள் புரிவார்கள். இப்படியாக பல உப தெய்வங்கள் தேவதைகள் என ஒவ்வொரு மூர்த்திகளுக்கும் ஒவ்வொரு வாகனம் (விலங்கு) இருக்கும்.
ஒரு தெய்வத்தின் கருணையைப் பெற வேண்டுமாக இருந்தால் அந்தத் தெய்வத்தை முறைப்படி விரதமிருந்து வணங்கி அத் தெய்வத்தின் கருணையை பெற்ற பின்னரே அது தெய்வங்களிடம் இருந்து எமக்கு உரிய நேரத்தில் வேண்டும்போது உதவிகள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
ஐதீகம் என்பது காலம் காலமாக மக்களிடையே பின்பற்றப்பட்டு வரும் ஒரு தெய்வ நம்பிக்கை அல்லது நடைமுறை ஆகும். இந்த விளக்கங்கள் புராணங்களில் கூறப்பட்டிருந்தாலும் அந்தப் புராணங்கள் எல்லோருக்கும் கிடைக்காது அல்லது எல்லோராலும் படிக்க முடியாது. எனவே காலம் காலமாகப் பரம்பரை பரம்பரையாக கூறப்பட்டு வரும் ஆன்மீக அல்லது பண்பாட்டு மரபுசார் பழக்க வழக்கங்களில் நம்பிக்கை வைத்து மக்கள் அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார்கள். சில நடைமுறைகளுக்கு எமக்கு முழுமையான விளக்கங்கள் தெரியாமல் இருந்தாலும் நாம் அவற்றைக் கடைப் பிடிக்கிறோம்.
குறிப்பு: புராணங்கள் இதிகாசங்கள் பண்டைய நூல்கள் எல்லாம் ஏடுகளில் பழம் தமிழில் எழுதப்பட்டிருக்கும். பொதுவாக பாடல்களாகவே எழுதப்பட்டிருக்கும். அவற்றை தற்போதைய எமக்கு விளங்கக்கூடிய நடைமுறைத் தமிழுக்கு தமிழ் மேலோர்களால் மொழி பெயர்க்கப்படும். ஒருவேளை அந்த மொழிபெயர்ப்புகள் உண்மையான கருத்துக்களை வெளிப்படுத்தாமல் கூட இருக்கலாம். இப்படியான மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் காலம் காலமாக, பரம்பரை பரம்பரையாக கேள்வி ஞானம் வாயிலாகவே அடுத்தவருக்கு, மக்களுக்கு சென்றடையும். இவற்றில் பல நடைமுறைகள் கருத்துக்கள் காலத்தின் மாற்றத்துக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டிருக்கும். பல நடைமுறைகள் கைவிடப்பட்டு விடும். இவ்வாறு கைவிடப்பட்ட சடங்குகளில் நாய்ப் பொங்கலும் ஒன்றாகும்.
பைரவர் விரதம்
பைரவர் அவதரித்த திதி தேய்பிறை அட்டமி என்பதாலும் அவதரித்த நட்சத்திரம் பரணி என்பதாலும் இந்நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப் படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமைகளில் வருகின்ற அஷ்டமி சிறப்பு வாய்ந்ததாகும்.
கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வழிபட்டால் தீராத எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் அது தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது
ஐப்பசி மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாள் ஐப்பசிப் பரணி, மற்றும் சித்திரை மாதத்தில் வரும் சித்திரைப் பரணி ஆகிய திதிகளும் கால பைரவர் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த புனித நாளாகும்.
பைரவர் அவதரித்த திதி தேய்பிறை அட்டமி என்பதாலும், அவதரித்த நாள் செவ்வாய் கிழமை என்பதாலும் அவதரித்த நட்சத்திரம் பரணி என்பதாலும் இந்தநாட்களில் பைரவரை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு.
அதாவது பைரவரை எண்ணி நோன்பிருக்க சிறந்த நாட்கள்
- சித்திரைப் பரணி
- ஐப்பசிப் பரணி
- தேய்பிறை அஷ்டமி (பௌர்ணமிக்குப் பின்னர் வரும் அட்டமி)
- செவ்வாய்க் கிழமைகளில் வருகின்ற தேய்பிறை அட்டமி
- கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அட்டமி
பைரவர் வழிபாடு
வில்வ மாலை, தாமரைப்பூ மாலை, தும்பைப்பூ மாலை ஆகியவை பைரவருக்கு பூசை செய்ய உகந்ததாகக் கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப் பூவைத் தவிர்த்து ஏனைய அனைத்து வாசனைப் பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப் படுகின்றன.
வைரவ கடாட்சம் பெற பைரவ வழிபாட்டின் போது எண் (8) முக ருத்ராட்சம் அணிந்து வணங்குவது உகந்ததாகப் போற்றப்படுகிறது
சிவன் கோவில்களில், முதல் பூஜை விநாயகருக்கும் கடைசி பூஜை பைரவருக்கும் செய்யப்படுகிறது. கோவிலை பூட்டிய பிறகு சாவியை பைரவர் சன்னதியில் வைத்து எடுப்பது வழக்கத்தில் உள்ள சடங்காகும். அதாவது பைரவர் காக்கும் கடவுள் என்பதால் இந்த முறை வழக்கத்தில் உள்ளது.
பைரவர் வழிபாட்டின் பலன்கள்
- கடன் பிரச்சனை, நவகிரக தோஷம் போன்றவற்றால் பெரும் துன்பங்களை அனுபவிப்பவர்கள் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் விளக்கேற்றி வழிபடுவது நல்ல பலனைத் தரும்.
- சாப நிவர்த்தி: வாழ்வில் இருக்கும் அறியாத சாபங்கள், தீவினைகள் மற்றும் தோஷங்களை நீக்கக்கூடியது.
- பாதுகாப்பு: தீய சக்திகள், எதிரிகளின் தொல்லைகள் மற்றும் கண் திருஷ்டி ஆகியவற்றிலிருந்து காக்கும்.
- பயம் நீங்குதல்: மனப் பயம், மனப் பதற்றம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, தைரியத்தையும் மன அமைதியையும் தரும்
நாய்ப் பொங்கல்
ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களால் பைரவரது அருள் பெறும் நோக்கத்தில் பைரவரின் வாகனமான நாய்களை வணங்குவதற்காகவும் நாய்கள் வீட்டை காப்பதால் அவற்றிக்கு நன்றி செலுத்தும் முகமாகவும் “நாய்ப் பொங்கல்” ஒவ்வொரு ஆண்டும் பைரவர் உதித்த நாளான தேய்பிறை அட்டமியில் கொண்டாடப்பட்டு வந்தது.
பின்னர் காலப்போக்கில் இவ்வழக்கம் அற்றுப்போய் மாட்டுப் பொங்கல் அன்று நாய்களுக்கும் மேலும் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, எருமை, களுதை போன்ற விலங்குகளுக்கும் சேர்த்துக் கொண்டாடப்பட்டு வந்தது. காலப்போக்கில் தற்போது தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் மாடுகளுக்கு மட்டுமே கொண்டாடப் படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகையின் அடுத்தநாள், மனிதர்களுக்குப் பல்வேறு வழிகளில் துணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் முகமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. நமது வாழ்வோடு கலந்த நன்றியுள்ள விலங்குகளை மதிக்கும் உன்னதத் திருநாளாக “மாட்டுப் பொங்கல்” நாள் இருந்து வருகிறது. தற்போது மாட்டுப் பொங்கல் இந்தியாவில் தமிழகத்திலேயே, அதுவும் தென் மாவட்டங்களில் கிராமப் புறங்களிலேயே கொண்டாடப்பட்டு வருகிறது.
நாய்ப் பொங்கல் பைரவர் வழிபாடு செய்யும் முறை
சிவபெருமானின் அவதாரமான பைரவர் உதித்த நாள் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ஆகும். இந்த நாள் “காலபைரவாஷ்டமி” அல்லது “பைரவர் ஜெயந்தி” என்று அழைக்கப் படுகிறது.
இந்நாளில் வளர்ப்பு நாய்களைக் குளிப்பாட்டி, குங்குமப் பொட்டிட்டு, மாலை அணிவித்து அழகுபடுத்துவர். வீட்டில் அல்லது வைரவர் கோவில்களில் மண் பானையில் வெண் பொங்கல் செய்து (உப்பு சக்கரை எதுவும் இன்றி) பைரவருக்கு படைத்து பூஜை வழிபாடு செய்து நாய்களுக்கு அந்த உணவை வளங்கவேண்டும்
குறிப்பு: மேழம், பட்டாசு போன்ற சத்தங்கள் எழுப்பாது நாய்கள் விலங்குகள் பயப்படாதவாறு கவனித்துக் கொள்ளவேண்டும். சிகப்பு மஞ்சள் போன்ற விலங்குகள் அஞ்சும் வண்ண ஆடைகள் அணியக்கூடாது.
பொங்கலை நாய்களுக்கு மட்டும் அல்லாது உணவு தேடும் அனைத்து பறவைகள் விலங்குகளுக்கும் உணவளிக்கவும், மிகுதி உணவு வீட்டிற்கு எடுத்து செல்ல வேண்டாம் எனவும் விரத நியதியில் கூறப்பட்டுள்ளது
அதே வேளையில் இன்னொரு பானையில் பொங்கல் செய்பவர்கள் விரும்பி உண்ணும் பொங்கலோ அன்றி சோறோ சமைத்து உண்ணலாம் என்பதில் எந்தத் தடையும் இல்லை.
அது மட்டுமன்றி தொடர்ந்து ஏழு தேய்பிறை அட்டமியில் (ஏழு மாதம்) விரதமிருந்து நாய்களுக்கு உணவளித்து பைரவரை வழிபட்டு வந்தால், வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் படிப்படியாக நீங்கி தொல்லைகள் அற்றுப் போகும் (ஏழு தேய்பிறை அஷ்டமி விரதம் எந்த மாதத்தில் இருந்தும் ஆரம்பிக்லாம் கோவில்களில் பொங்கவேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. பைரவரை வணங்கி சுத்தமான சைவ வீட்டுச் சமையலில் நாய்களுக்கு உணவளித்தால் போதுமானது)
அதாவது திருமண வரம்வேண்டி துர்க்கை விரதம் இருப்பவர்கள் ஏதோ ஒரு செவ்வாயில் இருந்து ஆரம்பித்து 7 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருப்பது போல, பிள்ளை வரம் வேண்டுபவர்கள் ஏதோ ஒரு தேய்பிறை (பௌர்ணமிக்கு பின்னர் வரும் அட்டமி) நாளில் ஆரம்பித்து தொடர்ந்து ஏழு தேய்பிறை அஷ்டமியில் நோன்பிருந்து பைரவர் வழிபாடு செய்து நாய்களுக்கு உணவளித்து விரத்த்தினை முடித்துக் கொள்ளலாம்.
பொங்கலின்போது பின்வரும் விடயங்களில் அவதானம் தேவை – விலங்குகள் கண்டு பயமடையாத நிறங்களில் உடைகள் அணியவேண்டும். வெடி, மேழம் போன்ற நாய்கள், விலங்குகள் பயமடையும் சத்தங்கள் எழுப்பக்கூடாது. பல நாய்களை பொங்கும் இடங்களில் கொண்டு வரக்கூடாது. அவற்றை நினைத்து பைரவருக்கு பொங்கி அங்கிருக்கும் நாய்கள் மற்றும் தெரு நாய்களுக்கு உணவளித்தால் சிறப்பு.
மாட்டுப் பொங்கலின்போது, சில இடங்களில் வெடி கொழுத்துவது, மேழம் அடித்தல் போன்ற நிகழ்வுகளால் மாடுகள் மிரண்டு ஓடி மாடுகளுக்கும் அபாயம் ஏற்பட்டு அங்கு நிற்பவர்களும் காயமடைந்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதனால் பல இடங்களில் மாட்டுப் பொங்கலே நிறுத்தப்பட்டு விட்டது.
இப்படியான சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததனாலேயே நாய்ப் பொங்கலும் காலப்போக்கில் கைவிடப்பட்டு இன்று இல்லாமலே போய்விட்டது.
வேண்டுதல் நிறைவேறுதல் என்பது நாம் கேட்பதை அடைய எமக்கு தகுதி இல்லாதபோது அதற்கு இணையான ஒன்று எமக்கு இறைவனால் வழங்கப்படும் என்பதனையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்
பொதுவாக ஒரு விலங்கை அவை சாந்தமாக இருக்கும் வேளைகளில் நாய், மாடு, யானை மிகவும் சிறப்பு, நாம் அவற்றின் அருகில் இருந்தால் அவற்றை தடவிக் கொடுத்தால் எம்மில் ஒரு அமைதி அல்லது ஒரு இனம் புரியாத மாற்றம் நிகள்வதை உணர முடியும்.
அதாவது எம்மில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் குறைந்து நேர்மறையான எண்ணங்கள் வெளிப்படும்.
உதாரணமாக நாம் சில மனிதர்களை காணும்போது எம்மை அறியாமலேயே எமக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. சில மனிதர்களை சந்திக்கும் போது எம்மில் ஒருவித மன அழுத்தம் போன்ற உணர்வு ஏற்படுவதை உணர முடியும். அதாவது அவர்களிடம் இருந்து வெளிப்படும் நேர்மறையான மற்றும் எதிர்மறையான எண்ண அலைகளே அதற்கு காரணமாக அமைகிறது.
அப்படியான அதிகளவான நேர்மறையான எண்ண அலைகள் நாய், மாடு, யானை போன்ற விலங்குகளில் இருந்து வெளிப்படும்.
அது மட்டுமன்றி எமது ஆழ்மனதில் பதிந்து இருக்கும் பல பாவங்கள் விலங்குகளின் பார்வையால் அவற்றின் ஸ்பரிசத்தால் (தொடுகையால் – யானை ஆசிர்வாதம்) அழியும் எனபதும் ஒரு உண்மை ஆகும்.
ஒரு மனிதனை துன்புறுத்தும்போது அவர்கள் விடும் கண்ணீர் எமக்குப் பாவமாக, சாபமாக அமையும். அதுபோல ஒரு விலங்கை நாம் துன்புறுத்தும் போது அது விடும் கண்ணீர் எமக்குப் பாவமாக, சாபமாக அமைகிறது. இதனை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை
அது போல ஒரு விலங்கை மகிழ்விக்கும்போது அது அடையும் மகிழ்ச்சி அது எம்மீது பார்க்கும் பார்வை எமது பல பாவங்களை தீர்த்து வைக்கும்.
இன்றைய நாட்களில் தமிழர்களால் மாடுகளுக்கு நன்றி கூற மாட்டுப் பொங்கல், சனீஸ்வர தோஷம் விலக காகங்களுக்கு உணவளிக்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம், நாக தோஷம் விலக பாம்புகளுக்கு பால் வைத்தல், பறவைகள் மற்றும் எறும்பு, புளு, பூச்சிகளுக்கு உணவளிப்பதற்காக வீட்டு வாசலில் மாக்கோலம் போடுதல் போன்ற விலங்கு பறவை மற்றும் எறும்பு போன்றவற்றிற்கு உணவளிக்கும் நடைமுறை கைக்கொள்ளப் படுகிறது
தானங்களில் சிறந்த தானம் அன்னதானம் ஆகும் உணவு தேவைப் படுபவர்களுக்கு உணவளித்து வர நாம் பலபிறவிகளில் செய்து வந்த பாவங்கள் நீங்கும்
“நீ செய்த பாவம் உண்டு, சாபம் உண்டு. தான, தருமம் செய்துவர சில பாவங்கள் அழியும். சில பாவங்கள் நீ அனுபவித்தே அழிக்கவேண்டும். ஆனால் நீ பெற்ற சாபங்கள் நீ ஞானம் அடைந்தால் ஒழிய அவை உன்னை விட்டு அழியாது. பிறவி பிறவியாக உன்னை பின்தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்”, என அகத்திய மாமுனிவர் கூறுகிறார்.
இதில் நாம் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ளவேண்டும் ஆன்மாக்கள் தாம் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு அடுத்த பிறவி எடுக்கின்றன .ஒரு மனிதனின் ஆன்மா இறந்தபின் மீண்டும் மனிதனாகவே பிறக்கும் என்பதில்லை அவர்கள் இப்பிறவியில் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப மறுபிறவி எடுக்கும்.
அது நாயாக, பூனையாக, பறவையாக எந்த விலங்காகவும் இருக்கலாம். பல புராணக்கதைகள் முனிவர்கள், மனிதர்கள் போன்றோர் தவறுகள் செய்து அதன் மூலம் சாபம் பெற்று அடுத்த பிறவியில் பல விலங்குகளாகப் பிறந்து தாம் செய்த தவறுகளை அனுபவித்து சாப விமோசனம் பெற்றதாக பல கதைகள் உண்டு. அது மட்டுமன்றி பல விலங்குகள் சிவனை வழிபட்டு முக்தி அடைந்த வரலாறுகளும் உண்டு.
புராணங்கள் இதிகாசங்கள் மூலமாகவே எமக்கு கடவுள் நம்பிக்கை, வழிபாடு, வழிபாட்டு முறைகள் எல்லாமே வந்தது. அதன் மூலமாகவே நாம் சிவன், தேவி, பிள்ளையார், முருகன் என விரதங்கள் இருக்கிறோம். ஆலயங்கள் சென்று வழிபாடு செய்கிறோம். அதுபோல புராணங்கள் கூறும் முறைகள் அனைத்தையும் அறிந்து. பொருளறிந்து. முறை அறிந்து. காரணம் அறிந்து அதற்கேற்றவாறு கைக்கொண்டால் உரிய பலன் கிடைக்கும்.
சில விலங்குகள் பறவைகளைப் பார்க்கும்போது அதன் அருகில் இருக்கும்போது எம்மில் ஒரு இனம் புரியாத அமைதி உருவாவதை உணர முடியும். முக்கியமாக வளர்ப்பு நாய்கள் எம் அருகில் இருக்கும்போது எம்முள் ஒருவித மகிழ்வு, இனம் புரியாத ஒரு இன்பம், அமைதி உருவாவதை உணர முடிகிறது.
மேலை நாடுகளில் நான் வாழும் கனடாவில் உள்ள அரசாங்க வைத்திய சாலைகளில் உள்ள முதியோர் பகுதி மற்றும் மனஅழுத்த பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சை பெறும் பிரிவுகளுக்கு தினமும் வேறு, வேறு வளர்ப்பு நாய்களை கொண்டு வந்து வயோதிபர்கள் நோயாளிகளை அவற்றுடன் சிறிது நேரம் பழக்க விடுகிறார்கள்.
இது அவர்களது தனிமை, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது என ஆய்வுகள் கூறுகின்றன இங்கு அழைத்து செல்லப்படும் நாய்கள் சிகிச்சை நாய்கள் (therapy dogs) என அழைக்கப்படுகிறன
இப்படியாக நாய்களின் சிறப்பம்சங்களை அறிந்தே எம் முன்னோர்கள் அவற்றை பைரவரின் வாகனமாகவும், மனிதர்களின் பயத்தை, நோய், துன்பத்தைத் தீர்க்கும் கடவுளாகவும், வீட்டைக் காக்கும் நண்பனாகவும் நாய்களை முன்னிலைப் படுத்தி வணங்கி வருகிறார்கள்.
நாய்களுக்கு முக்கியமாக ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பது, நீர் கிடைக்கச் செய்வது ஆன்மிக ரீதியாகவும், கருணை அடிப்படையிலும் பல நன்மைகளைத் தருகிறது. முக்கியமாக நாய்கள் மனிதர்களை அண்டியே வாழமுடியும். அவற்றால் வேட்டை ஆடி அல்லது வேறு வழிகளில் தமது உணவை பெற்றுக்கொள்ள முடியாது. தெருக்களில் கைவிடப்பட்டு பசியோடு, தாகத்தோடு, சொறி சிரங்கு போன்ற வருத்தத்தோடு செய்வதறியாது நிற்கும் நாய்களுக்கு நாமே உதவி செய்யவேண்டும். எம்மால் முடிந்த உதவிகள் செய்யவேண்டும்.
நாய்களுக்கு உணவு அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்:
சைவ சமய கோட்பாட்டின்படி நாய் பைரவருடைய வாகனமாகும். நாய்களுக்கு உணவு அளிப்பதால் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். உணவு கொடுப்பது தேய்பிறை அட்டமியில் தான் கொடுக்க வேண்டுமில்லை. பசியோடு, தாகத்தோடு தெருக்களில் அலைந்து திரியும் நாய்களுக்கு உணவு கொடுத்தால் நாம் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும். நாம் செய்யும் செயல்களினால் ஏற்படும் கஷ்டங்கள், தடங்கல்கள் நீங்கி நன்மைகள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். கண் திருஷ்டி நீங்கும் என்பது ஐதீகம்.
ஜாதகத்தில் சனி அல்லது ராகு – கேது தோஷம் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என சொல்லப்படுகிறது. பைரவ வழிபாடு மற்றும் நாய்களுக்கு ஆதரவளித்தல் சிறந்த தீர்வாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைப் பாக்கியம் உண்டாகும்
ஒரு ஊரில் ஒரு கிராமத்தில் உள்ளவர்கள் தினமும் கண்டு பேசி பாழாகாது இருந்தாலும் ஒரு விதத்தில் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்களே. அதுமட்டுமன்றி நாம் தினமும் சந்திப்பவர்கள் கூட அது நட்பாகவோ அன்றி எதிரியாகவோ இருந்தாலும் அவர்களும் ஏதோ ஒரு முற் பிறப்பில் எம்முடன் தொடர்புடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று இந்துமதம் கூறுகிறது. அதுபோலவே எம்முடன் பழகும் விலங்குகள் பறவைகளும் எம்முடன் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடையவையாக இருக்கின்றன.
நாம் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப, எமக்கு கிடைக்கும் சாபத்துக்கு ஏற்பவே அதனைத் தீர்த்துக் கொள்வதற்காகவே எமது அடுத்த பிறப்பு அமைகிறது. குறிப்பிட்ட சில பாவத்திற்கு குறிப்பிட்ட சில உயிரினாமகப் பிறந்து அந்தப் பாவத்தை ஆன்மா அனுபவித்துக் கழித்துக் கொள்ளும் எனவும் வேதங்கள், இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனாலேயே சில தோஷங்கள் (பாவங்கள்) நீங்க சில குறிப்பிட்ட விலங்குகள் பறவைகளுக்கு உணவளிக்குமாறு இந்து தர்மத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சில தோஷங்கள் நீங்க கூறப்பட்டுள்ள பரிகாரங்கள்
நாம் முற்பிறப்பில் செய்த பாவங்களே (கரும வினைகள்) தோஷங்கள் என அழைக்கப் படுகிறது. அப்படியாக பாவங்களை வகைப்படுத்தி அவற்றிற்கு பெயர் கொடுக்கப் பட்டுள்ளது. உதாரணமாக சனி தோஷம், செவ்வாய் தோஷம் போன்றன. அந்த அந்த தோஷங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கி அந்த குறிப்பிட்ட பாவங்களை அழிக்க குறிப்பிட்ட பரிகாரங்களை, புராணங்கள் இதிகாசங்களில் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.
எறும்புகளுக்கு (புழு, பூச்சிகள்) உணவளித்துவர நாம் முற்பிறப்பில் செய்த பல பாவங்கள் தீரும். ராகு கேது தோஷம் நீங்கும் அதனாலேயே கிராமப்புறங்களில் வீட்டு வாசலில் தினமும் அரிசிமாக் கோலம் போடப்படுகிறது. (ராகு – கேதுக்கள் மனிதர்களின் கடந்த கால கர்ம வினைகளைக் குறிக்கின்றன. திருமணம், கல்வி மற்றும் தொழில் போன்ற முக்கிய காரியங்களில் தொடர் தாமதங்கள் குழப்பமான மனநிலை, தேவையற்ற பயம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்)
- புரட்டாசிச் சனிக்கிழமைகளில் (புரட்டாசிச் சனி) காகத்துக்கு உணவளித்து வர – சனி தோஷம் விலகும். முன்னோர் ஆசீர்வாதம் கிடைக்கும்.
- மாடுகளுக்கு உணவளித்து வர குரு பகவானின் தோஷம் நீங்கும். குரு தோஷம் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிப்படையும்.
- குதிரைக்கு உணவளித்துவர சூரிய பகவானின் குறை குற்றம் நீங்கும்
- யானைக்கு உணவளித்து வர குரு தோஷம் நீங்கும். குரு பகவானின் தோஷம் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிப்படையும்.
- மீன், ஆமை போன்ற நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவளித்துவர சந்திர தோஷம் நீங்கும்.
- குரங்கு, ஆடுகளுக்கு உணவளித்துவர செவ்வாய் குற்றம் நீங்கும்.
- கிளிகளுக்கு உணவளித்துவர புதன் தோஷம் நீங்கும்.
- புறாக்களுக்கு உணவளித்துவர சுக்கிரன் தோஷம் நீங்கி செல்வம் செழிக்கும்
மனிதர்களோ, தேவர்களோ, முனிவர்களோ தாம் முற்பிறப்பில் செய்த பாவத்துக்கு, பெற்ற சாபத்திற்கு ஏற்றவாறு விலங்காகப் பிறந்து சிவனை வணங்கி முக்தி பெற்றிருக்கிறார்கள் என்பது புராண வரலாறாகும்
இப்படியாக சாபத்தினால் பின்வரும் விலங்குகளாகப் பிறந்து சிவ பூஜை செய்து சிவனை வழிபட்டு முக்தி அடைந்ததாக புராண வரலாறுகள் உண்டு.
- புலி – திருப்புலிவனம். காஞ்சிபுரம். (சாபத்தால் புலியாக மாறிய முனிவர் இங்கு இத்தலத்தில் சிவனை வழிபட்டு முத்திபெற்றார்).
- பசு – சங்கரன் கோவில், தென்காசி மாவட்டம்.
- சிலந்தி மற்றும் யானை – திருவானைக்காவல், திருச்சி. இத் தலத்து லிங்கம் கூரையில்லாமல் மழை, வெயிலில் நனைந்து இருந்தது. இதனை கண்டு கவலையுற்ற சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை, தூசி சிவலிங்கத்தில் மேல் விழாமல் பாதுகாத்து வணங்கி வந்தது. அதே நேரத்தில் அங்கு தினமும் ஒரு யானை தன் துதிக்கை மூலம் காவேரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து வந்து நீரைத் தூவி சிவனை வழிபட்டது. யானை நீரை பாச்சும்போது சிலந்தி பின்னிய வலை கலைந்துவிடும். சிலந்தி மீண்டும் வலைபின்னி வழிபாட்டை தொடரும். இதனால் கோபம் கொண்ட சிலந்தி யானையை தண்டிக்க எண்ணி அதன் துதிக்கையுள் நுழைய, யானை அதனை விரட்ட துதிக்கையை மரத்தில் அடிக்க இறுதியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்தியை மெச்சிய சிவன் யானைக்கும், சிலந்திக்கும் முக்தி கொடுத்ததாக புராண வரலாறு. இங்கு சிவனை வழிபட்ட சிலந்தியும், யானையும் முற்பிறப்பில் முனிவர்களாக வாழ்ந்து சாபம் பெற்று சிலந்தியாகவும், யானையாகவும் பிறந்து சிவனை வழிபட்டதாக வரலாறு.
- எறும்பு – திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவனை வழிபட்ட தலம்.
- ஈ – வடிவில் அகத்திய முனிவர் சிவனை வழிபட்ட தலம் – திரு ஈங்கோய்மலை. திருச்சி மாவட்டம்
- பாம்பு – ஆதிசேசன் என்ற பாம்பு சிவனை வழிபட்ட தலம் – திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டம்.
- அணில், குரங்கு, காகம் – சிவனை வழிபட்ட தலம் – குரங்கணில் மூட்டம் மாமண்டூர், காஞ்சிபுரம். சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும் இங்குள்ள சிவனை வழிபட்டு முக்தி அடைந்த தலம்.
- மயில் – சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை – சிவபெருமானை வழிபட்ட தலம் – மயிலாடுதுறை.
- கழுகு – திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டம்.
- வண்டு – பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்த தலம் – திருவண்டுதுறை. திருவாரூர் மாவட்டம். இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலி எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கும்.
- நண்டு – சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன் – சிவனை வழிபட்ட தலம் – நண்டாங்கோவில். கும்பகோணம்.
- சக்ரவாகப் பறவை – சிவபெருமானை பூஜித்த தலம் – திருச்சக்கராப் பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம்.
- யானை – துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் சிவனை பூஜித்த தலம் – திருக்கொட்டாரம், திருவாரூர் மாவட்டம்.
- பசு – காமதேனு என்ற பசுவின் மகளான பட்டி என்ற பசு சிவனை வழிபட்ட தலம் – பட்டீஸ்வரம். தஞ்சாவூர் மாவட்டம்.
- ஆமை – திருமால் ஆமை வடிவில் சிவனை பூஜித்த தலம் – திருக்கச்சூர்.
- கிளி – கிளியாக மாறிய சுக முனிவர் சிவனை வழிபட்ட தலம் – சேலம் சுகவனேஸ்வரர்.
- சிட்டுக்குருவி – சிவனை பூஜித்த தலம் – சிட்டிலிங்கேஸ்வரர், வட குரங்காடுதுறை.
- கருடன் – திருச்சுறுகுடி, திருவாரூர் மாவட்டம்.
- கருங்குருவி – திருவலிவலம், திருவாரூர் மாவட்டம்
- குரங்கு – திருக்குரங்காவல், மயிலாடுதுறை மாவட்டம்.
- எலி – திருமறைக்காடு, (வேதாரண்யம்) நாகப்பட்டினம் மாவட்டம்.
- தேனீ – நன்னிலம், திருவாரூர் மாவட்டம்
- பன்றி – திருச்சிவபுரம், காவிரி வடகரை
- நாரை – திருநாரையூர், கடலூர் மாவட்டம்.
- பாம்பு – திருப்பாம்புரம், திருவாரூர் மாவட்டம் குடவாசல்.
- முயல் – திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம்.
- வெள்ளை யானை – பெண்ணாகடம், கடலூர் மாவட்டம்.
- கருப்பு யானை – திருக்காளகத்தி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம்
- பூனை – மேலைப்பாதி, மயிலாடுதுறை மாவட்டம்
- தவளை – ஆத்தூர், சேலம் மாவட்டம்.
- மீன் – தேவராயன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
- நாகம் – தேப்பெருமாநல்லூர், கும்பகோணம்.
இப்படியான புராணக் கதைகள் மூலமாக அவரவர் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்றவாறு அடுத்த பிறவியில் எந்த உயிரினமாகவும் பிறக்கலாம் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதன் மீண்டும் மனிதனாகவே பிறப்பான் என்று எந்தத் தத்துவமும், எந்த மதமும் கூறவில்லை. இந்து மதத்தின் கர்மவினை மற்றும் மறுபிறப்புக் கொள்கைப்படி, ஒரு மனிதனின் ஆன்மா அது செய்த பாவ, புண்ணிய வினைகளின் (கர்மங்கள்) அடிப்படையில் மனிதனாகவோ அல்லது பிற உயிரினங்களாகவோ பிறக்கலாம் என்பதுவே உண்மையாகும்.
இயல்பாய் எம்முடன் தொடர்புகொள்ளும் மனிதர்கள் மட்டுமல்லாது ஆடு, மாடு, காகம், நாய், ஈ, எறும்பு, கொசு, பன்றி உட்பட அனைத்து உயிரினங்களும் எம்முடன் ஏதோ ஒரு வகையில் கர்மதொடர்பு (பழைய தொடர்பு) கொண்டவை என்பதை நாம் முழுமையாக உணரவேண்டும்.
எனவே பிற உயிரினத்திடம் எப்போதும் அன்பு செலுத்தி, எம்மால் முடிந்த உதவிகள் செய்து, அவற்றிற்குத் தீங்குகள், தொந்தரவுகள் செய்யாது வாழ்வோமாக.
பைரவ காயத்ரி 1
“ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்”
பைரவர் காயத்ரி 2
“ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத்”
பைரவ மந்திரம்
“ஓம் நமோ பகவதே மகா பைரவாய சர்வ சாப நிவாரணாய ஓம் க்ரீம் பட் ஸ்வாஹா”
கு சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
“ஓம் பைரவாய நமஹ”
“ஓம் வைரவரே போற்றி”
