சிந்தனைகள்
எதிர் மறையான சிந்தனைகள் (Negative Thinking)
எண்ணங்கள் சிந்தனைகள் மூலமாகவே எமது அன்றாட வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உலகம் ஓடிக்கொண்டிருப்பதற்குக் காரணம் எண்ணங்களே. இங்கு உலகம் என்று குறிப்பிடுவது நாம் வாழும் இப் புவியில் உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் எண்ணங்களே, சிந்தனைகளே. இன்னும் சிறிது ஆழமாக நோக்கும்போது இவ்வுலகில் சிந்திக்கும் ஆற்றல் சிந்தித்து செயலாற்றும் தன்மை மனித குலத்துக்கு மட்டுமே உண்டு. எனவே மனித குலத்தின் சிந்தனைகளாலேயே இவ்வுலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று எண்ணும்போது, இவ்வுலகம் இயற்கையானது. நதியில் நீர் ஓடுவதும், இரவு பகல் உண்டாவதும், மழை, வெயில் போன்றவற்றால் தாவரங்கள் வளர்வதும், பரவுவதும் இயற்கை. அதே போல உயிரினங்கள் வாழ்வதும், தம் இனத்தை பெருக்குவதும் இயற்கையான நிகழ்வுகளே.
விலங்குகள் தமது தண்ணீர்த் தாகத்தினை பூர்த்தி செய்வதற்காக ஒரு நீர் நிலையினை அதாவது ஆறு குளம் குட்டை போன்ற நீருள்ள ஒரு இடத்தினை மையமாக வைத்தே தமது வாழ்க்கையினை, வாழ்விடத்தினை அமைத்துக் கொள்ளும். அதாவது சிந்தனை அற்ற விலங்குகள் இயற்கையோடு ஒட்டியே தமது வாழ்விடத்தினை அமைத்துக் கொள்ளும். ஆனால் மனிதன் அப்படியல்ல தனது சிந்தனையினால் கிணறு, குளம், குட்டை போன்றனவற்றை அமைத்து வாழத் தொடங்கினான். இரவில் சூரிய ஒளி இல்லாத போது தீ மூட்டி, நெருப்பு எரித்து பின்னர் மின்சாரம் மூலமாக ஒளியேற்றி, தான் விரும்பும் இடங்களில் எல்லாம் தனது எண்ணங்கள் சிந்தனைகளால் தனது தேவைகளை பூர்த்தி செய்து வாழத் தொடங்கினான்.
மனிதன் இயற்கையில் இருந்து வேறுபட்டு வாழத் தொடங்கினான். இதன் காரணத்தினால் இயற்கையோடு ஒன்றி வாழும் எல்லா உயிரினங்களும் மனித சிந்தனைகளால் மாற்ரப் பட்டுள்ளன. அதனாலேயே மனித சிந்தனைகளால் இவ்வுலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
அதாவது உயிரினங்கள் இல்லாவிட்டால் இவ்வுலகத்துக்கு அடையாளம் இல்லை. இன்னும் ஆழாமாகச் சிந்திப்போமானால் உயிரினங்கள் இல்லையேல் இவ்வுலகமும் இல்லை. இவ்வுலகத்துக்கு மதிப்பும் இல்லை. எனவேதான் இவ்வுலகம் உயிரினங்களால் அடையாளப் படுத்தப்படுகிறது மனித சிந்தனைகளால் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அறியப்படுகிறது.
இனி நாம் சிந்தனைகள் என்றால் என்ன என்று சிந்திக்கலாம். சிந்தனைகள் மூன்று வகைப்படும்.
– சிந்தனை அற்ற தன்மை.
– நேர்மறையான சிந்தனைகள். Positive Thinking
– எதிர்மறையான சிந்தனைகள். Negative Thinking
சிந்தனை அற்ற மனம்:
சிந்தனை அற்ற தன்மை என்று பார்க்கும் போது பொதுவாக மனித குலத்தைத் தவிர்ந்த அனைத்து உயிரினங்களும் சிந்தனை அற்ற தன்மை உள்ளனவாகவே உள்ளன.
உதாரணமாக மான் காட்டில் வாழும் ஒரு மிருகம். தனது உள்ளத் தூண்டுதலால் மட்டுமே தனது வாழ்க்கையை நகர்த்துகிறது. அதாவது தாகம் எடுக்கும்போது நீரருந்தும் பசியெடுக்கும்போது உணவருந்தும். சிறுநீர், மலம் போன்றன வரும்போது உடல் உந்துதலால் அவற்றை அவ்விடத்திலேயே கழிக்கும். உடல் உந்துதலால் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டு குட்டி ஈணும். தூக்கம் வரும்போது அவ்விடத்திலேயே படுத்துறங்கும். தாம் படுக்கும் இடத்தில் முள்ளிருக்குமா பாம்பிருக்குமா தேள் கொட்டுமா என்றெல்லாம் அதற்குத் தோன்றாது. அப்படியான எந்தச் சிந்தனைகளும் அதற்க்கு இல்லை. தான் இருக்கும் இடத்துக்கு ஒரு நரியோ, புலியோ, சிங்கமோ வந்து தன்னைப் பிடித்து உண்ணலாம் என்ற சிந்தனை அதற்கு இருந்திருந்தால் அது அந்தக் காட்டில் வசிக்காது அல்லது அது தனக்குரிய பாதுகாப்பைத் தேடியிருக்கும். இதுவே சிந்தனையற்ற வாழ்க்கை முறையாகும்.
ஒரு காகம் குச்சிகள் கொண்டு மரக்கிளையில் கூடு கட்டுகிறது. அது தனது சிந்தனையால் கட்டவில்லை. அது தன் ஆற்றலால் கூடு கட்டுகிறது. காகம் பறக்கும் என்பது எப்படி ஒரு ஆற்றலோ, அதுபோல காகம் கூடு கட்டும் என்பதும் ஒரு ஆற்றலாகும். காகம் சிந்தனை மூலமாக கூடு கட்டுமாக இருந்தால், ஒவ்வொரு காகத்தின் கூடும் ஒவ்வொரு விதமாக இருந்திருக்கும். உலகத்தின் எந்த மூலையிலும் ஒரு காகத்தின் கூட்டை ஒரு குருவியின் கூட்டை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
குயில் காகத்தின் கூட்டில் களவாக முட்டையிடும். அதனைக் காகம் அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும். இது குயிலின் தந்திரமல்ல. இது குயிலின் ஆற்றலாகும். குயில் சிந்திக்கும் ஆற்றல் உள்ளதாக இருந்தால், புறாவின் கூட்டில் அல்லது வேறு ஏதாவது ஒரு கரிய பறவையின் கூட்டில் முட்டை இட்டிருக்கலாமே. இதுவே சிந்தனைக்கும் ஆற்றலுக்கும் இடையில் உள்ள வேறுபாடாகும்.
ஒரு புலி பதுங்கி இருந்து தனது இரையை பிடிப்பதும் அதுபோல தனது எதிரி தன்னைத் துரத்தும்போது தப்பித்துக் கொள்வதற்காகவும் ஒவ்வொரு உயிரினமும் தனது ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
இவை ஒவ்வொரு உயிரினத்தினதும் சிறப்பம்சமாகும். இதுவே ஆற்றலாகும். இந்த ஆற்றலானது மரபணு மூலமாக தனது அடுத்த சந்ததிக்குக் காவப்படுகிறது. ஒரு மான் எப்படி பழுப்பு நிறத்தில் வெள்ளைப் புள்ளிகளோடு தோற்றமளிக்கிறதோ அது மரபணு மூலமாகவே கடத்தப்படுகிறது. அதுபோல அதன் வாழ்க்கை முறையும் முற்றாக மரபானு மூலமாகவே கடத்தப்படுகிறது. அது சிந்தனையால் வந்ததல்ல.
இவ்வுலகில் ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு கடமை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு உதாரணமாக மான் தரையில் உள்ள புல்லை, மரத்தளைகளை உண்டு வாழ்ந்து புல் வளர்ச்சியையும் தாவர வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது. புலி மானை கொன்று உண்பதால் மானின் எண்ணிக்கை கட்டுப் படுத்தப்படுகிறது. காகம் அழுகிய உணவுகளை உண்பதால் காற்றைச் சுத்தப்படுத்துகிறது. பன்றி நிலத்திலுள்ள கழிவுகளை உண்டு நிலத்தைச் சுத்தப்படுத்துகிறது. நண்டு நீரிலுள்ள கழிவுகளை உண்டு நீரைச் சுத்தப்படுத்துகிறது. இப்படியாக ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு தனித் தன்மை, தனி ஆற்றல் உண்டு. அதனை இந்த இயற்கை அவற்றிக்கு அளித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு உயிரினத்தினையும் படைத்த உருவாக்கிய இந்த இயற்கை இந்த மேலான சக்தி இவற்றை எல்லாம் சிந்தித்து ஒவ்வொரு உயிரினத்தையும் ஒவ்வொரு தேவைக்காகப் படைத்திருக்கிறது என்பதுவே உண்மையாகும். அந்த மேலான சக்தியை இயற்க்கை எனவும் அழைக்கலாம் கடவுள் எனவும் அழைக்கலாம்.
மனிதன் தனது சிந்தனையின் மூலமாக ஒவ்வொருவருடைய தேவைகள் அறிந்து ஒவ்வொரு இயந்திரத்தை, வேறு வேறு வாகனத்தை உருவாக்கியது போல இறைவன் இவ்வுலக இயக்கம் நடைபெறுவதற்காக ஒவ்வொரு உயிரினத்தையும் படைத்தான் என்பதே உண்மையாகும்.
எனவே ஒவ்வொரு விலங்கிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கிறது. ஒரு ஆற்றல் இருக்கிறது. அது சிந்தனையால் வந்ததல்ல, எண்ணங்களால் வந்ததல்ல, அது ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனித் தன்மையானது. அதுவே இயற்கை அதுவே கடவுள். அதுவே இறைவன் அதுவே விதி. என்று அழைக்கப்படுகிறது.
அடுத்தாக மனிதப் பிறவிக்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பு அம்சமான சிந்திக்கும் ஆற்றலைப் பார்க்கலாம். ஐம்புலன்களின் மூலமாகப் பெறப்படும் தகவல்களை ஆராய்ந்து சிந்தித்து செயலாற்றும் ஆற்றல் மனித குலத்துக்கு மட்டுமே உள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் மூலமாக பெற்ற அனுபவ சிந்தனைகளையும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்வு கூறல் சிந்தனைகளையும் அலசி ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றல் மனித குலத்துக்கு மட்டுமே உரித்தானது.
கடந்த கால அனுபவங்கள் என்று கூறும்பொழுது ஒருவனுடைய கடந்த கால அனுபவங்களுடன் அதாவது அவனது குழந்தைப் பருவத்திலிருந்து பெற்ற அனுபவங்களுடன் அவனுடைய முற்பிறப்பு அனுபவங்களும் அடங்குகின்றது என்பதுவும் மறுக்க முடியாத உண்மையாகும்.
ஒருவனுடைய அனுபவங்கள் அதாவது சிந்தனைகள் எவ்வாறு செயற்படுகிறது என்பதனையும் முற்பிறப்பிலிருந்து அச் சிந்தனைகள் எவ்வாறு ஒவ்வொரு பிறப்புக்கும் காவப்படுகிறது என்பதனையும் சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
மனிதமனம்
மனித மனமானது மேல்மனம் (வெளிமனம்), ஆழ்மனம் (உள்மனம்), மறைமனம் (இடைமனம் அல்லது செயல்மனம்) என மூன்று அடுக்குகளை உடையது. மேல்மனம் தூல உடலுடனும் ஆழ்மனம் சூக்கும உடலுடனும் தொடர்பில் இருக்கும். மேல்மனத்தையும் ஆழ்மனத்தையும் இணைப்பது இடைமனமாகும்.(தூல உடல் – எமது கண்ணுக்குத் தெரியக் கூடிய எமது உடல், சூக்கும உடல் – எமது தூல உடலுடன் இணைந்துள்ள கண்ணுக்குத் தெரியாத ஆன்மா).
அன்றாட வாழ்வில் மேல்மனம் மாத்திரமே உபயோகத்தில் இருக்கும், கேள்வி கேட்டு விடயங்களை அறிந்து கொள்ளல் மேல்மனதின் செயல்முறை.
மெய், வாய், கண், மூக்குச், செவி என்ற ஐம்புலன்களின் வழியாக மேல்மனமானது செய்திகளைச் சேகரிக்கின்றது. பொதுவாக அச் செய்திகளை எல்லாம் உண்மை என்று உடனே நம்புகின்றது. அச் செய்திகள் சரியா தப்பா என்று பகுத்து ஆராயும் தன்மை மேல் மனதுக்கு இல்லை.
மேல்மனம் அறிந்து கொள்ளும் அல்லது சேகரிக்கும் செய்திகளை இடைமனம் மூலமாக ஆழ்மனத்துக்கு அனுப்புகிறது. ஆழ்மனம் ஏற்கனவே தன்னில் பதிந்திருக்கும் பதிவுகளுடன் ஒப்பிட்டு, கிடைக்கும் செய்திகளை ஆராய்ந்து முடிவெடுக்கிறது. இதுவே சிந்தனை செய்தல் எனப்படுகிறது.
சிலரது ஆற்றலால் மேல்மனமானது செய்திகளை சேகரிக்கும் போதே ஆழ்மனதிலுள்ள பதிவுகளுடன் ஒப்பிட்டு செய்திகளின் உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து அறிந்து கொள்கிறது அப்படிப் பட்டவர்களையே விவேகிகள் அல்லது புத்திசாலிகள் என அழைக்கப் படுகிறார்கள். இப்படியான ஆற்றல் உள்ளவர்கள் சமுதாயத்தில் கல்விமான்களாகவும் மற்றும் பல துறைகளிலும் முன்னணியில் வாழ்பவர்களாகவும் இருப்பார்கள்.
சிந்திக்கும் வேளைகளில் ஆழ்மனம் செயல்பாட்டில் இருக்கும். ஆழ்மனம் அபார சக்திவாய்ந்தது. பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புடையது. மேல்மனம் இலகுவில் மறந்துவிடும் தன்மையுடையது. ஆழ்மனதில் எதை ஒருவன் நம்புகிறானோ அதுவே அவனுக்கு உண்மையாகிறது. மேல்மனம் அனுப்பும் தகவல்கள் அப்படியே ஆழ்மனம் பதிவு செய்து கொண்டும், ஒழுங்கு படுத்திக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும் இருக்கிறது. ஆழ்மனதின் பதிவுகள் சூக்கும உடலுடன் (ஆன்மாவுடன் ) அடுத்த பிறவிக்கு எடுத்துச் செல்லப்படும். இதனாலேயே சில வேளைகளில் சிலருக்கு முற்பிறப்பு ஞாபகங்கள் வெளிவருகின்றன.
முற்பிறப்பில் இருந்து அனுபவங்கள் மறு பிறப்புக்கு கடத்தப்படுவதற்கு இன்னொரு உதாரணத்தினைப் பார்ப்போம்.
அதாவது ஒரு சாதாரண குடும்பத்தில் பல பிள்ளைகள் இருக்கிறார்கள் என எடுத்துக் கொள்வோம். எல்லாப் பிள்ளைகளும் தாய்தந்தையரால் ஒரே மாதிரியாகக் கவனிக்கப்பட்டு, ஒரே சூழலில், ஒரே பாடசாலையில் பயின்று வளர்ந்த போதும், எல்லோருடைய அறிவும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவரும் வேறு வேறு துறையில் ஆர்வமுள்ளவர்களாகவும், வேறு வேறு ரசனை உள்ளவர்களுமாகவே காணப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் ஒருபிள்ளை மிகுந்த வீரமிக்கதாகவும் ஒரு பிள்ளை எதற்க்கெடுத்தாலும் பயந்த சுபாபமுள்ளதாகவும் இருப்பதைக் காணலாம். ஓன்று குடும்பத்தை மதித்து குடும்பம் மீது பற்று வைத்து வாழும். இன்னொன்று குடும்பத்தில் யாரையுமே மதிக்காமல் யாரையுமே நம்பாமல் வாழும். இவற்றிற் கெல்லாம் காரணம் அவர்களது ஆழ்மனதில் பதிந்துள்ள முற்பிறப்பு அனுபவங்களே.
அதுமட்டுமல்லாமல் இப்பிறப்பிலும் சிறுவயது முதல் ஏற்படும் நல்ல மற்றும் கசப்பான அனுபவங்களும் ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. இப்படிப்பட்ட ஆழ்மனதில் பதிந்துள்ள பதிவுகளே ஒருவனது சுபாவத்துக்குக் காரணமாக அமைகின்றது. ஒருவனது சிந்தனைகளுக்குக் காரணமாக அமைகின்றது. ஒருவன் எடுக்கும் முடிவுகளுக்குக் காரணமாக அமைகின்றது. ஒருவனது வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமைகின்றது.
இப்படியான ஆழ்மனப் பதிவுகளே ஒருவனுடைய நேர் மறையான (positive thinking) மற்றும் எதிர்மறையான (negative thinking) சிந்தனைகளுக்குக் காரணமாக அமைகின்றது.
நேர்மறையான சிந்தனைகள் (Positive Thinking)
அடுத்ததாக நேர்மறையான சிந்தனை என்றால் என்ன என்று பார்க்கலாம். இவர்களை நேரான சிந்தனையாளர்கள், நேர்த்தியான சிந்தனையாளர்கள், தெளிவான சிந்தனையாளர்கள் எனவும் அழைக்கலாம்.
என்னால் இக்காரியத்தைச் செய்ய முடியும், முயற்சியின்போது பல தடைகள் வரலாம். அத்தடைகளை என்னால் எதிர்கொள்ள முடியும், அதைச் சரி செய்ய வழிகள் பிறக்கும் என்கிற எண்ணம் இருக்கிறதோ, அதுவே நேர்மறை சிந்தனை.
ஒரு ரோஜாச் செடியில் பூவைப் பார்ப்பவன் நேர்மறைச் சிந்தனை உடையவன். அதே ரோஜாச் செடியில் அழகான பூ இருக்கும் போது அதை விடுத்து அச்செடியிலுள்ள முள்ளை மட்டுமே பார்த்துப் பயப்படுபவன் எதிர்மறைச் சிந்தனை உடையவன்.
தன்னம்பிக்கை உடையவர்கள் எப்போதும் நேர்மறைச் சிந்தனை உடையவர்கள். தன்னம்பிக்கை இல்லாதவர்கள் எப்போதும் எதிர் மறையாகவே எண்ணி தோல்வி மனப்பான்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். நேர்மறை சிந்தனை உடையவர்கள் தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்வார்கள்.
ஒருவர் துன்பப்படும்போது தயங்காமல் அவர்களுக்கு உதவுவது. துன்பங்கள் பிரச்சினைகள் வரும்போது அவற்றை மிகவும் நிதானமாக, துணிவாக எதிர்கொள்வது. இறுதிவரை போராடி முயற்சி செய்து, அப்பிரச்சினைகளில் இருந்து மீண்டு வர முயல்வது. இப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர்களெல்லாம் நேர்மறையான சிந்தனையாளர்களே. இவர்கள் தமது முயற்சிகள் தோல்வியடையும் வேளைகளில்க்கூட அவற்றை தமது திறமையினால் வெற்றியாகக் காட்டிட முயற்சிப்பவர்கள். பொதுவாக இவர்கள் சமுதாயத்தில் முன்னிலையில் இருப்பார்கள். கல்விமான்களாகவும் பலருக்கு உதவி செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
எதிர் மறையான சிந்தனைகள் (Negative Thinking)
அடுத்ததாக எதிர்மறையான சிந்தனை என்றால் என்ன என்று பார்க்கலாம்.
என்னால் ஒன்றும் செய்ய முடியாது, எல்லாமே முடிஞ்சு போச்சு, நான் எப்போதும் ஏதும் செய்ய முடியாதவன், சூழ்நிலை சரி இல்லை, பணம் இல்லை, இப்படி எப்பொழுதும் ஒரு காரணம் கூறி வீண் அடிப்பது, நான் செய்யப்போகும் ஒரு காரியம் தோல்வியில் முடிந்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணி ஒரு காரியத்தைச் செய்ய தயங்குவது போன்ற மனநிலைகள், சிந்தனைகள் எதிர் மறையான சிந்தனைகளாகும்.
நான் செய்யப்போகும் காரியம் அல்லது நான் என்ன செய்தாலும் அது தோல்வியில்த்தான் முடியும் என்று முழுமையாக நம்புவது, எந்த முயற்சியுமே செய்யாமல் விட்டு விடுவது, என்னைச் சுற்றி இருப்பவர்களெல்லாம் ஏமாற்றுக் காரர்களே என்று யாரையுமே நம்பாமல் இருப்பது போன்ற செயற்பாடுகள் வலுவான எதிர் மறையான சிந்தனைகளுக்கு உதாரணமாகும்.
இவர்கள் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள். இவர்கள் தமது வெற்றிகளைக்கூட தோல்வியாக எண்ணிக் கொள்பவர்கள்.
எதற்கெடுத்தாலும் காரணம் இல்லாமல் பயப்படுவது. என்றோ முடிந்துவிட்ட ஒரு நிகழ்வைப்பற்றி, எதோ ஒன்றைப் பற்றி எந்நேரமும் எண்ணிக் கொண்டிருப்பது. போன்றவையும் எதிர்மறையான எண்ணங்களின் பாதிப்பே.
இக்காரியத்தை செய்தால் வரும் தடைகளை தீர்ப்பது மேலும் பெரிய காரியமாகும் என்ற பயத்தினால் எந்த முயற்சியும் செய்யாமல் அக்காரியத்தைக் கைவிடுவது அல்லது அவ்வாறே மற்றவர்களுக்கும் அறிவுறுத்துவதும் எதிர்மறை சிந்தனையாகும்.
எதிர்மறையான அனுபவங்கள், எண்ணங்கள் அல்லது சிந்தனைகள் முக்கியமற்றவை, அல்லது தேவையற்றவை என்றாலும் கூட நாம் எதிர்மறையில்தான் அதிக கவனம் செலுத்த முனைகிறோம். இதற்குக் காரணம், நேர்மறையான நிகழ்வுகளை விட எதிர்மறை நிகழ்வுகள் நம் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற நேர்மறை எண்ணங்களைக் காட்டிலும் தோற்றுவிடுவோம் என்று பயந்து கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள்தான் நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கிறது. இதுபோன்ற எதிர்மறையான எண்ணங்கள் எம்மையும் எம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த உளவியல் நிகழ்வு எமது முன்னேற்றப் பாதையைத் தடுக்கும். எம்மை நோயாளியாக்கும் என்பதுதான் உண்மையாகும்.
மேலும் எதிர்மறை சிந்தனையாளர் எப்போதும் பிறரிடம் உள்ள குறைகளையே காண்பார். எதற்கெடுத்தாலும் அடுத்தவரைக் குறை கூறிய வண்ணமாக இருப்பர். கலகலப்பில்லாமல் ஒரு சோம்பல் நிறைந்தவர்போல எந்த நேரமும் எதோ சிந்தனையில் இருப்பவர் போலவும் காணப்படுவர். கூடுதலாக தனிமையை விரும்புவர்களாகவும் இருண்ட சூழலை விரும்புவர்களாகவும் காணப்படுவர். சிலர் அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்பவர்களாகவும் அடுத்தவர்களை எதற்கெடுத்தாலும் விமர்சிப்பவர்களாகவும் காணப்படுவர்.
இப்படியான பல குணாதியங்களை எதிர்மறையான சிந்தனை உள்ளவர்களிடம் காணமுடியும்.
உளவியல் ஆராட்ச்சியாளர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கூறும் ஏதிர்மறையான சிந்தனைகள் தோன்றுவதற்கான காரணங்களை சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு எதிர்மறையான எண்ணங்கள் அனுபவங்கள் நம் மனதில் பதியப்பட்டுள்ளது. உதாரணமாக உணவைத் தேடிக் கண்டுபிடிப்பது என்பது நேர்மறை எண்ணம். உணவைத் தேடும்போது சேகரிக்கும்போது எதிர்கொள்ளும் இயற்கை ஆபத்து மற்றும் விலங்குகளிடம், எதிரிகளிடம் மாட்டிக் கொள்வது அதிலிருந்து மீளமுடியாமல்த் தவிப்பது என்பன எதிர்மறை எண்ணங்களாக அனுபவங்களாக ஆழ்மனதில் பதிந்து விடுகிறது. இப்படியான எதிர்மறையான அனுபவங்கள் சந்ததி சந்ததியாக மரபணு வழியாக அடுத்த சந்ததிக்கு கடத்தப்படுகிறது என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
ஆழ்மனதில் பதியும் இப்படியான அனுபவங்களை அழிவில்லாத ஆன்மாவானது ஒருவர் இறக்கும்போது அவ்வுடலில் இருந்து வெளியேறி மீண்டும் இன்னொரு உடலில் புகும்போது இவ்வனுபவங்களும் புதிய உடலுக்குக் காவப்படுகிறது என்று ஆன்மீகவாதிகளும் விளக்குகிறார்கள்.
இவ்விடத்தில் எனது குருவான பிரம்மஸ்ரீ நித்தியானந்தம் ஐயா அவர்களிடம் தற்கொலை பற்றி ஒரு சீடர் கேட்ட கேள்விக்கு அவரது விளக்கத்தினை இங்கு பகிர்ந்து கொள்ளவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன்.
கேள்வி: ஐயா தற்கொலை பற்றி கூற முடியுமா?
குரு: ஒருவன் மரணிக்கும் நேரத்தில் (இயற்கை மரணம் எய்தும் நேரத்தில்) அவனது நினைவு இறைவன்மேல் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்காக அவனருகில் இருந்து தெய்வ தோத்திரங்கள், இதிகாசங்கள், தேவார, திருவாசங்கள் பாடப்படுகின்றன.
ஏனெனில் அவன் இறக்கும் போது அமைதியான மனநிலையில் இறைவனை எண்ணியவாறு இறக்க வேண்டும் என்பதற்க்காக அப்படிச் செய்யப்படுகிறது. அந்த நினைவுதான் அவனது அடுத்த பிறப்புக்கு காவப்படுகிறது. அதாவது அவனது இப்பிறப்பின் கசப்பான அனுபவங்கள், எண்ணங்களை ஆள் மனதில் இருந்து அகற்றி ஆழ்மனதில் இறை சிந்தனையோடு இறக்கவேண்டும் என்பதற்காக தேவார, திருவாசங்கள், மற்றும் தெய்வீக பாடல்கள் பாடப்படுகின்றன.
ஆனால் தற்கொலை, கொலை மற்றும் விபத்துக்களின் மூலமான அகாலமரணம் போன்ற ஏதோ ஒரு காரணத்தினால் ஒருவன் இறக்கும்போது அவனது ஆழ்மனதில் பதிந்துள்ள கசப்பான, அனுபவங்களும் அந்த எண்ணங்களும் ஆழ்மனதில் இருந்து அழிக்கப்படாமல், அகற்றப்படாமல் அடுத்த பிறவிக்கும் ஆன்மாவின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
அதாவது ஒருவன் பணமில்லை என்று வருந்தி தற்கொலை செய்துகொண்டால் மறுபடியும் பிறந்து அதே எண்ணத்துடனேயே வாழ்க்கையை ஆரம்பிக்கிறான். ஏனென்றால் அந்த நினைவுதான் அடுத்த பிறப்பில் முன்னிலைப் படுத்தப்படுகிறது. அந்த ஆழ்மன எண்ணமே அடுத்தபிறப்பில் செயல்ப் படுத்தப்படுகிறது. அவனது செயல்தான் துன்பத்துக்கு அடிப்படை.
திருடுவதையே தனது தொழிலாகக் கொண்ட ஒருவன் அகால மரணமடைந்திருந்தால் அவன் மீண்டும் பிறந்து, அதே திருட்டுத் தொழிலிலேயே ஆர்வமுள்ளவனாக இருப்பான். யாருமே எதுவும் சொல்லிக் கொடுக்காமல் இயற்கையாகவே அவனுக்கு அந்த திருட்டு எண்ணம் வந்துவிடும்.
ஒருவன் நீண்ட நாட்களாக பிறரால் துன்புறுத்தப்பட்டு வாழ்ந்து இறந்திருந்தால் அடுத்த பிறவியில் பிறர் மீது ஒரு வெறுப்புள்ளவனாக, வாழ்க்கைமீது ஒரு பற்ரற்றவனாக இருப்பதனைக் காணமுடியும்.
முற்பிறப்பில் பிறரால் கொலை செய்யப்பட்டு அல்லது விபத்துக்கள் மூலமாக இறப்பவர்கள் அடுத்த பிறவியில் ஒரு பயந்த சுபாவமுள்ளவர்களாக காணப்படுவார்கள்.
ஒருவனுடை இப்பிறப்பிலுள்ள மனநிலைக்கு, எண்ணங்களுக்கு, அவனது சுபாவங்களுக்கு, அவன் முற்பிறப்பில் மரணிக்கும் காலத்தில் இருக்கும் அவனது மனநிலையே காரணமாகும்.
ஒருவன் துன்பப்பட்டு எப்படிப்பட்ட மனநிலையில் இறக்கிறானோ மீண்டும் பிறப்பெடுக்கும்போது அவன் அதே சுபாவங்களுடன் பிறந்து வாழ்வான்.
மரணம் என்பது நீயாக தீர்மானிக்கக்கூடாது. அது தவறான செயலாகும். இறைவன் உனக்கென்று சில கடமைகளை உனக்குக் கொடுத்திருக்கிறான். அச் செயல்களைச் செவ்வனே செயல்புரிந்து இயற்கை மரணம் எய்தினால் துன்பமே கிடையாது. செயற்கையான முறையில் நீ மரணமடையும் போது நீ எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்தாலும் துன்பத்தினை மட்டுமே அனுபவிப்பாய். மரணம் வரும்போது வரட்டும் நீயாக அதனைத் தேடிப்போகாதே. இதுவே எனது அறிவுரை. என்று கூறுகிறார் குரு நித்தியானந்தம் சுவாமிகள்.
எதிர்மறையான சிந்தனைகளுக்கு தாயின் கருவில் வளரும்போது, பின்னர் பிறந்ததிலிருந்து நாம் எதிர்பாராமல் சந்தித்த கசப்பான அனுபவங்களும் காரணமாக அமைகின்றன. அப்படியான சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
தாயின் கருவில் ஒரு சிசு வளரும்போது அத்தாயாருக்கு ஏற்படும் கசப்பான பிரச்சினைகள் உட்பட அச்சிசு பிறந்து வளரும்போது அக்குழந்தை கண்முன்னே நடைபெறும் தாய் தந்தையரிடையே நடைபெறும் வாக்குவாதங்கள் போன்ற செயற்படுகள், நேரடியாகக் காணும் சில விபத்துக்கள், பயங்கரமான காட்சிகள், பத்திரிகை, வானொலி, காணொளி அல்லது பிறர் மூலமாக அறிந்து கொள்ளும் அதிர்ச்சி தரும் செய்திகள் போன்றனவும் அப்பிள்ளையின் ஆழ்மனதில் மிகவும் கசப்பான பயங்கரமான செய்திகளாக பதிந்து விடுகிறது.
மற்றும் சமூகத்தில் நடைபெறும் கொலைகள், கற்பழிப்பு, துன்புறுத்தல்கள், பழிவாங்குதல் போன்ற மனதை பாதிக்கும் சேதிகளும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தான் அல்லது தனது குடும்பத்தார் மற்றும் தனது நண்பர்கள் போன்றோர், வேறு சில பலம் பொருந்தியவர்களால் தாக்கப்படுவது துன்புறுத்தப்படுவது போன்ற நிகழ்வுகளும் பிள்ளையின் ஆழ்மனதில் பதிந்து மனோ ரீதியான தாக்கத்தினை உருவாக்குகின்றது. இதுவே எதிர்மறையான எண்ணங்களாக நாளடைவில் பரிணமிக்கின்றது.
இப்படியான எமது கண்முன்னே நிகழ்ந்துவிடும், அல்லது அறிந்துவிடும் நம் மனதை பாதிக்கும் நிகழ்வுகள் ஆழ்மனதில் நன்கு பதிந்து விடுகிறது. அப்பதிவானது எப்போதும் எம்மாமல் மறக்க முடியாமல் இருக்கும். அவ்வப்போது வந்து எம்மைப் பயமுறுத்தும்.
அதுமட்டுமல்லாமல் சில சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஞாபகங்களும் ஏற்பட்டு விடுகின்றன. உதாரணமாக ஒரு மழை நேரத்தில் நடைபெற்ற ஒரு விபத்தை நாம் நேரில்ப் பார்த்து அது எம்மனதை பாதித்து இருந்தால், அந்த விபத்தினை நாம் மறந்திருந்தாலும் மழை வரும் நேரத்திலெல்லாம் எமக்கு அந்த விபத்து ஞாபகத்துக்கு வரும். மழையைக் கண்டால் ஒரு பயம் வரும். மழை நேரத்தில் எக்காரியத்தையும் செய்யத் தயங்குவோம் பிறரையும் செய்ய விடமாட்டோம். இதுவே எதிர் மறையான எண்ணமாகும்.
ஒரு பிள்ளை சில காரணங்களுக்காக (அழகு, நிறம், சில குறைபாடுகள்) தொடர்ந்து பிறரால் ஏனைய பிள்ளைகளால் விமர்சிக்கப்படுவது, கேலி செய்யப்படுவது போன்ற செயற்பாடுகள் அப்பிள்ளையின் எதிர்மறை சிந்தனைக்கு வழிவகுக்கிறது. எதிர்க்க வலுவில்லாத குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் ஏனையவர்களது விமர்சனங்களை உள்வாங்கி இறுதியில் எதிர்மறையான எண்ணம் உள்ளவர்களாக மாறுகிறார்கள். இப்படியாகப் பல உதாரணங்கள் எடுத்துக் கொள்ள முடியும்.
எதிர்மறையான சிந்தனைகள் கடினமான, கசப்பான அனுபவங்களின் விளைவாகவே ஏற்படுகின்றது. பொதுவாக சிறுவயதில் ஒருவர் எதிர்கொள்ளும் கசப்பான, அதிர்ச்சியான சம்பவங்களே இந்த உலகம் நாம் வாழ பாதுகாப்பாக இல்லாத இடம் என்று அவர்களை எண்ண வைக்கிறது. என்னால் யாரையும் நம்ப முடியாது, எப்போதும் எனக்குத் தோல்விகள் தான் நடக்கும் போன்ற பல எதிர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றது.
அடுத்தாக இப்படிப்பட்ட எதிர்மறையான எண்ணங்களில் இருந்து எப்படியாக நாம் எம்மை மீட்டெடுத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம்.
சிலர் தாம் எதிர்மறையான சிந்தனைக்களால் பாதிக்கப் பட்டிருக்கிறோம் என்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். மிகச் சிலரே இவ்வாறு காணப்படுவார்கள். இவர்களை ஏனையவர்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை நிலையை புரியவைத்து, சிறந்த புத்திமதிகள் கூறி அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் உதவிகளும் செய்ய வேண்டும். அப்பாதிப்பில்இருந்து அவர்கள் மீண்டு வர உதவ வேண்டும். சமுதாயத்திலுள்ள எமது கடமைகளில் இதுவும் ஒன்றாகும்.
சிலர் தாம் எதிர்மறையான சிந்தனைகளில் மூழ்கி இருக்கிறோம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பது தெரிந்திருப்பார்கள். ஆனால் அச் சிந்தனைகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் முதலில் தம்மால் எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து வெளிவர முடியும் என்று நம்ப வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். “நம்பிக்கை தான் வாழ்க்கை. வாழ்க்கை தான் நம்பிக்கை”.
பொதுவான ஆய்வுகளின்படி ஒவ்வொரு மனிதரிடத்திலும் குறைந்த பட்சம் 10 அல்லது 15 சதவீத எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்களாக இருக்கும். ஆகவே எல்லோருக்கும் சில சயங்களில் எதிர்மறை எண்ணங்கள் வருகின்றன. எனவே யாரும் அதிகமாக கவலைப்படத் தேவையில்லை.
எதிர்மறையான சிந்தனைகள் எம்மிடம் உள்ளதா என்பதற்கான சில அறிகுறிகளைப் பார்க்கலாம்.
- எந்தச் செயலையும் ஆரம்பிக்க செயற்படுத்த உங்களது மனம் தயங்குகின்றது.
- நீங்கள் செய்ய விரும்பும் காரியங்களைச் செய்வதிலிருந்து நீங்கள் அடிக்கடி உங்களைத் தடுக்கிறீர்கள், பயப்படுகிறீர்கள்.
- வாழ்க்கையை எப்போதும் ஒரு நிலையான போராட்டமாக எண்ணுகிறீர்கள்.
- இந்த உலகம் ஒரு ஆபத்தான இடம் எம்மால் வாழ முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
- உங்களை விட ஏனைய அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.
- நீங்கள் சந்திக்கும் பெரும்பாலான நபர்களைப் பற்றி மோசமாக எண்ணுகிறீர்கள்.
- நீங்கள் ஒரு அவநம்பிக்கையாளர் என்று மற்றவர்களால் சொல்லப் பபடுகிறீர்கள்.
- உங்கள் சக பணியாளர்கள் மற்றும் / அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு ஒத்துப்போக முடியாமலுள்ளது.
- உங்கள் வெற்றிகளை எதாவது காரணம் கண்டு தோல்வியாகச் சித்தரிக்க முயல்கிறீர்கள்.
- நீங்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து தனித்திருக்க விரும்புகிறீர்கள்
- மன அழுத்தம் மற்றும் கவலை, அல்லது ஏதோ ஒரு நோய் உங்களிடம் உள்ளதென நீங்கள் தொடர்ந்து உணர்கிறீர்கள்.
இப்படியான அறிகுறிகள் கருத்துக்களெல்லாம் ஆராட்சியின் முடிவுகளே. ஆனால் ஒரு சில அறிகுறிகளை வைத்து நாமெல்லாம் எதிர்மறையான சிந்தனையுள்ளவர்கள் என்ற முடிவுக்கெல்லாம் வந்துவிடக்கூடாது. நாம் எப்போதும் எம்மைப்பற்றிய உயர்வான நல்ல சிந்தனைகளோடு முழு நம்பிக்கையோடு வாழ்வோமாக.
அடுத்ததாக எதிர்மறையான சிந்தனைகள் எண்ணங்களில் இருந்து வெளிவர ஆன்மீக வாதிகளால், மனோதத்துவ நிபுணர்களால், அறிஞர்களால் கூறப்பட்ட அறிவுரைகளையும் சில பயிற்சி முறைகளையும் பார்ப்போம்.
நீங்கள் உங்களில் கண்டுகொள்ளும் எதிர்மறை எண்ணங்களை முதலில் நிறுத்துங்கள். உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களைப்` பற்றி கவனம் செலுத்துங்கள். எதிர்மறை எண்ணங்கள் தொடங்கும் போதெல்லாம் அவற்றை நிறுத்துவதே ஒரு சிறந்த தந்திரமாகும். மாற்ற முடியாத கடந்த கால தவறுகளை சரிசெய்வதற்குப் பதிலாக, நீங்கள் அதில் கற்றுக் கொண்டதையும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பற்றி நேர்மறையாகச் சிந்தியுங்கள். அதனை வலுவாக நம்புங்கள்.
எண்ணங்கள் எப்படி உதிக்கிறது.
எண்ணங்கள் மனதில், மூளையில் எப்படி உதிக்கிறது என்று பார்ப்போம். எண்ணமானது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. அதாவது பல சிறு சிறு வளையங்கள் ஒன்றுடனொன்று பிணைந்து உருவாவதே ஒரு சங்கிலியாகும். அதுபோல மூளையில் இருந்து ஒரு எண்ணம் உதித்து அதிலிருந்து இன்னொரு எண்ணம் தோன்ற பழைய எண்ணம் மறைந்து போகும். இப்படியாக எண்ணம் வளர்ந்து கொண்டே போகும். சில வேளைகளில் ஒன்றுடனொன்று தொடர்பானதாகவும் இருக்கும் சில வேளைகளில் ஒன்றுடனொன்று தொடர்பற்றதாகவும் இருக்கும்.
கிளைக்கு கிளை தாவும் மந்திபோல எண்ணங்களும் புதிய ஒரு எண்ணம் தோன்ற பழைய எண்ணம் விடுபட்டுவிடும்.
இப்படியாக உருவாகும் எண்ணங்களை நாம் உடைத்து விட வேண்டும். அதாவது இது ஒரு பயிற்சியாகும். முதலில் நாம் அமைதியாக அமர்ந்திருந்து எமது மூளையில் எண்ணங்கள் உருவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஆனால் புதிதாக ஒரு எண்ணம் உருவாகும்போது அவ்வெண்ணத்தினை சிறிது கவனிக்க வேண்டும். அது நல்லதா, எமக்குத் தேவையானதா அல்லது எமக்குத் தேவையற்றதா என்று அவதானித்து நல்ல எண்ணங்களை வளரவிடலாம் தேவையற்ற சிந்தனைகளை உடைத்துவிட்டு புதிதாக எண்ணம் உருவாகும் வரை காத்திருக்கலாம். நாளடைவில் நாம் எமது எண்ணங்களை கட்டுப்படுத்தும் திறமையைப் பெற்று விடுவோம். எதிர்மறையான சிந்தனைகளைக் கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த பயிற்சியாகும்.
அடுத்ததாக நாம் சிறுவயதில் அனுபவித்த சில கசப்பான அனுபவங்கள், கண்டு பயந்த சில காட்சிகள், எதிர்பாராமல் நிகழ்ந்த சில ஏமாற்றங்கள், இழப்புகள் எம்மைப்ப் பாதித்து எமது ஆழ்மனதில் பதிந்திருந்தது அவ்வப்போது எமக்கு அஞ்ஞாபகங்களை மீட்டு மனதை உறுத்திக் கொண்டே இருக்கும். எம்மைச் சில செயல்கள் செய்ய விடாமல்த் தடுக்கும் எமக்கும் அது புரியும் இருந்தும் எம்மால் அவ்வெண்ணங்களில் இருந்து வெளிவர முடியாமல் இருக்கும் இப்படியான நினைவுகளை எமது ஆழ்மனதில் இருந்து அகற்றுவதற்குரிய சில முயற்சிகளையும், பயிற்சிகளையும் பார்ப்போம்.
முதலில் நாம் எம்மை உணர்ந்து கொள்ளவேண்டும். மிகவும் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்திருந்து என்னுடைய எண்ணங்களுக்கு என்ன நடைபெறுகிறது, எனது எண்ணங்கள் எத்திசையில் பயணிக்கின்றது என்று அறிய முற்படவேண்டும். எமது எண்ணங்கள் எவற்றில் நாட்டம் கொள்கின்றது என்பதனை நாம் அறிந்து கொண்டாலே போதும் அதுவே எமது வெற்றியின் முதலாவது படிக்கல்லாகும்.
எமது எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதைக்குரிய சிறந்த பயிற்சி மூச்சுப் பயிற்சியாகும். மூச்சுப் பயிற்சி என்பது ஆன்மீகத்தில் யோகப் பயிற்சியின் ஒரு படிமுறையாகும். அதாவது ஒரு குரு மூலமாக யோகம் பயின்று மூச்சுப்பயிற்சி செய்து வர எமது எண்ணங்கள் கட்டுப்படும். அதனை காலப்போக்கில் நாமே உணர முடியும்.
அடுத்ததாக ஒரு சில எளிமையான பயிற்சிகளைப் பார்ப்போம்.
உதாரணமாக எமது கண்முன்னே நடைபெற்ற ஒரு வாகன விபத்தில் ஒருவர் காயமுற்று சத்தமிட்டு குரலெழுப்பியவாறு இறக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். அந்த நிகழ்வு எமது ஆழ்மனதில் பதிந்திருந்து அவ்வப்போது ஞாபகத்துக்கு வருவதனை எம்மால்த் தவிர்க்க முடியவில்லை என்றும் எடுத்துக் கொள்வோம். இந்தச் சம்பவத்தினை எமது ஆழ்மனதில் இருந்து அகற்ற முடியாது. ஆனால் அதன் தாக்கத்தினை இல்லாமல்ச் செய்ய முடியும்.
இதற்காக நாம் மூன்று முறையான பயிற்சிகள், முயற்சிகள் செய்யாலாம்.
நாம் மீண்டுமொருமுறை எம்மைப் பாதித்த சம்பவத்தினை முழுவதுமாக நினைவுகூர்ந்து, அனுபவித்து அதன் தாக்கத்தினைக் குறைத்தல் அல்லது மறத்தல் என்ற பொறிமுறையே இப்பயிற்சிகளின் நோக்கமாகும்.
பயிற்சி 1
நாம் தனியாக அமைதியான ஓரிடத்தில் கண்கள் மூடியவாறு அமர்ந்திருந்து அந்தச் சந்தர்ப்பத்துக்கு எம்மை, எமது எண்ணங்களை நகர்த்திச் சென்று எம்மைப் பாதித்த அந்த வாகன விபத்தினை ஆரம்பம் முதல் இறுதிவரை எமது நினைவில் வருவித்து அந்த நேரத்தில் நாம் அனுபவித்த முழு உணர்ச்சிகளையும் வெளிக் கொணர்ந்து மீண்டு மொருமுறை அந்த நிகழ்வினை முழுமையாக அனுபவித்தல். அக்காட்ச்சிகள் முடிந்ததும் நாம் தற்போதைய நிலைக்கு மீண்டும் வந்து அது என்றோ நடந்து முடிந்து விட்டது. அதன் பின்னர் அப்படி எதுவும் என் கண்முன்னே நடைபெறவில்லை. அந்நிகழ்வு இனி என்னைப் பாதிக்காது என்று எமது ஆள்மனதுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இப்பயிற்சியினை ஒரு தடவையில் தொடர்ந்து பலமுறை (மீண்டும் மீண்டும்) பயிற்சி செய்யும்போது ஒரு குறிப்பிட்ட தடவை செய்து (அதாவது அனுபவித்து) முடிக்கும்போது ஆரம்பத்தில் இருந்த தாக்கம் எமது மனநிலை படிப்படியாக குறைந்து கொண்டு வந்து இறுதியில் அதன் தாக்கம் எமக்கு இல்லாமல் போயிருப்பதனை நாமே உணரமுடியும். எமது மனதில் அதன் தாக்கம் இருக்கும் வரை தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கும் இப்பயிற்சியினைச் செய்யலாம். பழைய ஞாபகங்களின் தாக்கத்தினைக் குறைப்பதற்கு இது ஒரு சிறந்த பயிற்சியாகும். சிறிய வயதில் மற்றும் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த ஆழ்மனதில் பத்திந்த ஞாபகங்களைப் போக்குவதற்கு மிகவும் உதவும் பயிற்சியாகும்.
உதாரணமாக பெரிய வாகன விபத்திச் சிக்கி மீண்டும் வாகனம் செலுத்தப் பயப்படுபவர்களை மீண்டுமொருமுறை அவ்விடத்துக்கு அழைத்துச் சென்று, அவ்விடத்தில் அவர்களை வாகனம் செலுத்த வைத்து அவர்களது பயத்தினைப் போக்க வைப்பார்கள். இது ஒரு உளவியல் மூலமாக அவர்களை அந்நினைவுகளில் இருந்து வெளிவரச் செய்யும் முயற்சியாகும்.
பயிற்சி 2
தனிமையான அமைதியான சூழலில் ஒரு பெரிய கண்ணாடி முன்னால் நின்று மேலே பயிற்சி 1 இல் குறிப்பிட்ட பயிற்சியினை அதே முறையில் தன்னைத் தானே பார்த்துச் செய்யும் பயிற்சி முறையாகும். பயிற்சி செய்யும்போது எமது முக பாவனைகளை நாமே பார்த்துக் கொண்டு செய்யும் பயிற்சி முறையாகும். இதுவும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.
பயிற்சி 3
தனிமையான அமைதியான சூழலில் அமர்ந்திருந்து காகிதத்தில் பழைய அந்தச் சம்பவத்தினை நினைவு கூர்ந்து மேலே பயிற்சி 1 அல்லது 2 இல் குறிப்பிட்ட அதே முறையில் அதே மனநிலையில் அச் சம்பவமாக வாழ்ந்து அச் சம்பவத்தினை மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதன் பாதிப்பு குறையும்வரை எழுதி வர சம்பவத்தின் தாக்கம் ஆழ்மனதில் இருந்து அகன்று விடும். இதுவும் ஒரு சிறந்த பயிற்சியாகும். பயிற்சி முடிந்ததும் எமது பழைய ஞாபகங்களை பிறர் அறியாதவாறு காகிதத்தினை எரித்துவிடுவது நன்று.
பயிற்சி 4
தனிமையான அமைதியான சூழலில் ஒரு ஆன்மீகவாதி அல்லது எமக்கு முன்பின் அறிமுகமில்லாத எமக்கு நம்பிக்கையான ஒரு நபர் முன்னால் அமர்ந்திருந்து ஒருவர் கண்களை ஒருவர் நோக்கியவாறு பழைய அந்தச் சம்பவத்தினை நினைவு கூர்ந்து மேலே பயிற்சி 1 அல்லது 2 இல் குறிப்பிட்ட அதே முறையில் அதே மனநிலையில் அச் சம்பவமாக வாழ்ந்து அதனை மீண்டும் மீண்டும் தொடர்ந்து அதன் பாதிப்பு குறையும்வரை அவருக்கு கூறிக்கொண்டு வர சம்பவத்தின் தாக்கம் ஆழ்மனதில் இருந்து அகன்று விடும். இதுவும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பயிற்சிகளும் எந்தப் பக்க விளைவுகளும் இல்லாத சிறந்த பயிற்சிகளாகும். நாம் எப்பயிற்சியை வேண்டுமானாலும் தெரிவு செய்யாலாம்.
எல்லாவற்றிக்கும் மேலாக நமது மனதில் எண்ண அலைகளை கட்டுப்படுத்துகின்ற ஒரே சக்தி இறை சக்தியேயாகும். அதனை நாம் ஏற்றுக் கொள்ளும் போது தானாகவே எதிர்மறை எண்ணத்திலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். உதாரணமாக, என்னைப் படைத்தவனும், எனக்கு வாழ்வளித்துக் காப்பவனும் இறுதியில் என்னை மரணிக்கச் செய்கின்றவனும் இறைவேனே என உறுதியாக நம்பினால் பின்னர் அனைத்திலும் நமக்கு நேர்மறை எண்ணம் மட்டுமே ஏற்படும்.
நமக்கு எதிர்மறை எண்ணங்கள் ஏன் ஏற்படுகின்றன எனக் கண்டறிந்து அவற்றிலிருந்து விடுபட நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் நம்மைச்சுற்றி இருப்பவர்கள் நாம் அன்றாடம் கலந்து பழகும் நபர்கள் நமக்கு ஊக்கமளிபவர்களாக இருக்குமாறு சூழலை மாற்றிக் கொள்வது எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதைக் குறைக்கும்.
அத்துடன் இறந்த காலத்தைப் பற்றிய சிந்தனைகளைக் குறைத்து வாழ்வைத் திட்டமிட்டுக் கொள்வதும், எப்போதும் ஏதாவதொரு வேலையில் நம்மை முற்றாக ஈடுபடுத்திக் கொள்வதும், தேவையற்ற எண்ணங்களிலிருந்து நம்மைக் காக்கும் வழிமுறைகளாகும். தினமும் நமக்காக சிறிது நேரம் ஒதுக்கி எமக்கு மனநிறைவையும் சந்தோஷத்தையும் தரும் செயற்பாடுகளில் ஈடுபடலாம்.
உங்கள் வாழ்க்கையில் எது முக்கியம் மற்றும் முக்கியமல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கலாம். அத்துடன் நேர்மறையான அம்சங்களை மதிப்பிடுவதிலும் பாராட்டுவதிலும் கவனம் செலுத்துங்கள். எதிர்மறையான எதிர்விளைவுகளின் முறையை உடைத்து, நேர்மறையான அனுபவங்களை ஆழமாக பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.
எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிகமான ஆன்மீக மற்றும் விஞ்ஞான புத்தகங்களை படியுங்கள்.
உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் வாழ்க்கைக்கு புத்துணர்ச்சி அளிக்கும். தினமும் ஒரு 15 நிமிடங்களாவது, எந்த சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக கண்ணை மூடி அமருங்கள்
அனாவசியமான விவாதங்களில் கலந்து கொள்ளாதீர்கள்.
மற்றவர்களுடைய வாழ்க்கையுடன் உங்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பதை தவிருங்கள். உங்களைப் பற்றி என்றுமே உயர்வாக எண்ணும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
உங்களுடைய இன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர் அனைவரையும் மிக அதிக அளவில் பாராட்டுங்கள். அவர்களிடம் தொடர்பு வைத்திருங்கள்.
உங்களுக்கு மகிழ்ச்சியளிக்காதவை எதுவாக இருந்தாலும் அவைகளிடம் இருந்து விலகி விடுங்கள்.
உங்களுக்கு நன்மை என்று தோன்றும் செயல்களை உடனே செய்யுங்கள்
மேல்மனம் அனுப்பும் தகவல்கள் தொடர்ந்து பயம், பலவீனம், கவலை, தாழ்வு மனப்பான்மை கொண்ட தகவல்களாக இருந்தால் ஆழ்மனப் பதிவுகள் பலவீனர்களையும், இயலாதவர்களையும், நோயாளிகளையுமே உருவாக்கும்.
தைரியம், வலிமை, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம் போன்ற தகவல்களாக மேல்மனம் உள்ளே தொடர்ந்து அனுப்பினால் அதுவும் அப்படியே நிஜவாழ்வில் பிரதிபலிக்கும். எனவே மேல்மனம் எடுத்து உள்ளே அனுப்பும் தகவல்களில் அவதானமாக இருக்கவேண்டும். அறிஞர்கள், ஞானிகள் சித்தர்களது நூல்களை, உபதேசங்களை படிப்பதாலும், பேச்சுகளைக் கேட்பதாலும் சிறிது சிறிதாக ஆழ்மனம் பழைய பதிவுகளை மாற்றி புதிய தகவல்களை சேகரித்துக் கொள்ளும். இதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும். ஆழ்மனதின் எண்ணங்களை இடைமனம் நிறைவேற்றும் (செயற்படுத்தும்).
வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நம்பிக்கை இல்லாவிட்டால் நம் மனதில் எதிர்மறை சிந்தனைகள் குடியேற ஆரம்பித்து விடும். இதனால் மன அழுத்தம், பயம் போன்ற பல இன்னல்கள் வர ஆரம்பித்து விட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் தரத்தை உயர்த்த நேர்மறையான சிந்தனைகள் இருக்க வேண்டியது அவசியம். நேர்மையாக சிந்திக்கும் போது மட்டுமே வாழ்க்கை இன்பகரமாகவும் திருப்தியாகவும் இருக்கும். நேர்மறை ஆற்றல் நீங்கள் நினைக்கும் அனைத்தையும் நடத்தி வைக்க கூடியது. நேர்மறை எண்ணம் எமக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். துணிவைக் கொடுக்கும். ஒரு காரியத்தினை தன்னம்பிக்கையோடு ஈடுபட வைக்கும். தோல்வியுறும் போதும் துவளாது மீண்டும் முயற்சி செய்யத் தூண்டும். இப்படியாகப் பல நண்மைகளைக் கொடுக்கும்.
எதிர்மறை சிந்தனைகளில் சுவாரஸ்யம் அதிகம் என்பதினால் எல்லோரும் அதையே விரும்புகிறார்கள். இதனால்தான் நேர்மறை எண்ணங்கள் நாளடைவில் குறைந்து எதிர்மறை எண்ணங்களை தலைதூக்கி நிற்கிறது.
எப்போதும் நேர்மறை எண்ணங்கள் ஒரு கானல் நீர்.
எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் ஒரு மன நோய்.
நேர்மறை சிந்தனைகளும் எதிர்மறைச் சிந்தனைகளும் கலக்கும் போதுதான் வாழ்வு சீராக நகரும்.
எதுவுமே சரியாக இல்லாவிட்டாலும் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை.
கு. சிவகுமாரன் ([email protected])
— அன்பே சிவம் —