ஒளவையார் ஆத்திசூடி – பகுதி 2

0 0
Read Time:15 Minute, 1 Second

ஒளவையார் அருளிய ஆத்திசூடி

சிறுவர்கள் இளம் பருவத்திலேயே மனனம் செய்து மனதில் இலகுவாக நிறுத்திக் கொள்ளும் வகையில் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்களை ஒரு வரியில் கூறப்பட்டுள்ளது. ஆத்தி மலர் சூடிய இறைவனைப் போற்றி இறைவனின் அருள் வேண்டி எழுதப் பட்டுள்ளது.

கடவுள்வாழ்த்து

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே

விளக்கம்: ஆத்தி-ஆத்திப் பூ மலையை; சூடி- சூடியிருக்கும் சிவனுடைய; அமர்ந்த- மனதில் அமர்ந்த (அன்பிற்குரிய) தேவனை- விநாயகக் கடவுளை; ஏத்தி ஏத்தி- எப்பொழுதும் துதித்து; தொழுவோம்-வணங்குவோம்.
கருத்து: ஆத்திப்பூ மாலையை அணிபவராகிய சிவபெருமானின் புதல்வனாகிய விநாயகரை நாம் தினமும் வணங்குவோமாக

உயிர் வருக்கம்

1.அறம் செய்ய விரும்பு – தான தருமம் செய்ய விருப்பம் கொள்.

2. ஆறுவது சினம்கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

3. இயல்வது கரவேல் – உன்னால் முடியும் போது யாசிப்பவர்க்கு மறுக்காமல் உதவி செய்.
4. ஈவது விலக்கேல் – ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதைத் தடுக்காதே.
5. உடையது விளம்பேல் – உன் திறமைகளை எல்லோருக்கும் கூறாதே.
6. ஊக்கமது கைவிடேல் – ஒருபோதும் முயற்சியைக் கைவிடாதே.
7. எண் எழுத்து இகழேல் – அறிவை கல்வியைப் பழிக்காதே.
8. ஏற்பது இகழ்ச்சி – உழைக்காமல் இலவசமாக எதனையும் கேட்டு வாங்குவது இழுக்கு.
9. ஐயம் இட்டு உண் – யாசிப்பவர்கட்கு கொடுத்து நீயும் உண்டு வாழ்.
10. ஒப்புரவு ஒழுகு – உலக நடையை அறிந்து கொண்டு அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.
11. ஓதுவது ஒழியேல் – நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக் கொண்டிரு.
12. ஔவியம் பேசேல் – ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.
13. அஃகஞ் சுருக்கேல் – –அதிக இலாபத்துக்காக தானியங்களை, பொருட்களை குறைத்து அளந்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல் – கண்ணாற் கண்டதற்கு மாறாக (பொய்) சொல்லாதே.
15. ஙப் போல் வளை – “ங” என்னும் எழுத்தானது தனது வரிசையில் உபயோகமற்ற ஏனைய எழுத்துக்களைத் தாங்கி நிற்கிறதோ (ங வரிசையில் ங், ங தவிர்ந்த ஏனைய எழுத்துக்கள் உபயோகமற்றவை), அதுபோல நீயும் உனது சுற்றத்தவரைத் தாங்கி வைத்துக்கொள்.
16. சனி நீராடு – சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்து நீராடு.
17. ஞயம்பட உரை – பிறருடன் இன்பம் உண்டாகும் படி இனிமையாக பேசு.
18. இடம்பட வீடு எடேல் – உன் தேவைக்கு அதிகமாக வீட்டை பெரிதாக கட்டாதே.
19. இணக்கம் அறிந்து இணங்கு – உன்னுடன் ஒத்துப் போகக் கூடியவர்களுடன் மட்டும் நட்புக் கொள்ளவும்.
20. தந்தை தாய்ப் பேண் – பெற்றோருக்கு எப்போதும் பணிவிடை செய்.
21. நன்றி மறவேல் – ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.
22. பருவத்தே பயிர் செய் – எச் செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்து கொள்.
23. மண் பறித்து உண்ணேல் – பிறர் நிலத்தை அபகரித்து அதன் மூலம் வாழாதே.
24. இயல்பு அலாதன செய்யேல் – இயற்கைக்கு மாறான செயல்களைச் செய்யாதே.
25. அரவம் ஆட்டேல். –பாம்புகளைப் பிடித்து விளையாடாதே. (தீய மனிதர்களுடன் பழகாதே).
26. இலவம் பஞ்சில் துயில் – இலவம் பஞ்சினால் செய்யப்பட்ட மெத்தையில் உறங்கு.

27. வஞ்சகம் பேசேல் – கபடமாக, ஒளிவு மறைவாகப் பேசாதே.

28. அழகு அலாதன செய்யேல் – இழிவான செயல்களை செய்யாதே.

29. இளமையில் கல் – இளமை பருவத்திலேயே கல்வியைக் கற்றுக்கொள்.

30. அறனை மறவேல் – இறைவனை எப்போதும் மறவாமல் வணங்கு.

31. அனந்தல் ஆடேல் – அதிகமாகத் தூங்காதே.

ககர வருக்கம்
32. கடிவது மற – கோபமாகப் பேசாதே. பிறர் கோபமாகப் பேசியதையும் மற.

33. காப்பது விரதம் – தான் செய்யும் தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும். உடலையும் உள்ளத்தையும் காப்பது விரதமாகும்.
34. கிழமை பட வாழ் – நீயும் உனது செயலும் பிறருக்கு உதவும் படியாக வாழ்ந்திரு.

35. கீழ்மை யகற்று – -இழிவான (கொலை, களவு, பொய்) செயல்களை செய்யாதே.

36. குணமது கைவிடேல்– நன்மை தரக்கூடிய உனது உயர்ந்த குணங்களை ஒருபோதும் நிறுத்தி விடாதே.

37. கூடிப் பிரியேல் – நல்ல நட்பை ஒருபோதும் விட்டுப் பிரியாதே.

38. கெடுப்ப தொழி – பிறருக்கு தீமை விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல் – நல்ல அறிவுரைகளைக் கேட்பதற்கு ஆவலாக இரு.
40. கைவினை கரவேல் – தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களுக்கு மறைக்காமல்க் கற்றுக் கொடு

41. கொள்ளை விரும்பேல் – பிறர் பொருட்களைத் திருடுவதற்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி – குற்றமான விளையாட்டுக்களில் ஈடுபடாதே.
43. கௌவை அகற்று – பிறரைப் பழிக்கும், துன்புறுத்தும் வார்த்தைகளைப் பேசாதே.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில் – அரசாங்க சட்டங்களை பின்பற்றி நடந்து கொள்.

45. சான்றோ ரினத்திரு – அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசெல் – பொய் பேசாதே.

47. சீர்மை மறவேல் – சிறப்பான செயல்களைச் செய்ய மறக்காதே.

48. சுளிக்கச் சொல்லேல் – மற்றவர் மனம் வருந்தும்படி பேசாதே.
49. சூது விரும்பேல்-ஒருபோதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய் – செய்யும் செயல்களை செம்மையாகச் செய்.
51. சேரிடமறிந்து சேர் – நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடயவர்களா என நன்கு ஆராய்ந்து அறிந்த பின்பு அவர்களுடன் பழகு.
52. சையெனத் திரியேல் – பிறர் உன்னை வெறுக்கும் படியாக நடவாதே.
53. சொற்சோர்வு படேல் – பிறருடன் பேசும்போது உன் வார்த்தைகளில்த் தளர்ச்சி ஏற்படாதவாறு பேசு.
54. சோம்பித் திரியேல் – முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்

55. தக்கோ னெனத்திரி– பிறர் உன்னைத் சான்றோன் (யோக்கியன், நல்லவன்) என்று புகழும்படி நடந்துகொள்.
56. தானமது விரும்பு– தானம், தருமம் செய்ய விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய் – இறைவனுக்குத் தொண்டு செய்.
58. தீவினை யகற்று – பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59. துன்பத்திற் கிடங்கொடேல் – மனது துன்பமடையாதவாறு நடந்துகொள்.
60. தூக்கி வினைசெய் – நன்கு ஆராய்ந்து திட்டமிட்டுக் காரியத்தைத் தொடங்கு.

61. தெய்வ மிகழேல் – கடவுளை பழித்துப் பேசாதே.

62. தேசத்தோ டொத்துவாழ் – மக்களோடு சேர்ந்து ஒற்றுமையாக இசைவாக வாழ்ந்து கொள்.
63. தையல்சொல் கேளேல் – பெண்கள் சொல்வதை எல்லாம் ஆராயாது அப்படியே கேட்டு நடவாதே.
64. தொன்மை மறவேல் – பழைமையை முன்னோர் பாரம்பரியத்தை மறவாதே.
65. தோற்பன தொடரேல் – தோல்வியடையக்கூடிய செயல்களைத் தொடர்ந்து செய்யாதே.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி – நல்ல செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டிரு.

67. நாடொப் பனசெய் – நாடு சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய செயல்களைச் செய்.

68. நிலையிற் பிரியேல் – உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர்விளை யாடேல் – ஆழமான, சகதியான நீர் நிலைகளில் விளையாடாதே.
70. நுண்மை நுகரேல் – நோய் தரக்கூடிய உணவுகளை உண்ணாதே.
71. நூல்பல கல் – அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி.
72. நெற்பயிர் விளை – நெற்பயிர் போன்ற உணவுப் பயிர்களை விவசாயம் செய்.
73. நேர்பட வொழுக – ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட.

74. நைவினை நணுகேல் – பிறர் வருந்தத் தகுந்த தீவினைகளைச் செய்யாதே.
75. நொய்ய வுரையேல் – பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.
76. நோய்க்கிடங் கொடேல் – நோய் உன்னை அணுக இடம் கொடாதே.

பகர வருக்கம்

77. பழிப்பன பகரேல் – பிறரால் பழிக்கப்படும் இழிவான வார்த்தைகளை பேசாதே.
78. பாம்பொடு பழகேல் – விசமுள்ள பாம்புடன், பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்களுடன் பழகாதே.
79. பிழைபடச் சொல்லேல் – பிழையான கருத்துக் கொள்ளும்படி பேசாதே.
80. பீடு பெறநில்– பெருமை தரக்கூடிய வாழ்க்கையை வாழ்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் – புகழ்மிக்க பெரியோர்களைப் பின்பற்றி வாழ்.
82. பூமி திருத்தியுண் – நிலத்தைப் பண்படுத்தி பயிர் செய்து உண்பாயாக.
83. பெரியாரைத் துணைக்கொள் – அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்.
84. பேதைமை யகற்று – உன்னிடமுள்ள அறியாமையைப் போக்கிவிடு.
85. பையலோ டிணங்கேல் – அறிவு முதிர்ச்சி இல்லாத சிறுவர்களுடன் (வயது குறைந்தவர்களுடன்) பழகாதே.
86. பொருள் தனைப் போற்றி வாழ் – செல்வத்தை விரயமாக்காது பாதுகாத்து வாழ்.
87. போர்த்தொழில் புரியேல் – தினமும் பிறருடன் சண்டையிட்டுத் திரியாதே.

மகர வருக்கம்

88. மனந்தடு மாறேல் – எதனாலும் மனக்கலக்கம் அடையாதே.
89. மாற்றானுக் கிடங்கொடேல்-பகைவன் உன்னை துன்புறுத்த இடம் கொடுக்காதே.
90. மிகைபடச் சொல்லேல் – எதனையும் பெரிதுபடுத்திக் கூறாதே.
91. மீதூண் விரும்பேல் – அளவுக்கு அதிகமாக உணவு உண்ணாதே.
92. முனைமுகத்து நில்லேல் – போர்க்களத்தில் கவனமற்று முன்புறத்தில் நில்லாதே.
93. மூர்க்கரோ டிணங்கேல் – மூர்க்க குணம் கொண்டவர்களுடன் பழகாதே.
94. மெல்லினல்லாள் தோள்சேர் – நற்பண்புடைய பெண்ணை மனைவியாக்கிச் சேர்ந்து வாழ்.
95. மேன்மக்கள் சொற்கேள்-நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.
96. மைவிழியார் மனையகல் – மயக்கும் விலைமாதர் வீடு செல்லாதே.
97. மொழிவ தறமொழி – சொல்லப் படும் பொருளை விளக்கமாகக் கூறு.
98. மோகத்தை முனி – காமத்தை, விபரீத ஆசைகளை உன்னிலிருந்து அகற்றிவிடு.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல் – உன் வலிமையை நீயே புகழ்ந்து பேசாதே.
100. வாதுமுற் கூறேல் – அவசரப்பட்டு விவாதத்தை நீயே தொடக்காதே.
101. வித்தை விரும்பு – கல்வியை கலைகளைக் கற்க விரும்பு.
102. வீடு பெறநில் – முக்தியை இறைவனைப் அடையும் வழியைப் பின்பற்று.
103. உத்தமனாய் இரு – உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.
104. ஊருடன் கூடிவாழ் – ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்.
105. வெட்டெனப் பேசேல் – யாருடனும் மனம் நோகும்படி முரட்டுத் தனமாகப் பேசாதே.
106. வேண்டி வினைசெயேல் – வேண்டுமென்றே யாருக்கும் தீமை செய்யாதே.
107. வைகறை துயிலெழு – அதிகாலையில் தூக்கம் விட்டு எழுந்திரு.
108. ஒன்னாரைத் தேறேல் – பகைவர்களை நம்பாதே.
109. ஓரஞ் சொல்லேல் – ஒருபக்கச் சார்பாக நடுநிலை தவறிப் பேசாதே. நியாயத்தைக் கூறு.

— ஆத்திசூடி முற்றும் —

ஒளவையாரின் பாடல்கள் விளக்கங்களுடன் பின்வரும் பகுதிகளாக இணைத்துள்ளோம்

  • ஒளவையார் வரலாறு
  • ஒளவையார் நாலு கோடிப் பாடல்கள் – பகுதி 1
  • ஒளவையார் ஆத்திசூடி – பகுதி 2
  • ஒளவையார் கொன்றை வேந்தன் – பகுதி 3
  • ஒளவையார் நல்வழி – பகுதி 4
  • ஒளவையார் மூதுரை – பகுதி 5
  • ஒளவையார் ஞானக்குறள் – பகுதி 6
  • ஒளவையார் விநாயகர் அகவல் – பகுதி 7

கு. சிவகுமாரன்  ([email protected])

— அன்பே சிவம் —

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %