அடிப்படையான ஐந்து யோகப்பயிற்சி முறைகள்

அடிப்படையான ஐந்து யோகப்பயிற்சி முறைகள்
ஆன்மீக (யோக அல்லது ஞான) மார்க்கத்தில் அடிப்படையான சில யோகப்பயிற்சி முறைகள் சித்தர்கள் அல்லது முனிவர்களால் விவரிக்கப்பட்டுள்ளன. அவையாவன
- கேசரி
- பூசரி
- சண்முகி
- மத்திய லட்சணம்
- சாம்பவி
யோகக் கலை என்பது இந்தியாவிலே வாழ்ந்த சித்தர்கள் ஞானிகளால் கண்டறியப்பட்ட பிறவிப் பிணியைப் போக்கும் ஆன்மீகப் பயிற்சி முறையாகும்.
பிறவிப்பிணி எனப்படுவது ஒரு ஆன்மா இவ்வுலகில் ஒரு உயிரினமாகப் பிறந்து இவ்வுலக இன்பங்களை அனுபவித்து அதன் மூலம் புதியதாகவும் பாவ புண்ணியங்களை சேகரித்து அந்தப் பாவ புண்ணியங்களை அனுபவித்துக் கழிப்பதற்காக மீண்டும் இப்பூமியில் பிறப்பு எடுத்துக் கொண்டே இருப்பதனையே பிறவிப்பிணி என்று அழைக்கப்படுகிறது. அதாவது இப் பூமியில் பிறப்பெடுப்பது ஆன்மாவைப் பிடித்த ஒரு நோய், ஒரு பிணி எனக் கூறப்படுகிறது.
ஒரு ஆன்மா சேகரித்து வைத்துக் கொள்ளும் பாவ பண்ணியங்களை முற்றாக அழித்தால்த்தான் அதனால் பிறவிப் பிணியில் இருந்து விடுபட முடியும். அது மட்டுமன்றி இந்தப் பூமியில் செய்யும் பாவ புண்ணியங்களை இந்தப் பூமியில் வைத்தே அனுபவித்து தீர்த்துக் கொள்ளமுடியும் என்பதுவும் சித்தர்கள் கூறும் விளக்கமாகும்.
ஒருவர் செய்யும் பாவ புண்ணியங்களை (நன்மை தீமைகளை) அவரது ஆழ்மனதில் பதிய வைக்கும் செயற்பாடு சித்திரகுப்தம் என அழைக்கப்படுகிறது. இதற்கு சித்திரகுப்தர் என்பவர் மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை அந்தந்த மனிதர்களின் ஆழ்மனதில் எழுதும் கடவுள் ஆவார் என இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மனிதர்கள் மட்டுமன்றி அனைத்து உயிரினத்துக்கும் இத் தத்துவம் பொருந்தும்).
சித்திர + குப்தம். ‘சித்’ என்றால் சித்திரம் எனவும் ‘குப்தம்’ என்றால் பிரதி அல்லது ரகசியமானது என்றும் பொருள்.
சித்திரகுப்தம் என்றால் ஒரு உயிரினத்தின் (மனிதர்களின்) வெளிப்படையான செயல்களை மட்டுமல்லாமல், அவர்களின் உள்மனதில் மறைந்திருக்கும் எண்ணங்களையும் ரகசியமாக அந்தந்த உயிரினத்தின் ஆழ்மனதில் பதிவு செய்யப்படுகிறது என்பது பொருளாகும்.
பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களின் பாவ புண்ணியங்களும் அந்தந்த உயிரினத்தின் ஆழ்மனதில் பதிவு செய்யப்படுகிறது. இந்த செயற்பாடே ஒரு ஆன்மாவின் அடுத்த பிறப்பை, அந்த ஆன்மாவின் அடுத்த வாழ்க்கை முறையை தீர்மானிப்பதாக இந்துமத தத்துவங்கள் குறிப்பிடுகின்றன.
சித்திரகுப்தன் சித்திரை பௌர்ணமியில் அவதரித்ததாகவும் அதனாலேயே சித்திராப் பௌர்ணமி சிறப்பு வாய்ந்ததாகவும் அன்றைய தினம் கஞ்சி காய்ச்சி சைவ மக்களால் கொண்டாடப் படுகிறது.
ஒரு ஆன்மாவின் பாவ புண்ணியங்களை போக்கும் வழிகளை வகுத்துக் கூறும் முறை யோகப் பயிற்சி அல்லது ஆன்மீகப் பயிற்சி என அழைக்கப்படுகிறது.
ஒரு சித்தர் அல்லது ஒரு முனிவர் எப்படி யோகக்கலையை கற்றுக் கொண்டார்கள் என்று ஆராயும்போது அவர்களும் ஒரு குருவிடம் இருந்தே கற்றுக் கொண்டார்கள் என்பது புரியவரும். உதாரணமாக திருமூலர் சிவனின் முதன் மாணாக்கனான நந்திதேவரிடம் இருந்தும், ஔவையார் விநாயகப் பெருமானிடம் இருந்தும் கற்றுக் கொண்டதாக அவர்களே குறிப்பிடுகிறார்கள்.
ஒரு குருவிடம் இருந்து ஒரு சீடன் கற்றுக் கொள்ளும் முறை “குரு சீட” பாரம்பரிய முறை என அழைக்கப்படுகிறது.
இங்கு குருவானவர் தனது சீடனை பக்குவப் படுத்திய பின்னரே, சீடன் தகுதி பெற்ற பின்னரே அவனுக்கு யோகப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பார்.
உதாரணமாக வீடுகளில் பக்குவ நிலையை அடையாத குழந்தைப் பிள்ளைகளிடம் கத்தி போன்ற கூரான பொருடகளை கொடுப்பதில்லை. அதுபோல யோகக் கலையிலும் பக்குவம் அடைந்த சீடனுக்கே குருவானவர் யோகக் கலையை கற்றுக் கொடுப்பார். யோகக்கலை ஆன்மாவோடு தொடர்பானது. பிழையான முறையில் பயின்று, பிழையாகப் பயிற்சி செய்தால் எதிர்பாராத பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும். எனவே இன்றைய நாட்களில் சமூக வலைதளங்களில் வரும் ஆன்மீகப் பயிற்சிகளை ஒரு குருவின் துணை இன்றி பயிற்சி செய்யக் கூடாது, செய்யவும் வேண்டாம்.
நாம் செய்யும் பாவ புண்ணியங்கள் யாவும் எம்முடனேயே அதாவது எமது சூக்கும உடலிலேயே சேகரித்து வைக்கப் பட்டிருக்கும். இதுவே ஆழ்மனப் பதிவுகள் (ஆழ்மனம்) எனப்படும். எமது பல திறமைகள் பயம், கோபம், வெட்கம் போன்ற உணர்வுகளும் ஆழ்மனப் பதிவுகளாகும். இப் பதிவுகள் ஆளுக்கு ஆள் வேறுபடும்.
சூக்கும உடலில் சேகரித்து வைக்கப் பட்டிருக்கும் ஆழ்மனப் பதிவுகள் அந்த சூக்கும உடலானது இப்பூமியில் பிறக்கும் தூல உடலுடன் இணைந்து ஒரு உயிரினமாக (மனிதனோ, விலங்கோ, பறவையோ, தாவரமோ, புழுவோ, பூச்சியோ) வாழும் பொழுது அந்த உயிரினத்தின் தன்மைக்கு ஏற்றவாறு அந்த சூக்கும உடலில் சேகரிக்கப் பட்டிருக்கும் ஆழ்மனப் பதிவுகள் பயன்படுத்தப் படுகின்றது. இன்னொரு உதாரணமாக சில பசு மாடுகளைக் கவனித்துப் பார்த்தால் ஓன்று மிகவும் சாந்தமானதாக இருக்கும். ஓன்று மூர்க்கத்தனமானதாக இருக்கும். ஓன்று அன்பு காட்டுவதாக இருக்கும். இந்தக் குணங்களுக்குக் காரணம் அந்தப் பசுக்களின் ஆன்மாக்களில் பதிந்துள்ள ஆழ்மனப் பதிவுகளே ஆகும்.
அந்த உயிரினம் இறக்கும்போது அந்த தூல உடலில் இருந்து வெளியேறும் சூக்கும உடலுடன் அதனில் பதிந்து இருக்கும் ஆழ்மனப் பதிவுகளும் எடுத்துச் செல்லப்படும். அந்த சூக்கும உடலானது இன்னொரு பிறப்பு எடுக்கும் வரை பாவ புண்ணியங்கள் உட்பட்ட அந்த ஆழ்மன பதிவுகளும் அப்படியே மாற்றமின்றி இருக்கும்.
அதாவது ஆழ்மன பதிவுகளுடனான ஒரு சூக்கும உடலானது, ஒரு மனித உடலில் பயணம் செய்யும்போது எப்படி அந்த பதிவுகள் பயன்படுகின்றன அல்லது பயன்படுத்தப் படுகின்றன என்று பார்க்கும்போது, ஒரு மனிதனின் பயந்த சுபாவம், துணிந்த சுபாவம், மதி நுட்பமான செயற்பாடுகள் போன்றவை ஆழ்மன பதிவுகளின் செயற்பாடாகும். இதனாலேயே ஒருவருக்கு ஒருவர் குணாதியங்களில், செயற்பாடுகளில் வேறுபடுகிறார்.
ஆழ்மன பதிவுகளை மனிதனின் மூளையே வாசித்து செயற்படுத்துகிறது. மூளை வாசிப்பதற்கு தேவையான உந்துசக்தி (பிராணசக்தி) மூச்சுக் காற்றாகும். இதற்கு உதாரணமாக ஒரு கணினியை (computer) ஒரு மனிதன் பயன்படுத்த கணினிக்கு மின்சாரம் தேவை. இங்கு கணினியை ஆழ்மனமாகவும், மூளையை மனிதனாகவும், மின்சாரத்தினை பிராண வாயுவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
ஒருவர் உணர்ச்சி வசப்படும்போது (பயம், கோபம்), ஆழ்ந்து சிந்திக்கும்போது அவரது மூச்சுக் காற்றில் மாறுபாடுகள் வெளிப்படும். அதுபோல ஆழ்மனதில் பதிந்து இருக்கும் பாவ, புண்ணிய கணக்குகளும் மூச்சுக் காற்றினாலேயே திறக்கப்படுகிறது.
மூச்சுக்காற்று மட்டுமன்றி அண்டத்தில் இருந்து வரும் சில கிரகங்களின் கதிர்களும் ஆழ்மன பதிவுகளை திறப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இதனாலேயே ராகு கேது பலன்கள், சனி கிரக பலன்கள், வியாழ மாற்றம் போன்ற நன்மை தீமை கலந்த பலன்களை நாம் அனுபவிக்கிறோம்.
இதற்கு உதாரணமாக ஒரு வைக்கோல் பொதியையும், ஒரு கழிவுப் பொதியையும் ஓரிடத்தில் வைத்தால் மாடு வந்தால் வைக்கோல் பொதியை கடிக்கும், ஒரு பன்றி வந்தால் கழிவுப் பொதியை கடிக்கும். இதுபோலவே அவ்வப்போது பூமிக்கு அருகில் வரும் கிரகங்களால், அவற்றில் இருந்து வரும் கதிர்களால் எமது ஆழ்மனதில் பதிந்திருக்கும் நன்மை, தீமையான பதிவுகள் திறக்கப்பட்டு அதன் பலனை நாம் அனுபவிப்போம். இதன் காரணத்தினாலேயே சில கிரகங்களால் எமக்கு நன்மையும், சில கிரகங்களால் எமக்குத் தீமையும் ஏற்படுகிறது.
இதுவே எமது சித்தர்களாலும், ஞானிகளாலும் வகுக்கப்பட்ட ஜாதக சாத்திரமாகும்.
இவ்வாறே எமது ஆழ்மனதில் பதிந்துள்ள நாம் செய்த நன்மைகளும், தீமைகளும் எமக்கு விதிக்கப்பட்ட விதியின்படி திறக்கப்பட்டு அதன் பலன்களை நாம் அனுபவித்துக் கொள்கிறோம். இவ்வாறு நாம் பழைய பாவங்களையும், புண்ணியங்களையம் அனுபவிக்கும்போது பழையவை அழிந்துபோக புதியதாக நன்மைகளையும், புண்ணியங்களையும் நாம் எமது ஆழ்மனத்தில் சேகரித்து கொள்கிறோம். இப்படியாக எமது ஆழ்மனதில் பதிந்திருக்கும் பாவ புண்ணியங்களால் எமக்கு மீண்டும், மீண்டும் பிறப்பும், இறப்பும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
பாவம் செய்திருந்தாலும் அதனை அனுபவிக்க பிறப்பு உண்டு அதுபோல புண்ணியம் செய்திருந்தாலும் அதனை அனுபவிக்க பிறப்பு உண்டு இதுவே பிறவிப்பிணி எனப்படும்.
யோகக் கலை அதாவது யோகப் பயிற்சி என்பது நாம் சேகரித்து வைத்திருக்கும் பாவ, புண்ணியங்களை அழிப்பதற்கும், மேலும் பாவ, புண்ணியங்கள் சேராமலும் இருக்க உபாயங்களை வழிவகைகளை விளக்கி எமக்கு பிறப்பு இறப்பு இல்லா முக்திநிலை அடைய வழிகாட்டுகிறது.
“நாம் செயத சில பாவங்கள் தானம், தருமம் செய்ய அழிந்து போகும். சில பாவங்கள் அனுபவித்து கழித்துக் கொள்ள வேண்டும். சில பாவங்கள் நாம் முக்தி நிலை அடைந்தாலொளிய அவற்றை அழிக்கவே முடியாது” என்று கூறுகிறார் அகத்திய மாமுனிவர்.
இவ்வாறு முக்திநிலை அடைவதற்குரிய பயிற்சி “யோகப்பயிற்சி” எனப்படும். யோகப் பயிற்சிகள் செய்பவர்கள் யோகிகள் என அழைக்கப்படுவார்கள். இதுவே யோக மார்க்கம் என அழைக்கப்படுகிறது.
சைவ சமயத்தில் இறைவனை (சிவனை) அடைவதற்குரிய நான்கு வழிமுறைகள் கூறப்பட்டுள்ளது. இவை சைவ நாற்பாதங்கள் என அழைக்கப்படும். அவையாவன ‘சரியை, கிரியை, யோகம், ஞானம்‘ ஆகிய நான்கு வழிமுறைகள் ஆகும். இவை ஆன்மா தன் அறியாமையை நீங்கி இறைவனோடு சேர உதவும் படிமுறைகளாகும்.
சரியை எனப்படுவது எமது உடலால் பிறருக்கு, இறைவனுக்கு செய்யும் தொண்டுகளாகும். இதில் கோவிலை பராமரிப்பது போன்ற தொண்டுகளும், முதியோருக்கு ஏழை, எளிய மக்களுக்கு, பிற உயிரினங்களுக்கு நாம் எமது உடலால் செய்யும் உதவிகள், நற்காரியங்கள் யாவும் சரியையில் அடங்கும்.
கிரியை என்றால் இறைவனுக்குப் பூஜை செய்து வழிபடுதல், பெரியோரை, கற்றவரைப் போற்றுதல். நல்ல செய்திகளை, நூல்களைப் படித்தல். பெரியோரது நல்ல அறிவுரைகளைக் கேட்டுப் பின்பற்றுதல். எமக்குத் தெரிந்த நல்ல செய்திகளை பிறருக்குக் கூறுதல், கற்பித்தல். இறைவனின் திருநாமங்களை, மந்திரங்களை உச்சரித்தல் பொருள் விளங்கிப் படித்தல். நல்ல விரதங்களை மேற்கொள்ளுதல். உண்மையைப் பேசுதல், உண்மையாக இருத்தல். பொறாமை, கோபம் போன்ற தீய எண்ணங்கள் இன்றித் தூய்மையாக இருத்தல் என்பனவாகும். இப்படியான நற்காரியங்கள் எமது பல ஆழ்மனப் பதிவுகளை (பயம், கோபம்) அழித்துப் பல நல்ல சிந்தனைகளை ஆழ்மனதில் பதிக்க உதவும்.
இதனாலேயே ஒருவர் இறக்கும் தறுவாயில் இருக்கும் போது அவரது காதுகளில் கேட்கக்கூடியவாறு பெரியபுராணம், தேவாரம், புராணக் கதைகள் போன்றன படிக்கப்படுகின்றன. இப்படியான அறிவுரைகள் அவர்களது ஆழ்மனதில் பதிந்துள்ள சில பதிவுகளை அழித்து அவரது அடுத்த பிறப்புக்கு உதவுகிறது என்பது இந்துமத தத்துவமாகும்.
யோகம்: இந்த யோக நிலையிலேயே யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
ஞானம்: யோகத்தின் இறுதிநிலை முக்தி (ஞானம்) எனப்படும். அதாவது ஒரு ஆன்மா யோகப் பயிற்சியின் மூலமாக தன் பாவ புண்ணியங்களை எல்லாம் நீக்கி, தூய நிலை அடையும்போது பரம்பொருளுடன் சிவசக்தியுடன் ஒன்ரறக் கலந்து கொள்ளும். இதுவே பிறப்பு இறப்பற்ற (பிறவிப்பிணி நீங்கிய) ஞான நிலையாகும். இதுவே முக்தி என அழைக்கப்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் நாம் மேற்கொள்ளும் யோகப் பயிற்சிகளுக்கு மூலமாக இருப்பது திருமூலர் எழுதிய திருமந்திரம் எனும் நூலில் கூறப்பட்டுள்ள அட்டாங்க யோகம் என்னும் யோகப் பயிற்சி முறைகளாகும்.
அட்டாங்க யோகம் எனப்படுவது பின்வரும் 8 படிமுறைகளை உள்ளடக்கியுள்ளது.
- இயமம் (விலக்கல்): தீய செயல்களைச் செய்யாமல் இருப்பது.
- நியமம் (செய்தல்): நற்செயல்களைத் தொடர்ந்து செய்தல்.
- ஆசனம் (ஆதனம்): உடல் உறுதியாகவும் நிலையாகவும் இருக்கப் பயிலும் உடற்பயிற்சிகள். அது மட்டுமன்றி ஆசனப் பயிற்சிகள் சக்கரங்களைத் தூண்டி பிரபஞ்ச சக்தியை ஈர்க்க உதவுகிறது.
- பிராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு): மூச்சுப் பயிற்சி சுவாசத்தை முறைப்படுத்துதல்.
- பிரத்தியாகாரம் (மனக் கட்டுப்பாடு): மனதை ஐம்புலன்கள் மூலமான வெளிப்புற நாட்டங்களில் இருந்து விலக்கி உள்முகமாகத் திருப்புதல்.
- தாரணை (ஒருமுகப்படுத்தல்): மனதை ஒரே இடத்தில் அல்லது இறைவனிடத்தில் நிலைநிறுத்துதல்.
- தியானம் (நினைத்தல்): நிலைநிறுத்தப்பட்ட பொருளில் அல்லது இறைவனிடத்தில் மனதை இடையூறின்றித் தொடர்ந்து செலுத்துதல்.
- சமாதி: சிவனுடன் ஒன்றாதல். முழுமையாக இறைவனுடன் ஆன்மா ஐக்கியமாகும் நிலை.
திருமூலரது யோகப்பயிற்சி முறைகளை இவரது வழிவந்த சித்தர்கள் முனிவர்களால் அவ்வப்போது ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு பயிற்சி செய்யப்பட்டு வந்தது. இப் பயிற்சி முறைகளே இன்றைய ஆன்மீக வாதிகளாலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
அட்டாங்கயோக படிமுறைகளில் ஒரு படிமுறை முறையாக பின்பற்றப்பட்டு சித்தி அடைந்தாலே அடுத்த படிமுறை சித்திக்கும். இந்த எட்டு படிமுறைகளில் முதல் நான்கு படிமுறைகளும் கிரியா யோகம் எனவும் மிகுதி நான்கு படிமுறைகளும் ராஜயோகம் எனவும் சித்தர்களால் குறிப்பிடப்படுகிறது. அதாவது கிரியா யோகம் வெளிமுகப் பயிற்சிகள் எனவும் ராஜயோகம் உள்முகப் பயிற்சிகள் எனவும் கொள்ளப்படுகிறது.
கேசரி, பூசரி, மத்திய லட்சணம், சண்முகி, சாம்பவி ஆகிய நான்கு முக்கிய தியான முறைகளும் அட்டாங்க யோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உள்முகத் தியான முறைகளான (ராஜயோகம்) தாரணை அல்லது சமாதி எனும் படிமுறைகளில் அடங்கும்.
கிரியா யோகம் (வெளிமுகப் பயிற்சிகள்)
- இயமம்.
- நியமம்.
- ஆசனம்.
- பிராணாயாமம்.
ராஜயோகம் (உள்முகப் பயிற்சிகள்)
- பிரத்தியாகாரம்.
- தாரணை.
- தியானம்
- சமாதி
குறிப்பு: எக் காரணம் கொண்டும் ஒரு குருவின் துணையின்றி பின்வரும் பயிற்சி முறைகளை பயிற்சி செய்யக்கூடாது அல்லது செய்ய வேண்டாம். ஏற்கனவே ஒரு குருவின் வழிகாட்டுதலுடன் பயிற்சி செய்பவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகவே இந்த ஐந்து பயிற்சி முறைகளும் விளக்கப்பட்டுள்ளன.
ஒரு யோகப் பயிற்சி செய்வதற்கு ஏன் ஒரு குருவின் வழிகாட்டுதல் தேவை என்பதனை பின்வரும் உதாரணம் மூலமாக நாம் விளங்கிக் கொள்ளலாம். பொது ஊடகங்களில் கூறப்படும் வைத்திய முறைகளை எந்த ஒரு வைத்தியரின் அறிவுறுத்தலும் இன்றி பின்பற்றுவதால் பல பின்விளைவுகள் ஏற்படுகின்றன.சில நேரங்களில் உடலுறுப்புக்கள் செயலிழந்தும் போகின்றன.
இதுபோலவே யோகப்பயிற்சிகள் செய்வதற்கு ஒரு குருவின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.
அமரும் முறை
யோகப் பயிற்சி செய்வதற்கு அமரும் முறை மிகவும் முக்கியமானது. அமரும் முறை ஆசனம் என அழைக்கப்படுகிறது. யோகப்பயிற்சி செய்வதன் முக்கிய நோக்கமே மூலாதாரச் சக்கரத்தினைத் தூண்டி அங்கு அமர்ந்துள்ள குன்டலினி சக்தியினை, மூச்சுக் காற்றினால் சூடேற்றி கிளர்ந்தெளச் செய்து, சூக்கும நாடியினூடாக மேலெழச் செய்வதற்காகவே.
அதனால் நாம் பயிற்சி செய்ய தரையில் சித்தாசனம், பத்மாசனம், சுகாசனம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆசனத்தில் அமரும் பொழுது மூலாதாரச் சக்கரம் நன்றாகத் தூண்டப்படுகிறது. தரையில் அமர முடியாதவர்கள் நாற்காலி போன்றவற்றில் அமரலாம் என்று கூறப்பட்டாலும், கால்களை விரித்து அமர்வதால் கிடைக்கும் பலன்களை பெற முடியாது என்பதுவே உண்மையாகும்.
யோகப் பயிற்சி செய்வதற்கு பின்வரும் ஆசனங்களில் அமர்ந்து பயிற்சி செய்வதே சிறப்பு என சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. அவையாவன சித்தாசனம், பத்மாசனம், சுகாசனம் ஆகும்.
சித்தாசனம்:
- தரையில் துணி விரித்து, கால்களை நீட்டி உட்கார வேண்டும். தரையில் துண்டு (மான்தோல்) விரித்து அமர்வது பயிற்சியின் போது கிடைக்கும் பிரபஞ்ச சக்தி நிலத்துக்குக் கடத்தப்படாமல் சாதகரின் உள்ளேயே தங்கவேண்டும் என்பதற்காக.
- இடது காலை மடித்து, அதன் குதிகால் பகுதி மூலாதாரச் சக்கரத்தில் படுமாறு (எரு வாய்க்கும் கரு வாய்க்கும் நடுவில் தொடுமாறு) வைக்க வேண்டும். குதிக்கால் படுவதால் பயிற்சியின்போது மூலாதாரச் சக்கரம் தூண்டப்பட உதவுகிறது.
- பின்னர் வலது காலை மடித்து, அதன் குதிகால் பகுதியை இடது காலுக்கு மேலாக வைக்க வேண்டும்.
- முதுகுத் தண்டு நேராகவும், தலை நிமிர்ந்தும் இருக்க வேண்டும்.
- கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் வைத்து சின் முத்திரை வைத்து அமரவேண்டும்.
பத்மாசனம்
- தரையில் துணி விரித்து, கால்களை நீட்டி உட்கார வேண்டும். தரையில் துண்டு (மான்தோல்) விரித்து அமர்வது பயிற்சியின் போது கிடைக்கும் பிரபஞ்ச சக்தி நிலத்துக்கு கடத்தப்படாமல் சாதகரின் உள்ளேயே தங்கவேண்டும் என்பதற்காக.
- வலது காலை மெதுவாக மடக்கி, வலது பாதத்தை இடது தொடையின் மேல் வைக்கவும். பாதத்தின் உட்பகுதி இடுப்புக்கு அருகில் மேல்நோக்கி இருக்க வேண்டும்.
- இடது காலை மடக்கி, இடது பாதத்தை வலது தொடையின் மேல் வைக்கவும்.
- முதுகுத் தண்டு நேராகவும், தலை நிமிர்ந்தும் இருக்க வேண்டும்.
- கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் வைத்து சின் முத்திரை வைத்து அமரவேண்டும்.
சுகாசனம்
- ஆரம்பநிலை பயிற்சியாளர்களுக்கும், கால் வலி உள்ளவர்களுக்கும் நீண்ட நேரம் சிரமமின்றி அமர்ந்து பயிற்சி செய்ய இந்த ஆசனம் உதவும்.
- தரையில் துணி விரித்து, கால்களை நீட்டி உட்கார வேண்டும். தரையில் துண்டு (மான்தோல்) விரித்து அமர்வது பயிற்சியின் போது கிடைக்கும் பிரபஞ்ச சக்தி நிலத்துக்கு கடத்தப்படாமல் சாதகரின் உள்ளேயே தங்கவேண்டும் என்பதற்காக.
- சாதாரண சம்மணம் (சப்பாணி) போட்டு உட்காருவது போல வலது காலை மடித்து, அதன் பாதத்தை இடது தொடைக்கு அடியில் வைக்கவும். பின்னர் இடது காலை மடித்து, அதன் பாதத்தை வலது தொடைக்கு அடியில் வைக்கவும்.
- முதுகுத் தண்டு நேராகவும், தலை நிமிர்ந்தும் இருக்க வேண்டும்.
- கைகளை நீட்டி முழங்கால்களின் மேல் வைத்து சின் முத்திரை வைத்து அமரவேண்டும்.
சின் முத்திரை
- இது ஞான முத்திரை என்றும் அழைக்கப்படுகிறது.
- கைகள் நீட்டியபடி இரு முளங்கால்களிலும் பட்டவாறு உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு வைத்துக் கொள்ளவும்.
- கையின் கட்டைவிரலின் (பெருவிரல்) நுனியும் சுட்டுவிரலின் நுனியும் லேசாகத் தொட்டுக் கொள்ளவேண்டும்.
- மற்ற மூன்று விரல்களும் (நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல்) நீட்டியபடி இருக்கவேண்டும்.
குறிப்பு: யோகப் பயிற்சி செய்யும்போது இடம் சுத்தமாக இருக்க வேண்டும். உடலில் அணியும் ஆடைகள் இறுக்கதவாறு தளவாக இருக்க வேண்டும். சுற்றாடல் அதிக சத்தம் வராத இடமாக அமைதியான இடமாக இருப்பது சிறப்பு. பயிற்சி செய்ய சிறந்த நேரம் அதிகாலை அல்லது காலைப் பொழுதாகும். அதிக நீர் அதிக உணவு உண்ட பின்னர் பயிற்சி ஆரம்பிக்கக் கூடாது. கண் கண்ணாடி அணிந்திருந்தால் அதனைக் கழற்றி வைக்கவும். இந்தக் குறிப்பின் முக்கிய நோக்கமே யோகப் பயிற்சி செய்யும்போது எந்தக் காரணியும் மனதைக் குழப்பாமல் பயிற்சியைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதுவே.
யோகப் பயிற்சி
- கேசரி யோகப் பயிற்சி
முத்திரைகளின் அரசன் என்று கேசரி முத்திரை அழைக்கப்படுகிறது. கேசரியோகம் என்பது லம்பிகா யோகம் எனவும் அழைக்கப்படுகிறது. இது ஒரு தொன்மை வாய்ந்த பாரம்பரிய யோகப்பயிற்சி முறையாகும். கேசரி யோகப் பயிற்சி பதினெண் சித்தர்களில் முதன்மையானவரான திருமூலரால் கூறப்பட்டது. திருமூலர் எழுதிய “திருமந்திரம்” என்னும் நூலின் மூன்றாம் தந்திரத்தில் இந்தப் பயிற்சி முறையை மிக விரிவாக விளக்கியுள்ளார்.
கேசரி என்பதற்கு சிங்கம் என்றும் ஆகாயம் என்றும் பொருள். கேசரி யோகமாவது ஒரு சிங்கம் தனது இரு கண்களையும் குவித்து ஆகாயத்தைப் பார்ப்பது போல இந்த யோக முத்திரை அமைந்துள்ளதால் இது கேசரியோகம் என்று பெயர் பெற்றது.
‘லம்பிகா’ என்றால் தமிழ் மரபுகளில் ‘மென்மையான அண்ணம்’ அல்லது நாக்கை மேல் அண்ணத்திற்குள் மடித்து வைப்பது (தொங்குதல்) என்று பொருள். இதனால் இந்த முத்திரை லம்பிகா யோகம் எனவும் அழைக்கப்படுகிறது
கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாக்கை இழுத்து, நீட்டி, மூக்கின் மேல் நாக்கு நீளுமாறு பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீளமான நாக்கு இருந்தால் மட்டுமே இந்தப் பயிற்சி கைகூடும். இப் பயிற்சியை மேற்கொள்வதற்காக சில சாதகர்கள் ஒரு குருவின் உதவியுடன் தமது நாக்குக்கு கீழுள்ள சில தசைகளை வெட்டி நாக்கை நன்றாக நீட்டி பயிற்சி செய்து பின்னர் கேசரி யோகப் பயிற்சியை மேற்கொண்டதாகவும் சில வரலாறுகள் கூறுகின்றன.
உடுப்பு அறணை, பாம்பு, போன்ற உயிரினங்களின் நாக்கு மிகவும் நீளமாக இருக்கும். இவை குளிர் காலத்தில் அதாவது உணவு கிடைக்காத காலத்தில் இயற்கையாகவே தமது நாக்கினை உட்புறமாக அண்ணத் துவாரத்தினுள் செலுத்தி, அதன் சுவாசம் நிறுத்தப்பட்டு, தம்மை உறக்க நிலையில் (hybernate) வைத்துக் கொள்கின்றன. இந்த நாட்களில் அவை உணவு, நீர் இன்றி தூக்க நிலையில் இருக்கும். பின்னர் வெப்பநிலை மாற்றம் அடையும் போது நாக்கினை உள்ளே இளுத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். இந்த மாற்றம் அந்த விலங்குகளுக்கு இயற்கையாகவே நிகளும் செயற்பாடாகும்.
கேசரி யோகத்தில் இந்த முறையே பின்பற்றப் படுகிறது. அதாவது சாதகர்கள் (பயிற்சி செய்பவர்கள்) தமது நாக்கினை மேல் அண்ணம் வழியாக உள்ளே நீட்டி, நாசித் துளைகளினுள் செலுத்த சுவாசம் அடைபட்டுப்போக, மெய்மறந்து சமாதி நிலையில் நீண்ட காலத்துக்கு இருப்பார்கள். இந்த நிலையில் இருக்கும் போது அவர்களுக்கு உணவு, நீர் என்பன தேவைப்படாது. அதே நேரத்தில் குண்டலினி கிளர்ந்தெழுந்து சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரநாம சக்கரத்தை அடைந்து, அங்கே ஒடுங்கி அண்ணாக்கு வழியாக சாதகரை சென்றடையும். இதுவே அமுதம் என அறியப்படுகிறது. அந்த அமுதமானது உடலுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
மூலாதார சக்கரத்தில் அமைந்துள்ள குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியாக சகஸ்ராரம் வரை கொண்டு
செல்வதையே குண்டலினியை எழுப்புதல் எனக் கூறப்படுகிறது. பொதுவாக யோகப் பயிற்சி என்றால்
உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான பயிற்சியே தியானம் அல்லது தவம் ஆகும்.
தியானம் – தவம்: யோகப் பயிற்சியின்போது சில நிமிடங்கள் தன்னை மறந்து இருப்பது தியானம் எனப்படும். பல மணி நேரம் அல்லது சில நாட்கள் தன்னை மறந்து இருந்தால் அது தவம் எனப்படும்.
ஞானம்: வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி சக்தியானது சுழுமுனை நாடியினூடாக ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரச் சக்கரத்தை அடையும். குண்டலினி சக்தியானது சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதே சிவசக்தி ஐக்கியம் எனப்படும். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதுவே ஞானமடைதல் எனப்படும்.
கேசரி யோகப் பயிற்சியானது ஒரு குருவிடம் இருந்து முறையாக யோகப்பயிற்சிகள் பயின்று இறுதியில் செய்யப்படும் பயிற்சியாகும்.
கேசரி யோகப் பயிற்சி முறை:
- தூய்மையான இடத்தில் நிலத்தில் துண்டு விரித்து பத்மாசனத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
- முதுகுத் தண்டு நேராக இருக்கக் கூடியவாறு நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவேண்டும்.
- கைகள் சின் முத்திரையில் இரு முளங்கால்களிலும் பட்டவாறு நீட்டி உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு வைத்துக் கொள்ளவும்.
- நாவை மேல்நோக்கி மடித்து, நாவின் நுனியை அண்ணப் பகுதியில் உள்ள மூச்சுத் துவாரத்தை (அல்லது மேல் அண்ணத்தை) தொட்டபடி அல்லது உள்ளே செலுத்தவும்.
- கண்கள் இரண்டையும் நெற்றி வகுட்டை நோக்கி குவித்து எண்ணத்தை (நினைவை, மனதை) அங்கே நிலை நிறுத்தவும்.
- கண்கள் அரைக் கண்ணில் திறந்தபடி இருப்பது சிறப்பு.
- இவ்வாறு மெது மெதுவாக தன்னை மறந்த நிலையில் பயிற்சியைத் தொடரவும்.
- நாளடைவில் நாக்கை இன்னும் உள்நோக்கி நாசித் துவாரத்திற்குள் செலுத்த தன்னை மறந்த நிலை ஏற்படும்.
- இறுதியில் சாதகர் முக்தி நிலை அடைவார்.
திருமந்திரம் மூன்றாம் தந்திரம் 803
“நாவின் நுனியை நடுவே சிவிறிடிற் (விசிறிடிற்)
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்
தாவரம் இல்லை சகலமும் ஆமே.”
விளக்கம்:
நாவின் நுனியை நடுவே விசிறிடில்: நாக்கின் நுனியை மேல்நோக்கி மடித்து நாசித் துவாரத்தின் நடுவில் செலுத்தினால்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்: உயிரும் (சீவன்) இறைவனும் (சிவன்) அந்த இடத்திலேயே அதாவது அண்ணாக்க்கிற்கு சற்று மேலாக நிலைத்திருப்பார்கள்.
மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்: பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அங்கு தோன்றுவர்.
சாவதும் இல்லைச் சதகோடி யூனே: அவ்விடத்தில் மனம் நிலைகொண்டால் மரணமில்லாத நிலையை (அழிவில்லாத தன்மையை) அதாவது முக்தி நிலையை அடையலாம்.
- பூசரி (பூச்சாரி) யோகப் பயிற்சி
பூசரி முத்திரை அல்லது பூசரி யோகம் என்பது பூச்சாரி முத்திரை என்ற சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது தமிழில் ‘பூசரி’ என்று அழைக்கப்படுகிறது. பூ என்றால் பூமி அல்லது பிரபஞ்சம் என்று பொருள். சாரி என்றால் சஞ்சரிப்பவர் அல்லது நகர்பவர் என்று பொருள்.
இந்தப் பயிற்சி மனதை பிரபஞ்ச சக்தியுடன் தொடர்புபடுத்தி ஒரு முகப்படுத்துவதால் இப்பெயர் வந்தது. வெறுமையில் (வெட்ட வெளியில்) மனதைச் செலுத்துதல், அதாவது வெறுமையை உற்று நோக்குதல் என்பதே இப் பயிற்சியின் அடிப்படை நோக்கம் ஆகும். இப்பயிற்சியில், மூக்கின் நுனிக்கு நேராகச் சுண்டு விரலை வைத்து அதை உற்று நோக்கி, பின்னர் கையை எடுத்த பிறகும் அந்த வெறுமையான இடத்தையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அலைபாயும் மனதை ஒரு புள்ளியில் நிலைநிறுத்தும் சிறந்த பயிற்சியாகும்.
இந்த யோகப் பயிற்சி ஒரு சாதகரை தியானத்திற்குத் தயாராக்குகிறது. ஆக்ஞா சக்கரத்தைத் (புருவ மத்தி) தூண்டி, ஆழ்ந்த தியான நிலைக்குச் செல்ல மனதைத் தயார்படுத்தும் ஒரு சிறந்த யோகப் பயிற்சியாகும்.
செய்முறை
- சுத்தமான இடத்தில் நிலத்தில் துணி விரித்து சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் முதுகெலும்பு நேராக இருக்குமாறு வசதியாக அமரவும்.
- வலது கையை முகத்திற்கு நேராக உயர்த்தி, உள்ளங்கை கீழ்நோக்கி இருக்குமாறு வைக்கவும்.
- வலது கட்டைவிரலின் பக்கவாட்டுப்பகுதி மேல் உதட்டின் மையப் பகுதியை மென்மையாகத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற நான்கு விரல்களும் நேராக நீட்டியபடி ஒன்றாக இருக்கட்டும். (அல்லது கையின் மற்ற மூன்று விரல்களை (சுட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல்) மடக்கிக் கொண்டு, சுண்டு விரலை (Little finger) மட்டும் நேராக நீட்டவும்.
- இடது கையை சின் முத்திரையில் இடது முழங்காலில் வைக்கவும்.
- கண்களைத் திறந்து, கண் இமைக்காமல் வலது சுண்டு விரலின் நுனியை சுமார் 1 நிமிடம் வரை உற்றுப் பார்க்கவும்.
- பின்னர் வலது கையை மெதுவாகக் கீழே இறக்கி வலது முழங்காலில் வைக்கவும். ஆனால், பார்வையை மாற்றாமல், சுண்டு விரல் இருந்த அதே வெற்று இடத்தை (வெறுமையை) கண் இமைக்காமல் தொடர்ந்து கவனிக்கவும்.
- தினமும் ஆரம்பத்தில் 1 அல்லது 2 நிமிட இடைவெளிகளில் பயிற்சி செய்ய ஆரம்பித்துப் படிப்படியாக 5 முதல் 10 நிமிடங்கள் வரை பயிற்சியைத் தொடரலாம்.
முக்கியப் பலன்கள்
கவனச்சிதறல் குறையும். தேவையற்ற எண்ண ஓட்டங்கள் குறைந்து, மனதை ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கும்.
- சண்முகி யோகப் பயிற்சி
சண்முகி முத்திரையானது சாதகரின் வெளிப்புற உலகத் தொடர்பைத் துண்டித்து, மனதை உள்நோக்கி (பிரத்தியாகாரம்) திருப்ப உதவும் ஒரு சக்திவாய்ந்த யோக முத்திரையாகும். “சண்” என்றால் ஆறு, “முகி” என்றால் வாயில்கள் அல்லது முகங்கள் என்று பொருள். நமது முகத்தில் உள்ள ஆறு புலன் வாயில்களான (இரு கண்கள், இரு காதுகள், மூக்கு, வாய்) ஆகியவற்றை மூடிச் செய்வதால் இதற்கு இப்பெயர் வந்தது.
சண்முகி முத்திரை செய்முறை
- ஆசனம்: பத்மாசனம், சித்தாசனம் அல்லது வசதியான ஏதேனும் ஒரு ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்து கொள்ளவும். முதுகெலும்பு நேராக இருக்குமாறு நிமிர்ந்து உட்காரவும்.
- கைகளை முன்புறமாக மடக்கி முகத்திற்கு நேரே கொண்டு வந்து, முழங்கைகள் தோள்பட்டைக்குச் சமாந்தரமாக இருக்குமாறு வைக்கவும்.
- கை பெருவிரல்களால் (Thumbs) காதுகளின் மடல்களை மெதுவாக அழுத்தி (வலது பெருவிரல் வலது காது இடது பெருவிரல் இடது காது) காற்று புகாதவாறு காதுத் துவாரங்களை மூட வேண்டும்.
- ஆள்காட்டி விரல்களால் கண்களை மூடி கண்களின் இமைகளின் மேல் இலேசாக வைக்கவும். (கண்களை பலமாக அழுத்தக் கூடாது).
- நடுவிரல்களை (Middle fingers) மூக்கின் இரு பக்கங்களிலும், நாசித் துவாரங்களுக்கு அருகில் வைக்க வேண்டும்.
- மோதிர விரல்களை (Ring fingers) மேல் உதட்டிற்கு மேலும்,
- சிறுவிரல்களை (Little fingers) கீழ் உதட்டிற்கு மேலும் வைத்து உதடுகளை மூடி வாயை மூடவும்.
- ஆசனவாயை (குத வாயிலை) உள்ளிளுத்து இறுக்கமாக வைத்துக் கொள்ளவும். இது மூல பந்தம் என அழைக்கப்படும்.
சுவாசம் மற்றும் பயிற்சி:
- நாசி வழியாக ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும்.
- பின்னர் நடுவிரல்களால் நாசித் துவாரங்களை அடைத்து மூச்சை உள்நிறுத்தவும். கவனத்தை புருவ மத்தியில் (ஆக்ஞா சக்கரம்) உள்நோக்கி செலுத்தவும்.
- முடிந்த அளவு நேரம் (சில நொடிகள்) மூச்சை அடக்கி வைத்திருக்கலாம். (ஆரம்பத்தில் சிரமம் இருந்தால் மூச்சை அடக்காமல் இயல்பான சுவாசத்திலும் பயிற்சி செய்யலாம்)
- மூச்சை வெளிவிடும் போது, பெரு விரல்களை தளர்த்தி நாசித்துவாரம் மீதான அழுத்தத்தை தளர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிடவும்.
- (மூச்சை வெளிவிடும் போது ‘ம்…’ (தேனீயின் ரீங்காரம்) என்ற ஒலியை எழுப்புவது கூடுதல் பலன் தரும்
- ஆரம்பத்தில் மூச்சை எவ்வளவு நேரம் அடக்க முடியுமோ அவ்வளவு நேரம் செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக நேரத்தை அதிகரிக்கலாம்.
முக்கிய நன்மைகள்
மன அமைதி மற்றும் ஒருமுகப்படுத்துதல்: வெளி உலக நாட்டத்தில் இருந்து புலன்கள் துண்டிக்கப்படுவதால், மனம் படிப்படியாக அமைதியடைந்து உள்முகமாக திரும்பும். ஆழமான தியான நிலைக்குச் செல்ல இந்த யோகப் பயிற்சி உதவுகிறது.
- மத்தியலட்சணம் யோகப் பயிற்சி
மத்தியலட்சணம் யோகப் பயிற்சி என்பது ஐந்து முக்கிய தியான பயிற்சிகளில் ஒன்றாகும்.
யோகப் பயிற்சிகளில் மனதை ஒருமுகப் படுத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று வகையான தியான இலக்குகளே அதாவது கவனத்தைக் குவிக்கும் புள்ளியாக (லட்சியங்கள்) அந்தர் லட்சியம், பஹிர் லட்சியம் மற்றும் மத்திய லட்சியம் என மூன்று வகையாகக் கூறப்பட்டுள்ளன.
அதாவது தியானத்தின் போது மனதை நிலைநிறுத்தும் இடத்தைப் பொறுத்து இவை மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
1. பஹிர் லட்சியம் வெளிப்புற இலக்கு
இது ஆரம்பநிலை தியானப் பயிற்சியாளர்களுக்கானது. உடலுக்கு வெளியே உள்ள ஒரு பொருளின் மீது கண்களையும் மனதையும் ஒருமுகப் படுத்துவதே பஹிர் லட்சியம் ஆகும்.
பயிற்சி முறை: எரியும் தீபத்தின் சுடர், இறைவனின் திருவுருவ ச் சிலைகள், அல்லது மூக்கின் நுனியிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் உள்ள வெளி ஆகியவற்றின் மீது கண்களை இமைக்காமல் பார்த்து மனதைக் குவிப்பது.
இப்பயிற்சியானது வெளிப்புறப் பொருட்களில் அலையும் மனதை வெளிப்புறமாக உள்ள ஒரே புள்ளியில் நிலைநிறுத்தி, தியானத்திற்குத் தயார்ப் படுத்துவது.
2. அந்தர் லட்சியம் – உட்புற இலக்கு
வெளிப்புறப் பொருட்களில் மனதை நிலைநிறுத்தப் பழகிய பின்னர், கண்களை மூடிக்கொண்டு உடலுக்கு உள்ளேயே மனதை ஒருமுகப் படுத்துவது அந்தர் லட்சியம் ஆகும்.
பயிற்சி முறை: உடலில் உள்ள சக்கரங்கள் (உதாரணமாக: புருவ மத்தி அல்லது ஆக்ஞா சக்கரம், அல்லது அனாகத சக்கரம் அல்லது மூலாதார சக்கரம் ஆகியவற்றில் ஒன்றன்மீது கவனத்தை உள்முகமாகச் செலுத்தி அங்கே மனதை நிலைநிறுத்தும் பயிற்சியாகும்.
நோக்கம்: புலன்களை வெளி உலக நாட்டத்தில் இருந்து உள்நோக்கித் திருப்பி (பிரத்யாகாரம்) ஆழ்ந்த தியான நிலைக்குச் செலுத்தும் பயிற்சியாகும்.
3. மத்திய லட்சியம் – இடைநிலை இலக்கு
உள்ளே அல்லது வெளியே என்ற எந்தவொரு குறிப்பிட்ட இடத்தையும் சார்ந்திராமல், எல்லையற்ற வெளியில் அதாவது பிரபஞ்சத்தில் மனதை நிலைநிறுத்துவதே மத்திய லட்சியம் ஆகும்.
பயிற்சி முறை: கண்களைத் திறந்த நிலையிலோ அல்லது மூடிய நிலையிலோ, எந்தவொரு உருவமோ, இடமோ, எண்ணமோ இல்லாத நடுநிலையில் மனதை ஒருமுகப்படுத்துவதே மத்திய லட்சணம் ஆகும். எல்லையற்ற வெளியில் கவனத்தை நிலை நிறுத்தும் பயிற்சியாகும்.
நோக்கம்: மனதின் சலனங்கள் முற்றிலும் அடங்கி, தியானிப்பவர் மற்றும் தியானிக்கப்படும் பொருள் என்ற பேதமின்றி ‘சமாதி’ எனும் உயரிய நிலையை அடைவது.
இப்பயிற்சியானது மனதை முழுமையான அமைதி நிலைக்குக் கொண்டு செல்ல உதவுகிறது.
யோக மரபில், நமது சூக்கும உடலில் இடகலை, பிங்கலை, சுழுமுனை என மூன்று முக்கிய நாடிகள் உள்ளன. இதில் இடகலை நாடி இடப்பக்கத்திலும் (குளிர்ச்சி / சந்திரன்), பிங்கலை நாடி வலப்பக்கத்திலும் (வெப்பம் / சூரியன்) அமைந்துள்ளது. இந்த இரண்டு நாடிகளுக்கும் நடுவில் சமநிலையில் இருக்கும் நாடியே சுழுமுனை நாடியாகும். இந்த சுழுமுனை நாடியைத் தூண்டும் பயிற்சியே ‘மத்திய நிலை’ அல்லது ‘மத்திய லட்சணம்’ என அழைக்கப் படுகிறது.
மத்திய லட்சியம் பயிற்சி செய்யும் முறை
- முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி பத்மாசனம், சுகாசனம் அல்லது வஜ்ராசனம் போன்ற ஏதேனும் ஒரு தியான ஆசனத்தில் அமரவும்.
- கைகளை நீட்டி சின் முத்திரையில் வைத்து உள்ளங் கைகள் மேல் நோக்கியவாறு இரு முழங்கால் களிலும் வைக்கவும்
- கண்களைப் பாதி திறந்த நிலையிலோ அல்லது மூடிய நிலையிலோ வைத்து, உங்கள் கவனத்தை உள்முகமாகவும் இல்லாமல், வெளிப்புறப் பொருட்களிலும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவே உள்ள வெட்டவெளியில் (ஆகாயம்) நிலைநிறுத்தவும்.
- இயல்பான மூச்சு ஓட்டத்தைக் கவனித்தபடி, எந்தவொரு எண்ணத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் அமர்ந்திருக்கவும்.
பலன்கள்
மன ஒருமைப்பாடு. அலைபாயும் மனம் அமைதியடைந்து ஆழ்ந்த தியான நிலை (சமாதி) கைகூடும்.
- சாம்பவி / அகோசரி யோகப் பயிற்சி
சாம்பவி யோகப் பயிற்சி என்பது தொன்மையான யோகக் கலையின் ஒரு சிறந்த பயிற்சி முறைகளில் ஒன்றாகும். இந்த பயிற்சி முறையில் சாம்பவி முத்திரை, அகோசரி முத்திரை என இரண்டு வகையான முத்திரைகள் உள்ளன.
புருவ நடுவை பார்த்தபடி செய்யும் பயிற்சி சாம்பவி முத்திரை எனவும், மூக்கு நுனியை பார்த்தபடி செய்யும் பயிற்சி அகோசரி முத்திரை எனவும் அழைக்கப்படுகிறது.
சாம்பவி முத்திரை பயிற்சி செய்யும் முறை
- தரையில் பத்மாசனம், சித்தாசனம் அல்லது சுகாசனம் போன்ற தியான நிலையில் நேராக உட்கார வேண்டும். முதுகுத் தண்டு நேராக இருக்க வேண்டும்.
- கைகளை நீட்டி சின் முத்திரையில் வைத்து உள்ளங் கைகள் மேல் நோக்கியவாறு இரு முழங்கால் களிலும் வைக்கவும்
- கண்களைத் திறந்து குவித்து இரண்டு புருவங்களின் மத்தியப் பகுதியை (புருவ மத்தி / ஆக்ஞா சக்கரம்) லேசாகப் பார்க்க வேண்டும்.
- எண்ணத்தை (கவனத்தை) புருவ மத்தியில் நிலைநிறுத்தவும்.
- இயல்பான சுவாசத்தில் பயிற்சியை தொடரவும்
- இயல்பான மூச்சுடன் சில வினாடிகள் மட்டும் ஆரம்பித்து, படிப்படியாக நேரத்தை அதிகரிக்கவும். கண் வலி அல்லது அசௌகரியம் தோன்றினால் உடனே கண்களை மூடி ஓய்வெடுக்கவும்
முக்கிய பயன்கள்
- மனதை ஒருநிலைப்படுத்தி, தியானம் எளிதாகக் கைகூட வழி செய்கிறது.
அகோசரி யோக முத்திரை
அகோசரி யோக முத்திரை என்பது கண்களின் பார்வையை மூக்கின் நுனியில் நிலைநிறுத்திச் செய்யப்படும் யோகப் பயிற்சியாகும்.
அகோசரி யோக முத்திரை பயிற்சி செய்யும் முறை
- பத்மாசனம், சுகாசனம் அல்லது நாற்காலியில் முதுகுத்தண்டு நேராக இருக்குமாறு வசதியாக அமரவும்.
- கைகளை நீட்டி சின் முத்திரையில் வைத்து உள்ளங் கைகள் மேல் நோக்கியவாறு இரு முழங்கால் களிலும் வைக்கவும்
- கண்களைத் திறந்து, எவ்வித அழுத்தமும் இன்றி இரு கண்களின் பார்வையையும் மூக்கின் நுனியில் குவிக்கவும்.
- பார்வையை மூக்கு நுனியில் நிலைநிறுத்தியபடி, மெதுவான மற்றும் இயல்பான சுவாசத்தில் கவனத்தைச் செலுத்தவும்.
- கண்களில் சோர்வு ஏற்பட்டால் கண்களை மூடி ஓய்வெடுக்கவும்.
- இயல்பான மூச்சுடன் சில வினாடிகள் மட்டும் பயிற்சியை ஆரம்பித்து, படிப்படியாக நேரத்தை அதிகரிக்கவும்.
முக்கிய பலன்கள்
- அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி, ஆழ்ந்த தியான நிலைக்குச் செல்ல உதவும்
- மூலாதாரச் சக்கரம் தூண்டப்பட்டு குண்டலினி சக்தி கிர்ந்தெழ உதவுகிறது.
கு சிவகுமாரன் (kgunaretnam@hotmail.com)
அன்பே சிவம்
